என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சளி"
- உணவு வழியாகவே பெருமளவு தொற்றை தடுத்துவிட முடியும்.
- வெந்நீரில் இருந்து உங்கள் நாளை தொடங்குங்கள்.
மழைக்காலம் தொடங்கிவிட்ட சூழலில், சளி-இருமல் தொல்லையும், காய்ச்சல் நோய் பாதிப்புகளும் வேகமாக பரவத் தொடங்கிவிட்டன. தொண்டையில் உண்டாகும் மாற்றத்தை கண்டு சளி பிடிப்பதை உணர்ந்துகொள்ள முடியும். அடிக்கடி மருந்து மாத்திரைகள் என்று பயன்படுத்துவதை விட காய்ச்சலின் ஆரம்பத்திலேயே, சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றுவதனால், சளி-காய்ச்சல் தொல்லையின் வீரியத்தை குறைத்துவிடலாம். இதற்கென பிரத்தியேகமான தயாரிப்புகள் எதுவும் தேவையில்லை. அதிக மெனக்கெடலும் தேவையில்லை. உணவு வழியாகவே பெருமளவு தொற்றை தடுத்துவிட முடியும். சாதாரண காய்ச்சல், சளி, தலைவலியாக இருந்தால் இந்த உணவு வகைகளை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
வெந்நீரில் இருந்து உங்கள் நாளை தொடங்குங்கள். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது சிட்டிகை சீரகத்தூள் சேர்த்து குடிக்க வேண்டும். அல்லது சீரகம் போட்ட நீரை கொதிக்க வைத்து குடிக்கவும். இதனால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
நாள் முழுக்க அரை மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் நீரை குடிப்பதன் மூலம் உடலில் நச்சு சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். அதோடு காய்ச்சலின் போது உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வைரஸ், பாக்டீரியா கிருமித்தொற்று வேகமாக பரவக்கூடும்.
காலை உணவு
காய்ச்சல் காலங்களில் பிரட் உணவை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக ஆவியில் வேக வைத்த இட்லி அல்லது இடியாப்பம் சேர்க்கலாம். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்த துவையல், தாளிப்பு தேவையெனில் நல்லெண்ணெய்யில் தாளித்து தொட்டு கொள்ளலாம். இதனால் வாய் கசப்பு நீங்கும். காரத்துக்கேற்ப புளி, வரமிளகாய் சேர்க்க வேண்டும்.
வயிறார சாப்பிடக்கூடாது. வயதுக்கேற்ப இரண்டு முதல் நான்கு இட்லிகள் வரை சாப்பிட வேண்டும். அரை வயிறாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாந்தி, குமட்டல் இருக்காது. அதேபோன்று இளஞ்சூட்டில் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் இளஞ்சூட்டில் நீர் குடிக்க வேண்டும்.
மதிய உணவு
புழுங்கலரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் ரவை போன்று பொடியாக மாற்றவும். இரண்டு டம்ளர் நீருக்கு கால் டம்ளர் அரிசி ரவை சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் அதில் சீரகப்பொடி, பெருங்காயம் சிட்டிகை, உப்பு சேர்த்து குடிக்கவேண்டும். தேவையெனில் தொட்டுகொள்ள புதினா சட்னி எடுத்துகொள்ளலாம். பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சீரக நீரை குடிக்க வேண்டும். பூண்டு சேர்த்த மிளகு ரசத்தையும் இளஞ்சூட்டில் அருந்தலாம்.
அரிசி சாதத்துடன் கூடிய மிளகு ரசம் என்பது நிச்சயம் நன்மையே என்றாலும் சளி, இருமல், காய்ச்சல் நேரத்தில் முதல் இரண்டு நாட்கள் இதை தவிர்க்க வேண்டும்.
மாலை நேரத்தில்
அரை வயிறு உணவு என்பதால் வயிற்றில் பசி உணர்வு அதிகமாகவே இருக்கும். மாலையில் இஞ்சி கஷாயம், சுக்கு கஷாயம் குடிக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதில் 5 உலர் திராட்சை, 2 ஏலக்காய், 3 மிளகு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வைக்கவும். பாகுக்கு முந்தைய பதம் வரும் போது அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதை இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.
