search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231534"

    • 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு எதிராக பா.ஜ.க. சதி செய்தது.
    • மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் முதல் மந்திரியும், அக்கட்சி தலைவருமான நிதிஷ்குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பீகாரில் கடந்த 2005, 2010-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் எங்கள் கட்சி (ஐக்கிய ஜனதா தளம்) குறைவான இடங்களைப் பெற்றதில்லை என்பதை அவர்கள் (பா.ஜ.க.) நினைவில் கொள்ள வேண்டும்.

    2020-ல் நடந்த தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை தோல்வி அடைய செய்ய அவர்கள் (பா.ஜ.க.) முயற்சி செய்ததால் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.

    பீகார் அவர்களிடம் (மத்திய பா.ஜ.க. அரசிடமிருந்து) எதுவும் பெறவில்லை. மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

    அவர் (பிரதமர் மோடி) பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்து வளமாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏழைகளை முன்னேற்றாமல் நாடு முன்னேற முடியாது. அவர்களை (பா.ஜ.க.) எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், 2024 பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும். ஆனால் ஒருங்கிணைவது அனைத்துக் கட்சிகளின் கையில் உள்ளது. அதை நிறைவேற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்வேன் என தெரிவித்தார்

    • எல்லா மாநிலங்களுமே நாட்டின் வளர்ச்சிக்கு தீவிர பங்காற்றுகின்றன.
    • நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும்.

    பாட்னா :

    பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ரூ.15 ஆயிரத்து 871 கோடி மதிப்பிலான மின்துறை திட்டங்களை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    நாட்டில் ஒருசில மாநிலங்கள், மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் ெசய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக, மத்திய அரசின் மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து பீகார் மாநிலம் மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி வருகிறது.

    அந்த மின்சாரத்தை பொதுமக்களுக்கு மிகக்குறைந்த விலைக்கு அளித்து வருகிறது. 2018-ம் ஆண்டு, பீகாரில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்தது.

    2005-ம் ஆண்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, மின்சார பயன்பாடு வெறும் 700 மெகாவாட்டாக இருந்தது. தற்போது, 6 ஆயிரத்து 738 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. வெளிப்படைத்தன்மையை உருவாக்க விரைவில் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப் போகிறோம்.

    எல்லா மாநிலங்களுமே நாட்டின் வளர்ச்சிக்கு தீவிர பங்காற்றுகின்றன. பிறகு ஏன் சில மாநிலங்கள் மட்டும் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்க வேண்டும்?

    நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும். அதற்கு 'ஒரே நாடு, ஒரே மின்கட்டணம்' கொள்கையை ஏற்க வேண்டும் என்று முன்பே பல தடவை சொல்லி இருக்கிறேன்.

    நாங்கள் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி, மானிய விலையில் மக்களுக்கு கொடுக்கிறோம். இலவச மின்சாரம் கொடுக்க வேண்டும் என்று கூறுபவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எங்கள் மகாகூட்டணி வலிமையாக உள்ளது.
    • சிலர் வதந்தியை கிளப்பினாலும், எந்த சந்தேகத்துக்கும் இடம் வேண்டாம்.

    பாட்னா :

    பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜனதா அணியில் சேருவார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில், பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் பேட்டியளித்த துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜனதா அணியில் சேரமாட்டார். எங்கள் மகாகூட்டணி வலிமையாக உள்ளது. பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றி, வலிமையான அரசை நடத்தி வருகிறோம். சிலர் வதந்தியை கிளப்பினாலும், எந்த சந்தேகத்துக்கும் இடம் வேண்டாம். அடுத்த வாரம் நடக்கும் 2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் பாத யாத்திரை நடத்தி வருகிறார்.
    • அப்போது பேசிய அவர், நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் இன்னும் தொடர்பில் உள்ளார் என்றார்.

    பாட்னா:

    பீகாரில் பாத யாத்திரை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.

    பா.ஜ.க.வுக்கு எதிராக நிதிஷ்குமார் தேசிய அளவில் கூட்டணி உருவாக்கி வருவதாக மக்கள் நினைத்து வருகின்றனர். ஆனால் அவர் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்திருப்பதை அறியும்போது அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைவார்கள். ஏனெனில் அவர் தனது கட்சி எம்.பி.யும், மாநிலங்களவை துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.

    இதற்காகவே அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ்குமார் கேட்கவில்லை.

    தேவை ஏற்படும்போதெல்லாம் மீண்டும் பா.ஜ.க.வுக்குச் சென்று அவரால் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அப்படி கூட்டணி வைத்தால் ஆச்சரியம் இல்லை என தெரிவித்தார்.

    பிரசாந்த் கிஷோரின் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய ஜனதாதளம் மறுத்துள்ளது.

    • நான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன்.
    • சாமானியர்கள் மீது பாஜகவுக்கு அக்கறை இல்லை.

    பாட்னா :

    பீகார் மாநிலம் சமஷ்டிபூரில், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் புதிய கட்டிடத்தை அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    வாஜ்பாய், அத்வானி, ஜோஷி போன்ற மாபெரும் தலைவர்களின் காலத்து பா.ஜனதாவில் இருந்து தற்போதைய பா.ஜனதா வேறுபட்டது. அந்த தலைவர்கள் என் மீது பாசமும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போதைய தலைவர்களிடம் அதை பார்க்க முடியவில்லை. மேலும், சாமானியர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. நான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் இனிமேல் அக்கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன். மீதி வாழ்நாளில், சோஷலிஸ்டு கட்சிகளுடன் சேர்ந்து அனைத்துதரப்பினரின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்.

    என்னுடன் கூட்டணியில் இருந்தபோது, 2017-ம் ஆண்டு லாலுபிரசாத் யாதவ் வீட்டில் சோதனை நடந்தது. ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் மீண்டும் என்னுடன் கைகோர்த்தவுடன், அரசியல் எஜமானர்கள் உத்தரவுப்படி, அவர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு போட்டு துன்புறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார்.
    • தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது

    புதுடெல்லி :

    ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, வேலை வழங்க நிலம் லஞ்சமாக கைமாறியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மூத்த மகள் மிசார பாரதி எம்.பி. உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

    ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்த பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், ''அந்த வழக்கில் எதுவுமே வெளிவரவில்லை. நான் இப்போது அவருடன் கூட்டணியில் இருக்கிறேன். சி.பி.ஐ. தங்கள் ஆசைக்கேற்ப செயல்படுகிறது'' என்று கூறினார்.

    இந்தநிலையில், நிதிஷ்குமாருக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நிதிஷ்குமார், தான் வாழ்நாளில் கட்டிக்காப்பாற்றிய முக்கிய கொள்கைகளை லாலுவையும், அவரது குடும்பத்தையும் ஊழல் வழக்கில் ஆதரித்து பேசுவதன் மூலம் சமரசம் செய்து கொண்டு விட்டார்.

    2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார். ஆனால் அவரே தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது, துரதிருஷ்டவசமானது.

    அவர் சட்டத்தை செயல்பட விட வேண்டும். அதில் குறுக்கிடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக் கொண்டார்.
    • பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.

    இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ்குமார் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்தியில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்பு பா.ஜ.க. அல்லாத கூட்டணிக்கு கிடைக்குமானால், பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என தெரிவித்தார்.

    • நிதிஷ்குமார் நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
    • நிதிஷ்குமார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுகான் ஆகியோரையும் சந்திக்கிறார்.

    புதுடெல்லி:

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் 3 நாள் பயணமாக டெல்லிக்கு முதல்முறையாக சென்றார். 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். நிதிஷ்குமார் நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

    இதை தொடர்ந்து அவர் இன்று காலை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரியை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜாவை சந்திக்கிறார். பின்னர் நிதிஷ்குமார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுகான் ஆகியோரையும் சந்திக்கிறார்.

    நிதிஷ்குமாரை கடந்த வாரம் தெலுங்கானா முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். தலைவருமான சந்திரசேகர்ராவ் சந்தித்து பேசிய பிறகு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • பீகார் முதல் மந்திரி டெல்லிக்கு இன்று வருகை தந்தார்.
    • இந்தப் பயணத்தின் போது ராகுல் காந்தியை அவர் சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதாதளம் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறியது. இந்த கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைத்தார்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அவர் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கப் போவதாகவும் அறிவித்தார். இதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

    இதற்கிடையே, மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அபகரித்திருப்பது நிதிஷ்குமாருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என கூறிய நிதிஷ்குமார், டெல்லி சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.

    இந்நிலையில், முதல் மந்திரி நிதிஷ்குமார் 3 நாள் பயணமாக இன்று டெல்லி வருகை தந்தார். பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் சந்தித்தார். பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியை நாங்கள் உடைத்த பிறகு எல்லாம் நன்றாக இருந்தது.
    • ஆனால் 2017 இல் மீண்டும் அவர்களுடன் கைகோர்த்து தவறு செய்தோம்.

    பாட்னா:

    பீகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பீகாரின் ஏக்நாத் ஷிண்டேவாக ஆர்.சி.பி. சிங்கை உருவாக்கி ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தனிமைப்படுத்தவும், மாநிலத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவும் பாஜக விரும்பியது என்று கூறினார். 


    முன்பு நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை உடைத்த பிறகு எல்லாம் நன்றாக இருந்தது என்றும், ஆனால் 2017 இல் மீண்டும் அவர்களுடன் கைகோர்த்து தவறு செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதன் காரணமாக சில மாநிலங்களில் பலர் எங்களை விட்டு பிரிந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 2024 பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் பெரிய வெற்றியை பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    • முதல் மந்திரி நிதிஷ்குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது.
    • கயா நகரில் நிலவிய மோசமான வானிலையால் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார்.

    அப்போது அப்பகுதியில் திடீரென மோசமான வானிலை ஏற்பட்டது. இதையடுத்து, நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் கயா மாவட்டத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

    முதல் மந்திரியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • லாலுபிரசாத் யாதவ் கட்சியுடன், ஐக்கிய ஜனதாதளம் இணைந்து விடும் என தகவல்.
    • கட்சி மூத்த நிர்வாகியின் கணிப்பை நிராகரித்தார் நிதிஷ்குமார்

    இந்தூர்:

    பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியே ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்ததுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

    அவரது இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மத்திய பிரதே மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, நிஷ்குமாரை வெளிநாட்டு பெண்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தாம் வெளிநாட்டில் பயணம் மேற் கொண்டிருந்த போது அங்குள்ள பெண்கள் தங்களது காதலர்களை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள் என ஒருவர் கூறினார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அப்படித்தான். அவர் யாருடைய கையை பிடிக்கிறார், யாருடைய கையை விலக்குகிறார் என்பது அவருக்கே தெரியாது. இவ்வாறு கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார்.

    இதனிடையே எதிர்காலத்தில் லாலுபிரசாத் யாதவ் கட்சியுடன், ஐக்கிய ஜனதாதளம் இணைந்து விடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பி.சிங், தெரிவித்திருந்தார். இது குறித்து நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவரது கணிப்பை நிராகரிப்பதாக கூறினார்.

    ×