search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரங்கேற்றம்"

    • முறையாக முழுமையாக பயிற்சி பெற்று சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாணவியின் முதல் அரங்கேற்றம் இதுவாகும்.
    • லீ முசி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜின் நடத்தும் நடன பள்ளியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார்.

    தமிழர்களின் பாரம்பரிய நடனமான பரத நாட்டியம், இந்தியாவின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. பழமையான பரதக்கலை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வளர்ந்துள்ளது. தற்போது பரதக்கலை நாடு கடந்து சீனாவிலும் கால்பதித்துள்ளது.

    சீனாவை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி லீ முசி, பரதக்கலை பயின்று முதன் முதலாக சீனாவில் அரங்கேற்றம் நடத்தி உள்ளார். புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய தூதர்கள், ஏராளமான சீன ரசிகர்கள் முன்னிலையில் மாணவி லீ முசி அரங்கேற்றம் செய்தார்.

    பரதம் பயிலும் ஒருவர், குறிப்பிட்ட தேர்ச்சிக்குப் பின்னர், மேடையில் ஆசிரியர்கள், நிபுணர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் முதன் முதலில் மேடையில் நடனம் ஆடுவதை அரங்கேற்றம் செய்தல் என்று குறிப்பிடுவார்கள். அரங்கேற்றம் நடத்திய பின்புதான், அவர்கள் தனியாக நிகழ்ச்சிகளில் நடனமாட முடியும் மற்றும் பயிற்சி வழங்க முடியும்.

    இதுகுறித்து இந்திய தூதரக கலாசார பொறுப்பாளர் டி.எஸ்.விவேகானந்த் கூறுகையில், "முறையாக முழுமையாக பயிற்சி பெற்று சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாணவியின் முதல் அரங்கேற்றம் இதுவாகும்" என்றார்.

    லீ முசியின் அரங்கேற்றம் சீன ஆசிரியரால் பயிற்சி அளிக்கப்பட்டு சீனாவிலேயே முடிக்கப்பட்டது, இது முதல் முறையாகும்.

    'இது பரதநாட்டிய மரபு வரலாற்றில் ஒரு மைல்கல்' என்று லீக்கு பயிற்சி அளித்த நடன கலைஞர் ஜின் ஷான் ஷான் கூறினார். லீ முசி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜின் நடத்தும் நடன பள்ளியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார். ஜின் 1999-ல் டெல்லியில் தனது அரங்கேற்றத்தை நடத்திய பரத கலைஞர் ஆவார்.

    அரங்கேற்ற விழாவில் பல பிரபலங்கள், சீன மாணவர்கள் முன்னிலையில் பல வரலாற்று சிறப்புமிக்க பாடல்களுக்கு 2 மணி நேரத்திற்கு மேல், லீ பரதம் ஆடினார். இந்த மாத இறுதியில் சென்னையிலும் நடன நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் லீ.

    • திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர்.
    • கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் தயா காயத்ரி, கார்த்திகா ரதீஷ், ஸ்ருதி சித்தாரா, ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார், சந்தியா அஜித், சங்கீதா.

    இவர்களுக்கு பரத நாட்டியம் படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஒரு தனியார் அறக்கட்டளையின் முயற்சி காரணமாக திருநங்கைகளுக்கு பரதநாட்டிய பயிற்சி கொடுக்கும் அகாடமியில் சேர்ந்தனர்.

    அவர்களுக்கு பரதநாட்டிய கலைஞரான சஞ்சனா சந்திரா பயிற்சி அளித்தார். இவர் மோகன்லால் நடித்த 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார். அவரிடம் திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டிய பயிற்சியை முடித்தனர்.

    இதையடுத்து அவர்கள் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்துவதற்கு அவர்கள் பயிற்சி பெற்ற அகாடமி ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் நடை பெற்றது. திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டியம் ஆடினர்.

    திருநங்கைகள் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது, 'திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்வு உள்ளடக்கம் மற்றும் சமூக ஏற்புக்கான ஒரு படியாகும்' என்றார்.

    திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஒரு கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உச்சி மாகாளியம்மன் கோயில் முன்பாக பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்று விழா நடந்தது.
    • 16வது நாளில் அரங்கேற்று விழா நடந்தது இதில் குழந்தைகள் மிக சிறப்பாகவும் உற்சகத்துடனும் கும்மியடித்தனர்.

    உடுமலை:

    உடுமலை வட்டம் அந்தியூர் பஞ்சாயத்து சடைய கவுண்டன் புதூரில், உச்சி மாகாளியம்மன் கோயில் முன்பாக பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்று விழா நடந்தது. இதில் சடைய கவுண்டன் புதூர் மற்றும் ஜீவா நகரை சார்ந்த 46 ஆண்மற்றும்பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்கள் சக்தி கலைக்குழு பவளக்கொடி கும்மியாட்ட பயிற்சியாளர் மகாலிங்கத்திடம் 15 நாட்கள் பயிற்சி பெற்றனர். 16வது நாளில் அரங்கேற்று விழா நடந்தது இதில் குழந்தைகள் மிக சிறப்பாகவும் உற்சகத்துடனும் கும்மியடித்தனர். இந்த நிகழ்ச்சியை ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்து நடத்தினர்.

    • கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், கூப்பிடு பிள்ளையார் கலை வள்ளி கும்மி ஆட்டம் குழுவின் 5-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள்,பெண்கள் ஆடிய வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கும்மியாட்ட ஆசிரியர்கள் பெரியசாமி, கலையரசி, முருகன் -வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடி கும்மி ஆட்ட குழுவினரை உற்சாகப்படுத்தினர்.கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி, கூப்பிடு பிள்ளையார் அறக்கட்டளை நிர்வாகி சின்னச்சாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.முன்னதாக 50க்கும் மேற்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    ×