search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234233"

    • வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் 350 ஏக்கர் நிலம் இருந்தது.
    • முத்துலட்சுமி கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளையின் தக்காராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

    காஞ்சிபுரம்:

    உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வடக்கு வாசல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளை எனும் அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பை அதன் முன்னோர்கள் உருவாக்கி அதில் இருந்து வரும் வருவாயில் ஒரு பகுதியை கோவில் செலவுகளுக்கும், மீதத்தை கட்டளை செலவுகளுக்கும் வைத்து கொள்ள வேண்டும் எனவும், இந்த சொத்தானது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும் எழுதி வைத்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் இந்த சொத்தானது அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

    இந்த அமைப்பின் கீழ் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது.

    குறிப்பாக வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் 350 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த அமைப்பின் வாரிசுரிமை பரம்பரை அறங்காவலராக சி.வி.சந்திரசேகரன் என்பவரும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் கொல்லா சிங்கண்ண செட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம் கட்டியது மற்றும் பயணிகள் தங்கும் விடுதி கட்டியது என சட்ட விரோத செயல்களையும் செய்து வந்ததாகவும், சொத்துகளை அறநிலையத்துறைக்கு தெரியாமல் விற்க முயற்சித்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் அறநிலையத்துறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து சந்திரசேகரை அறநிலையத்துறை இணை ஆணையர் பதவி நீக்கம் செய்ததுடன் கட்டளையின் தக்காராக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமியை நியமித்தும் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் முத்துலட்சுமி கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளையின் தக்காராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார். மேலும் அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் (பொறுப்பு) லட்சுமி காந்தன் பாரதி தலைமையில் செயல் அலுவலர்கள் வேலரசு, கார்த்திகேயன், ஆய்வாளர் பிரித்திகா, தனி தாசில்தார் வசந்தி, கிராம நிர்வாக அலுவலர் கோகுலகிருஷ்ணன், சிவகாஞ்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கட்டளை அலுவலகத்துக்கு சென்று அதை மீட்டு தக்காராக முத்துலட்சுமி நியமனம் பற்றிய தகவலை கதவில் ஒட்டினார்கள்.

    இதன் மூலம் கட்டளை இடத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் கட்டளை சொத்துகள் சம்பந்தமாக ஏதேனும் விவரங்கள் தேவைப்படுவோர் தக்காராக நியமிக்கப்பட்டுள்ள முத்துலட்சுமியை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

    • நிலத்தை பிரித்து ஆதி திராவிடர்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப் பட்டது.
    • நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அலகுமலை ஊராட்சியில், அரசுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பிரித்து ஆதி திராவிடர்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு வசிக்காமல், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். அவர் அங்கு விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதையடுத்து நேற்று அந்த இடத்திற்குச் சென்ற வருவாய்த் துறையினர் அங்கிருந்த மின் இணைப்பை துண்டித்து, இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில், ஆதிதிராவிடர்களுக்கு நிபந்தனையின் பேரில் வழங்கப்பட்ட நிலத்தை விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த விற்பனை செல்லாது. எனவே அந்த நில பட்டாவை ரத்து செய்து அரசு நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான 2 வீடுகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பை அகற்றினர்.
    • ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள நடுவீரப்பட்டு ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 1½ ஏக்கர் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின் பேரில் குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோமங்கலம் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைத்திருந்த நிலத்தை பார்வையிட்டனர்.

    அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான 2 வீடுகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பை அகற்றினர்.

    அப்பகுதியில் அரசு சார்பில் அறிவிப்பு பெயர் பலகையை அதிகாரிகள் வைத்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
    • 2 வாரங்களுக்குள் மீதமுள்ள இடமும் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புடைய 8 ஆயிரம் சதுர அடி இடத்தை மீட்கும் பணியில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகா தேவி உத்தரவின் பெயரில், உதவி ஆணையர் பாஸ்கரன், செயல் அலுவலர் குமரேசன் ஆகியோர் தலைமையில் முதற்கட்டமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை மஞ்சங்குப்பம் பகுதியில் 2 கோடியே 40 லட்சம் மதிப்பு உடைய 2 ஆயிரத்து 400 அடி சதுரஅடி நிலம் போலீசாரின் உதவியுடன் மீட்கப்பட்டது.

