search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"

    • ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்தனர்.
    • தலைமை ஆசிரியர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 144 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மேட்டூர் மாதையன்குட்டை ஜீவா நகரை சேர்ந்த ராஜா (51) என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

    இவர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கு மாணவி களை தனது அறைக்கு அழைத்து தினமும் கை, கால்களை அமுக்கிவிட்டு தலையை மசாஜ் செய்து விடுமாறு வற்புறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் தலைமை ஆசிரியர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது சிலர் கற்களை வீசி தலைமை ஆசிரியர் ராஜாவை தாக்க முயற்சி செய்தனர். இதையடுத்து போலீசார் ராஜாவை அருகில் உள்ள வகுப்பறைக்குள் பூட்டி பாதுகாத்தனர்.

    இதை தொடர்ந்து ராஜாவை கைது செய்யக்கோரி மேட்டூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு வந்த மேட்டூர் ஆர்.டி.ஓ தணிகாசம், தாசில்தார் முத்துராஜா, டி.எஸ்.பி.மரியமுத்து, கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பேரில் சமாதானம் அடைந்த பெற்றோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு ராஜாவை அழைத்து சென்றனர்.

    தொடர்ந்து பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    பின்னர் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். முன்னதாக கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி ராஜாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

    • சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.
    • உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேயராக இருப்பவர் முனேஷ் குர்ஜார். இவரது கணவர் சுஹில்.

    பெண் மேயரின் கணவர் சுஷில் குர்ஜார் நிலம் குத்தகை வழங்கியதற்கு ஈடாக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார். அவர் வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

    சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.

    லஞ்ச ஒழிப்பு துறையினர் வீட்டில் சோதனை நடத்தி ரூ.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சுஷில் குர்ஜாருடன் அவரது உதவியாளர்கள் நாராயண் சிங், அனில் துபே ஆகியோரும் பிடிபட்டனர்.

    சுஷில் தனது உதவியாளர்கள் மூலம் நிலம் குத்தகைக்கு விண்ணப்பித்த நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் செய்தார். அவர்கள் பொறி வைத்து சுஷிலை பிடித்தனர்.

    அவரது உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    லஞ்சம் வாங்கிய போது மேயர் முனேஷ் குர்ஜார் இருந்தார். அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கருதியும், வழக்கு விசாரணையில் தலையிடக் கூடும் என்பதாலும் அவரை மேயர் பதவியில் இருந்து மாநில காங்கிரஸ் அரசு அதிரடியாக நீக்கி உத்தர விட்டது. இரவோடு இரவாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர் கவுன்சிலர் பதவியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். 

    • தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் பறக்கும்படை தனி தாசில்தார் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த 30-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அந்த லாரியில் 3 டன் அளவில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தின் போது லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரது செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பதிவான அழைப்புகளை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த ஒச்சு, லாரி டிரைவர், லோடு மேன் பீமன், நுகர்பொருள் வாணிப கழக இளநிலை தர நிர்ணய ஆய்வாளர் தமிழ்செல்வன், எழுத்தர் சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் இந்துமதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை கலெக்டருக்கு அளித்தனர்.

    அந்த அறிக்கையில் குடோன் இறநிலை தரஆய்வாளர் தமிழ்செல்வன், பட்டியல் எழுத்தர்கள் சுரேஷ், சதாசிவம் ஆகியோர் ஒச்சு, டிரைவரை பலமுறை செல்போனில் அழைத்து பேசியுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையின் பேரில் தமிழ்செல்வம், சுரேஷ், சதாசிவம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மண்டல முதுநிலை மேலாளர் உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
    • விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வரா கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு என தனியாக விடுதி நடத்தப்படுகிறது.

    இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கர்னூல், காவாலி என்ற பெயரில் தனித்தனியாக குழுவாக செயல்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்லூரி உணவகத்தில் சமையல் செய்யப்படுகிறது.

    இந்த உணவுகளில் காரமான ஆந்திரா மிளகாயை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென கர்னூல் பகுதி மாணவர்கள் தெரிவித்தனர். அதன்படி அதிக அளவு மிளகாய் உணவில் சேர்க்கப்பட்டது.

    இதற்கு காவாலி பகுதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் உணவில் போதுமான அளவு மட்டுமே மிளகாய் சேர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சேர்க்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் .

    இதனால் விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் தாக்கினர்.

    இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதியில் இருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

    உணவில் மிளகாய் சேர்ப்பது தொடர்பாக மாணவர்கள் மோதிக்கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

    • காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
    • சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு கடந்த 19-ந்தேதி இரவு குடிபோதையில் 2 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் அசைவ உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அதில் ஒருவர் சாப்பிட்டு முடிக்கவும் கடையின் மேசை மீது தலை வைத்து அப்படியே போதையில் மயங்கிவிட்டார்.

