search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை"

    • அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் அங்குள்ள பீரோக்களை திறந்து பார்த்தும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • சுமார் 4 மணி நேரமாக நடந்த சோதனையின் போது அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இங்கு மயிலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பத்திரப்பதிவு செய்ய வருவார்கள். இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் அங்குள்ள அதிகாரிகள், பத்திரப்பதிவுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வாங்குவதாக புகார் எழுந்தது. இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார், மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கு சார்பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள், இவர்களை தவிர இடைத்தரகர்களும் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் சிலரும் இருந்தனர். உடனே அவர்கள் யாரும் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லாதவாறு கதவுகளை உள்புறமாக தாழிட்டுக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையை தொடங்கினர்.

    அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் அங்குள்ள பீரோக்களை திறந்து பார்த்தும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி காலையில் இருந்து மாலை வரை யார், யார் பத்திரப்பதிவு செய்ய வந்துள்ளனர். எத்தனை பேர் வந்தனர், அவர்களில் எவ்வளவு பேருக்கு பத்திரப்பதிவு நடந்துள்ளது என்பது குறித்த விவரங்களை சேகரித்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சுமார் 4 மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் போது அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கு அதிகாரிகள் உரிய கணக்கு காண்பிக்காததால் கணக்கில் வராத அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர். அவற்றுடன் சோதனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.

    கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி, அலுவலக ஊழியர்கள் கணேசன், வீர. அப்துல்லா, பால சுப்பிரமணியன், டிரைவர் சரவணன், புரோக்கர் செல்வம் உள்ளிட்ட 6 பேர்மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.536 கோடி ஊழல் புகார்.
    • 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.536 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராம் வெங்கடேஷ் என்பவர் கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்திருந்த புகாரில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.290 கோடி மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிக்காக ரூ.246.39 கோடி மதிப்பிலான பணிகளை ஒப்பந்தம் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாகவே எஸ்.பி. வேலுமணி மற்றும் மாநகராட்சி என்ஜினீயர்கள் உள்பட 10 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி உள்பட 11 பேரின் வீடுகளில் விரைவில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    முறைகேடு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள போலீசார் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 11 பேரின் வீடுகளிலும் விரைவில் சோதனை நடத்துவது பற்றி உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றனர் .

    இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உடனேயே சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் எஸ்.பி.வேலு மணி மீது வழக்கு போடப்பட்டுள்ள நிலையிலும் சோதனை எதுவும் நடைபெறவில்லை.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, எஸ்.பி. வேலுமணி உள்பட 11 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். அதுபற்றி விரைவில் முடிவெடுத்து சோதனை நடத்துவோம் என்று தெரிவித்தார்.

    • பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
    • சோதனையின் முடிவில்தான் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி காமராஜர் நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நகராட்சி தலைவராக இருந்துவந்தார். இவரது மனைவி சத்யா பன்னீர்செல்வம். இவர் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அப்போது கமிஷனராக இருந்த பெருமாள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வருகிறார்.

    இதனைத்தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை பண்ருட்டி சென்றனர். பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் பன்னீர்செல்வம் வீடு, பண்ருட்டி 4 முனை சந்திப்பில் உள்ள பன்னீர்செல்வம் அலுவலகம், சென்னையில் உள்ள முன்னாள் கமிஷனர் பெருமாள் வீடு உள்ளிட்ட 5 இடங்களில், காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் பண்ருட்டி கந்தன் பாளையத்தில் உள்ள முன்னாள் ஒன்றிய செயலாளர் மலா பெருமாள் வீட்டிலும், பத்திர எழுத்தர் செந்தில்முருகா, எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் மோகன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. மாலா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆவார். மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின்போது வீட்டில் இருந்து யாரையும் வெளியே அனுப்பவில்லை. வெளியில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சோதனையின் முடிவில்தான் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.

