search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சேகர் பாபு"

    • கோவில்களை நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உள்ளது.
    • கோவில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்கள் பல உள்ளன.

    கோவை :

    பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கார் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில்களை நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. எனவே அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருந்தால் தான் கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் கோவில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்கள் பல உள்ளன. அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் கோவில்கள் கண்டிப்பாக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.

    நாட்டில் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியலில் தி.மு.க.வுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தினால் அதன் மூலம் இந்துக்கள் தங்கள் பக்கம் திரும்பி விடுவார்கள் என்று நினைத்து சிலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியை பொருத்தவரை தடுமாறாத, ஒரு இரும்பு மனிதர் வழிநடத்திக்கொண்டு இருக்கிறார். எனவே அவர்களின் எதிர்பார்ப்பு எந்த காலத்திலும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
    • பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணிகள் தொடர்பாக இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற 27-ந்தேதி பழனி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை திருப்பணிகள் தொடர்பாக என்னை முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று திருப்பணிகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ, கலெக்டர் விசாகன், எஸ்.பி பாஸ்கரன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு ஆகியோரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் விழா நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 65 நிழற்குடைகளில் 19 நிழற்குடைகள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேக வேள்வி நடைபெறும் இடத்தில் 90 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அதன்படி கடந்த 2 நாட்களாக 47 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள், நீதியரசர்கள் ஆகியோருக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துமிடம், தற்காலிக ஆஸ்பத்திரி, குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக பணிகள் குறித்து நாளை மதியம் துறை சார்ந்த அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு நடத்த உள்ளேன். கும்பாபிஷேக பணியில் மேலும் 4 இணைஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவிஆணையர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுடன் கோவில் பணியாளர்களும் இணைந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். சென்னையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்மீக புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புத்தகங்கள் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். குறைந்த விலையில் இந்த நூல்கள் பக்தர்களுக்கு கிடைக்கும். இதுதவிர ஓலைச்சுவடிகள் குறித்த ஆராய்ச்சி நிலையத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது பொன் எழுத்துக்களால் குறிக்கப்பட வேண்டிய நல்ல நாளாகும்.

    பழனி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தமிழிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்.

    மேலும் பழனி-இடும்பன் மலைக்கோவில் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்ளுக்கு ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தம் தெளிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம். ராஜகோபுரம் உள்ளிட்ட மற்ற கோபுரங்களில் வானத்தில் இருந்து தீர்த்தம் மற்றும் மலர்களை தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழனி வையாபுரி குளம் தூர்வாரப்பட வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் அதுகுறித்த அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன், கோவில் இணைஆணையர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அன்னதான திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • 530 கோவில்களில் 1767 கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சென்னை :

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இணையதளம் மற்றும் கையடக்க கருவியின் மூலம் வழங்கப்பட்ட கட்டண சேவை டிக்கெட்டை, ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவதற்கான 'கியூஆர் கோடு ஸ்கேன்' வசதியை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் கோவில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    530 கோவில்களில் 1767 கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படுகின்ற போது கட்டணம் செலுத்தும் சேவை, எண்ணிக்கை மற்றும் அதற்கான கட்டணம் போன்ற விவரங்களை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குரல் ஒலி செய்தியாக அறிவிக்கப்படுகிறது.

    இணையதளம் மற்றும் கையடக்க கருவிகள் மூலம் வழங்கப்பட்ட கட்டண சேவைக்கானச் டிக்கெட்டை கோவில்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் 'கியூஆர் கோடு' ஸ்கேன் வசதியினை தொடங்கி வைத்துள்ளோம். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 530 கோவில்களில் ஒரு முறை விற்பனை செய்யப்பட்ட கட்டண டிக்கெட்டை மீண்டும், மீண்டும் உபயோகிக்க முடியாது.

