search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியாணி"

    • ஆத்திரம் அடைந்த போதை வாலிபர் பிரியாணி அண்டாவை காலால் எட்டி உதைத்தார்.
    • கவல் அறிந்ததும் கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    சென்னை சூளைமேடு அடுத்த பெரியார் பாதையை சேர்ந்தவர் அருண்குமார். கோடம்பாக்கம் அடுத்த டிரஸ்ட்புரம் 2-வது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு நேற்று இரவு மதுபோதையில் வந்த வாலிபர் ஓசியில் பிரியாணி பார்சல் தருமாறு கேட்டார். ஆனால் பணம் கொடுத்து வாங்கி செல்லுமாறு அருண் குமார் கூறினார்.

    இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போதை வாலிபர் பிரியாணி அண்டாவை காலால் எட்டி உதைத்தார்.

    மேலும் கடையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்டு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து வாலிபர் தப்பி சென்று விட்டார்.

    தகவல் அறிந்ததும் கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து ஓட்டலை சூறையாடியது அதே பகுதியை சேர்ந்த ரவுடியான கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
    • போலீசார் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

    கடலூர் :

    10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற வதந்தி மக்களிடையே இன்றும் பல இடங்களில் பரவி நிற்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும், 10 ரூபாய் நாணயங்கள் கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் மக்கள் இந்த நாணயத்தை வாங்குவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள்.

    இந்த வதந்தியை மக்களிடம் இருந்து நீக்குவதற்கு, இந்த நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அரசு மற்றும் சில வணிகர்களும் விழிப்புணர்வு பிரசாரங்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகிறார்கள்.

    இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

    இந்த நிலையில், கடலூர் மாவட்ட மக்களிடையே 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராமநத்தம் அடுத்துள்ள புதுக்குளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார்.

    இதுபற்றி அறிந்தவுடன், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது வீட்டில் இத்தனை நாட்களாக தூங்கி கொண்டு கிடந்த 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பிரியாணி கடையை நோக்கி விரைந்தனர்.

    ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து, பிரியாணியை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்து, கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

    இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், நான் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்தேன். அங்கிருந்து சொந்த ஊர் வந்த நான், இங்கு புதிதாக பிரியாணி கடையை திறந்தேன்.

    தற்போது 10 ரூபாய் நாணயம் ஒரு சில கடைகளில் வாங்க மறுத்துவருவதால், அதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, கடை திறந்து முதல்நாளான நேற்று, 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி வழங்கினேன். மக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர் என்றார்.

    • 200 பேருக்கு மட்டுமே வழங்க சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • இந்த ஓட்டலில் ஒரு சிக்கன் பிரியாணி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி :

    10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதனை வாங்க வியாபாரிகள், பஸ் கண்டக்டர்கள் உள்ளிட்டவர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா, செல்லாதா என பெரும்பாலான மக்கள் இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதனை அறித்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தேடி எடுத்தனர். சிலர் தங்களுக்கு தெரிந்த கடைகளுக்கு சென்று 10 ரூபாய் நாணயங்களை வாங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் சிக்கன் பிரியாணி வாங்க சம்பந்தப்பட்ட அந்த ஓட்டலுக்கு சென்றனர். பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், அங்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை 10 மணி முதலே முண்டியடித்து கொண்டு வரிசையில் நின்றனர்.

    இந்த நிலையில் காலை 11 மணிக்கு ஓட்டல் ஊழியர்கள் பொதுமக்களிடம் 10 ரூபாய் நாணங்களை பெற்று கொண்டு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கினர்.

    200 பேருக்கு மட்டுமே வழங்க சிக்கன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 200 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிரியாணி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுத்து வரும் நிலையில் ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வழக்கமாக இந்த ஓட்டலில் ஒரு சிக்கன் பிரியாணி ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நேற்று 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாக ஓட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

    • சுதாவிற்கு ராமச்சந்திரன் அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் பிரியாணி வாங்கி கொடுத்தார்.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுதா பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சுதா (வயது 19)நிறைமாத கர்ப்பிணி. இவர் சம்பவத்தன்று பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துமனைக்கு தனது மனைவியை ராமச்சந்திரன் அழைத்து வந்தார். அங்கு இருந்த டாக்டர்கள் பிரசவத்திற்கு 20 நாட்கள் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையி லிருந்து ராமச்சந்திரன், மனைவி சுதாவுடன் சேத்தூருக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அலைந்து வந்த கலைப்பினால் சுதாவிற்கு ராமச்சந்திரன் அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் பிரியாணி வாங்கி கொடுத்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு இருவரும் அரசு பஸ்சில் கல்வராயன்மலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது சுதா மயக்கம் அடைந்தார். உடனே ராமச்சந்திரன் சுதாவை அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சையில் சேர்த்தார்.