    சோதனை நடைபெறும் தகவல் கிடைத்ததும் அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். முன்னாள் நகராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய விவகாரம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேலம்மாள் தன் மகள் கிருஷ்ணவேணி என்பவருக்கு வீடு கட்டி கொடுத்தது தெரியவந்தது.
    • சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் வேலம்மாள். இவர் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலம்மாள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வகையில் வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் ரூ.45.90 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை அம்பாசமுத்திரத்தில் உள்ள வேலம்மாள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் வேலம்மாள் தன் மகள் கிருஷ்ணவேணி என்பவருக்கு வீடு கட்டி கொடுத்தது தெரியவந்தது. மகள் வீடானது குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியில் உள்ளது.

    இதையடுத்து மருங்கூரில் உள்ள அவரது மகள் கிருஷ்ணவேணி வீட்டில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை 7 மணிக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் கிருஷ்ணவேணி, அவரது கணவர் சங்கர் மற்றும் உறவினர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வங்கியில் ரூ.10 லட்சம் வரை நிரந்தர வைப்பு தொகை போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. அது தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • உதவி செயற்பொறியாளர் கவுதமன் தங்கி உள்ள பாளை என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள ஒரு விடுதியில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
    • சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக நாகர்கோவிலை சேர்ந்த கவுதமன் (வயது55) பணியாற்றி வருகிறார்.

    இவர் ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடாக அதிக பணம் கேட்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சீதாராமன் மற்றும் போலீசார் நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது உதவி செயற்பொறியாளர் கவுதமன், இளநிலை வரைவு அலுவலர் தச்சநல்லூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (54), கார் டிரைவர் வள்ளியூரை சேர்ந்த இசக்கி (36) ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.95 ஆயிரத்து 800 மற்றும் அங்கிருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றினர். நேற்று இரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடந்தது.

    இந்நிலையில் உதவி செயற்பொறியாளர் கவுதமன் தங்கி உள்ள பாளை என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள ஒரு விடுதியில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கவுதமன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2020-ம் ஆண்டு ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பூபதி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
    • 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசாரிடம் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45).

    இவர் தற்போது நாமக்கல் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர், நாமக்கல்லில் மோகனூர் ரோட்டில் அய்யப்பன் கோவில் எதிரே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    பின்னர் அறையின் கதவுகளை உள்பக்கமாக பூட்டினர். வீட்டில் இருந்தவர்கள் யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. அவர்களது செல்போன்களையும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் பூபதியிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல மல்லசமுத்திரத்தில் உள்ள பூபதியின் தந்தை வீடு மற்றும் மாமனார் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவர் அடிக்கடி அறை எடுத்து தங்கும் நாமக்கல்லில் உள்ள சாமி லாட்ஜிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பூபதி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அப்போது முறைகேடு தொடர்பாக ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசாரிடம் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் நாமக்கல் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    • தமிழகம் முழுவதும் அரசு துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை அடுத்து பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 5-வது மாடியில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் சுந்தர் (57).

    இவர் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அமைத்தல், கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவதாக புகார் இருந்து வந்தது.

    இது தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் உதவி செயற்பொறியாளர் சுந்தர் ஊராட்சிகளில் ஆய்வு பணிகளுக்காக சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்கி வந்துள்ளதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டி.எஸ்.பி. ராஜேஸ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு 1 மணி அளவில் அதிரடியாக ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

    அப்போது அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சுந்தர் மற்றும் சில ஊழியர்கள் மட்டும் இருந்தனர். சுந்தரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கம் இருந்தது. பின்னர் அறை முழுவதும் சோதனை நடத்தினர்.

    இதில் வேறு பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து ஈரோடு பழையபாளையத்தில் உள்ள சுந்தரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீசாரின் விசாரணையில் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் பணிகளுக்காக கமிஷன் வாங்கி இருப்பது தெரியவந்தது. அலுவலகம், வீடு என 2 இடங்களிலும் நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய சோதனை அதிகாலை 5 மணி வரை நடந்தது. போலீசாரின் சோதனையில் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

    இதுதொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உதவி செயற்பொறியாளர் சுந்தரத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் வனத்துறை, போலீஸ் துறை மற்றும் அரசு போக்குவரத்து துறை என 3 சோதனை சாவடிகள் உள்ளன. தமிழக-கர்நாடகா இணைப்பு சாலையில் இந்த சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் இங்கு சோதனை செய்த பிறகு செல்ல அனுமதி அளிக்கப்படும்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் ஈரோட்டில் இருந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் பண்ணாரி சோதனை சாவடிக்கு வந்தனர். அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடிக்குள் நுழைந்து கோப்புகளையும், வாகன பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது மேஜையில் இருந்த கணக்கில் வராத ரூ. 40 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது போக்குவரத்து ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் அதிகாரிகள் சிலர் பணியில் இருந்தனர். ரூ.40 ஆயிரம் பற்றி ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் அங்கு பணியில் இருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி சான்று வழங்கிய ஆய்வு குழுவில் இடம்பெற்ற பேராசிரியர்கள் வீட்டிலும் அது தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றும் வகையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
    • ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

    சேலம்:

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி சான்று வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையொட்டி இன்று காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உள்பட இதில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி சான்று வழங்கிய ஆய்வு குழுவில் இடம்பெற்ற பேராசிரியர்கள் வீட்டிலும் அது தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றும் வகையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

    இதை தொடர்ந்து சேலம் சுப்ரமணிய நகர் பகுதியில் வசித்து வரும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் வசந்தகுமார் வீடு, சேலம் ஸ்ரீரங்கபாளையத்தில் வசித்து வரும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் மனோகர், சேலம் அஸ்தம்பட்டி பழனியப்பா நகரில் வசித்து வரும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் சுஜாதா ஆகியோர் வீட்டிற்குள் இன்று காலை சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

    தொடர்ந்து வீட்டில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை, கதவுகளை உள்புறமாக பூட்டிய லஞ்ச போலீசார் அங்கிருந்தவர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

    தொடர்ந்து வீட்டில் இருந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பல மணி நேரமாக நீடித்த இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூ றப்படுகிறது. அதனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
    • சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்து உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் , வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் நேற்று ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    சேலம், நாமக்கல், தருமபுரி, மதுரை, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 80 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நடந்தது. மொத்தம் 13 மணிநேரம் இந்த சோதனை நடந்துள்ளது.

    இந்த சோதனையில் நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் சகோதரி வீடு, முன்னாள் நகராட்சி துணைதலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், ஸ்ரீதேவி எக் சென்டர் உரிமையாளர் மோகன், முன்னாள் நகராட்சி பொறியாளர் கமலநாதன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கோபிநாத், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பொறியாளர் கணேசன், கொண்டிசெட்டிப்பட்டி பைனான்ஸ் அதிபர் சங்கரன், நல்லிபாளையம் பைனான்ஸ் அதிபர் விஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    நேற்று ஒரே நாளில் நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்து உள்ளது.

    மேலும் 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவை தவிர, 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.

    மொத்தம் வழக்குக்கு தொடர்புடைய ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 900 மற்றும் 214 ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகிறார்கள், அந்த சொத்துகள் எப்படி வாங்கப்பட்டன, அதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள். இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் யார், யார் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு நடத்தி வருகறார்கள். ஆய்வு முடிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதனால் இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    • லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் அமைச்சர் காமராஜின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு மன்னார்குடி பகுதி அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • அவர்கள் காமராஜ் வீடு முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    மன்னார்குடி:

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் பல அமைச்சர்கள் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தகவல்கள் திரட்டினார்கள்.

    லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில் சில அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து குவித்திருப்பதாக தெரியவந்தது. அதன்பேரில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    முன்னாள் அமைச்சர்களின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதனடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காமராஜ் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் 2015- ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை பதவியில் இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பது தெரியவந்தது. குறிப்பாக காமராஜ் ரூ.58.44 கோடி அளவுக்கு சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கருதினார்கள்.