இரவு உணவு
ஆவியில் வேகவைத்த உணவு அல்லது கஞ்சி போதுமானது. அதிக காய்ச்சல் இல்லையெனில் எண்ணெய் அதிகம் சேர்க்காத சப்பாத்தி சாப்பிடலாம். இரவு நேரத்தில் துவையல் சேர்க்க வேண்டாம். பால், காபி, தேநீர் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும். இடையில் பசி எடுத்தாலும் இளஞ்சூடான சுக்கு மல்லி காபி அல்லது வெந்நீர் மட்டும் அருந்துங்கள். பகல் வேளையில் 4 அல்லது 5 உலர் திராட்சையுடன் மிளகு 3 சேர்த்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாறை விழுங்குங்கள். தொண்டை கரகரப்பு, இருமல் வேகமாக குறையும்.
மேற்கண்ட இந்த உணவு பட்டியல் தான் ஒரு நாளுக்கான உணவாக இருக்க வேண்டும். இந்த உணவு உங்களின் சளி, அதனால் உண்டான இருமல், காய்ச்சலின் தீவிரத்தை வெகுவிரைவாக குறைத்துவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் திட உணவுகள் அதிலும் கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை எடுத்துகொள்ள வேண்டும்.
அதிகப்படியான சளி, காய்ச்சல் பிரச்சினை இருக்கும் போது நாள் முழுக்க இதை கடைப்பிடித்தால் அடுத்த நாள் தூங்கி எழும்போது உடல் சோர்வு நீங்கியிருப்பதை உணர்வீர்கள். ஏனெனில் இவை எல்லாமே உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியவை. பெரும்பாலும் தொற்று தீவிரமாகாமல் தடுத்துவிடும் என்பதால் நிச்சயம் இது கைகொடுக்கும்.
சூப் வகை
சளி, இருமலின் போது சூடாக குடிக்கும் காபி, தேநீரை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக சுக்கு, மல்லி, காபி பொடி கலந்து காபி குடிக்கலாம். சிறுவர்களுக்கு சூப் கொடுக்க வேண்டும்.
முருங்கைக்கீரை காம்புகளை வேகவைத்து மசித்து வடிகட்டி அதில் சீரகம், பூண்டு தட்டி சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சிட்டிகை சேர்த்து கொத்தமல்லித்தழை, புதினா இலைகளை சேர்த்து தாளித்து கொடுக்கவும். சிறு குழந்தைகளாக இருந்தால் கொத்தமல்லி, புதினாவின் சாறு சேர்த்து குடிக்கலாம். இந்த நேரத்தில் காய்கறிகள் சூப்பை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக சளியை முறிக்கும் முருங்கை, தூதுவளை போன்றவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். இளஞ்சூடாக குடிக்க வேண்டும்.
கூடுதல் கவனம்
தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஓய்வும் மிக அவசியம். காலையும், மாலையும் கல் உப்பு சேர்த்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தலையை உயரமாக தலையணையில் வைத்து படுக்க வேண்டும். அதிக தலைபாரம், சளி, காய்ச்சல் மூன்றும் இருக்கும் போது மூச்சுவிடுவதிலும் சிரமம் இருக்கும். படுக்கை அறையில் மண்சட்டியில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் துளசி, புதினா, தூதுவளை, கற்பூரவல்லி என அருகில் கிடைக்கும் மூலிகைகளை கைப்பிடி சேர்த்து அதிக சூட்டில் அருகில் வைக்க வேண்டும். அதிலிருந்து வரும் சூடான ஆவியை மூக்கினுள் நன்றாக இழுக்க வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்ய வேண்டும்.
படுக்கையிலேயே கிடக்காமல் அறைக்குள் நடக்க வேண்டும். தூங்கும் போதும் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் சில துளி யூகலிப்டஸ் தைலம் விட்டு, சுத்தமான துணியை நனைத்து பிழிந்து மூக்கின் மேல் பற்று போல் போட்டால் மூக்கடைப்பு இருக்காது. சளி அடர்த்தியாக இருந்தால் கரைந்து வெளியேறும். அதேநேரம் சுகாதாரம் பேணுவதும் அவசியம்.
- பருவநிலை மாறுவதால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த வேண்டும்.
பருவநிலை மாறுவதால் பொதுவாக உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தினசரி ஏற்படும் வானிலை மாற்றத்தால் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பவர்கள் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தினசரி உடற்பயிற்சி செய்தல், சரியான தூக்கம் ஆகியன உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவுகின்றன. சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த முடியும். மூலிகைகள், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்து போராட உதவுகிறது.
