என் மலர்
நீங்கள் தேடியது "கால்நடைகள்"
- திருச்சி தீரன் நகரில் தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.
- மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.
திருச்சி
திருச்சி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள வளர்ந்து வரும் பகுதி தீரன் நகர். அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, வாரச்சந்தை என எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் மெயின் ரோட்டில் பொழுது சாய்ந்ததும் வெளியில் மேய்ந்து வரும் மாடுகள் ரோட்டுக்கு வந்து விடுகின்றன.
இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. பாதசாரிகளும் மாடுகளுக்கு பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான கடைகளும் உள்ளன.
கடைகளுக்கு வருபவர்களும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி போன்ற பொருட்களை வாங்கிச் செல்ல முடியவில்லை. மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வெளியே சுற்றி திரிந்தால் அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை யாரும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இங்கு அபராதம் விதிக்கப்படாவிட்டாலும் மாட்டின் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்துக் கூறி மாடுகளை வீடுகள் அருகிலேயே கட்டி அல்லது தொழுவத்தில் கட்டி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாடுகள் முட்டி பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக இந்த நடவடிக்கையை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய சேலம் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளர்.
- காப்பீடு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமைகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய 3,600 குறியீடு நிா்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு ரூ. 50 மானியத்திலும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், தாழ்த்தப்பட்டவா் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.70 மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.
இத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமைகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம். இத் திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கும் மற்றும் 1 முதல் 3 வயதுடைய வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஓராண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 2 சதவீதமும், மூன்றாண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 5 சதவீதமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 35, 000-க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி பயன்பெறலாம் என சேலம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேவரம்பூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
- விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், தேவராம்பூர் கிராமத்தில், வருகிற (14-ந்் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில், ஏழை எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடக்கிறது.
இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல். நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, ஊடு அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அளிக்கப்படும்.
மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளைப் பின்பற்றும் சிறந்த 3 விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடாரி கன்று பேரணி நடத்தி சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், தாது உப்புக்கலவைகள் கால்நடை வளர்ப்போருக்கு விநியோகிக்கப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- நட்டாத்தி பட்டாண்டி விளையில் செபத்தையாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழப்புணர்வு முகாம் நடந்தது.
- முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி பட்டாண்டி விளையில் செபத்தையாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழப்புணர்வு முகாம் நடந்தது.இதில் தோல் கழலை நோய் விழிப்புணர்வு முகாமிற்கு நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார்.நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் ஜோசப்ராஜ், கால்நடை உதவி மருத்துவர் வேல்மாணிக்க வள்ளி, கால்நடை ஆய்வாளர்கள் சாந்தி சுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் கோமதி லெட் சுமி, பேச்சியம்மை, டி.வி.எஸ். தொண்டு நிறுவனத்தில் இருந்து செல்வி, வார்டு உறுப்பினர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கால்நடை சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டு சத்துமாவுகள் மாத்திரைகள் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகளை பராமரிப்பவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் நட்டாத்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கால்நடை வளர்க்கும் மக்கள் கால்நடையுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை செபத்தையாபுரம் கால்நடை மருத்துவமனை ஏற்பாடு செய்து இருந்தது.
- ஆடுகளில் நீல நாக்கு நோய் ஏற்படுத்தும் கிருமிகளை பரப்பும் இடைநிலை காரணிகளாகும்.
- கொட்டகையை சுற்றி மழை நீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பல்லடம் பகுதி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கால்நடைகள் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் சாணத்தை இயற்கை விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மழை காலங்களில் கால்நடைகளை பராமரித்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கரடிவாவி அரசு கால்நடை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் .இதுகுறித்து மருத்துவர் அர்ஜுனன் கூறியதாவது:-
கால்நடைகளை வளர்ப்போர் மழை காலங்களில் பராமரிப்பு முறைகளில் சில மாற்றங்களை செய்து சிறப்பு பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக மழை காலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். அவைகளை ஆட்டு பட்டியிலேயே வைத்து உணவாக இலை, தழைகள், காய்ந்த சோளதட்டு உள்ளிட்டவற்றை கொடுக்கலாம்.
அனைத்து ஆடுகளுக்கும் பட்டியிலேயே வைத்து தீவனம் வழங்க முடியாத சூழ்நிலையில் குறைந்த பட்சம் சினை ஏற்பட்டுள்ள ஆடுகளுக்கும், பாலுாட்டும் தாய் ஆடுகளுக்கும் மட்டும் தீவனம் தருவது அவசியம். மழைக்காலம் என்பதால் ஆடுகளின் குளம்புகளில் சேற்றுப்புண் ஏற்படலாம். இதனை தவிர்க்க ஆடுகள் பட்டிக்குள் நுழையும் பகுதியில் ஆடுகளின் குளம்புகள் நனையும்படி "பொட்டாசியம் பெர்மாங்கனேட்" கரைசலை நிரப்பி வைத்திட வேண்டும். ஆடுகள் தங்கும் ஆட்டு பட்டியை சுற்றி மழை நீர் தேங்கினால் ஈக்கள் மற்றும் கொசுக்கள்உருவாக வாய்ப்புகள் ஏற்படும். இவையே ஆடுகளில் நீல நாக்கு நோய் ஏற்படுத்தும் கிருமிகளை பரப்பும் இடைநிலை காரணிகளாகும்.
மாடுகளை போலவே ஆடுகளுக்கும் இப்பருவத்தில் குடற்புழு நீக்க சிகிச்சை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். மாடுகளை பண்ணை அளவில் வைத்து வளர்ப்போர் மாட்டு கொட்டகைக்குள் மழை நீர் புகாதபடி பார்த்து கொள்ள வேண்டும். கொட்டகையை சுற்றி மழை நீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். சேறும் சகதியாக கொட்டகைக்குள் இருந்தால் மாடுகளின் உடல் நலத்தை பாதிப்பதோடு மாட்டின் பாலின் தரமும் குறைய வாய்ப்புகள் உள்ளது.
மேலும் கறவை மாடுகளுக்கு மழைக் காலங்களில் மடி வீக்க நோய் தாக்கும் சூழ்நிலைகள் இருப்பதால் மாடுகளிலிருந்து பால் கறப்பதற்கு முன்னர் மாட்டின் மடியையும், காம்புகளையும் 'பொட்டாசியம் பர்மாங்கனேட்' கரைசல் கொண்டு கழுவி பின்னர் பால் கறக்க வேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட் மருந்து குறைந்த விலையில் கிடைக்கிறது. மாட்டின் கன்றுகளுக்கு கழிச்சல், ரத்தக் கழிச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் தர வேண்டும். மாடுகளின் தீவனப் பொருட்களான வைக்கோல், கலப்பு தீவனங்கள் போன்றவைகளை மழை நீரிலிருந்து நனையாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழை நீரில் இவை நனைவதால் பூஞ்சைகாளான் நச்சு ஏற்படலாம். எனவே பருவகாலங்களில் இதுபோன்ற சிறப்பு பராமரிப்பு முறைகளை மேற்கொண்டு கால்நடைகளைப் பராமரித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அவைகளை பாதுகாத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாடுகளின் உரிமையாளரிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிப்பு.
- ஏற்கனவே, பிடிபட்ட மாடுகள் மறுபடியும் பிடிபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை.
திருவாரூர்:
திருவாரூர் நகரத்திற்கு ட்பட்ட சாலைகளிலும், திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் கங்களாஞ்சேரி வரை இரவு நேரங்களில் மாடுகள் மற்றும் குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் திருவாரூர் நகராட்சிக்கு தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் மற்றும் குதிரைகள் நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்கப்பட்டு அவற்றிற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மூன்று நாட்கள் கடக்கும் பட்சத்தில் அந்த கால்நடைகள் பொது ஏலம் விடப்படும் என்றும், கால்நடைகள் மூலம் ஏற்படும் விபத்துகளுக்கு உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து தருபவருக்கு ரூ 500 சன்மானமாக வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள், நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை கடந்த இரண்டு நாட்களாக பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் பாதுகாத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளரிடமிருந்து ரூ17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் நகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே பிடிபட்ட மாடுகள் மறுபடியும் பிடிபட்டால் காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த மாடுகளால் ஏற்படும் விபத்திற்கு உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுவரை 37 மாடுகள் பிடிபட்டது. இதில் 28 மாடுகளை உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி அழைத்துச் சென்றனர். மீதமுள்ள 9 மாடுகள் தற்போது நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.
- கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம், தோல் கழலை நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. முகாமானது கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் அறிவுரையின் பேரிலும், உதவி இயக்குனர்கள் விஜயகுமார் உத்தரவின் பேரிலும் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் முகம்மது சலாவுதீன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.
இதில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சசிக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஸ்ரீதர், செயற்கை முறை கருவூட்டாளர் தம்பிராஜா மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் வடகரை ஊராட்சி திருப்பனையூரில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் ஊராட்சி செயலாளர் பிரகாஷ் குமார் ஆகியோர் தலைமை வகித்து முகாமை நடத்தி வைத்தனர். அதே போல் ஆதலையூரில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திரசேகர் தலைமை வகித்துமருத்துவ முகாமை நடத்தி வைத்தார்.
- பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்கின்றனர்.
- விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை பகுதி கிராமங்களில் மாட்டுப் பொங்கலன்று, விவசாயிகள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டுக் காளைகள், எருதுகள் மட்டுமின்றி, கறவை பசுக்கள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் குளிப்பாட்டி, வண்ணப் பொடித் துாவியும், வண்ண அச்சுகளை வைத்தும் விவசாயிகள் அழகுபடுத்துவதும், கொம்புகளை சீவி வண்ணம் தீட்டுவதோடு, கால்நடைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, கழுத்துமணி , கொம்பு கொப்புச் சலங்கை, கால் சலங்கை, தலைக்கயிறு, கழுத்துச் சங்கிலி, நெற்றிப்பட்டை ஆகிய அணிகலன்கள் மற்றும் பலுான், ரிப்பன் ஆகியவற்றை வாங்கி அணிவித்து அலங்கரிப்பதை ஊர்வலமாக அழைத்து செல்வதை பெருமையாக கருதுகின்றனர்.