    முன்னாள் அமைச்சர் காமராஜ் மட்டுமின்றி அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சந்திரஹாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் பெயரை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து இந்த 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டு உள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காமராஜ், முன்னாள் அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மாவட்டம் என்பவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

    மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 1.4.2015 முதல் 31.3.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரியவந்தது.

    இந்த விரிவான விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப்பிரிவுகள் 120(பி) ஐ.பி.சி., 13(2), 13(1) (இ), 13(2), 13(1) (இ), 109 ஐ.பி.சி., 13(2), 13(1) (பி), 12, 13(2), 13(1) (பி) 2018-ன்படி காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், டாக்டர் எம்.கே.இனியன், டாக்டர் கே.இன்பன், ஆர்.சந்திரசேகரன், பி.கிருஷ்ண மூர்த்தி மற்றும் எஸ்.உதய குமார் ஆகியோர் மீது நேற்று (7-ந்தேதி) வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் மூலமாகவும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சந்தேகம் வந்த போது இது தொடர்பாக அவர்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பினர்களிடம் விசாரணை செய்து தகவல்களை சேகரித்து வந்தனர்.

    இந்தநிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. அவரது நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் தஞ்சை, திருச்சி, கோவை, சென்னை உள்பட மொத்தம் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இது அ.தி.மு.க. தலைவர்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே காமராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளும் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.

    லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் அமைச்சர் காமராஜின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு மன்னார்குடி பகுதி அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் காமராஜ் வீடு முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    • கடந்த 1.4.2011 முதல் 31.3.2021 வரையில் காமராஜ் தமிழக அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
    • 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் 2016-ம் ஆண்டு மே மாதம் வரையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பையும் இவர் வகித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் காமராஜ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மூத்த மகனான டாக்டர் இனியன் 2-வது குற்றவாளியாகவும், இளைய மகன் இன்பன் 3-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சந்திரசேகரன், மன்னார்குடியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோர் அடுத்தடுத்து குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் முறைகேடாக சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    காமராஜ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை நன்னிலம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா சோதிரியாம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். விவசாயம் மூலமே வருவாய் ஈட்டி வந்த காமராஜுக்கு முன்னாள் எம்.பி. என்ற முறையில் ஓய்வூதியம் கிடைத்து வந்தது. கடந்த 1.4.2011 முதல் 31.3.2021 வரையில் காமராஜ் தமிழக அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

    2015-ம் ஆண்டு ஜனவரி முதல் 2016-ம் ஆண்டு மே மாதம் வரையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பையும் இவர் வகித்தார்.

    பொது ஊழியராக இருந்த அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சொத்துக்கள், பங்குகள் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். பணம் சம்பாதிக்கும் வழிகளிலும் முறைகேட்டில் ஈடுபட்டு தன்னை காமராஜ் வளப்படுத்திக் கொண்டுள்ளார்.

    1.4.2015 அன்றைய கணக்கீட்டின்படி முன்னாள் அமைச்சரான காமராஜின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 290 ஆக இருந்தது. கட்டிடங்கள், விவசாய நிலங்கள், தங்க நகைகள், மோட்டார் வாகனம், வைப்பு தொகை, வங்கி இருப்பு போன்ற வகைகளில் இந்த சொத்துக்கள் அடங்கி இருந்தது.

    குற்றம் சாட்டப்பட்ட காமராஜ் உள்ளிட்ட 6 பேரும் முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களை சட்டப்பூர்வமாக்குவதற்காக குற்றவியல் சதியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இதற்காக "என்.ஏ.ஆர்.சி. ஓட்டல் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் தனியார் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தனர். இந்த நிறுவனம் தஞ்சை பிரதான மேற்கு தெரு என்ற முகவரியுடன் இணைக்கப்பட்டிருந்ததாகும். இதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.25 லட்சம் ஆகும்.

