search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டாள்"

    • ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் 22-ந்தேதி வரை நடக்கிறது.
    • ஆண்டாளுக்கு ஏகாதசி திருமஞ்சனம், மாலை சமர்ப்பணம் நடந்தது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி நேற்று முன்தினம் காலை ஆண்டாளுக்கு ஏகாதசி திருமஞ்சனம், மாலை சமர்ப்பணம் நடந்தது.

    அதன்பிறகு உற்சவர் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வைத்து ஜி.எஸ்.மாடவீதி, காந்தி வீதி வழியாக மங்கள வாத்தியங்கள் இசைக்க கங்குந்திரா மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்து சிறப்புப்பூஜைகளும், ஆஸ்தானமும் நடந்தது. அங்கிருந்து கோவிலுக்கு ஆண்டாள் கொண்டு செல்லப்பட்டாா்.

    • 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.
    • உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், ஆஸ்தானம் நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது. உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு காலை திருமஞ்சனம், மாலை ஆஸ்தானம் நடக்கிறது.

    22-ந்தேதி ஆண்டாள் சாத்துமுறை, காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஆண்டாளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கோவிந்தராஜசாமி, ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக அலிபிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஆஸ்தானமும், சிறப்புப்பூஜைகளும் நடத்தப்படுகிறது.

    பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்டு ராம் நகர் குடியிருப்பு, கீதா மந்திரம், ஆர்.எஸ்.மாட வீதியில் உள்ள விக்னசாச்சாரியார் கோவில், சின்னஜீயர் மடம் வழியாக கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.

    • ஆடிப்பூரத்தன்று, அவள் பெருமாளுடன் தேரில் பவனி வருவாள்.
    • கோதைக்கு, “ஆண்டாள்’ எனும் திருநாமம் ஏற்பட்டது.

    ஆடிப்பூர நன்னாளில் அவதரித்தாள் ஆண்டாள். பக்தியால், இறைவனை அடையலாம் என்பதை எடுத்துக்காட்ட, பொறுமையின் சின்னமான பூமாதேவி, ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்து, வாழ்ந்து காட்டினாள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் முகுந்தபட்டர், பத்மவல்லி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயி (ஆண்டாள்) கோவிலில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக, ஐந்தாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, "விஷ்ணு சித்தர்' என்று பெயரிட்டனர். இவரும் பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். பெருமாளின் துணைவியான பூமாதேவி, இவருக்கு வளர்ப்பு மகளாக ஐந்து வயது குழந்தையாக துளசித்தோட்டம் ஒன்றில் அவதரித்தாள். அவளுக்கு, "கோதை' என்று பெயர் சூட்டப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மூலவரான வடபத்ரசாயிக்கு, விஷ்ணு சித்தர் தினமும் மாலை கட்டி சூட்டுவார். அந்தப் பெருமாள் மீது ஆண்டாள் காதல் கொண்டாள். தன்னை அவரது மனைவியாகவே கருதி, அவருக்கு சூட்டும் மாலையை தன் கழுத்தில் போட்டு, அழகு பார்த்து, அனுப்பி விடுவாள். இதையறியாத விஷ்ணு சித்தர், பெருமாளுக்கு அதை அணிவித்து வந்தார். ஒருநாள், கூந்தல் முடி ஒன்று மாலையில் இருக்கவே, அதிர்ந்து போன ஆழ்வார், அது எவ்வாறு வந்தது என நோட்டமிட ஆரம்பித்தார். தன் மகளே அதைச்சூட்டி அனுப்புகிறாள் என்பதை அறிந்து, மகளைக் கடிந்து கொண்டார்.

    மறுநாள் மாலையைக் கொண்டு சென்ற போது, அதை ஏற்க பெருமாள் மறுத்துவிட்டார். "கோதை சூடியதையே நான் சூடுவேன். மலரால் மட்டுமல்ல, மனதாலும் என்னை ஆண்டாள் உம் பெண்...' என்று குரல் எழுந்தது. அன்று முதல் கோதைக்கு, "ஆண்டாள்' எனும் திருநாமம் ஏற்பட்டது. பின்னர், பெருமாளுடன் அவள் கலந்தாள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் சின்னமாக உள்ளது. 11 நிலை, 11 கலசங்களுடன் இருக்கும் இதன் உயரம், 196 அடி. இக்கோபுரத்தை பற்றி கம்பர்,"திருக்கோபுரத்துக்கு இணை அம்பொன் மேரு சிகரம்...' என, அழகான பொன்னிறமுடைய மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக பாடியுள்ளார்.

    உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் நடைதிறப்பின் போது, பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும், ஆண்டாள் பாடிய திருப்பாவையும் பாடப்படுகிறது. இதனால் ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர், உலகெங்கும் பெருமை பெற்றதாக உள்ளது.

    இந்தக் கோவிலில் நடை திறக்கும் போது, அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளைப் பார்ப்பதில்லை. அவளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்க்கின்றனர். ஆண்டாள் கண்ணாடி பார்த்து, தன்னை அழகுபடுத்திக் கொள்வாளாம். அதனடிப்படையில், இவ்வாறு செய்வது ஐதீகம். அந்தக் கண்ணாடியை, "தட்டொளி' என்பர். பின்பு சன்னதியில் தீபம் ஏற்றப்படும். இந்தச் சடங்கைச் செய்யும்போது திரை போடப்பட்டிருக்கும். திரையை விலக்கியதும், பக்தர்கள் கண்ணில் முதலில் ஆண்டாள் படுவாள். பின்பே அர்ச்சகர்கள் ஆண்டாளைப் பார்ப்பர்.

    ஆடிப்பூரத்தன்று, அவள் பெருமாளுடன் தேரில் பவனி வருவாள். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. பக்தியால், இறைவனையே துணைவனாக அடைந்த அவளது பிறந்தநாளைக் கொண்டாட, நாமும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கிளம்புவோமா!

    • திருமணம் ஆகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வரவேண்டும்.
    • பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது.

    ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள். எனவே ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும்.

    திருமணம் ஆகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வரவேண்டும். பூரத்தன்று ஆண்டாளுக்கு மாலை சார்த்தி வழிபட்டால், உடனே திருமணம் கை கூடும். வாரணம் ஆயிரம் பாடி வந்தால் பெண்கள் விரும்பிய கணவர் கிடைப்பார்.

    பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது. 12 திருவோணம் நாட்களில் விரதம் இருந்தால் வாழ்வில் செழிப்பின் உச்சத்துக்கே போய் விடுவீர்கள். இது பலரும் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை.

    ஒவ்வொரு கோவிலிலும் தல வரலாறுக்கு ஏற்ப கடவுளை வணங்கினால் உரிய பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தில் ஆண்டாளை வணங்க செவ்வாய்க்கிழமையே ஏற்ற தினமாகும். 8-ம் நூற்றாண்டில் துளசி வனத்தில் ஆண்டாள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டதால் அன்று முதல் செவ்வாய்க்கிழமை வழிபாடு சிறப்பானதாக கருதப்படுகிறது.

    ஸ்ரீஆண்டாளுக்கு அரக்கு கலர் புடவை, கற்கண்டு சாதம், தாமரை மலர் ஆகிய மூன்றும் மிகவும் பிடித்தமானவையாகும். ஆண்டாளை வழிபாடு செய்யும்போது இந்த மூன்றையும் கொடுத்து வழிபாடு செய்யலாம். அரக்கு கலர் புடவை 9 கெஜம் இருக்க வேண்டும். மூன்றையும் படைக்க இயலாதவர்கள் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்து ஆண்டாளை வணங்கலாம். அவளது ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.

    செவ்வாய்க்கிழமை ஆண்டாளை வணங்க இயலாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை சென்று தரிசிக்கலாம்.

    பெரிய பெருமாள் கோவிலுக்கும், ஆண்டாள் கோவிலுக்கும் மத்தியில் துளசி நந்தவனம் உள்ளது. அங்கு ஆண்டாள் தனியே நிற்கும் சன்னதி உள்ளது. இதை ஆடிப்பூரம் தினத்தன்று 108 தடவை சுற்றினால் நினைத்தது நடக்கும்.

    மலர்கள் நிறைந்த இந்த சன்னதி மிக மிக அமைதி தரும் சன்னதியாகும். அங்கு சிறிது நேரம் அமர்ந்து சென்றால் மனம் குளுமை ஆவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

    • மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது.
    • மார்கழி நோன்பு இருந்த ஆண்டாள் தனது தோழியரை எழுப்புவது போன்ற பொருளில் 30 பாசுரங்கள் பாடினாள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 48-வது திருத்தலமாகும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாவதாக திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும், 2-வதாக உள்ள திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடிய ஆண்டாளும் அவதரித்த தலம் இது.

    இந்த கோவில் இரு பெரும் பகுதிகளாக அமைந்துள்ளது. வடகிழக்கில் இருப்பது வடபெருங்கோவிலுடையான் என்ற ஸ்ரீவட பத்ரசாயி கோவில். தென்மேற்கில் இருப்பதுதான் ஆண்டாள் கோவில்.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இக்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. நாச்சியார் திருமாளிகை எனப்படும் ஆண்டாள் கோவில் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

    துளசி மாட சிறப்பு

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாயி (சுயம்பு) ஆகிய 3 பேரும் அவதரித்த பெருமை கொண்டது என்பதால், இந்த கோவிலை 'மும்புரி ஊட்டிய தலம்' என்கின்றனர். இக்கோவிலின் முதல் பிரகாரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் ஓவிய வடிவில் அருள் பாலிக்கிறார். கல்வியில் சிறந்து விளங்க இவரிடம் வேண்டி கொள்கிறார்கள்.

    ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்து கொள்கிறார்கள்.

    இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர். சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசி கொள்கிறார்கள்.

    மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது. மார்கழி நோன்பு இருந்த ஆண்டாள் தனது தோழியரை எழுப்புவது போன்ற பொருளில் 30 பாசுரங்கள் பாடினாள். அவ்வாறு தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு 'திருப்பாவை விமானம்' என்று பெயர்.

    திருமணத்தடை நீங்குகிறது

    ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.

    கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லாமே நலமாகும் என்பர். அதன்படி இவளிடம் வேண்டிக்கோள்பவை அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருமணமாகாத பெண்கள் துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வருகிறார்கள். தொடர்ந்து, கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு பின் மீண்டும் ஆண்டாளை வழிபடுகிறார்கள்.

    இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோவில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கருவறையை சுற்றியுள்ள முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. மேலும் கண்ணாடி மாளிகை, மாதவிபந்தல், வித்தியாசமான ஆஞ்சநேயர்சிலை, மன்மதன், ரதி சிலைகளும் உள்ளன.

    ஆண்டின் 12 மாதங்களும் இங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதில் 10-ம் நாளான சித்ரா பவுர்ணமி அன்று மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதுபோல் ஆண்டாள் - ரங்கமன்னார் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வைகாசி மாதம் வசந்த கால உற்சவ திருவிழா நடக்கிறது.

    ஆனி மாதம் ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாருக்கு உற்சவ திருவிழாவும், ஆடிப்பூரமும், மார்கழி மாதத்தில் பகல் பத்து, ராபத்து என 20 நாட்கள் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவை தவிர, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களிலும் திருவிழா நடக்கிறது.

    அமைவிடம்

    மதுரையில் இருந்து 74 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பகுதியில் இருந்து வருபவர்கள் ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூரை சென்றடையலாம்.

    நடைதிறப்பு நேரம்

    காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

    தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்க...

    ஆண்டாளின் பக்திக்கு பெருமையளித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற்றுக் கொண்டார். இதை உணர்த்தும் விதமாக இங்கு நடக்கும் ஆடித்திருவிழாவின் 7-ம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்கமன்னார் காட்சி தருவார். இந்த ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒன்றுமை பலப்படும் என்கிறார்கள்.

    • குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார்.
    • சிறு வயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு நந்தவனத்தில் நடந்த சம்பவம் இது. நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், திடீரென ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டார். உடனே அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என்று வேகமாக தேடினார்.

    அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக்கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்த குழந்தையை தூக்கிய அவர், தெய்வீக முகக்களை கொண்ட அந்த குழந்தையை தன் நெஞ்சோடு அனைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது.

    இறைவனே தனக்கு அந்த குழந்தையை அளித்ததாக கருதிய பெரியாழ்வார், அந்த குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார். பிறகு அந்த குழந்தையை தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை வேறு யாருமல்ல; சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம்.

    சிறு வயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள்.

    பெருமாளுக்கு தனது தந்தை தினமும் அணிவிக்க தொடுத்து வைத்திருக்கும் மாலையை, தந்தைக்கு தெரியாமல் தானே சூடிக்கொண்டு அழகு பார்ப்பாள். அருகே உள்ள கிணற்றை கண்ணாடியாக நினைத்து அதில் தன் அழகை பார்த்து ரசிப்பாள். பின்னர் மாலையை கழற்றி இருந்த இடத்தில் வைத்து விடுவாள். அந்த மாலையை தான் பெருமாளுக்கு அணிவித்து வந்தார் பெரியாழ்வார்.

    பெரியாழ்வார் அதிர்ச்சி

    ஒரு நாள் வழக்கம் போல் பெருமாளுக்கு உரிய மாலையை அணிந்து அழகு பார்த்துவிட்டு கழற்றி வைக்கும்போது அதில் ஆண்டாளின் தலைமுடி சிக்கி கொண்டது. ஆண்டாள் இதைக் கவனிக்கவில்லை. ஆனால், பெரியாழ்வார் கவனித்துவிட்டார்.

    உடனே, அந்த மாலையை பெருமாளுக்கு சாற்றாமல் வேறு ஒரு மாலையை அணிவித்தார். ஆனால் அன்றிரவே பெருமாள் அவரது கனவில் தோன்றி, முடி இருந்த மாலை உனது மகள் ஆண்டாள் சூடிய மாலை தான். அவள் சூடி களைந்த மாலையை அணிவதே எனக்கு விருப்பம். இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு சாற்ற வேண்டும் என்று அருளினார்.

    இதனாலேயே ஆண்டாளுக்கு சூடி கொடுத்த சுடர்கொடியாள் என சிறப்பு பெயர் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆண்டாள் சூடிய மாலையே வடபத்ர சயன பெருமாளுக்கு சாற்றப்பட்டு வருகிறது.

    ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு பூமாலை என்றுபொருள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஆடிப்பூர நாயகி என பல சிறப்பு பெயர்களும் இவளுக்கு உண்டு.

    திருமண வயதை அடைந்த ஆண்டாள் கண்ணனை அனுதினமும் நினைத்து, தனக்கு ஏற்ற மணவாளன் அவன் தான் என உறுதிகொண்டாள். கண்ணனை நினைத்து மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி விரதம் இருந்து வணங்கி வந்தாள். அதையறிந்த பெரியாழ்வார், மகளின் அந்த விருப்பத்தை ஏற்றபோதிலும், 108 எம்பெருமான்களில் யாரை திருமணம் செய்ய விரும்புகிறாய்? என்று கேட்டார். அப்போது ஆண்டாளிடம் ஒவ்வொரு பெருமாளின் பெருமைகளையும் எடுத்து கூறினார். கடைசியில் ஸ்ரீரங்கநாதரின் சிறப்புகள் அவளுக்கு பிடித்து இருப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினாள் ஆண்டாள்.

    ஆண்டாள் விருப்பப்படி அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவளை ஸ்ரீரங்கத்துக்கு பல்லக்கில் அழைத்து சென்றார் பெரியாழ்வார். தென் காவிரிக்கு அருகில் சென்ற போது ஆண்டாள் தன்னை ஏற்க இருக்கும் ரங்கநாதருக்கு எதிரே பல்லக்கில் சென்று இறங்கினால் கவுரவமாக இருக்காது என கருதினாள். அதனால் அந்த இடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும் என்று விரும்பினாள். அவளது விருப்பத்தை அறிந்த பெருமாளும் அவள் நடந்தால் பாதம் வருந்தும் என எண்ணி யாரும் அறியாதவாறு அவளை அங்கிருந்து ஆட்கொண்டார்.

    பல்லக்கில் இருந்து ஆண்டாள் திடீரென்று மாயமாய் போனதை கண்ட பெரியாழ்வார் திகைப்படைந்தார். பின்னர் தன் மகளை பெருமாள் அழைத்து கொண்டதை அறிந்த அவர் முறைப்படி தன் ஊருக்கு வந்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். பெருமாளும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

    அதன்படி பங்குனி உத்திரம் அன்று ஆண்டாளை ரங்கமன்னராக ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு பங்குனி உத்திரம் அன்று ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.

    • பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது.
    • ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.

    ஆடி அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.

    பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அவ்வாறு மேற்கொள்ள இயலவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.

    • நாளை செப்புத்தேரோட்டம் நடக்கிறது.
    • மேளதாளங்கள் முழங்க மங்கலப்பொருட்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள், ரெங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்தனர்.

    நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு செப்புத்தேரோட்டம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

    மாலை 4 மணிக்கு பெரியாழ்வார் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு தங்க பல்லக்கில் ஆண்டாள் அழைத்து வரப்படுகிறார். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இதற்காக ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண மண்டபம் முன்பு பிரமாண்ட பந்தல் அமைந்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அறங்காவலர் குழு தலைவரின் மனைவி சொர்ணலதா சுப்பாரெட்டி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆண்டாளுக்கு பட்டுப்புடவை மற்றும் வஸ்திரம் மங்கலப் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்தனர்.

    கோவில் முன்பு மேளதாளங்கள் முழங்க மங்கலப்பொருட்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த பொருட்கள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

    • 10 நாள் ஆண்டாளுக்கு மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறும்.
    • இந்த திருப்பாவை பட்டு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு வந்தது.

    ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்புகள் ஏராளம். பெரியாழ்வார் மட்டுமின்றி, ஆண்டாளும் ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுகிறார். பெருமாள் மீது கொண்ட காதலால், அவர் நினைவாக பாடிய 30 பாடல்கள், திருப்பாவையாக மிளிர்கின்றன. ஆண்டாளுக்கு 'கோதை', 'நாச்சியார்' என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. கோதை ஆண்டாள், 'தமிழையும் ஆண்டாள்' என்பது சொல் வழக்கு. ஆண்டாள் பாடிய 30 திருப்பாவை பாடல்களை, எந்த மொழியில் மொழிபெயர்த்து பாடினாலும் கேட்பவருக்கு தமிழில் பாடுவது போன்ற உணர்வு இருக்குமாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் விழா நடக்கும். மற்ற மாதங்களைவிட மார்கழியில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மார்கழி மாதத்தில் பகல் பத்து உற்சவமும், பின்னர் ராப்பத்து உற்சவமும் நடைபெறும். அதன் பிறகு 10 நாள் ஆண்டாளுக்கு மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறும். பகல் பத்து உற்சவம் தொடங்கும் போது, ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருளி, தான் வளர்ந்த வீட்டிற்கு வருவார். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அங்கு வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பெரியாழ்வார் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆண்டாளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை வீட்டில் தயார் செய்து, பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிப்பார்கள்.

    திருப்பாவை பாடல்களை இயற்றிய ஆண்டாளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நடிகர் ஜெமினி கணேசன் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாவை பட்டு ஒன்றை ஆண்டாளுக்கு சமர்ப்பித்தனர். அது அரக்கு நிறம் கொண்டது. இந்த புடவையின் சிறப்பு என்னவென்றால், அதில் ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாடல்கள் இருக்கும். இந்த திருப்பாவை பட்டு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும், அதாவது மார்கழி முதல் தேதியில் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பல லட்ச ரூபாய் செலவில் பக்தர் ஒருவர் சமர்ப்பித்திருந்த, 30 திருப்பாவை பாடல்களுடன் அச்சிடப்பட்ட ஊதா நிற பட்டுப்புடவை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டுப்புடவையில், ஆண்டாள் முழு உருவத்தையும் பட்டு நூல்களால் சேர்த்துள்ளனர்.

    இந்த பட்டுப்புடவையின் நீளம் 18 கெஜம். ஒரு கெஜம் என்பது கிட்டத்தட்ட 3 அடி ஆகும். மிக மெல்லிதாகவும், வேலைப்பாடுடனும் நெய்யப்பட்டு இருக்கும் இந்த புடவையானது, அப்படியே ஆண்டாள் விக்ரகத்துக்கு சாற்றப்பட்டு, அவர் எழுந்தருளும் போது, அவ்வளவு நீளமான பட்டுப்புடவையை எப்படி இவ்வளவு சிறிதாக மடித்து சாற்றினார்கள் என்று ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்.

    இந்தப்பட்டின் பெருமைகள் குறித்து ஆண்டாள் கோவில் ஸ்தாணிகம் ரமேஷ் கூறியதாவது:-

    ஆண்டாளுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் தேதியில் திருப்பாவைப்பட்டு அணிவிக்கப்படும். இந்த புடவையில் 30 திருப்பாவை பாடல்களும், ஆண்டாள் உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது. பட்டு நூல்களால் இழைக்கப்பட்ட இந்தப் பட்டு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆண்டாளுக்கு சாத்தப்படும். அதிகாலை அணிவிக்கப்படும் இந்தப் புடவையிலேயே, அன்றைய தினம் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு ஆண்டாள் காட்சி அளிப்பாா்.

    திருப்பாவைப் பட்டில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் காட்சியளிப்பதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையையும், ஆண்டாளே வந்து பிறந்ததாக கொண்டாடுவது வழக்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெண்கள் வெளியூர்களுக்கு திருமணம் ஆகி சென்றாலும், வருடத்திற்கு ஒரு முறையாவது வந்து ஆண்டாளை தரிசித்துச் செல்வார்கள். தற்போதும் அந்த ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டாள் வேடம் அணிந்து அழகு பார்ப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் ஆண்டாள் வேடம் அணிந்து குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வருவர். மார்கழி மாதத்தில் ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் இன்றும் உள்ளது. பூமா தேவியாக பிறந்த ஆண்டாளின் கோவிலுக்கு, வாழ்நாளில் ஒரு முறையேனும் வந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பல மாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புடவைக்கு சிறப்பு பூஜை

    ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டாளுக்கு அணியப்படும் பட்டுபுடவையை மற்ற நாட்களில் பீரோவில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். மார்கழி மாதம் அன்று அந்த புடவையை பீரோவில் இருந்து எடுப்பர். பின்னா் அந்த புடவையை ஆண்டாள் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்வர். ஆண்டாளுக்கு பிடித்த பழங்கள், பொருட்கள் ஆகியவை இந்த பூஜையின் போது இருக்கும். சிறப்பு பூஜை முடிந்த பிறகு திருப்பாவை பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்படும்.

    • 100 லிட்டர் பால், 5 லிட்டர் நெய்யில் அக்கார அடிசல் தயார் செய்யப்பட்டது.
    • 100 லிட்டர் பால், 5 லிட்டர் நெய்யில் அக்கார அடிசல் தயார் செய்யப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஆண்டாளுக்கு அக்கார அடிசல் என்ற உணவுப்பொருள் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    100 லிட்டர் பாலில், 5 லிட்டர் நெய்யில் பிரத்யேகமாக அக்கார அடிசல் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு படைக்கப்பட்டது. இதையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    அப்போது பக்தர்களுக்கு அக்கார அடிசல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • ராமானுஜரை, ஆண்டாள் நாச்சியாா் ‘அண்ணனே’ என்று அழைத்திருக்கிறார்.
    • 2 ஆயிரம் வருடங்களாக நிறைவேற்றப்படாத ஆண்டாளின் வேண்டுதலையும், நேர்த்திக்கடனையும் நிறைவேற்றியவர், ராமானுஜர்”

    திருப்பாவை என்றாலே நம் நினைவுக்கு வருபவர், ஆண்டாள். தன் இனிய தமிழால் அரங்கநாதனை பாடிப்பரவி, அவரையே தன் கணவனாக வரித்துக் கொண்டவர். இவர் பாடிய திருப்பாவையின் 30 பாடல்களும் சிறப்புமிக்கவை என்றாலும், அவற்றில் 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா..' என்னும் பாடல் மிகவும் போற்றுதலுக்குரியது. இந்தப்பாடலை மட்டுமே வைத்து வைணவத் தலங்களில் 'கூடாரவல்லி' என்னும் நிகழ்வு நடத்தப்படுவதை வைத்தே, இந்தப் பாடலின் அற்புதத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.

    ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில் முதல் ஐந்து பாடல்களின் வாயிலாக நோன்பு இருப்பதன் மாண்பைப் பற்றி சொல்கிறார். அடுத்துவரும் 6 முதல் 15 வரையான பாடல்களில் கண்ணனின் லீலைகளைப் பற்றி எடுத்துரைக்கிறார். அதோடு அறியாமையில் மூழ்கி உறங்கிக்கொண்டிருக்கும் ஆயர்குல பெண்களையும், மானிடர்களையும் விழித்தெழப் பாடுகிறார். 16 முதல் 25-ம் பாசுரம் வரை, கண்ணனின் மாளிகையிலும், அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கும் பலரையும் துயிலெழுப்பும் விதமாக இருக்கிறது. அதாவது நந்தகோபன், வாசல்காப்பாளன், யசோதாதேவி, நம்பின்னைபிராட்டி என்னும் திருமகள், நிறைவாக கண்ணனையும் ஆண்டாள் நாச்சியார் துயில் எழுப்புகிறார்.

    26-வது பாடலில் கண்ணனை நேரடியாக அழைத்து, ஆயர்குல பெண்கள் நோன்பு இருக்க தேவையானவற்றை பரிசாக அளிக்கும்படி கேட்கிறார். அடுத்து வரும் 27-வது பாடலில், கண்ணன் எப்படியும் தனக்கு பேரருளை தந்துவிடுவான் என்ற நம்பிக்கையில், அவன் கையைப் பிடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், கண்ணன் தன்னை கைப்பிடிக்கும் சமயத்தில் அவனின் அழகுக்கு நிகராக தானும் ஓரளவுக்காவது அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக மணம் கமழும் மலர் சூட்டி, சில ஆபரணங்களை அணிந்து தன்னை அழகுபடுத்திக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

    பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் அரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும், வெண்ணெயும் சமர்ப்பிப்பதாக கள்ளழகரிடம், வேண்டிக்கொள்கிறாள். தான் நினைத்தபடியே அரங்கநாதருடன் கைகோர்த்த ஆண்டாள் நாச்சியார், அரங்கனுடன் ஐக்கியமாகி விட்டார். ஆனால் கள்ளழகருக்கு அவர் சமர்ப்பிப்பதாக கூறிய அக்காரவடிசலும், வெண்ணெயும் சமர்ப்பிக்கப்படாமலேயே இருந்தது.

    ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல.. சுமார் 2 ஆயிரம் வருடங்கள் இந்த வேண்டுதல் நிறைவேறவே இல்லை. ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் இருந்து 2 ஆயிரம் வருடங்களுக்குப்பின் வந்த ராமானுஜர், ஆண்டாளின் ஆசையையும், அவரது வேண்டுதலையும் கேள்விப்பட்டார். அவர் ஆண்டாளின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக, கள்ளழகர் கோவிலின் முன்பாக வந்து அங்குள்ள அர்ச்சகரின் அனுமதியைப் பெற்று, நூறு அண்டாக்களில் அக்காரவடிசலையும், வெண்ணெயையும் சமர்ப்பித்தார். இதனால் 2 ஆயிரம் வருடங்களாக நிறைவேறாத ஆண்டாளின் வேண்டுதல், நேர்த்திக்கடன் நிறைவேறியது. அதை நிறைவேற்றியவர் ராமானுஜர்.

    கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய ராமானுஜர், அந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு திருவில்லிப்புத்தூரில் கோவில் கொண்டிருந்த ஆண்டாளை பார்ப்பதற்காகச் சென்றார். அப்போது வயது வித்தியாசம் பார்க்காத ஆண்டாள், தனக்கான வேண்டுதலை நிறைவேற்றிய ராமானுஜரை, 'அண்ணனே..' என்று அழைத்ததாக தல வரலாறு சொல்கிறது. ஒரு பெண்ணின் மனதில் உள்ள விஷயங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, அவளது தந்தைக்கு உண்டு. அதன்பிறகு அந்தப் பொறுப்பு அவளது அண்ணனுக்கு உரியது. அதனால்தான் ராமானுஜரை, ஆண்டாள் நாச்சியாா் 'அண்ணனே' என்று அழைத்திருக்கிறார்.

    அன்று முதல் திருப்பாவையின் 27-ம் நாள் பாசுரத்தில் 'பால் சோறு மூட நெய் பெய்து..' என்று இருப்பதுபோல், அக்காரவடிசலான பால்சோறு, நூறு அண்டாக்களில் சமர்ப்பிக்கும் வழக்கம், இன்றைக்கும் அழகர்மலையில் உள்ள கள்ளழகர் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. இது பிற்காலத்தில் பிற வைணவ ஆலயங்களிலும் செய்யும் ஒரு நடைமுறை வழக்கமாக மாறிப்போனது. திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருவரங்கம் அரங்கநாதர் கோவில், கள்ளழகர் ஆலயங்களில் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த வைபவத்தின் போது, 120 லிட்டர் பால், 250 கிலோ அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை சேர்த்து, பலமணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் கள்ளழகருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

    'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்

    பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

    நாடு புகழும் பரிசினால் நன்றாக

    சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே

    பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

    ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

    மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்'

    மேற்கண்ட இந்தத் திருப்பாவையின் 27-வது பாடலை, அதற்குரிய மார்கழி 27-ந் தேதி, பக்தா்கள் அனைவரும் தங்கள் இல்லங்களிலும், அருகில் உள்ள கோவில்களிலும் பாடி வழிபடலாம். அதோடு பால்சேறு எனப்படும் அக்காரவடிசல் செய்து, இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து, அக்கம் பக்கத்தினர் அனைவருக்கும் பகிர்ந்து உண்ணலாம். கூடாரவல்லி தினம் என்பது கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக, ஆண்டாள் உறுதியாக நம்பிய நன்னாள். ஜீவாத்மா- பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொள்வது உறுதி என்பதை நிரூபித்த நிகழ்வு தினம் இது. இந்த நாளில் பெண்கள் புத்தாடை அணிந்து ெகாள்வதும், அணிகலன்கள் பூட்டிக்கொள்வதும் வாழ்வில் ஒளியேற்றும். ஆண்டாளின் மன விருப்பத்தை, அரங்கநாதர் வந்து நிறைவேற்றிக்கொடுத்ததுபோல, இந்த நாளில் வேண்டிக்கொள்ளும் ெபண்களின் மனவிருப்பத்தை, ஆண்டாளே நிறைவேற்றித் தருவார் என்பது நம்பிக்கை.

    "2 ஆயிரம் வருடங்களாக நிறைவேற்றப்படாத ஆண்டாளின் வேண்டுதலையும், நேர்த்திக்கடனையும் நிறைவேற்றியவர், ராமானுஜர்"

    • வருகிற 15-ந்தேதி வரை ஆண்டாள் வீதி உலா நடை பெறுகிறது
    • பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி கடந்த 17-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை மனோன்மணி (ஆண்டாள்) வீதி உலா நடை பெறுகிறது. 4-வது நாளான நேற்று காலை உற்சவர் ஆண்டாளுக்கு பல்வேறு நறுமண மலர்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தி, நெய் வேத்தியங்களை கோவில் வேத பண்டிதர்கள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள், மங்கள வாத்தியங்களுடன் வேத பண்டிதர்களால் வேத மந்திரங்கள் முழங்க ஆண்டாள் வீதி உலா தொடங்கியது.

    நான்கு மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். கோவில் ஆய்வாளர்கள் சுரேஷ் ரெட்டி, பத்ரய்யா மற்றும் அதிகாரிகள் ஜெகதீஷ் ரெட்டி, சுரேஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    ×