    மற்றொருவர் அவர்கள் வந்த காரிலேயே தூங்கிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர்.

    அப்போது கடையில் இருந்து புறப்பட்டு செல்லுங்கள் என உரிமையாளர் கூறினார். அதற்கு காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.

    இது பற்றி அம்மாப்பேட்டை போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் விசாரித்தனர். அதில், அவர்கள் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் ஏட்டு செந்தில்குமார் என்பது தெரியவந்தது.

    இந்த ரகளையை அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் வைரலாக பரவியது.

    இதனிடையே சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் விசாரணை நடத்தி ஓட்டலில் ரகளை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சிவ சக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    தொடர்ந்து துறை ரீதியான விசாரணையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லப் பாண்டியன் நடத்தினார். இந்த விசாரணை அறிக்கையை அவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்பித்தார். அந்த அறிக்கையை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியான நடவ டிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனபால், அலுவலக கட்டணம் ரூ.121 என்றும், ஒரு வில்லங்க சான்றுக்கு ரூ. 1000 செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா்.
    • உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    அவிநாசி:

    திருப்பூா் மாவட்டம், அவிநாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவா் தனபால். இவரது அலுவலகத்துக்கு வில்லங்க சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த அவிநாசியை சோ்ந்த நபா், தலைமை எழுத்தா் தனபாலை அணுகி விண்ணப்பிப்பதற்கான தொகை குறித்து கேட்டுள்ளாா்.

    அதற்கு தனபால், அலுவலக கட்டணம் ரூ.121 என்றும், ஒரு வில்லங்க சான்றுக்கு ரூ. 1000 செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா். மேலும் இந்த ஆவணத்தில் 20 தாள்கள் இருப்பதால் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கேட்டுள்ளாா். அப்போது அந்த நபா், 'வீட்டுக்கு சென்று பணத்தை எடுத்து வருகிறேன்' என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றாா். இந்த உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இது குறித்து அவிநாசி சாா்பதிவாளா் கூறுகையில், 'இது தொடா்பாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயா் அலுவலா்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றாா். இந்நிலையில் கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவா் சாமிநாதன், வைரலான வீடியோ பதிவின் அடிப்படையில் தலைமை எழுத்தா் தனபாலை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டாா். இது தொடா்பாக துறைரீதியான விசாரணை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    • போலி ஆவணத்தை பதிவு செய்த சார் பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
    • போலி பத்திரம் பதிவு செய்தபோது பதிவுத்துறை இயக்குனராக இருந்த ரமேஷ், புதுவை பதிவாளராக இருந்த பாலாஜி ஆகியோரும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    மேலும் போலி ஆவணத்தை பதிவு செய்த சார் பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் போலி பத்திரம் பதிவு செய்தபோது பதிவுத்துறை இயக்குனராக இருந்த ரமேஷ், புதுவை பதிவாளராக இருந்த பாலாஜி ஆகியோரும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த நிலையில் நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜிலென்ஸ் மூலம் கவர்னர், தலைமை செயலருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

    இதையடுத்து 2 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    நில அளவைத்துறை இயக்குனர் பதவி தெற்கு சப்-கலெக்டர் முரளிதரனுக்கும், மாவட்ட பதிவாளர் பதவி வடக்கு சப்-கலெக்டர் கந்தசாமிக்கும், மீன்வளத்துறை இயக்குனர் மாதவி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குனர் முத்துமீனாவுக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கழக இயக்குனர் பொறுப்பு பதவி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

    போலி பத்திரம் தயாரிக்க உதவிய புதுவை சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்த ரியல்எஸ்டேட் புரோக்கர் பாலமுத்து வேல்(76), குருசுகுப்பம் சிவராமன்(49) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதனால் இவ்வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • நாய் குட்டிகளை மிகவும் அதிகமான விலை கொடுத்து வாங்கியதாக புகார் எழுந்தது.
    • உதவி கமாண்டன்ட் சுரேஷை உள்துறை அமைச்சகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரில் மாநில போலீஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் பயிற்சி பள்ளி மட்டுமின்றி, துப்பறியும் நாய்களுக்கான பயிற்சி பள்ளியும் உள்ளது. இந்த அகாடமியில் 125 நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் வசதி இருக்கிறது.

    இந்த நிலையில் இந்த நாய்கள் பயிற்சி பள்ளிக்கு பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாய் குட்டிகள் வாங்கப்பட்டன. அந்த நாய் குட்டிகளை மிகவும் அதிகமான விலை கொடுத்து வாங்கியதாக புகார் எழுந்தது.