    குற்றச்சதியின்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உதயகுமார் ரூ.1 கோடியே 10 லட்சத்தை ஓட்டல் வங்கி கணக்குக்கு பங்குகளை வாங்குவதற்காக மாற்றி இருக்கிறார். இதை தொடர்ந்து ஓட்டலின் முழு பங்கு வாங்கப்பட்டுள்ளது. ஓட்டலின் பெயரிலான சொத்துக்களை முறைகேடாக வாங்குவதற்கு முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் பெரிதும் உதவியுள்ளனர்.

    காமராஜின் மகன்களான இனியன், இன்பன் ஆகியோர் நிர்வாக இயக்குனர்களாக உள்ள "ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தின் பெயரில் பல்வேறு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பின்னர் 2019-ம் ஆண்டில் காமராஜ் வாசுதேவ பெருமாள் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் பெயரில் மருத்துவமனையை கட்ட தொடங்கி உள்ளனர்.

    ஓட்டலை கையகப்படுத்தியதின் மூலம் காமராஜ் தனது ஆஸ்பத்திரிகளுக்காக 47366 சதுர அடி இடத்தையும் பெற்றிருக்கிறார். கிரிமினல் சதி திட்டத்தின்படி ஓட்டல்கள் பெயரில் ரூ.27 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்த 350 மதிப்பிலான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.

    இதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் கட்டியுள்ள ஆஸ்பத்திரியின் மதிப்பு ரூ.25 கோடியே 8 லட்சத்து 98 ஆயிரத்து 176 ஆகும்.

    லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட காலத்துக்கு முன்னாள் காமராஜ் மற்றும் அவரது மனைவி, மகன்கள் பெயரிலான சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 290 மட்டுமே ஆகும். இதன் பின்னர் 31.8.2021 அன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் 3 பேரின் சொத்து மதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    விவசாய நிலங்கள், கட்டிடங்கள், குடோன்கள், மோட்டார் வாகனங்கள், நிலையான வைப்பு தொகைகள் போன்றவற்றின் மதிப்பும் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் பங்குகள், காப்பீடு தொகைகள், முதலீடுகள், வங்கி இருப்பு போன்றவையும் அதிகரித்துள்ளன.

    இதன்படி 3 பேரின் பெயரிலும் தற்போது ரூ. 58 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரத்து 749 மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இது அவர்களது வருமானத்துக்கு மீறிய வகையிலான சொத்தாக கணக்கிடப்பட்டுள்ளது.

    இது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் அடிப்படையிலேயே காமராஜ் மற்றும் அவரது மகன்கள் மீதும் சொத்துக்களை குவிப்பதற்கு உடந்தையாக இருந்த 3 பேர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் இன்பன் டாக்டர் ஆவார். இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறார்.
    • இதற்காக சிங்காநல்லூர் கண்ணபிரான் மில் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை சொந்தமாக வாங்கி உள்ளார்.

    கோவை:

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காமராஜ் வீடு உள்பட அவருடன் தொடர்புடைய 49 இடங்களில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவாரூர், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் இன்பன் டாக்டர் ஆவார். இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறார்.

    இதற்காக சிங்காநல்லூர் கண்ணபிரான் மில் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை சொந்தமாக வாங்கி உள்ளார். அந்த வீட்டில் தங்கியிருந்து அவர் ஆஸ்பத்திரிக்கு பணிக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் இன்பன் வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சென்றனர். ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் மொத்தம் 7 பேர் சென்றனர்.

    அப்போது டாக்டர் இன்பன் வீட்டில் இருந்தார். அவரிடம் உங்கள் வீட்டில் சோதனை நடத்தப்போவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். அவரும் சோதனைக்கு ஒத்துழைப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சோதனையில் இறங்கினர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில ஆவணங்களை காட்டி அவரிடம் போலீசார் விசாரித்தனர். அதற்கும் டாக்டர் இன்பன் விளக்கம் அளித்தார்.

    சோதனையை ஒட்டி இன்பன் வீட்டு முன்பு பாதுகாப்பு பணிக்காக உள்ளூர் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    ×