    பக்தர்கள் கோவிலின் தல வரலாறு மற்றும் ஆன்மிக குறித்த செய்திகளை அறிந்து கொள்கின்ற வகையில் 48 முதுநிலை கோவில்களில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 50 கோவில்களுக்கு விரிவுபடுத்த இருக்கின்றோம். தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் 'திருக்கோவில்' என்ற செயலியை ஓரிரு நாட்களில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

    கோவில்களில் உண்டியல் எண்ணும்போது குற்றச்சாட்டுகள் ஏதும் ஏற்படாத வகையிலும், அதனை தடுக்கின்ற வகையிலும் உண்டியல் எண்ணுவதை இணையத்தில் நேரடியாக பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்னதான திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மகா சிவராத்திரி விழாவை சென்னை, கோவை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், நெல்லை ஆகிய 5 இடங்களில் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக பிப்ரவரி 22-ந் தேதி 62 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த ஆன்மிக பயணத்துக்கான செலவு தொகை ரூ.50 லட்சத்தை அரசு மானியமாக வழங்கியுள்ளது.

    அனைவரும் போற்றி மதிக்கக்கூடிய நமது தேசத்தின் உரிமைகளை, நிலைப்பாட்டினை எடுத்து கூறுகின்ற தேசிய கீதத்தை எந்த வகையிலும், யாரும் அவமதிக்க கூடாது என்பதுதான் அனைவரின் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், சென்னை மண்டல இணை ஆணையர் கே.ரேணுகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருநட்டாலம் மகாதேவர் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

    திற்பரப்பு மகாதேவர் கோவில், திரு நந்தி கரை மகாதேவர் கோவில் , பொன்மனை மகாதேவர் கோவிலில் அவர் ஆய்வு செய்தார். இன்று 2-வது நாளாக 12-வது சிவாலயமான திருநட்டாலம் மகாதேவர் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்கு ரூ.95 லட்சம் செலவில் நடைபெறும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.பன்னிபாகம், அருள்மிகு மகாதேவர் திருக்கோவில், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில்களிலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது :-

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் ஏற்கனவே திருப்பணிகள் தொடங்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் குடமுழுக்கு நடைபெறாத கோவில்களை உடனடியாக பட்டியலிட்டு அந்த திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற அறிவுறுத்தியிருந்தார்.

    அந்த வகையில் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட கோயில்களில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறிய கோவில்களை கணக்கெடுத்து புகைப்பட ஆல்பம் தயாரித்துள்ளோம்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ. 10 லட்சம் செலவில் மொத்தம் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் ரூ. 84 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மீதமுள்ள 11 சிவாலயங்களிலும் திருப்ப ணிகள் மேற்கொள்ளப்படும்.

    மகா சிவராத்திரிக்கு முன்னதாக திருப்பணிகள் நிறைவு செய்யப்படும். குமரி மாவட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எல்லா வித நன்மைகள் பெறும் அளவிற்கு தெய்வீக பணிகள் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் இசைக் கல்லூரி அமைப்பது தொடர்பாக வல்லுனர் குழுவினரை கொண்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    • கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தற்போது வடபழனி ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
    • வரும் காலங்களில் இத்திட்டம் கோவிலில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றும் செயல்படுத்த தேவையான நிதியினை கோவிலில் வரவு செவவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    கடந்த 2021-2022 சட்டமன்ற மானியக்கோரிக்கையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோவிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

    மேலும் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கோவில்கள் மற்றும் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணங்கள் நடைபெற்று வருகின்றது.

    2022 -2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக்கோரிக்கையில் கோவில்களில் மற்றும் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு கோவில் சார்பாக புத்தாடைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மணமகன் பி.சிவா மற்றும் மணமகள் ஆர். சுகந்தி ஆகியோர்களுக்கு திருமணம் நடைபெற்று புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

    முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகள் திருமணம் கடந்த ஆண்டு முதல் கோவில் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் திருமணங்களுக்கு கட்டணம் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

    கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தற்போது வடபழனி ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. வரும் காலங்களில் இத்திட்டம் கோவிலில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றும் செயல்படுத்த தேவையான நிதியினை கோவிலில் வரவு செவவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர்ஜெ.கருணாநிதி, இணை ஆணையர் தனபால், வடபழனி துணை ஆணையர் முல்லை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×