search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினவிழா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
    • விருதுகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வேறு ஒரு விழாவில் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.

    1. வெங்கடராமன், கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.

    2. அஸ்ரா கர்க், காவல் துறை தலைவர், கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு), சென்னை பெருநகர காவல்.

    3. ராஜேந்திரன், காவல்துறை துணைத் தலைவர், குற்றப்புலனாய்வுத்துறை நுண்ணறிவு, சென்னை.

    4. ப.ஹீ. ஷாஜிதா, காவல் கூடுதல் துணை ஆணையாளர், இணையவழி குற்றப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.

    5. ஹா.கிருஷ்ண மூர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.

    இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல் துறை அதிகாரிகள் 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    1. அனில் குமார், காவல் உதவி ஆணையர், கொங்கு நகர் சரகம், திருப்பூர் மாநகரம்.

    2. கோ. சரவணன், காவல் துணைக் கண்காணிப்பாளர், குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, மதுரை சரகம்.

    3. மாதையன், காவல் ஆய்வாளர், சூலூர் காவல் நிலையம், கோயம்புத்தூர் மாவட்டம்.

    4. அமுதா, காவல் ஆய்வாளர், பீளமேடு காவல் நிலையம், கோயம்புத்தூர் மாநகரம்.

    5. அனிதா, காவல் ஆய்வாளர், மாசார்பட்டி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.

    6. விஜயா, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்

    7. மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரியலூர் மாவட்டம்.

    8. சித்திராதேவி, காவல் ஆய்வாளர், இணைய குற்றப்பிரிவு, திருப்பூர் மாவட்டம்.

    9. மணிமேகலை, காவல் ஆய்வாளர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்.

    10. மறைந்த காவல் ஆய்வாளர் சிவா, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, திருச்சி.

    விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வேறு ஒரு விழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் என 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழா நடைபெறும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்குள் இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது. மேலும் விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இதேபோல் திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவற்றில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர்களிடம் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    அதேபோல் 12 ரோந்து வாகனங்களில் போலீசார் விடிய விடிய ரோந்து சுற்றி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • போடியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற மாணவர் பி.எஸ்.சி. சிற்பக் கலை படித்து வருகிறார்.
    • பிரேம்குமாருக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    நாட்டின் 76-வது சுதந்திரதின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் போடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரேம்குமார் என்பவர் சாக்பீசில் தேசிய கொடியை சுமந்த இளைஞரின் உருவத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

    தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற மாணவர் பி.எஸ்.சி. சிற்பக் கலை படித்து வருகிறார். இவர் சாக்பீசில் ஒரு செ.மீ அகலம், 3.5 செ.மீ உயரத்திலும், 2 மி.மீ உயரம், 9 மி.மீ அகலத்திலும் இளைஞர் ஒருவர் தன் கைகளில் தேசிய கொடியை தலைக்கு மேல் ஏந்தியபடி நடப்பது போன்ற உருவத்தை வடிவமைத்துள்ளார்.

    இதனை சிற்பமாக செதுக்க 45 நிமிடங்கள் ஆனதாக அவர் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் இதனை பதிவிட்டுள்ளார். பிரேம்குமாருக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து மாணவர் பிரேம்குமார் தெரிவிக்கையில், வருங்கால இந்தியா இளைஞர் கைகளில்தான் உள்ளது என்பதை விளக்கும் வகையில் இந்த சிற்பத்தை வடித்துள்ளேன். 77-வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் மக்கள் கொண்டாட தயாராகி வரும் நிலையில் நாட்டு மக்களுக்காக இதனை சமர்பித்துள்ளேன் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பார்சலுக்கு நேற்று முதல் தடை செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் வி.பொன்ராமு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் 814 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் ரெயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 200 போலீசாரும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் 100 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் பெட்டிகளில் பெண் போலீசார் பயணம் செய்கின்றனர்.

    சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    முக்கிய ரெயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, சேலம் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் வழித்தடங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் உபகரணங்களை பயன்படுத்தி தீவிர சோதனைகள் செய்யப்படுகின்றன.