    இந்த இடமானது கடந்த 30 வருடங்களுக்கு முன்பு லட்சுமணன் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. சில வருடங்கள் மட்டுமே வாடகை செலுத்திய லட்சுமணனுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணத்தை கட்டவில்லை என்றும், இதுவரையில் வாடகைத் தொகை மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்புடைய 2 ஆயிரத்து 400 சதுரஅடி இடம் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 2 வாரங்களுக்குள் மீதமுள்ள இடமும் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
    • அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுரம் அருகே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடம் அமைந்துள்ளது.

    இந்த மடத்திற்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமம் பெரிய தோட்டம் பகுதியில் சுமார் 8.76 ஏக்கர் நிலம் உள்ளது. இதை பல ஆண்டு காலமாக தாமஸ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவரது மகன் பிரின்ஸ் என்பவர் கையகப்படுத்தி வைத்திருந்தார்.

    இந்நிலையில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், கோர்ட்டிலும் மடத்தின் சார்பில் வழக்கு தொடுத்திருந்தனர். மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நிலத்தை மீட்டு மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர். கோர்ட்டு உத்தரவின்படி இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளால் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 6 கோடி ஆகும்.

      செங்கல்பட்டு:

      செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலேரிபாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 6 வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும் ஆக்கிரமித்து வந்ததை தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளியேற பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

      இந்த நிலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் எந்திரம் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடித்து தள்ளி விவசாய நிலங்களை மீட்டனர்.

      60 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.90 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

      இந்த பகுதியில் காவல்துறை பயிற்சி பள்ளி கட்டிடம் கட்ட இருப்பதால் ஆக்கிரமிப்பில் இருந்த இடம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

      • கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் பகுதி மக்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
      • கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் வருவாய்த்துறையினருக்கு ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

      திருப்போரூர்:

      செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் வசித்து வரும் மீனவர்களுக்கு மீன் உலர வைப்பதற்கும், பெரிய வலை இழுப்பதற்கும், படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், தமிழக அரசு கடலோரத்தில் 5.48 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இதனை ஒரு சில நபர்கள் தங்கும் விடுதிகள் அமைத்து அதற்கு பார்க்கிங் வசதி செய்தும் புல் செடி மரம் வளர்த்து அதனை சுற்றி 10 அடி உயரத்தில் கருங்கல்லால் சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

      இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை மீட்டு தரக்கோரி பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

      அதனை தொடர்ந்து கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் பகுதி மக்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

      ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் வருவாய்த்துறையினருக்கு ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

      உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் கானத்தூர் போலீசார் உதவியுடன் 3 பொக்லைன் எந்திரங்களை கொண்டு தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு கற்கள் கொண்டு மதில் சுவர் எழுப்பிய இடங்களை இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தனர் இதன் சந்தை மதிப்பு ரூ.67 கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 292 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

      • பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
      • ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30 கோடி மேல் இருக்கும்.

      திருப்போரூர்:

      செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூரில் இருந்து மாமல்லபுரம் வரை 6 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியில் இருந்து கேளம்பாக்கம் வரை ஒரு புறவழிச்சாலையும், காலவாக்கத்தில் இருந்து திருப்போரூர் வழியாக ஆலத்தூர் வரை மற்றொரு புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது.

      கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை கையகப்படுத்த சென்றனர். இதை எதிர்த்து தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை இல்லை என ஐகோர்ட்டு உத்தரவு அளித்தது.

      இதைதொடர்ந்து, திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி தலைமையில், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பந்தபட்ட தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்த 2.12 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கி மீட்டனர். ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30 கோடி மேல் இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

      பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

      • போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
      • பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் எவ்விடத்திலும் இணையவழி விண்ணப்பம் செய்யலாம்.

      சென்னை:

      மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது.

      இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் 6.8.2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

      திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-பி ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

      மேலும், பிரிவு 77-எ ஆனது நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து மாவட்டப் பதிவாளர்களிடம் புகார் மனு பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணத்தினை ரத்து செய்து ஆணையிட மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணையின்மீது பதிவுத்துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.

