search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233879"

    • பெண் குழந்தைகள் கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும்.
    • குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    மகளிர் தினத்தையொட்டி நடந்த கலந்துரையாடலில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சு இன்று டுவிட்டரில் பதிவிடப்பட்டு உள்ளது.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆணுக்கு நிகர் பெண் என மகள்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

    இன்று வளர்ந்து வரும் நம் மகள்களிடையே நம்பிக்கையை வளர்த்து அவர்கள் ஆணுக்கு சமமான பாலினத்தவர்களாக இருப்பதற்கு தகுதியானவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பெண் குழந்தைகள் கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும். அப்படி செய்யும்போது அவர்கள் தனிப்பட்ட முறையில் வளர்வது மட்டுமின்றி தங்கள் தேசத்தை வலிமையடையச் செய்கிறார்கள். உங்கள் வளர்ச்சியுடன் தேச நலனும் பின்னியுள்ளது என்பதை குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

    குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். அந்த முடிவை அடைய நாம் மட்டுமே அவர்களுக்கு வழிகாட்ட முடியும். நீங்கள் சரியாக வளரவில்லை என்றால் அது உங்களின் சொந்த இழப்பு மட்டுமல்ல. வீட்டுக்கும் நாட்டுக்கும் இழப்பு என்பதை குழந்தைகள் உணரும் வகையில் வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த கவர்னருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர்.
    • கவர்னர் வருகையையொட்டி கடலூர், சிதம்பரம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சிதம்பரம் :

    மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    இந்நிலையில் இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினரும் சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த கவர்னருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர்.

    கவர்னர் வருகையையொட்டி கடலூர், சிதம்பரம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பெருநோய்களை சிதைக்கும் தடுப்பு மருந்துகளை தவறானது என்று யாரும் பேச மாட்டார்கள்.
    • உலகத்தை அதன் அனைத்து விதமான கோரங்களில் இருந்தும் மீட்டெடுத்து அனைவருக்குமான பூமியாக மாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம்.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரை கடித்து, அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்து இருக்கிறார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.

    மார்க்சியம் இந்தியாவை சிதைத்து விட்டது என்று பேசுகிறார். பெருநோய்களை சிதைக்கும் தடுப்பு மருந்துகளை தவறானது என்று யாரும் பேச மாட்டார்கள். உலகத்தை அதன் அனைத்து விதமான கோரங்களில் இருந்தும் மீட்டெடுத்து அனைவருக்குமான பூமியாக மாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம். அது சிதைக்கும் தத்துவமல்ல. அது செதுக்கும் தத்துவம். அறிவுச்சிதைவு ஏற்பட்டவர் மட்டுமே அதை சிதைக்கும் தத்துவமாக கருதுபவர்கள்.

    ஆர்.என்.ரவி அரசு அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு அடாவடித்தனமாகவும், பொருத்தமற்ற முறையிலும் பேசுவதை கண்டித்தும், மார்க்சியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கமாக வருகிற 28-ந் தேதி கவர்னர் மாளிகை முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலகம் இந்தியாவை பல எதிர்ப்பார்ப்புடன் பார்த்து வருகிறது.
    • உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது.

    கோவை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார்.

    இன்று காலை கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் உரையாற்றினார்.

    சீனா இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குவது போல வலைவிரித்து இலங்கையில் உள்ள இடங்களை எல்லாம் கைப்பற்றி வருகிறது. சீனாவின் இந்த வளர்ச்சி என்பது பதற்றத்தை உருவாக்குகிறது.

    இந்தியாவின் வளர்ச்சி என்பது இலவச கொரோனா தடுப்பூசி உருவாக்குதல் போன்றது. இந்தியர்கள் கொரோனா தொற்றினை சிறப்பாக நிர்வகித்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

    உலகம் இந்தியாவை பல எதிர்ப்பார்ப்புடன் பார்த்து வருகிறது. உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. மொபைல் தயாரிப்பில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது

    பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். பெண் குழந்தைகள் அதிகளவில் பட்டம் பெறுவதை பார்க்கும்போது இதுதான் புதிய இந்தியா என தோன்றுகிறது.

    முதல் உலக போருக்கு பின் இந்திய தலைவர்களுக்கு இந்தியர்களை கல்வி அறிவுமிக்கவர்களாக ஆக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

    அதன் அடிப்படையில் உருவானது தான் கல்வி நிறுவனங்கள். கல்வி அறிவு மட்டுமின்றி நாட்டுப்பற்றையும் விதைக்க கல்வி நிறுவனங்கள் தேவைப்பட்டது.

    இந்திய கல்வி முறையானது தனித்துவமான பண்புகள் கொண்டது.

    இந்த தனித்துவம் தான் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உதவுவதுடன், சிறந்த பங்களிப்பையும் ஆற்றுகிறது. மத்திய அரசு நாட்டை ஒரே குடும்பமாக பார்த்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கவர்னர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • விமான நிலையத்தில் இருந்து கவர்னர் செல்லும் வழித்தடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கோவையில் தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகலில் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.

    பின்னர் ஆர்.என்.ரவி விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக கோவை ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவர் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் அவர் விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் ஒத்தக்கால் மண்டபம்-வேலந்தாவளம் சாலையில் உள்ள குட்டிக் கவுண்டம்பதி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்கிறார்.

    பின்னர் பள்ளியில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார்.

    நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு இரவு 9 மணிக்கு அங்கிருந்து காரில் கோவை விமான நிலையத்திற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து கவர்னர் செல்லும் வழித்தடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகை பகுதி, விழா நடக்கும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
    • பொங்கல் மற்றும் சுதந்திர தினவிழா தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்து இருந்தார்.

    சென்னை:

    தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில், கவர்னர் நடத்திய பொங்கல் விழா மற்றும் சுதந்திர தினவிழா, தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். திமுக கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன.

    அதேபோல் குடியரசு தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்திலும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

    இந்த சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கவர்னரின் செயலாளர் நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதற்கான அழைப்பிதழை வழங்கினார். அதை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

    சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக நிர்வாகிகள் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சென்னையில் இல்லாததால், தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

    முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வந்த கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் நடைபெறும் விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.
    • திமுக கூட்டணியை சேர்ந்த சில கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறி உள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னரும் கொடியேற்றுவர்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதையடுத்து நாளை கவர்னர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க அனைத்து கட்சியினருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், திமுக கூட்டணியை சேர்ந்த சில கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறி உள்ளன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

    • குடியரசு தினவிழா நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பே காலை 7.50 மணிக்கு அந்த இடத்துக்கு வந்துவிடுவார்.
    • கவர்னர் 7.55 மணிக்கு வரும்போது அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்துவார்.

    சென்னை:

    குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம்.

    தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு குடியரசு தினவிழாவை வெகு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றபடி உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு கொடி கம்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.

    முக்கியஸ்தர்கள் அமருவதற்காக சாலை ஓரத்தில் பந்தல்களும் போடப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தேடிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    ராணுவப்படை, கடற்படை, ராணுவ கூட்டு குழல் முரசிசை பிரிவு, வான் படை பிரிவு அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள்.

    அதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கமாண்டோ படை பிரிவு, கடலோர பாதுகாப்பு படை ஊர்க்காவல் படை உள்பட 30-க்கும் மேற்பட்ட படை பிரிவினர் அணிவகுத்து செல்வார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவகுப்பு மேடைக்கு வந்து பதக்கங்களை வழங்க இருக்கிறார்.

    வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    இதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச் சர் மு.க.ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை கண்டு களிப்பார்கள். பல்வேறு அரசுத்துறைகளின் ஊர்திகள், அரசு நலத்திட்டங்களை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இதில் அணிவகுத்து வரும்.

    இறுதியாக பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். சுமார் 30 நிமிட நேரம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளை கவர்னரும், முதலமைச்சரும் அருகருகே இருந்து பார்க்க உள்ளனர்.

    குடியரசு தினவிழா நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பே காலை 7.50 மணிக்கு அந்த இடத்துக்கு வந்துவிடுவார்.

    கவர்னர் 7.55 மணிக்கு வரும்போது அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்துவார். அதன்பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி 8 மணிக்கு தேசியக்கொடி ஏற்றுவார். அப்போது கவர்னர் அருகில் முதலமைச்சர் நின்றுகொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவார்.

    அதன்பிறகு நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் பார்வையிடுவார். பின்னர் கவர்னர் முக்கிய பிரமுகர்கள் அமரும் இடத்திற்கு சென்று அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார்.

    அவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருப்பார்கள்.

    கலைநிகழ்ச்சிகள் முடியும் வரை அங்கு இருந்துவிட்டு அதன்பிறகு 9 மணி அளவில் கவர்னர் புறப்பட்டு செல்வார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி அனுப்பி வைப்பார்.

    கடந்த 9-ந்தேதி சட்டசபை கூடியபோது கவர்னர் ஆர்.என்.ரவி அரசு கொடுத்த உரையை முழுமையாக படிக்காமல் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். சில வாசகங்களை சேர்த்து வாசித்தார்.

    இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னருக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவந்து கவர்னர் வாசித்த உரையை பதிய வைக்காமல் அரசு தயாரித்த உரையை சட்டசபையில் பதிய வைத்தார்.

    இதனால் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபை முடிவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவத்திற்கு பின்பு கவர்னரும், முதலமைச்சரும் இன்னும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை. நாளை நடைபெறும் குடியரசு தினவிழாவில் தான் இருவரும் சந்திக்க உள்ளனர்.

    நாளைய நிகழ்ச்சியின் போது இருவரும் சகஜமாக பேசிக்கொள்வார்களா? இல்லையா என்பது தெரிந்து விடும்.

    • கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலாளர், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு எதிராக, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
    • மனுவில், கிருஷ்ண மூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது, கவர்னர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து, கவர்னர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, கவர்னர் அலுவலக துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணைய வழியிலும், தபால் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலாளர், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு எதிராக, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கிருஷ்ண மூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து இன்று மாலை சென்னை திரும்புகிறார்.
    • சென்னைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரவு 8.20 மணிக்கு வந்தடைவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 2 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மதியம் வரை அவர் அமித்ஷாவை சந்திக்கவில்லை.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து இன்று மாலை சென்னை திரும்புகிறார். சென்னைக்கு அவர் இரவு 8.20 மணிக்கு வந்தடைவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே கடந்த 13-ந்தேதி கவர்னர் டெல்லி சென்று வந்த நிலையில் நேற்று மீண்டும் டெல்லிக்கு சென்றதால் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் கவர்னர் ஆர்.என்.ரவி.
    • வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அதன்படி, சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

    மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் கவர்னர் ஆர்.என்.ரவி.

    முன்னதாக, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் உரை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பி வைத்துள்ளார்.
    • மு.க.ஸ்டாலினின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது குறிப்புடன் அக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    புதுடெல்லி:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவித்தார்.

    இதனால் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

    இதற்கிடையே சட்டமன்றத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து கொடுத்தனர்.

    அக்கடிதத்தில் அரசியல் சாசன பகுதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் அவர் தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, அதுபற்றி பார்ப்பதாக தி.மு.க. குழுவினரிடம் தெரிவித்தார்.

    கவர்னர் உரை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பி வைத்துள்ளார்.

    மு.க.ஸ்டாலினின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது குறிப்புடன் அக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    ×