    ஒவ்வொரு நுழைவு வாயில்களிலும் பயணிகள் அவர்களின் உடமைகளை சோதனைக்கு பிறகே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) வரை தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பார்சலுக்கு நேற்று முதல் தடை செய்யப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பொருட்கள் ரெயிலில் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.

    பார்சல் குடோன், ரெயிலில் ஏற்றப்படும் பொருட்கள் போன்றவை கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு சுதந்திர தினம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதே போல பிற நகரங்களிலும், ரெயில்வே பார்சல் புக்கிங் நடைமுறைகள் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றுகிறார்
    • டெல்லி எல்லையில் வாகனங்கள் நுழைய தடைவிதிப்பு

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி, உரையாற்றுகிறார். இதனால் டெல்லி செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு பாதுகாப்புப்படையினர் முதல் டெல்லி போலீசார் வரை என பாதுகாப்புப்படை பிரிவுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.

    நேற்றிரவு முதல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாகனமும் முற்றிலும் சோதனைக்குட்ப்பட்ட பிறகே டெல்லி நகருக்குள் அனுமதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே ரெயில் நிலைய கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் மூவர்ணக்கொடி கலரில் ஜொலித்து வருகின்றன.

    நொய்டா மற்றும காசியாபாத்தில் இருந்து வருகிற 15-ந்தேதி வரை டெல்லி நகருக்குள் வரும் கனரக வாகனம் மற்றும் பொது பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்றிலிருந்து இந்த பகுதியாக வரும் வாகனங்கள் மாற்று வழியாக திருப்பிவிடப்பட்டு வருகின்றன. 3 ஆயிரம் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று இரவு 10 மணி முதல் டெல்லி எல்லையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுதந்திர தினவிழாவிற்கு 1800 பேர் சிறப்பு பார்வையாளர்காக அழைக்கப்பட்டுள்ளனர். 75 ஜோடிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொள்வார்கள்.

    • 13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
    • நகராட்சிகளை பொறுத்தமட்டில் ராமேசுவரம் முதலிடத்தையும், திருத்துறைப்பூண்டி 2-வது இடத்தையும், மன்னார்குடி 3-வது இடத்தையும் பிடித்தது.

    திருச்சி:

    தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும், நகராட்சியை பொறுத்தமட்டில் முதலிடம் பெறும் நகராட்சிக்கு ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், 3-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

    பேரூராட்சியை பொறுத்தமட்டில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பேரூராட்சிகளுக்கு தலா ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மண்டலங்களுக்கு தலா ரூ.30 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்காக 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.

    அதன்படி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடத்தையும், தாம்பரம் மாநகராட்சி 2-ம் இடத்தையும் பிடித்தது.

    நகராட்சிகளை பொறுத்தமட்டில் ராமேசுவரம் முதலிடத்தையும், திருத்துறைப்பூண்டி 2-வது இடத்தையும், மன்னார்குடி 3-வது இடத்தையும் பிடித்தது.

    பேரூராட்சியை பொறுத்தமட்டில் விக்கிரவாண்டி முதலிடத்தையும், ஆலங்குடி 2-வது இடத்தையும், வீரக்கால்புதூர் 3-வது இடத்தையும் பெற்றது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களில் 9-வது மண்டலம் முதலிடத்தையும், 5-வது மண்டலம் 2-வது இடத்தையும் பிடித்தது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை மாநகராட்சிகளின் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களிடம் வழங்க உள்ளார்.

    • தமிழகத்தில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    • 6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்க திட்டமிட்டு உள்ள நிலையில் 6 நாட்களில் மட்டும் இந்த அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

    சென்னை:

    நாட்டின் 76-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதனை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை தொடங்கியது. கடந்த 7-ந் தேதியில் இருந்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை நடந்து வருகிறது.

    ஒரு கொடியின் விலை ரூ.25. நேரிலும், தபால் மூலமாகவும் பெறலாம். ஆன்லைன் வழியாக புக் செய்தால் வீட்டிற்கே தேசியக் கொடி வந்து சேரும். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மொத்தமாக தேசிய கொடியை கேட்டாலும் நேரில் சென்று வழங்கவும் தபால் துறை தயாராக உள்ளது.