      மேலும், முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கிடவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

      இதன்படி, நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட, சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு அச்சொத்தினை மீட்டெடுத்துக் கொடுக்கும் வகையில், மோசடி ஆவணப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்திட பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

      இதன் மூலம், போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

      இச்சட்டத்தின் கீழ் போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு அவர்களின் சொத்துகள் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

      இதில் நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி நிலமும் மீட்கப்பட்டது. இதற்கான ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

      பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் எனக் கருதப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் https://tnreginet.gov.in என்ற இணைய வழியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர ஆவணப் பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடன் டோக்கன் பெறலாம்.

      இந்த உடனடி (தட்கல்) டோக்கன் வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

      திருமண பதிவிற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கொடுக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் திருமண சான்று வழங்கப்படுகிறது. ஆனால் பின்னாளில் கடவுச்சீட்டு மற்றும் வெளிநாடு செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும்போது சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்படுகிறது.

      அவ்வாறு திருத்தம் செய்திட https://tnreginet.gov.in என்ற இணையவழி விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

      இதனால் பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் எவ்விடத்திலும் இணையவழி விண்ணப்பம் செய்யலாம். உரிய திருத்தம் செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ் பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் பயனாளிக்கு இணையவழி அனுப்பப்படும். பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் கூடிய அச்சான்றிதழை விண்ணப்பதாரர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

      • மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
      • இரண்டு நாட்களாக நடந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான சுமார் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

      மாமல்லபுரம்:

      மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. நெம்மேலி, பட்டிபுலம், சூலேரிக்காடு, சாலவாக்கம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள இடங்களை தனியார் ஓட்டல்கள், கோவில், வீடு, வீட்டுமனை என பலர் ஆக்ரமித்து பயன்படுத்தி, வந்தனர்.

      இந்த நிலையில் இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்ரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

      இதையடுத்து காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உத்தரவின் பெயரில், உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருடன் இணைந்து ஆக்ரமிப்பு கட்டிடங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.இரண்டு நாட்களாக நடந்த இந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான சுமார் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

      • ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மனை கட்டிடம் பெரியகாஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் 2,486 சதுர அடி பரப்பளவில் உள்ளது
      • காஞ்சிபுரம் கோட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

      காஞ்சிபுரம்:

      காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மனை கட்டிடம் பெரியகாஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் 2,486 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இந்த சொத்திற்கு ரூ.28 லட்சம் வரை வாடகை செலுத்தாமல் பிரசாந்த் மற்றும் நந்தகுமார் ஆகியோர் சட்ட அனுமதியின்றி ஆக்கிரமித்தும், அனுபவித்தும் வந்ததாக கூறப்படுகிறது.

      இது தொடர்பாக காஞ்சிபுரம் கோட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

      இவ்வழக்கினை விசாரித்த இணை ஆணையர் உரிய கால அவகாசம் கொடுத்தும் வாடகை நிலுவைத்தொகையை செலுத்த தவறியதால் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தினை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்து கோவில் வசம் ஒப்படைக்குமாறு கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

      இணை ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துரெத்தினவேலு, ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், ஸ்ரீதர் ஆகியோர் போலீசார், வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகளுடன் சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் சொத்தை ஒப்படைத்துள்ளனர்.

      • கோவில் இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை மூடி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
      • வீடுகளை காலி செய்ய அவகாசம் கொடுத்து அதிகாரிகள் சென்றனர்.

      பொன்னேரி:

      பொன்னேரியை அடுத்த சயனாவரம் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 28 ஏக்கர் 78 சென்ட் நிலம் உள்ளது. இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது

      இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பில் இருந்த 14 ஏக்கர் 51 சென்ட் நிலத்தை போலீசார் பாதுகாப்புடன் மீட்டனர். பின்னர் அந்த இடத்தில் பெயர்ப்பலகை, எல்லைக்கற்களை நட்டு வைத்தனர்.

      இதைத்தொடர்ந்து கோவில் இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை மூடி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு அங்கு குடியிருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

      இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசித்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதால் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரி செலுத்துகிறோம் என்றும் தெரிவித்தனர்.

      இதற்கிடையே பெண் ஒருவர் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றார். அவரை பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து சமாதானப்படுத்தினர்.

      தகவல் அறிந்ததும் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் அங்கு வந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடனும், பொதுமக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து வீடுகளை காலி செய்ய அவகாசம் கொடுத்து அதிகாரிகள் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

      ×