    மேலும் பயிற்சி பள்ளியில் உள்ள நாய்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து புகார்கள் வந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நாய் குட்டிகள் அதிக விலை கொடுத்து வாங்கியதும், முறைகேடுகள் நடந்ததும் உறுதியானது.

    நாய் பயிற்சி பள்ளியின் சிறப்பு அதிகாரியான கேரள ஆயுதப்படை போலீசின் 3-வது பட்டாலியன் உதவி கமாண்டன்ட் சுரேஷ் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கேரள மாநிலம் உள்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

    அதன் அடிப்படையில் உதவி கமாண்டன்ட் சுரேஷை உள்துறை அமைச்சகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    • பிரச்சனை இருந்தால் அதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும்.
    • துணை முதல் அமைச்சரையே கேள்வி கேட்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா என மக்கள் முன்பாகவே நாராயணசாமி ஆவேசப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திரா அரசு "வீட்டிற்கு வீடு நம் ஆட்சி" என்னும் பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

    அதன்படி அமைச்சர்கள் எம்.பி,எம்.எல்.ஏ என அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அவரவர் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய வேண்டும்.

    பிரச்சனை இருந்தால் அதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும்.

    இந்நிலையில் துணை முதல் அமைச்சர் நாராயணசாமி சித்தூர் மாவட்டம், குண்ட்ராஜு இன்லு எனும் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது திருப்பதி ஆயுதப்படை போலீஸ்காரர் யுகேந்திரன், கிராமத்தில் உள்ள சாலை குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது என அவரது குறைகளை எடுத்துக் கூறினார். மேலும் இதுபற்றி அவர் கேள்வி எழுப்பினார்.

    இதனால் ஆத்திரமடைந்த துணை முதல் அமைச்சர் நாராயணசாமி, யுகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனையடுத்து துணை முதல் அமைச்சரையே கேள்வி கேட்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா என மக்கள் முன்பாகவே நாராயணசாமி ஆவேசப்பட்டார்.

    அதன் பின்னர் அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

    பின்னர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென துணை முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸ்காரர் யுகேந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    • மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் அருள் ஜீவன் (வயது 47). இவர் அப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 14-ந்தேதி எனது மகன் மதிய உணவு இடைவேளையில் உணவு சாப்பிட்டு விட்டு கழிப்பறைக்கு சென்றுவிட்டு வந்துள்ளான்.

    அப்போது எனது மகனின் தோளில் கையை போட்ட ஆசிரியர் அருள்ஜீவன் ஆய்வுக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவனை தகாத உறவுக்கு ஈடுபடுத்தியதாகவும் இதனால் அவன் வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி இருந்தார்.

    சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆசிரியர் அருள்ஜீவனை, மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு செய்து உத்தர விட்டுள்ளார்.

    • ஒரு கட்டத்தில் டிரைவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் நீ கொடுத்த 100 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று கூறி டிரைவரிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
    • சஸ்பெண்டான ஜேம்சுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும்.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் காய்கறி, வைக்கோல், கனிமவளங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்கின்றன. இதனை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்டம் ஆய்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ்(வயது 55) என்பவர் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வைக்கோல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த லாரி டிரைவர் ரூ.100 லஞ்சமாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனாலும் ஜேம்ஸ் கூடுதலாக லஞ்சம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் டிரைவர் பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் நீ கொடுத்த 100 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று கூறி டிரைவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் போலீஸ்காரர் ஒருவருக்கு போன் செய்து, வைக்கோல் லாரியின் பதிவெண்ணை சொல்லி, அந்த லாரிக்கு அதிக பாரம் ஏற்றியதாக வழக்கு போட்டு அபராதம் விதிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவங்களை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனை அறிந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்சை நேற்று இரவு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார். இந்நிலையில் இன்று ஜேம்சை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கூறுகையில், வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தில் அவர் லஞ்சம் கேட்பது தொடர்பாக வீடியோ வந்துள்ளது. அதில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்துள்ளேன். இனி அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

    சஸ்பெண்டான ஜேம்சுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும். இவர் தற்போது ஆய்குடி போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    • கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • திருப்பூர், பல்லடம் ரோடு நொச்சிபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் பார்கள் செயல்படுவதாகவும், அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு புகார்கள் வந்தன.

    இந்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 18-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் திருப்பூர், பல்லடம் ரோடு நொச்சிபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியதுடன், பாருக்குள் மதுவிற்பனை செய்ததாக புகார் எழுந்தது. சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து கடை விற்பனையாளர்கள் சண்முகநாதன், குமார், பாலசுப்ரமணியம், கார்த்திகேயன், காமராஜ், முருகானந்தம் ஆகியோரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுப்ரமணியம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ×