search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து காயம்"

    • மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஆனந்த் 50 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.
    • போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது38). இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று சீன பீங்கானால் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழாவையொட்டி அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். நேற்று மாலை பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் விலக்கு அருகே நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தென்காசியில் இருந்து நெல்லைக்கு பார்சல் ஏற்றி கொண்டு ஒரு மினி லாரி சென்றது. அதனை நெல்லை பழைய பேட்டையை சேர்ந்த ஜெயராமன் (42) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஆனந்த் 50 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டார். இதில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஆன்ந்த் உயிரிருக்கு போராடினார்.

    சம்பவ இடத்திற்கு சென்ற பாவூர்சத்திரம் போலீசார், ஆனந்தை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் வராததால் அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிய ஆனந்தை மீட்டு மினி லாரியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
    • கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள செம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி அன்ன ஜெமிலா (வயது 60). இவரது மகள் சகாய ஜூலி (25).

    இவர்கள் 2 பேரும் நேற்று அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (60) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் அன்ன ஜெமிலாவின் மற்றொரு மகளை திசையன்விளை அருகே உள்ள அதிசயபுரத்தில் அவரது வீட்டில் விட்டுவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பினர்.

    அப்போது திசையன்விளை புறவழிச்சாலை அருகில் இசக்கியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிரே உவரியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மகன் பிபின்குமார்(20) ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியது.


    இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே மதியழகனும், அன்ன ஜெமிலாவும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    படுகாயம் அடைந்த சகாய ஜூலிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திசையன்விளை கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் பொய்யாப்பாக்கம் புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜி (வயது 32).

    இவரும் பில்லூர் பள்ளிக் கூட தெருவை சேர்ந்த பிரபாகரனும் மோட்டார் சைக்கிளில் முண்டியம்பாக்கத்திற்கு சென்றனர். அங்கு நடைபெற்ற உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று நேற்று இரவு வீடு திரும்பினர்.

    முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டிலிருந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலமாக இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் சென்ற வழியிலேயே ராஜி உயிரிழந்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பிரபாகரன் இன்று அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
    • இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் பழனிச்சாமி (வயது 23). இவர் படித்து முடித்த பின்னர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது உறவினர் தம்பி பட்டியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சக்தி (16). இவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து விட்டு பின்னர் கல்வியை தொடரவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு பழனிச்சாமி, இவரை அழைத்துக் கொண்டு, ஊர்குளத்தான் பட்டியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி நோக்கி தபால்துறைக்கு சொந்தமான அஞ்சலக வாகனம் சென்றது.

    அந்த வாகனம் மணமேல்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக இருவரையும் நெடுஞ்சாலைதுறை ரோந்து வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    • மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் தனது காரில் 5 பேர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கொடைக்கானலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு செல்ல திட்டமிட்டனர்.

    இன்று அதிகாலை வத்தலக்குண்டு சாலையில் பூலத்தூர் பிரிவு அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக அந்த கார் ஓங்கி உயர்ந்த 2 மரங்களுக்கு இடையில் சிக்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர்.

    பின்னர் படுகாயமடைந்த டிரைவர் சரவணன், மதுரையைச் சேர்ந்த தர்மராஜ் (60) ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தின்போது காரில் இருந்த 2 குழந்தைகளை போலீசார் காப்பாற்றினார்கள்.
    • ஜகன்னாத்பூர் கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

    கான்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள். திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது சிக்கந்திரா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ஜகன்னாத்பூர் கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

    பலியான 6 பேரும், தேராபூர், சிவராஜ் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இந்த விபத்தின்போது காரில் இருந்த 2 குழந்தைகளை போலீசார் காப்பாற்றினார்கள்.

    • விபத்தில் மருதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகிலுள்ள சீலை பிள்ளையார்புத்தூரில் ஒரு சமுதாயத்தினரை அவதூறாக சித்தரித்து மற்றொரு சமுதாயத்தினர் துண்டு பிரசுரங்கள் ஒட்டியதாக தெரிகிறது. இதை கண்டித்து ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்,

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் வாகனத்தை இருட்டான பகுதியில் இருந்து வெளிச்சமான பகுதிக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓட்டி வந்தனர். அப்போது போலீஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள அறிவழகன் என்பவரது வீட்டின் முன்பகுதியிலும், ராஜா என்பவரது சிமெண்ட் கடையிலும் மோதியது.

    மேலும் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது. இந்த வேளையில் அந்த வழியாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த முனையனூரை சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது மனைவி மருதாயியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அவர்கள் மீதும் போலீஸ் வாகனம் மோதியது. இந்த விபத்தில் மருதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தங்கராஜ் மற்றும் அப்பகுதியில் நின்ற முனையனூர் தினதயாளன் (48), சீலப்பிள்ளை யார்புதூர் இலுப்பைதோப்பு தெரு தீபன்(24) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.


    இந்த விபத்தில் இருசக்கர வாகனங்கள் போலீஸ் வாகனத்தின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸ் வாகனத்தை சாய்த்து வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் அப்பகுதியில் மிகுந்த பதட்டம் நிலவியது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர் இந்த சம்பவ இடத்தை திருச்சி மண்டல டி ஐ.ஜி.மனோகரன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், முசிறி கோட்டாட்சியர் ராஜன், தொட்டியம் வட்டாட்சியர் கண்ணாமணி மற்றும் வருவாய்த்துறையினர், முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்து குறித்து தீனதயாளன் காட்டுப்புதுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி. யாஸ்மின், தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் விசாரணை நடத்தியதில் விபத்தை ஏற்படுத்தியது திருச்சி ஆயுதப்படை காவலர் முசிறி அருகே உள்ள காந்திநகர் காலனியை சேர்ந்த லோகநாதன்(36) என்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது துறை நீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    • இசை நிகழ்ச்சியை நடத்திவிட்டு, தங்கள் வேனில் புறப்பட்டனர்.
    • எதிர்பாராதவிதமாக இந்த டெம்போவும் இசைக்குழுவினர் வந்த வேனும் மோதிக் கொண்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஒரு இசைக்குழுவில் நீலகிரியைச் சேர்ந்த அஜித், புன்னப்பராவை சேர்ந்த அகில் உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

    நேற்று இவர்கள் சீத்தாத்தோடு பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்தினர். அதிகாலை வரை இசை நிகழ்ச்சியை நடத்திவிட்டு, தங்கள் வேனில் புறப்பட்டனர்.

    இன்று காலை 6.45 மணியளவில் பத்தனம் திட்டா-கோழஞ்சேரி சாலையில் வந்த போது, எதிரே தமிழகத்தில் இருந்து காய்கறி பாரம் ஏற்றிய டெம்போ வந்தது.

    எதிர்பாராதவிதமாக இந்த டெம்போவும் இசைக்குழுவினர் வந்த வேனும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இசைக்குழுவைச் சேர்ந்த அஜித், அகில் ஆகிேயார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    • விபத்தில் வேன் டிரைவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
    • வேனில் இருந்த பெண்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம், தொட்டி அப்புச்சி கோவில் அருகே இன்று காலை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்குள்ள வீட்டிற்குள் புகுந்தது. வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியே இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த விபத்தில் வேன் டிரைவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் பல்லடம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேனில் இருந்த பெண்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    இந்தநிலையில் விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார், பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காரில் வந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், சின்ன எல்லாபுரம், அமுதண்டாவை சேர்ந்தவர் இஸ்லாவத் ஸ்ரீனு (வயது 40). ஆட்டோ டிரைவர்.

    இவரது தாய் பாப்பா (60), மகள் ரித்விக் (6), ரித்விகா (4). அவரது அத்தை சாந்தி, மைத்துனர் சர்தார் ஆகியோருடன் தனது மகன் ரித்விக்கிற்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக நல்கொண்டா மாவட்டம், நாகார்ஜுன சாகர் அருகே உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் சென்றனர்.

    இரவு மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது மஹபூபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஸ்ரீனு அவரது தாய் பாப்பா, மகன் ரித்விக், மகள் ரித்விகா ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    சாந்தி, மைத்துனர் சர்தார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் காரில் வந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் 2 வேனில் இருந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி செல்ல திட்டமிட்டனர்.

    இதற்காக ராமேசுவரத்தில் உள்ள 2 சுற்றுலா வேன்களில் அவர்கள் இன்று காலை புறப்பட்டு சென்றனர். தனுஷ்கோடி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் ஒரு வேன் ரோட்டில் கவிழ்ந்தது. மற்றொரு வேனின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. வேனில் இருந்த 2 வடமாநில பயணிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். அவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

    விபத்தில் 2 வேனில் இருந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக ராமேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேனில் டிரைவர் உள்பட 18 பேர் இருந்தனர்.
    • தவறான பாதையில் வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    உத்தரபிரதேச மாநிலம் சாரன்பூர் மாவட்டம் ரஹ்நாத் மந்திர் பகுதியை சேர்ந்தவர் அமித். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என சுமார் 17 பேருடன் ஆன்மீக சுற்றுலாவாக தமிழகத்திற்கு வந்தார்.

    இதற்காக உத்தர பிரதேசத்தில் இருந்து ரெயில் மூலமாக கடந்த 27-ந்தேதி புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு வந்தடைந்தனர். அங்கு தங்கியிருந்து சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு அங்கிருந்து கன்னியாகுமரிக்கு செல்வதற்காக திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து 17 பேரும் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு நேற்று நள்ளிரவு புறப்பட்டுள்ளனர்.

    இன்று அதிகாலையில் கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டால் சூரிய உதயத்தை பார்த்துவிடலாம் என்று எண்ணிய அவர்கள் நேற்று நள்ளிரவே வேனில் புறப்பட்டு தூத்துக்குடி வழியாக நெல்லையை நோக்கி நான்குவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை அடுத்த கீழ வல்லநாடு துணை மின் நிலையம் எதிரே வேன் வந்து கொண்டிருந்தது. வேனில் டிரைவர் உள்பட 18 பேர் இருந்தனர்.

    அப்போது எதிரே தவறான பாதையில் டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அந்த பகுதியில் வந்த வேனும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. கண்ணி மைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. லாரியின் முன்பக்க கண்ணாடியும் நொறுங்கியது. தொடர்ந்து 2 வாகனங்களும் மோதிய வேகத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன.


    இதில் வேனின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அமித் மனைவி சுமன்(வயது 32), உறவினர் பெண் பார்வதி(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற அனைவரும் படுகாயமடைந்து அலறித் துடித்தனர். இதனை அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்து பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வேனில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்க முயன்றனர்.

    ஆனால் வேனின் கண்ணாடிகள் முழுவதும் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. தொடர்ந்து கிரேன் வர வழைக்கப்பட்டு வேனை சாலைக்கு மீட்டு கொண்டு வந்தனர். அதன்பின்னர் வேனின் கண்ணாடிகளை உடைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியில் ஸ்ரீ என்ற 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. தொடர்ந்து வேன் டிரைவர் உள்பட 15 பேருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை மருத்துவ மனை டீன் ரேவதி நேரில் பார்வையிட்டார்.

    இந்த விபத்து தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தவறான பாதையில் வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×