search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 249418"

    • திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன.
    • அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

    உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-சேவை 2.0 என்ற திட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக 550 இ-சேவை மையங்களை அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் ஓரிரு ஆதார் சேவை மையங்கள் மட்டுமே இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

    தினமும் குறிப்பிட்ட அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதனால் அருகேயுள்ள வங்கிக்கிளைகள், தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த அலைக்கழிப்பால் பெரும்பாலானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கவும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் வேண்டி விண்ணப்பிக்கின்றனர். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்டும் அதே நேரம் ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள கன்னியாக்குறிச்சியில் ஆதவற்ற நிலையில் மாரிமுத்து (வயது 70) என்பவர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்ப ட்டது, இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.

    இவருடைய உடலை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் அவருடைய உடலை உரிய இறுதி மரியாதைகளுடன் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது

    இதை அறிந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து முதியவரின் உடலை மனிதநேயத்துடன் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

    மதுக்கூர் போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த், தலைமை காவலர் சுரேஷ் மற்றும் திருவாரூர் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனரும் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க துணைத் தலைவருமாகிய அண்ணாதுரை, ராஜேஷ் ஆகியோர் முதியோர் உடலை நல்லடக்கம் செய்தனர்.

    • ஒவ்வொரு பொருளுக்கும், பில்லுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம்.
    • தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிதாக பறக்கும் படை.

    திருப்பூர்:

    வணிக வரித்துறை சார்பில் பறக்கும் படை அமைத்துள்ளதால் தொழில் துறையினர் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஒரு தொழிற்சாலையில் இருந்து வேறு தொழிற்சாலைக்கு ஜாப் ஒர்க் செய்ய பொருட்கள் எடுத்துச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி., நடைமுறை அமல்படுத்திய பின், ஒவ்வொரு பொருளுக்கும், பில்லுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழில் நிறுவனங்களில், வணிக வரித்துறையினரின் நேரடி சோதனை முறை முற்றுப்பெற்றது.

    ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பில் இல்லாமல் வணிகம் இல்லை என்ற நிலை உருவானது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இம்முறையால் வரி விதிப்பில் இருந்த பல்வேறு சிக்கல்கள் தீர்வுக்கு வந்தன. இச்சூழலில், தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிதாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இப்படையினரால் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சோதனையிட்டு, அபராதம் விதிக்க முடியும். குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும், 339 சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படையை வழிநடத்த, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதியதாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையால், தொழில்துறையினர் மிரட்சியில் உள்ளனர். ஏனெனில், பொருட்களை தொழிற்சாலைக்கு வெளியே எடுத்துச் செல்ல ஜி.எஸ்.டி., பில் தேவை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல இ வே பில் தேவை. அவ்வாறு பில் இல்லாமல் பொருட்களை எடுத்துச் சென்றால், கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் விதிப்பால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் வைத்திருப்போர் பெரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

    சிறிய தவறுக்கும் பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த, 15 நாட்களில் பல லட்சம் ரூபாய் அபராதமாகவும், முன் வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூர், ேகாவை தொழில்துறையினர் அதிருப்தியில் உள்ளனர். 

    • நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குமரிக்கு வந்து செல்வார்கள்.
    • தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய தொடர் விடுமுறைக்கு சுற்றுலா பயணிகள் வருவர்.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.

    இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சபரிமலை சீசன் கால மாக கருதப்படுகிறது. மேலும் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசன காலங்களில் இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருப்பார்கள்.

    அதுமட்டுமின்றி பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய தொடர் விடுமுறை காலங்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.

    இந்த சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி களுக்கு வசதியாக கன்னியா குமரியில் நடைபாதை களில் சீசன் கடைகள் அமைப்பதற்கான அனு மதியை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் மூலம் வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி யில் சீசன் கடைகள் நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    இதனால் கன்னியா குமரியில் சீசன் கடைகள் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரியில் பேரூராட்சி நிர்வாகம் சீசன் கால முன்னேற்பாடுகளை செய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் முற்றிலுமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி விட்டனர்.

    இந்த நிலையில் 2 ஆண்டு களுக்கு பிறகு வருகிற 17-ந்தேதி கன்னியா குமரியில் சபரிமலை சீசன் தொடங்க உள்ளது. இதற்கிடையில் கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது குறித்து மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப் பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.இத னால் இந்த ஆண்டும் கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பதில் பேரூராட்சி நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    சீசன் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கன்னியா குமரியில் சீசனுக்கான எந்தவித முன்னேற்பாடு களும் செய்ய முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதாகவும் அதன் பிறகு தான் சீசனுக்கான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்ப டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    • முடி திருத்துவோர், வீட்டு வேலை செய்வோர் உள்ளிட்டோர் இதில் பதியலாம்.
    • வழிகாட்டுதலை மத்திய அரசு வகுக்க வேண்டியது, அவசியமாகியுள்ளது.

    திருப்பூர் :

    அமைப்பு சாரா தொழிலாளர் மேம்பாட்டிற்காக, இ - ஷ்ராம் எனப்படும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தை, மத்திய தொழிலாளர் நலத்துறை செயல்படுத்துகிறது.வருமான வரி செலுத்தாத, பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பங்களிப்பு இல்லாத ஊழியர்கள், தொழிலாளர்களை இத்தளத்தில் பதிவு செய்வதே இதன் நோக்கம்.அந்தந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மற்றும் பரிந்துரை அடிப்படையில், 16 முதல் 59 வயதுக்குட்பட்ட துப்புரவு, தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள், விவசாயம், கட்டுமானம், கைத்தறி, தச்சு, சிற்பம், கட்டட தொழிலாளி, பெயின்டர் உள்ளிட்ட கூலித் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், வீட்டு வேலை செய்வோர் உள்ளிட்டோர் இதில் பதியலாம்.

    ஆங்காங்கே உள்ள பொது சேவை மையங்கள் மூலமும் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆங்காங்கே நடத்தப்படும் சிறப்பு முகாம் மூலமும் இ-ஷ்ராம் தளத்தில், பயனாளிகள் இணைக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட சில சேவைகள் வழங்கப்பட உள்ளன. இதில் சாலையோர வியாபாரிகளை திட்டத்தில் இணைப்பதில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் ஏற்கனவே, சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பின் சாலையோர வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.குறிப்பாக, பிரதான சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமானோர் சாலையோர கடைகளை அமைத்துள்ளனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல், விபத்து கூட நேரிடுகிறது.இவர்களை இ-ஷ்ராம் தளத்தில் இணைப்பதா, அப்படி இணைத்தால் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போனதாக சர்ச்சை எழுமே என்ற குழப்பம் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பலர் மத்திய அரசின் சலுகைகளை பெறும் நோக்கில், தவறான தகவல் அளித்து போலியாக சாலையோர வியாபாரிகளாக தங்களை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களால் அனுமதிக்கப்பட்ட வியாபாரிகளை மட்டும், இ-ஷ்ராம் திட்டத்தில் இணைப்பதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு வகுக்க வேண்டியது, அவசியமாகியுள்ளது என்றனர்.

    ×