search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு"

    • தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள்.
    • ஊரின் நிலையை பார்த்து கண்கலங்கிய அவர்கள், அதனை பொருப்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடரும் நிலையில், பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து சிக்கியபடி இருக்கிறது.

    பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டிய நிலையில், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    பலியானவர்களின் சின்னாபின்னமான உடல்களை மிகவும் பாதுகாப்பாக அகற்றி எடுத்து வருகின்றனர். தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களில் 2 வீரர்கள் தங்களது சொந்த கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    வயநாடு சூரல்மலை பகுதியை சேர்ந்தவர் ஜினோஷ் ஜெயன்(வயது42). அவரது உறவினர் பிரவீன் பிரகாஷ்(37). ஜினோஷ் அவுரங்காபாத்தில் ராணுவ பீரங்கி பிரிவிலும், பிரவீன் மெட்ராஸ் ரெஜிமன்டலிலும் பணியாற்றுகின்றனர். ஜினோசின் சகோதரர் ஜிதில் ஜெயன் தேசிய பேரிடர் மீட்புபடை வீரர் ஆவார்.

    இவர்கள் 3 பேரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தங்களது ஊரான சூரல்மலைக்கு கடந்த 31-ந்தேதி வந்தனர். அவர்கள் தங்களது ஊரில் இடிந்து கிடந்த கட்டிடங்கள், மண் குவியல் மற்றும் பாறைகளுக்கு அடியில் கிடந்த உடல்களை மீட்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தங்களது ஊரின் நிலையை பார்த்து கண்கலங்கிய அவர்கள், அதனை பொருப்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நிலச்சரிவில் இவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் இறந்து விட்டனர். அவர்களது உருக்குலைந்த உடல்களை வேதனையுடன் மீட்டிருக்கின்றனர். அவர்கள் எங்களது ஊரில் இப்படி ஒரு பேரிழப்பு ஏற்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுவோம் என்று எதிர்பார்க்கவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


    தனக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவம் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரரான ஜிதில் ஜெயன் வேதனையுடன் கூறியதாவது:-

    இந்த பயங்கர நிலச்சரிவில் எங்களின் வீடு தப்பியது. எனது நண்பர்கள் ஸ்ரீலேஷ், லெனின் மற்றும் சுமேஷ் ஆகியோர் பலியாகிவிட்டனர். இவர்களது உடலை நான் பார்த்தது, எங்களுக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டது ஒரு வேதனையான அனுபவம்.

    இதுபோன்று ஒரு தேடுதல் பணியில் ஈடுபடவேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. எங்களது சொந்த ஊர் என்பதால் இங்குள்ள நிலப்பரப்பு எங்களுக்கு பரிட்சயமாக இருந்தது. இது எங்களுடைய தேடுதல் முயற்சிக்கு உதவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலச்சரிவில் ராணுவ வீரர்களின் உறவினர்களான ஜெகதீஷ், அவரது மனைவி சரிதா, மகன் சரண் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களில் ஜெகதீஷ் மற்றும் சரணின் உடல்களை இவர்கள் தான் மீட்டுள்ளனர். ஆனால் சரிதாவின் உடல் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாயமானவர்கள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பள்ளத்தாக்கு மற்றும் அதன் கரையோர பகுதிகளில் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை கிராமங்களும் உருக் குலைந்தன.

    அந்த பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மண்ணுக்குள் பலர் உயிரோடு புதைந்துவிட்ட நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். மேலும் பலர் காணாமல் போனார்கள். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள்.

    இதில் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பலியானர்களின் உடல்கள் சிதைந்தும், துண்டு துண்டா கிய நிலையிலும் மீட்கப்பட்டன. மீட்பு பணி நேற்று 7-வது நாளாக நீடித்த நிலையில் பலியானர்களின் எண்ணிக்கை 400-ஐ தொட்டது.

    மேலும் மாயமாகியிருக்கும் 200பேரை தேடும் பணி தொடர்கிறது. அவர்களை கண்டுபிடிக்க நவீன ராடர்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட கருவிகள், ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.