    அங்கு சுதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுதா பரிதாபமாக இறந்தார். பின்னர் சுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. சுதாவுக்கு திருமணமாகி ஓராண்டு ஆவதால், கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுதா சாப்பிட்ட பிரியாணியால் உயிரிழந்திருக்கலாமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரியாணியை சாப்பிட பிடிக்காது என்று சொல்பவர்களே இருக்க வாய்ப்பில்லை.
    • உலகளவில் பிரியாணியில் பல வகைகள் உள்ளன.

    இன்னைக்கு ஒரு பிடி...! என்ற வசனம் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ கண கச்சிதமாக பிரியாணி சாப்பிடும்போது பொருந்தும். உலகளவில் பலவகையான அறுசுவைமிக்க உணவுகள் இப்போதைக்கு இருந்தாலும், இனிமேல் வந்தாலும் சரி பிரியாணிக்கு இருக்கும் மவுசு என்றும் தனிதான்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மிகவும் பிரியமான உணவாகத்தான் பிரியாணி வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆம்... வீட்டிலோ, ஓட்டலிலோ நல்ல கமகமவென வாசனையுடன், ஆவி பறக்க சுவைமிக்க பிரியாணி மற்றும் அதனுடன் கொஞ்சம் வெங்காய பச்சடியை வைத்து சாப்பிடும்போது....சொல்லவா வேண்டும். சுவையின் சுகத்தில் நாக்கு நடனமாடி ஒரு நிமிடம் உலகத்தையே மெய்மறக்க செய்துவிடும்.

    அதனால் பிரியாணியை சாப்பிட பிடிக்காது என்று சொல்பவர்களே இருக்க வாய்ப்பில்லை. அசைவப்பிரியர்களுக்கு சிக்கன், மட்டன் பிரியாணி வகைகள் அலாதியான விஷயங்கள்.

    உலகளவில் பிரியாணியில் பல வகைகள் உள்ளன. குறிப்பிடும்படியாக சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, மட்டன் பிரியாணி, பீப் பிரியாணி, காய்கறி பிரியாணி உள்ளிட்டவை இருப்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தியாவை பொருத்தவரை கொல்கத்தா பிரியாணி, லக்னோ பிரியாணி, குஜராத் மிமோனி பிரியாணி, ஐதராபாத் தம்பிரியாணி, மலபார் பிரியாணி, தலச்சேரி பிரியாணி, தமிழ்நாட்டின் ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி ஆகிய பிரியாணிகள் மிகவும் பிரபலமானவை, மேலும் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியவை. இதனால் இந்தியாவில் முக்கிய நகரங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில் அதிகம் பேர் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணிதான் முதலிடத்தில் உள்ளதாம்.

    பிரியாணி என்பது உருது சொல் என்று கூறப்படுகிறது. மேலும் பிரியாணி தோன்றிய வரலாறுகள் பல்வேறு நாடுகளில், பல விதமாக கூறப்படுகிறது.

    இதில் இந்தியாவில் பிரியாணியின் வரலாற்றை பார்க்கபோனால், பண்டைய கால மக்கள் அரிசி, நெய், மஞ்சள், மிளகு ஆகியவற்றுடன் இறைச்சியை சேர்த்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது ஊன்சோறு என்றழைக்கப்பட்டுள்ளது. இதுவே பின்னாளில் பிரியாணியாக மாறியதாக கூறப்படுகிறது. மேலும் முகலாய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில்தான் இந்தியாவில் பிரியாணி உருவானதாகவும், குறிப்பிடும்படியாக போரின்போது மன்னர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் வருகை புரிந்து வீரர்களின் நிலையை கண்டு வருந்தி அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் அரிசியுடன் மசாலா, இறைச்சி கலந்த உணவை தயாரித்து கொடுத்ததுதான் பிரியாணியாக மாறியதாக கூறப்படுகிறது.

    எது எப்படியோ பிரியாணி தோன்றிய வரலாற்றைவிட, அவை சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.

    அந்த வகையில் அசைவ பிரியர்களின் உணவு பட்டியலிலும், விழாக்களின் விருந்துகளிலும் முக்கிய உணவு வகையாக அங்கம் வகிக்கும் பிரியாணியை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதலாவது ஞாயிற்றுக்கிழமை உலக பிரியாணி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி ஜூலை 2-ந்தேதியான இன்று(ஞாயிற்றுக்கிழமை) உலக பிரியாணி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    • பிரியாணி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதால் நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்தது.
    • ஒரு சிலர் ஓட்டலுக்குள் முண்டியடித்து சென்று ஒரு ரூபாய் நாணயத்தை கொடுக்காமலேயே கடைக்காரரிடம் இருந்து பிரியாணியை பறித்து சென்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் புதிய ஓட்டல் நேற்று திறக்கப்பட்டது.

    திறப்பு விழாவை முன்னிட்டு மதியம் 2-30 மணிக்கு மேல் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்றும் பிரியாணி வாங்க வருபவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்து இருந்தது.

    மேலும் ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தன. விளம்பரத்தை கண்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பிரியாணியை வாங்கி சாப்பிட்டே தீர வேண்டும் என எண்ணினர்.

    சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டல் முன்பு உள்ள சாலையில் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஒரு ரூபாய் பிரியாணி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதால் நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்தது.

    பிரியாணி வாங்க வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் முக்கிய சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பிரியாணி வழங்க தொடங்கியபோது எப்படியும் பிரியாணி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாலிபர்கள் ஒருவருடன் ஒருவர் முண்டியடித்து செல்ல முயன்றனர். அப்போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஒரு சிலர் ஓட்டலுக்குள் முண்டியடித்து சென்று ஒரு ரூபாய் நாணயத்தை கொடுக்காமலேயே கடைக்காரரிடம் இருந்து பிரியாணியை பறித்து சென்றனர்.

    நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகவே ஓட்டல் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

    போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீசார் ஓட்டலை தற்காலிகமாக இழுத்து மூடினர்.

    இதையடுத்து வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

    • டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 2 கிலோ பிரியாணியை கொண்டு டோனியின் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அறிவழகி.

    ஓவியரான இவர் தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களுடைய உருவத்தை தத்ரூபமாக கோலமாவுகளைக் கொண்டு வரைந்து அசத்தியுள்ளார். காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், டெண்டுல்கர், டோனி ஆகியோரின் உருவங்களையும் ரங்கோலியிலும் வரைந்துள்ளார்.

    அந்த வகையில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 

    பிரியாணியில் வரையப்பட்ட தோனி ஓவியம்.

    பிரியாணியில் வரையப்பட்ட தோனி ஓவியம்.

    இதில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அறிவழகி 2 கிலோ பிரியாணியை கொண்டு 2 அடியில் டோனியின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.

    இதில் ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
    • வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,

    வெந்தயக்கீரை- ஒரு கப்,

    வெங்காயம் - 1 பெரியது,

    உருளைக்கிழங்கு - 2,

    பச்சை மிளகாய் - 3,

    பிரிஞ்சி இலை - 1,

    இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பிறகு, வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கி, வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    இப்போது சூப்பரான வெந்தயக்கீரை புலாவ் ரெடி.

    • கொத்தமல்லி, புதினாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு சத்தான லஞ்ச் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி - ஒரு கப்,

    கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கப்,

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 5,

    பட்டை - ஒரு துண்டு,

    கிராம்பு - 2,

    ஏலக்காய் - 1,

    உருளைக்கிழங்கு - 1,

    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு 5 நிமிடம் வதக்கி, ஆற வைத்து, ஆறியதும் மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    இரண்டும் நன்றாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    நெய்யில் அரிசியை வறுத்து, குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    குக்கரை மூடி, மிதமான தீயில் வேக விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கினால்... கமகம கிரீன் பிரியாணி ரெடி!

    • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
    • இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - ஒரு கப்,

    பெரிய வெங்காயம் - 2,

    தக்காளி - 4,

    பூண்டு - 4 பல்,

    பச்சைமிளகாய் - 4,

    பட்டை - 2 துண்டு,

    கிராம்பு - 2,

    முந்திரி - 20

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    ஏலக்காய் - 2,

    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,

    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது.

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

    தக்காளியைத் தனியாகவும், பூண்டு - பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, முந்திரி போட்டு தாளித்த பின்னர் பூண்டு - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர், தக்காளி சாறை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து வந்ததும் வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தக்காளி பிரியாணி ரெடி.

    • கோதுமை சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று எளிய முறையில் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை சேமியா - 250 கிராம்,

    பெரிய வெங்காயம் - ஒன்று,

    தக்காளி - ஒன்று ,

    பீன்ஸ் - 3,

    கேரட் - ஒன்று,

    பிரிஞ்சி இலை - ஒன்று,

    பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு,

    காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்),

    உருளைக்கிழங்கு - ஒன்று,

    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

    தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன்,

    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும்.

    உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு, கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

    வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை சேமியா பிரியாணி ரெடி.

    • உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சாத்தான்குளம் பகுதி ஓட்டல்கள் மற்றும் உணவு சார்ந்த கடைகளில் ஆய்வு நடத்திட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
    • திருச்செந்தூர் உணவு பாதுகாப்புத்துறை மண்டல அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் ஆய்வு செய்ய உள்ளனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் ஒருவர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் ஒரு பூரான் இறந்து கிடந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் இது தொடர்பாக கடைக்காரரிடம் கேட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இதைப்பார்த்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சாத்தான்குளம் பகுதி ஓட்டல்கள் மற்றும் உணவு சார்ந்த கடைகளில் ஆய்வு நடத்திட வேண்டும், கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் பாதுகாப்பு இல்லாமலும், ஓட்டல்களில் சுகாதாரம் குறைவாகவும் இருந்தால் அவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    இந்நிலையில் திருச்செந்தூர் உணவு பாதுகாப்புத்துறை மண்டல அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் ஆய்வு செய்ய உள்ளனர்.

    ×