    தமிழகத்தில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சென்னை மண்டலத்தில் இதுவரையில் 80 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்க திட்டமிட்டு உள்ள நிலையில் 6 நாட்களில் மட்டும் இந்த அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

    இது குறித்து தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தேசிய கொடியை வாங்க வேண்டும் என்பதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை)யும் தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெறும்.

    தனிநபராகவோ, கூட்டமாகவோ, தொழில் நிறுவனமோ அல்லது ஒன்று, இரண்டு தேசியக் கொடி கேட்டாலோ வழங்கப்படும் என்றார்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன.
    • சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    நாட்டின் 76-வது சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியேற்றி நாட்டு மக்களின் இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணிகள் மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பனியன் நகரமான திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தற்போது 76வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் தேசிய கொடிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சில நிறுவனங்களில் மட்டும் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகின்றன.

    வட மாநிலங்களில் இருந்து காகிதம் மற்றும் பாலியஸ்டர் துணி கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இருப்பினும் காட்டன் துணி கொடிகள் உற்பத்தி திருப்பூர்-கோவையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் வரப்பெற்று திருப்பூர், கோவை நிறுவனங்களில் உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. ஆர்டர்கள் கொடுத்தவர்களுக்கு தேசிய கொடிகளை தயாரித்து கொடுக்க தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஆர்டர்களின் பேரில் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகள் உடனுக்குடன் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தேசிய கொடிகள் இன்னும் 2 நாட்களில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுவரை 20 லட்சம் கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

    திருப்பூர் பழைய பேருந்துநிலையத்தை சேர்ந்த கொடி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் 30 ஆண்டு காலமாக கொடி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். கட்சிக்கொடி, தேசியக்கொடி, பதாகைகள், பேட்ஜ், தொப்பி, டீசர்ட் மற்றும் சின்னம் பொறித்த மப்ளர் உள்ளிட்டவைகளை தயாரித்து வழங்குகிறோம். கடந்த ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதனால் கடந்த ஆண்டு தேசியக்கொடிக்கான ஆர்டர்கள் பல மடங்கு வந்தது. எப்போதும் பிரதானமாக நாங்கள் இதனை செய்வோம். ஆனால் எங்களுக்கு பல லட்சம் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுதான் ஆர்டர்கள் வந்தன. இதனால் பின்னலாடை நிறுவனங்களும் கொடி உற்பத்தியில் ஈடுபட்டன. அனைவரும் தன்னெழுச்சியாக தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர் வழங்கினர். அது போல் இந்த ஆண்டும் சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் இந்த ஆண்டும் ஆர்டர்கள் வந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட குறைவுதான். பெரும்பாலான பொதுமக்கள் கடந்த ஆண்டே தேசிய கொடிகளை வாங்கினர். 3 நாட்கள் ஏற்றிய பிறகு அதனை அவிழ்த்து பத்திரமாக வீட்டில் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பலர் 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்றி விட்டு அதனை அவிழ்த்து வீட்டில் பத்திரமாக வைத்தனர்.

    சிலர் வீடுகளில் கழற்றாமல் அப்படியே விட்டனர். இதனால் அவர்கள் தேசிய கொடிகளை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது போல் தேசிய கொடிகள் அழுக்கு படிந்து இருக்கக்கூடாது என்பதால் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் இருந்து புதிய கொடிகளுக்கான ஆர்டர்கள் வந்துள்ளன. அவற்றை தயாரித்து கொடுத்து வருகிறோம். 16க்கு 20, 12க்கு 18, 18க்கு 27 இன்ச் நீளம் ஆகிய அளவுகளில் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகிறது. அரசு விதிமுறையின்படி ஒவ்வொருவர் விரும்பும் அளவுகளில் ரூ.20 முதல் ரூ.200 வரை கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறும்போது, கொரோனா தொற்றின்போது, முகக்கவசம் உள்ளிட்டவை செய்வதற்கு ஆர்டர் குவிந்தது போல் கடந்த ஆண்டு 75-வது சுதந்திர தினம் மூலம் தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் குவிந்தன. பல பின்னலாடை நிறுவனங்கள் 30 லட்சம் வரை தேசியகொடிகள் தயாரிக்க ஆர்டர் பெற்று தயாரித்து அனுப்பப்பட்டன.