    மாயமானவர்கள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது தேடுதல் பணி இன்று 8-வது நாளாக நடந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள், சாலியாறு மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் முழுமையாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அங்கு ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் வழக்கம்போல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் கிடக்கிறார்களா? என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.


    இந்த பகுதிகள் மட்டு மின்றி மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத பள்ளத்தாக்கு பகுதியில் இன்று தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அதாவது சூச்சிப்பாறை மற்றும் பொதுக்கல்லு என்ற பகுதிகளுக்கு இடையில் தான் அந்த பள்ளத்தாக்கு இருக்கிறது.

    அந்த இடத்துக்கு ராணுவம் மற்றும் வனத்துறையினர் திறமைவாய்ந்த வீரர்கள் 12 பேர் ஹெலிகாப்டர் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சன்ரைஸ் என்று அழைக்கப்படும் அந்த பள்ளத்தாக்கு மற்றும் அதன் கரையோர பகுதிகளில் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    பள்ளத்தாக்கு பகுதியில் யாரேனும் இறந்து கிடக்கிறார்களா? என்று பார்க்கப்பட்டது. மேலும் பள்ளத்தாக்கில் யாரேனும் இறந்துகிடந்தால், அவர்களது உடலை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காட்டாற்று வெள்ளத்தில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டவர்கள் இந்த பள்ளத்தாக்கில் பிணமாக கிடக்கலாம் என்று கருதப்படுவதால் பல உடல்கள் இன்று கண்டெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வழக்கமான பகுதிகளில் இன்று மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

    • மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும்.
    • உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் போது திருமானூர் அருகே இலந்தைக் கூடம் கிராமத்தில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் திருமாவளவன் எம்.பி.மீது வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக திருமாவளவன் எம்.பி. நேரில் ஆஜரானார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நூற்றுக்கணக்காணவர்களை பலி வாங்கி இருக்கிறது. இதுவரையில் 377 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. நூற்றுக்கனக்கான குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

    மத்திய அரசு இதனை பேரிடராக அறிவிக்க வேண்டும். மறுவாழ்வுக்காகவும், மறு கட்டுமானத்திற்காகவும் போதிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் .

    வரும் 9-ந் தேதி கேரள மாநில முதல்-மந்திரியை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதியை வழங்க இருக்கிறோம்.

    தமிழக அரசு அரசு பணியாளர்களின் பணி ஓய்வுக்கான வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி ஓய்வு பெறும் வயதை நீடிப்பதால் புதிய இளைய தலைமுறைக்கான வேலை வாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என்று கருத்து உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது உடனடியாக தமிழக அரசும் அவர்கள் தங்கி இருக்கிற இல்லத்துக்கு பாதுகாப்பு அளித்திருப்பதை வரவேற்கிறோம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரிக்கிறது.

    அண்மையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேகாலவை சந்தித்து, அரியலூரில் நீண்ட கால கோரிக்கையான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும், ம.தி.மு.க.வின் சார்பிலும் கோரிக்கை வைத்திருக்கிறோம் .

    தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவில் மேகதாதுவில் அணையை கட்ட முடியாது அதற்கு வாய்ப்பில்லை. உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 'வயநாடு நிலச்சரிவானது பசு வதையோடு நேரடியாக தொடர்புடையது'
    • கேரளாவில் பசு வதையை நிறுத்தவில்லை என்றால் மேலும் இதுபோன்று தொடர்ந்து பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்.எல்ஏ.வும் பாஜக மூத்த தலைவருமான கியான் தேவ் அகுஜா, வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அங்கு பசுவதை செய்யப்படுவதே காரணம் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

     

    இதுகுறித்து ஊடகத்தினரிடம் அவர் பேசுகையில், 2018 முதல் நடந்த பேரிடர்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், பசு வதை செய்யப்பட்ட பகுதிகளில்தான் அதிக பேரழிவு சமபவங்கள் ஏற்பட்டுள்ளது தெரியும். வயநாடு நிலச்சரிவானது பசு வதையோடு நேரடியாக தொடர்புடையது.

    கேரளாவில் பசு வதை அதிகம் நடப்பதாலேயே இந்த பேரழிவானது ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் கேரளாவில் பசு வதையை நிறுத்தவில்லை என்றால் மேலும் இதுபோன்று தொடர்ந்து பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

    தற்போது உத்தராகண்ட், இமாச்சல பிரதேசத்திலும் மேகவெடிப்பு, நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் வயநாட்டுடன் ஒப்பிடும்போது அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறைவானதே ஆகும் என்று தெரிவித்துள்ளார். அகுஜாவின் கருத்து சர்ச்சையானதை அடுத்து, இது சோககரமாக பேரழிவுக்கு மதச் சாயம் பூசுவதாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    • மீட்பு பணியில் ஜே.சி.பி. டிரைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
    • தூங்கும்போது பலியானவர்களின் உடல்கள் தான் கண் முன்பு வருகிறது.

    வயநாடு:

    வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் ஜே.சி.பி. டிரைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் பலியானவர்களின் உடல்களை தேடுவதற்காக மீட்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு தேவையான உதவிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வயநாடு மாவட்டம் சூரல்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ஜே.சி.பி. டிரைவர் ஒருவர் கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் கேரள மாநிலம் மேப்பாடி. நிலச்சரிவு ஏற்பட்ட முதல் நாளிலேயே இங்கு மீட்பு பணிக்கு வந்து விட்டோம். அன்று முதல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதி முதல் அனைத்து இடங்களிலும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இப்போது பலியானவர்களின் உடல்கள் ஏதாவது மண்ணுக்குள் புதைந்து உள்ளதா என்று தேடி வருகிறோம்.

    மீட்புபணியில் ஈடுபட்ட பிறகு வீட்டுக்கு சென்று தூங்குவது கொஞ்சம் கஷ்டம் தான். நான் தூங்கி பல நாட்கள் ஆகிறது. நிறைய பேரின் உடல்களை பார்த்துவிட்டேன். எனவே தூங்கும்போது பலியானவர்களின் உடல்கள் தான் எனது கண் முன்பு வருகிறது. எனவே தூங்குவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    தூக்கம் வராமல் அப்படியே உட்கார்ந்திருப்போம். அல்லது வெளியில் எங்காவது சென்று விடுவோம். ஆனாலும் மீட்பு பணிக்கு காலையில் 6 மணிக்கெல்லாம் வந்து விடுவோம். அப்படியே தூங்க வேண்டும் என்றால் தூக்க மாத்திரை தான் போட வேண்டி இருக்கும்.

    இந்த பகுதியில் எங்களுக்கு தெரிந்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. மேலும் எங்களுக்கு தெரிந்த நிறைய பேர் இறந்து விட்டனர். இனி இருப்பவர்கள் பார்த்து இருந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்வமுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கணவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் சென்னையை சேர்ந்த தன்னார்வலர்களான பிரதாப்-சங்கவி தம்பதியினர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது 3 வயது குழந்தையை விட்டு விட்டு ஆர்வமுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக பிரதாப் கூறியதாவது:-

    எங்கள் குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள் ஏற்கனவே வயநாடு பகுதிக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சில வீடியோக்களை எங்களுக்கு அனுப்பினார்கள். அதில் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் வீடியோக்களும் இருந்தன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு தவித்த குழந்தைகளின் வீடியோக்களை பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது.

    அதை உணர்ந்துதான் நாங்கள் மீட்பு பணிக்கு வந்தோம். நாங்கள் ஏற்கெனவே வெள்ளத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மீட்பு பணிக்காக ரெயிலில் வந்தோம். இங்கு மலையில் இருப்பவர்களுக்கு தான் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டோம். எனவே நாங்கள் மலைப்பகுதிகளுக்கு சென்றோம்.