மழையும், வெயிலும் மாறி மாறி இருக்கும் இந்த சீசனுக்கு சளி, இருமல் வந்து அவதிப்படுகிறீர்களா? இதை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
வெற்றிலை-1
ஏலக்காய்-1
மிளகு-5
கிராம்பு-1
தேன்- ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு இளம் வெற்றிலையை எடுத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலையின் காம்பு பகுதி மட்டும், வால் பகுதியை கிள்ளி எறிந்துவிட வேண்டும். அதன் நடுப்பகுதியில் ஏலக்காய், மிளகு, கிராம்பு மற்றும் இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பீடா மாதிரி மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.
முதலில் சாப்பிடும் போது இனிப்பாக இருக்கும். சாப்பிட்டு முடிக்கும் போது தான் அதன் காட்டம் தெரியும். ஒரு நாளைக்கு ஒருதடவை என்று மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட நிச்சயம் சளி, இருமல் குணமாகும். வறட்டு இருமலாக இருந்தாலும், சளி இருமலாக இருந்தாலும் குணமாகும்.
- ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
- குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
ஃப்ளூவின் அதிகபட்ச பாதிப்பை உண்டு செய்யும் ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தற்போது குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இவை சற்று தீவிரமான பாதிப்பையே உண்டு செய்கின்றன. இந்த காய்ச்சலை தவிர்க்க எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்ஃப்ளூயன்சா வைரஸ் என்பது ஒருவகை வைரஸ். நார்மலாக வரக்கூடிய சளி வகை போன்ற வைரஸ் தான் இது. எனினும் இதன் வீரியம் சற்று கூடுதலாக இருக்கும். இந்த ஹெச்3 என்2-ன் தாக்கம் இருந்தால் அதன் அறிகுறிகள் சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், உடல் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர் கோர்த்தல் இதனோடு அதிக காய்ச்சலும் இருக்கும்.
பொதுவாகவே வைரஸ் காய்ச்சல் 3- 4 நாட்கள் வரை இருக்கலாம். ஆனால் இந்த ஹெச்3 என்2 வைரஸ் ஒரு வாரம் முதல் ௧௨ நாட்கள் வரை கூட ஆகலாம். அதோடு சில நாட்கள் வறட்டு இருமல் நீடிக்கவும் வாய்ப்புண்டு. அதோடு தற்போது மழையும், வெயிலும் பருநிலை மாறுவதால் இதன் வீரியம் அதிகரிக்கும். இதனுடன் மிதமான மழையும் சேர்ந்தால் அது பரவலை அதிகரிக்கச் செய்யும்.
இதை எதிர்கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவியல் மற்றும் வாழ்வியல் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். சாலையோர கடைகளில் இருக்கும் உணவுகள், சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. உதாரணத்துக்கு சாலையோரம் கம்பங்கூழ், கேப்பை கூழ், திறந்த நிலையில் இருக்கும் வெங்காயம், மோர் மிளகாய், வத்தல் போன்றவை வெயிலுக்கு இதமாக இருக்கும் என்றாலும் இவை நீண்ட நேரம் திறந்த நிலையில் இருப்பதால் இவற்றில் இருக்கும் கிருமித்தொற்றுகள் உடலில் பாதிப்பை உண்டு செய்யலாம்.
வெயிலுக்கு ஏற்றது என்றாலும் கபத்தை உண்டு செய்யும் கொய்யாப்பழம், பால் சேர்ந்த பொருள்கள் குறைப்பது நல்லது. இதனோடு இரவு நேரங்களில் போதுமான தூக்கம் அவசியம் ஆகும்.
குழந்தைகளுக்கு ஹெச்3 என்2 மட்டும் அல்லாமல் மற்ற தொற்றுகளையும் எதிர்க்கும் அளவுக்கு உடல் பலமாக இருக்க தினமும் பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு சளி தொற்று இருக்கும் போது, காய்ச்சல் இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் இந்த பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு தொற்று நேராமல் தடுக்க உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை கொடுக்கலாம்.
பூண்டு- ஒரு பல் எடுத்து தட்டிகொள்ளவும். அதில் பால் மற்றும் தண்ணீர் சம அளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பூண்டு வேகும் வரை வைத்து பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து இனிப்பு தேவை என்றால் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுக்கலாம். தொற்று வந்த பிறகு தொடர்ந்து 10 நாட்கள் வரை இதை கொடுக்கலாம்.
நுரையீரல் தொற்று பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் தொடர்பான கோளாறுகள், உடல் பருமன் கொண்டவர்களுக்கு தொற்று நேரும் அபாயம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் நிலவேம்பு கஷாயமும், கபசுர குடிநீரும் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நேர்ந்தாலும் அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.
குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. காற்றில் கூட இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் என்பதால் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்று வராமல் தடுக்க முடியும்.
கூட்டமான இடங்கள் என்றில்லாமல் எப்போதும் ஒரு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த ஹெச்3என்2 தொற்று மட்டுமல்ல வேறு எந்த வகை தொற்றையும் தடுக்கலாம்.
- சளி, இருமல் ஆகியவை பருவ காலங்களில் ஏற்படும் தொற்று.
- தேன் எடுத்துக் கொள்வது சளி, இருமலைக் குறைக்கும்.
சளி, இருமல் ஆகியவை பருவ காலங்களில் ஏற்படும் தொற்றுக்களால் உண்டாகும். குறிப்பாக வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும்போது அவை முதலில் பாதிப்பது சுவாச மண்டலத்தை தான். சுவாச மண்டலங்களில் தொற்றுக்கள் ஏற்படும் போதுதான் தீராத சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தொற்று ஏற்பட்ட பிறகு மருந்து எடுத்துக் கொள்வதை விட ஆரம்பத்திலேயே உணவுகளின் வழியாக, இயற்கையான முறையில் சரிசெய்து கொள்ள முயற்சி செய்வது தான் நல்லது.
* துளசியை இஞ்சியுடன் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து பின்னர் அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர சளி, இருமல் தொல்லை சரியாகும்.
* தேன் எடுத்துக் கொள்வது சளி, இருமலைக் குறைக்கும் வேலையைச் செய்யும்.
* ஒரு ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து காலை, இரவு என இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வர சளி, இருமல் கட்டுக்குள் வரும்
* லவங்கப்பட்டையில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன. லவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ளும்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் பலப்படும்.
* லவங்கப்பட்டையின் பொடியுடன் தேன் கலந்து எடுத்துக் கொண்டாலும் சளி, இருமல் பிரச்சினை குறையும்.
* லவங்கப்பட்டை பொடியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு டம்ளராக சுண்டவிட்டு டீயாக எடுத்துக் கொள்ளும்போது சளி, இருமல், காய்ச்சல் தீருவதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* சீந்தில் பல நூறு நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. இந்த சீந்தில் கொடியை பயன்படுத்தி சளி, காய்ச்சல். வைரஸ் தொற்றுக்கள் பருவ கால தொற்று நோய்களை தீர்க்க முடியும்.
* சீந்தில் கொடியின் சாறை உட்கொள்வதன் மூலம் பருவ கால தொற்றுக்களால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும்.
- நம்முடைய முன்னோர்கள் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள்.
- மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர்.
தலைவலி, கை, கால் வலி, சளி, காய்ச்சல், இருமல், தும்மல் எது வந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆங்கில மருந்தை நாடுகின்றோம். உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரை பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும், சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட செயற்கையான முறையில் மருந்தை உட்கொண்டிருந்தால் அதன் மூலம் பக்கவிளைவுகள் கட்டாயம் அதிகமாகும். நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து, அடிக்கடி வரக்கூடிய சில உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள். அந்த வரிசையில் சின்ன சின்ன கை வைத்தியத்தை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
நம் முன்னோர்களான பெரியவர்கள் நமது வீட்டிலேயே அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களையே நோய் குணப்படுத்தும் மருந்துகளாக பயன்படுத்தி உள்ளனர். உண்மையில் இந்த பொருட்கள் எல்லாம் நோயை குணப்படுத்தும் மருந்துகள் என்று தெரிந்தே அவற்றை சமையலில் பயன்படுத்தி வந்துள்ளனர். மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவிலும் அன்றாடம் சேர்த்து வந்தனர். இதனாலேயே நம் பாட்டி, தாத்தாக்கள் பல ஆண்டுகாலம் நலமுடன் வாழ்ந்தனர்.
வயிற்று வலி குணமாக சிறிதளவு வெந்தயத்தை எடுத்து கொஞ்சம் நெய்யில் வறுத்து பொடி செய்து அதனை புதிதாக செய்த மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி முற்றிலுமாக நீங்கும்.
தலைவலி நீங்க ஐந்து துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கும், 2 லவங்கமும் சேர்த்து நன்கு அரைத்து பற்று போடும் பதத்தில் வைத்துக்கொண்டு நெற்றியில் பற்று போட்டால் தலைவலி சில மணி நேரங்களில் குணமாகும்.
நாட்டு மருந்து கடையில் இருந்து கொஞ்சம் வேப்பங்கொட்டையை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக இழைத்து தலையில் பத்து போட்டுக்கொண்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமடைந்து விடும்.
குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ நெஞ்சில் சளி சேர்ந்துகொண்டு இருமல் அதிகமாகிவிடும். இந்த நெஞ்சு சளி கரைய சிறிதளவு தேங்காய் எண்ணையில் பச்சைக் கற்பூரம் கொஞ்சம் சேர்த்து நன்கு சுடவைத்து இளம் சூட்டில் நெஞ்சில் தடவி வர நெஞ்சில் உறைந்துள்ள சளி கரையத்தொடங்கும்.
பசி எடுக்க புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சை பழம் சாறு 3 பங்கு சேர்த்து கலந்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக பசி ஏற்படும்.
வண்டுக்கடியால் ஏற்படு தடிப்புகள் மறைய வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சேர்த்து அரைத்த விழுது ஒரு கைப்பிடி எடுத்து ½ லிட்டர் பசும்பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிட கரப்பான், வண்டுக்கடியால் ஏற்பட்ட விஷம், வடு நீங்கும்.
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெய்யில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும். அஜீரண கோளாறு இருக்கும் சமயங்களில் மிளகை வறுத்து பொடி செய்து தேனில் உட்கொண்டு வந்தால் அஜீரண கோளாறால் ஏற்படும் சீதபேதி குணமாகும்.
உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாக இரவில் தூங்குவதற்கு முன்னர் ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு சுண்ணாம்பு இவற்றை உள்ளங்கையில் நன்றாக குழைத்தால் சூடாக இருக்கும். இந்த கலவையை அந்த சூட்டிலேயே தொண்டை பகுதியில் தடவி மறுநாள் காலையில் ஈரத்துணிகொண்டு துடைத்து எடுத்தால் உடல் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குணமாகும்.
அதிமதுரத்தை பொடியாக்கி அதை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கலந்து இரவு முழுவதும் வைத்து, மறுநாள் அரிசி கஞ்சியுடன் சேர்த்து, இந்த நீரை குடித்து வர வயிற்று புண் (அல்சர்) குணமாகும். இதனையே கஷாயமாக செய்து குடிக்க மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.
சிறு குழந்தைகள் சில சமயம் விடாமல் அழும். நமக்கு காரணம் புரியாது. அதற்கு இரண்டு வெற்றிலைகளை எடுத்து, விளக்கெண்ணெய்யை ஒரு பக்கம் தடவி, விளக்கில் லேசாக சூடு செய்து இளம்சூட்டில் குழந்தையின் வயிற்றின் மேல் போட சில நொடிகளில் அழுகை நின்று குழந்தை சிரிக்க ஆரம்பித்து விடும்.
சிறு குழந்தைகளுக்கு வசம்பை ஒரு துண்டு எடுத்து நல்லெண்ணெயில் ஊற்றி விளக்கில் காட்டி நன்கு கருக்கி அதன் பொடியை சிறிது நாக்கில் தேய்த்துவிட வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், பேதி போன்றவை குணமாகும்.
- பொது இடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது.
- கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.
மடத்துக்குளம் :
தற்போது பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் கவனமுடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சளி, காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் குணமடைந்தாலும், சளி, தொண்டை வலி குணமாக ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. வீட்டில் ஒருவருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவுகிறது.
பொதுஇடங்களில், சளியுடன் தும்மல் போடுவதால், மற்றவர்களுக்கு காய்ச்சல் எளிதாக பரவுகிறது. இதனால், கொரோனா காலத்தில் இருந்தது போன்று மக்கள் முகக்கவசம் அணிய துவங்கியுள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- காய்ச்சல், சளி பரவுவது அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ச்சியான பானங்கள், குடிநீரை பருக வேண்டாம்.காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைக்கும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மருந்துக்கடைகளில் தன்னிச்சையாக மாத்திரை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பொதுஇடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றனர்.
- தட்ப வெப்ப மாற்றத்தால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- மருத்துவரிடம் முறையாக தகவல் சொல்லி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக சிகிச்சை பெற கூடாது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 40-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பாதிப்பினால் 280-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தட்ப வெப்ப மாற்றத்தால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
இதனால் ஈரோட்டில் தினமும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:
தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக தற்போது மாவட்டத்தில் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது.
இதற்காக பெற்றோர்கள், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இதற்கு முறையான சிகிச்சை எடுத்து கொண்டாலே போதும். மருத்துவரிடம் முறையாக தகவல் சொல்லி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக சிகிச்சை பெற கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்