இதனால், வாழப்பாடி அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை, தும்பல் வாரச்சந்தை களிலும், கிராமங்கள் வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளிலும் கால்நடை அணிகலன்கள் விற்பனை அமோகமாக நடந்தது. பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்வதோடு மட்டுமின்றி, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.
- தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மாதாக்கோட்டை சாலையில் இன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்இந்த முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார் .
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 2 லட்சத்து 92 ஆயிரம் கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
விடுதல் இன்றி அனைத்து கிராமங்களிலும் இந்த பணி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் நர்மதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தமிழ்செல்வம், உதவி இயக்குனர் சையத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், தாசில்தார் சக்திவேல், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், எஸ்.பி.சி.ஏ அலுவலர் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், முகமது ரபி, விஜயலட்சுமி பாரதி, முனைவர் சதீஷ்குமார், ஆடிட்டர் ராகவி, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கால்நடைகளுக்கு 21 நாட்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் 3-வது சுற்று தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கால்நடைகளின் நலன் காத்திடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சார்பில் கால்நடை பரா மரிப்புத்துறையின் மூலமாக 3-வது சுற்று (கோமாரி) தடுப்பூசி போடும் பணி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மாட்டினங்க ளுக்கும் இலவசமாக 21 நாட்கள் தொடர்ச்சியாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் தொடங்கி உள்ளது.
இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பசுக்கள் 2 லட்சத்து11 ஆயிரத்து 458 மற்றும் எருமை மாடுகள் 742 என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 200 மாடுகள் பயன்பெற உள்ளன. இதற்கான தடுப்பூசிகள் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய தலைமை கால்நடை மருந்தகங்களில் பாதுகாப்பான முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 57 குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை கால்ந டைகளுக்கு செலுத்து வதனால், இதன் வாயிலாக தங்களது கால்நடைகளை, கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி) நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்திட முடியும்.
இதனால் கறவை மாடுகள் பால் உற்பத்தி, எருதுகளின் வேலைத்திறன், கறவை மாடுகளின் சினை பிடிப்பு போன்றவைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும். இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாமை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசியினை செலுத்தி, உங்கள் கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பேணி பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், துணை இயக்குநர் முகமதுகான், துணைப்பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர், ஆவின் (காரைக்குடி) சாமமூர்த்தி, கண்டாங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மந்தக்காளை, உதவி இயக்குநர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பொமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
- இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் காயல்குடி பேரூராட்சியில் சேர்மன் மாரியப்பன் தலைைமையில் செயல் அலுவலர் சேகர் முன்னிலையில் செல்ல பிராணிகளுக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 136 பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பேரூராட்சி தலைவர் மாரியப்பன், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் நேரு குமார், கால்நடை மருத்துவர் அரவிந்தன், மணி, கால்நடை ஆய்வாளர்கள் இளமதி, கோதை நாயகி கால்நடை பராமரிப்பு உதவியாளர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கடந்த சில நாட்களாக தக்காளி விலை சந்தையில் குறைந்துள்ளது.
- இறுதி காய்ப்பு தருணத்தில் உள்ள செடிகளை, அப்படியே அழித்து வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.குழித்தட்டு முறை நடவு, சொட்டு நீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள் என புதிய தொழில்நுட்பங்களால் மகசூல் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் சீசன் சமயங்களில் விலை கிடைப்பதில்லை.குறிப்பாக கோடை காலத்தில் சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை சந்தையில் குறைந்துள்ளது. விளைநிலங்களில் இருந்து பறித்து வாடகை கொடுத்து சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் செலவுக்குக்கூட கட்டுபடியாகாத விலை நிலவரம் உள்ளது.
எனவே இறுதி காய்ப்பு தருணத்தில் உள்ள செடிகளை, அப்படியே அழித்து வருகின்றனர். மேலும் சிலர் விளைநிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு தக்காளி செடிகளை தீவனமாக வழங்குகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் முக்கிய சீசனில் தக்காளி விலை வீழ்ச்சியடைவது தொடர்கதையாக உள்ளது. இருப்பு வைத்து விற்பனை செய்யவும் வசதியில்லை. போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் அறுவடை செலவும் அதிகரித்து விட்டது.எனவே கட்டுப்படியாகாது என்ற நிலை ஏற்படும் போது தக்காளி அறுவடையை நிறுத்தி விட்டு செடிகளை அழித்து விடுகிறோம். தக்காளியை மதிப்பு கூட்டி விற்பதற்கான தொழில்நுட்பங்கள் எளிதானால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றனர்.