    எந்த இடத்தில் நிலச்சரிவு ஆரம்பித்ததோ அந்த இடத்தில் இருந்துதான் மீட்பு பணியை தொடங்கினோம். இன்னும் எவ்வளவு நாள் இருப்போம் என்பது தெரியாது. ஆனால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்து விட்டுதான் செல்வோம். திருமணத்துக்கு முன்பு எனது மனைவிதான் தன்னார்வலராக இருந்தார். திருமணத்துக்கு பிறகு நானும் அவருடன் சேர்ந்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதாப்பின் மனைவி சங்கவி கூறியதாவது:-

    எங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அவளுக்கு 3 வயது ஆகிறது. குழந்தைகளின் வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வைத்தபோது மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதற்காக உடனே கிளம்பி வந்தோம். 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது முதல் நான் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

    தன்னார்வ தொண்டு பணியில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பது எனது கணவருக்கு தெரியும். எனவே அவர் இதுவரை என்னை தடுத்தது கிடையாது. மேலும் அவரும் என்னுடன் மீட்பு பணிக்கு வர சம்மதித்தார். இதில் எனக்கு அவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
    • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்தமாத இறுதியில் தொடர்ந்து கனமழை பெய்தபடி இருந்தது. இதன் காரணமாக கடந்த 30-ந்தேதி அதிகாலை முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

    அதுமட்டுமின்றி சாலியாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ராட்சத பாறைகள் விழுந்ததில் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் நொறுங்கி மண்ணோடு மண்ணானது.

    நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த பயங்கர சம்பவத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பலர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர்.

    நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கடற்படை, கப்பற்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக களமிறக்கப்பட்டனர். இதில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    மனித உடல்கள் சிக்கிய படியே இருந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்த படி இருந்தது. சம்பவம் நடந்து 5-வது நாளான நேற்று வரை 356 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் உள்ளிட்ட இடிபாடுகளை பொக்லைன் உள்ளிட்ட எந்திரங்கள் மூலமாக அகற்றி பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    நிலச்சரிவில் சிக்கி பலியான 350-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி இருக்கின்றனர். அவர்களில் 24 தமிழர்களும் அடங்குவர். அவர்கள் மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


    அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மண்ணுக்குள் உயிரோடு இருப்பவர்களை கண்டறியக் கூடிய நவீக கருவிகள் உள்ளிட்டவைகளை பயன் படுத்தினர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை கண்டறியும் பணியில் ராணுவம் மற்றும் காவல் துறையில் உள்ள மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன. அது மட்டுமின்றி ட்ரோன்களை பயன்படுத்தியும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    நிலச்சரிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள் பலியாகியிருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக தேடுதல் பணியில் மீட்பு படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 357 ஆக உயர்ந்தது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி 6-வது நாளாக இன்று நடந்தது.

    ராணுவத்தில் தரைப்படை, கடற்படை, விமானப்படை வீரர்கள், தேசிய பேரிடம் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மருத்துவ குழுவினர், கடலோர காவல்படையினர், சமூக ஆர்வலர்கள் என 11 பிரிவினர் தேடுதல் பணியில் களமிறங்கி இருக்கின்றனர்.

    அந்த பிரிவுகளை சேர்ந்த 1,264 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணி நடக்கிறது. நவீன சென்சார் கருவிகள், ட்ரோன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் மாயமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நவீன ரேடார் கருவிகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி உயர்தொழில் நுட்பம் கொண்ட 4 ரேடார்கள் டெல்லி மற்றும் சியாச்சினில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்டன. "லைவ் விக்டிம் ரேடார்" என்று அழைக்கப்படும் அந்த ரேடார்கள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டன.

    இந்த ரேடார்கள் மண்ணுக்குள் யாரேனும் உயிருடன் புதைந்து கிடக்கிறார்களா? என்பதை கண்டறியும். அவற்றின் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மண்ணுக்குள் யாரேனும் புதைந்து கிடக்கிறார்களா? என்று ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நிலச்சரிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமான 300-க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    • இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, பகத் பாசில், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் ஜோதிகா, நஸ்ரியா ஆகியோரும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பல மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும் என கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்திருந்தனர். தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி, அதிமுக சார்பில் ரூ.1 கோடி, காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி என நிதி உதவி வழங்கினர்.

    அதை தொடர்ந்து, நடிகர் மோகன் லால் ரூ.3 கோடியும், நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, பகத் பாசில், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் ஜோதிகா, நஸ்ரியா ஆகியோரும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

    அந்த வரிசையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வீடுகள் இருந்த இடத்தில் ஒருசில கட்டிடங்கள் மட்டுமே இருக்கின்றன.
    • நிலச்சரிவால் மிகப்பெரிய அழிவை வயநாடு சந்தித்திருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்ட மாகிவிட்டன. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ராட்சத பாறைகள் மற்றும் பெரிய மரங்கள் கட்டிடங்களை நொறுக்கி விட்டன.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மக்கள் வசித்து வந்த பகுதிதானா? என்ற கேள்வி எழும் வகையில் எங்கு பார்த்தாலும் பாறைகள், மரக்குவியல்களாக கிடக்கின்றன. அவற்றை பெரும்பாடுபட்டு ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் அகற்றி தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர்.

    நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடத்தில் ஒருசில கட்டிடங்கள் மட்டுமே இருக்கின்றன. அவையும் பலத்த சேதமடைந்த நிலையில் தான் உள்ளன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,208 வீடுகள் முற்றிலுமாக இடிந்து அழிந்துவிட்டது.

    முண்டக்கை பகுதியில் 540 வீடுகளும், சூரல்மலை பகுதியில் 600 வீடுகளும், அட்டமலை பகுதியில் 68 வீடுகளும் முற்றிலுமாக இடிந்துவிட்டன.

    மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ அதிகாரிகளே, இப்படியொரு பேரழிவை பார்த்ததில்லை என்று கூறியிருக்கின்றனர். அந்த அளவுக்கு நிலச்சரிவால் மிகப்பெரிய அழிவை வயநாடு சந்தித்திருக்கிறது.

    • ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கடந்த 1-ந்தேதி வயநாட்டிற்கு வருகை தந்தனர்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்க ராகுல் காந்தி முடிவு செய்தார்.

    கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பல சாலைகள் சேதமடைந்தன.

    இதை தொடர்ந்து, நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கடந்த 1-ந்தேதி வயநாட்டிற்கு வருகை தந்தனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

    இந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளுக்கு சென்ற ராகுல் காந்திக்கு எதிராக உள்ளூர் மக்கள் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், (ராகுல்) காரில் இருந்து சேற்றில் இறங்குவதைப் பற்றி கவலைப்பட்டார் அவர் ஏன் இங்கு வந்தார்? அவர் பார்க்க என்ன இருக்கிறது என்று ஒருவர் கோபமாக கேள்வி கேட்பதைக் காண முடிகிறது.

    முன்னதாக, வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்தார்.

    • வயநாடு நிலச்சரிவால் ஒட்டுமொத்த இந்தியா அதிர்ந்து போனது.
    • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் உள்ளது.

    வயநாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் 350-ஐ கடந்துள்ளது.

    மேலும் மாயமான 200-க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியவில்லை. பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர் என பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி வயநாடு நிலச்சரிவு குறித்து எச்சரித்தது வெளிவந்துள்ளது.

    பள்ளி மாணவி எழுதிய கதையில், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 300 பேர் இறந்தார்கள் என்றும், 200- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது பற்றியும் தெரிவித்துள்ளார்.

    மழை பெய்தால் நிலச்சரிவுகள் அருவியைத் தாக்கும். மனித உயிர்கள் உள்பட அவர்களின் பாதையில் உள்ள அனைத்தையும் அது மூழ்கடிக்கும் என அந்த மாணவி கடந்த ஆண்டு தனது பள்ளி இதழில் எழுதிய கதையில் குறிப்பிட்டுள்ளார்.