    பெரும்பாலான பொதுமக்கள் கடந்த ஆண்டே தேசிய கொடிகள் வாங்கி விட்டதால் இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்துள்ளன. இதனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன என்றார். பனியன் நிறுவனங்கள் மட்டுமின்றி தபால் நிலையங்கள், மகளிர் சுய உதவிக்குழுவின் விற்பனை மையங்கள் மற்றும் கடைகள், சாலையோர கடைகள் என பல இடங்களிலும் தேசியக்கொடி விற்பனை நடந்து வருவதால் திருப்பூரில் தேசிய கொடிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    • செங்கோட்டை, ராஜ்காட், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
    • மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும், தடையை மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி போலீசார் அறிவித்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    நாட்டின் சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சுதந்திர அமுதப்பெருவிழா கொண்டாடும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றுகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதையொட்டி செங்கோட்டை, ராஜ்காட், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும், தடையை மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி போலீசார் அறிவித்து உள்ளனர்.

    • சுதந்திர தின விழா முடியும் வரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 16-ந்தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ளன.

    இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் சோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் இரவு ரோந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வாகன சோதனையின் போது சந்தேக நபர்கள் சுற்றி திரிந்தால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    திருவல்லிக்கேணி, பெரியமேடு, எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான லாட்ஜூகளில் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய திடீர் சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திர தின விழா முடியும் வரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    வணிக வளாகங்கள், கோவில்கள் ஆகியவற்றில் பாதுகாப்பை பலப்படுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 16-ந்தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் வித்தியாசமாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.
    • மூங்கில், பேட்டரி செல், தங்கம், மெழுகு, மாத்திரை மற்றும் மாம்பழம் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்து உள்ளேன்.

    குனியமுத்தூர்:

    சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி தற்போது சுதந்திர தின நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கி உள்ளன.

    இதன் ஒருபகுதியாக கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் சீதாப்பழத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட 20 தலைவர்களின் ஓவியங்களை வரைந்து அசத்தி உள்ளார்.

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ராஜா.

    ஓவியரான இவர் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார். தற்போது சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை ஓவியமாக வரைய விரும்பினார்.

    அதுவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என யோசித்த அவர், சீதாப்பழத்தில் 20 தலைவர்களின் ஓவியத்தை வரைந்தால் என்ன என்ற யோசனை அவருக்கு தோன்றியது.

    இதையடுத்து அவர் சீதாப்பழங்களை வாங்கி வந்தார். அதில் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களை கொண்டு தலைவர்களின் படம் மற்றும் தேசியை கொடியை வரைந்தார்.

    ஒவ்வொரு சீதாப்பழத்திலும் ஒவ்வொரு தலைவர்களின் படங்களை வரைந்தார். அதன்படி சீத்தாப்பழத்தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணிய பாரதியார், விவேகானந்தர், வீரபாண்டி கட்டப்பொம்மன், வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மருது பாண்டியர், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, பகத்சிங், ராஜேந்திரபிரசாத், சர்தார் வல்லபாய்படேல், பாலகங்காதர திலகர், அப்துல்கலாம், சந்திரசேகர ஆசாத், காமராஜர், ராதாகிருஷ்ணன், லாலா லஜபதிராய், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்துள்ளார்.

    இதுகுறித்து ஓவியர் ராஜா கூறியதாவது:-

    சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் வித்தியாசமாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.

    இதற்கு முன்பாக மூங்கில், பேட்டரி செல், தங்கம், மெழுகு, மாத்திரை மற்றும் மாம்பழம் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்து உள்ளேன்.

    அந்த வகையில் நடப்பாண்டும் இளைஞர்கள் மத்தியில் தேசத்தலைவர்கள் மற்றும் தேசப்பற்றை நினைவுகூரும் வகையில் சீத்தாப்பழத்தில் தேசியக்கொடிகளுடன் 20 தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சிவகங்கையில் சுதந்திர தினவிழா ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில், சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு, சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சுதந்திர தினவிழாவை காண்பதற்காக வரும் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர் வசதி, போக்கு வரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டடார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பாதேவி உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×