    கதை எழுதிய மாணவியின் நகரமான சூரல்மலை தரைமட்டமாகியது. அவரது பள்ளியும் இடிபாடுகளுக்குள் புதைந்துவிட்டது .

    வயநாடு நிலச்சரிவு குறித்து ஒரு ஆண்டுக்கு முன் எழுதி எச்சரித்த மாணவியின் கதை தற்போது வைரலாகி வருகிறது.

    • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
    • வயநாடு மாவட்டத்தில் சாலியாறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 30-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 94 நிவாரண முகாம்களில் உள்ளனர்.

    600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்தது. அவர்களை மீட்பதற்கான பணிகள் இன்று (சனிக்கிழமை) 5-வது நாளாக நடந்தது. இதுவரை 340 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    சுமார் 295 பேர் இதுவரை காணவில்லை. அவர்களில் 250 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொத்தம் 640 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன. நவீன எந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட சென்சார் கருவிகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சேறு மற்றும் இடிபாடுகள் குவிந்து கிடக்கும் பகுதிகளில் தேடுதல் தொடர்கிறது.

    இன்றைய தேடுதலில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மேலும் சிலரது உடல்களும் மீட்கப்பட்டன. இதனால் இன்று காலை பலி எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது.

    நிலச்சரிவில் உயிர்தப்பியவர்கள் மற்றும் அரசு பராமரித்து வரும் ஆவணங்களின் அடிப்படையில் மாயமானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 250 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.


    இதற்கிடையே வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பலர் வயநாட்டில் நிரந்தரமாக தங்கி வேலை செய்து வருகிறார்கள். பலர் வேலை நிமித்தமாக சென்று தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.

    இவர்களில் நிரந்தரமாக அங்கு குடியேறிய தமிழர்கள் 21 பேரும், வேலைக்கு சென்று தங்கிய காளிதாஸ், கல்யாண், சிராபுதீன் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த 24 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீரன் தலைமையிலான மீட்பு குழுவினர் வயநாடு சென்று அங்கு பாதிப்புக்குள்ளான தமிழர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதில்தான் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

    இவர்களை தவிர தமிழகத்தை சேர்ந்த 25 பேர் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் நிரந்தரமாக வயநாட்டில் தங்கியவர்கள் 22 பேர் ஆவர். வேலைக்காக சென்ற 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் முகாம்களில் 130 தமிழர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாயமான 250-க்கும் மேற்பட்டவர்களில் பலர் 3 கிராமங்களில் மண்ணுக்கு அடியில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆளில்லாத விமானம் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்த புகைப்படங்களை 640 குழுக்களிடமும் கொடுத்துள்ளனர். இந்த 640 குழுவினரும் 6 மண்டலங்களாக பிரிந்து மாயமான சுமார் 250 பேரையும் தேடி வருகிறார்கள். மாயமானவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த செல்போன் எண்களை இயக்கி ஜி.பி.எஸ். சிக்னல் வாயிலான அவர்களது கடைசி இருப்பிடத்தை கண்டறிய முயற்சிகள் நடக்கிறது.

    இதில் வெற்றி கிடைத்தால் மாயமான 250 பேரில் கணிசமானவர்களின் நிலை தெரிய வரும். ஒருவேளை அவர்கள் ஆழமான பகுதியில் மணலில் புதைந்து கிடந்தாலும் அதை உறுதிப்படுத்த முடியும்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்தவர்களில் கணிசமானவர்கள் சாலியாறு பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் சாலியாறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்கிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    ராணுவம் மற்றும் காவல் துறை ஹெலிகாப்டர்களும் தாழ்வாக பறந்து சென்று தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சாலியாற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடந்து சென்றுள்ளன. எனவே உடல்களை மீட்பதில் தொடர்ந்து கடும் சிக்கல் நிலவுகிறது.

    ×