search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷேக் ஹசீனா"

    • போட்டித் தன்மையை அதிகளவு பாதிக்காது என வல்லுநர்கள் தெரிவித்தனர்.
    • மற்ற நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன.

    பிரபல எப்எம்சிஜி நிறுவனமான மரிகோ பங்குகள் 4 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன. சஃபோலா மற்றும் பாராஷூட் என முன்னணி பிராண்டுகளின் உரிமையாளராக மரிகோ இருப்பது குறிப்பிடத்தக்கது. வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக இந்நிறுவன பங்குகள் சரிவடைந்துள்ளன.

    மரிகோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 11 முதல் 12 சதவீதம் வங்காளதேசத்தில் இருந்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வங்காளதேசத்தில் வியாபாரம் செய்து வரும் மரிகோ தற்போது விற்பனையில் மந்த நிலையை சந்திக்கும். ஆனாலும், இது அந்நிறுவன போட்டித் தன்மையை அதிகளவு பாதிக்காது என சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

    முன்னதாக ஜூன் மாதம் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட மரிகோ, ஒட்டுமொத்த சர்வதேச வியாபாரத்தில் வங்காளதேச விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவதாக தெரிவித்தது. மரிகோவின் சர்வதேச வியாபாரத்தில் வங்காளதேசத்தின் பங்குகள் 44 சதவீதம் வரை சரிந்துள்ளது.

    "2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்காளதேச நிலைமை கவலையில் ஆழ்த்துகிறது. மற்ற எப்எம்சிஜி நிறுவனங்கள் வங்காளத போராட்டங்களால் இரண்டாம் காலாண்டு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளன. வங்காளதேசத்தில் அதிகளவு எப்எம்சிஜி பொருட்களை விற்கும் நிறுவனமாக மரிகோ விளங்குகிறது. மற்ற நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன," என்று முதலீட்டு நிறுவனமான நுவாமாவின் அப்னீஷ் ராய் தெரிவித்தார்.

    மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதால் வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது அந்நாட்டில் அமைய உள்ள இடைக்கால அரசாங்கத்தை முகமது யூனஸ் நடத்த இருக்கிறார்.

    • யூனுஸ் 1983-ல் கிராமீன் வங்கியை நிறுவி, தொழில்முனைவோருக்கு சிறு கடன்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.
    • யூனுஸ் 2007-ல் ஒரு ராணுவ ஆதரவுடைய ஆட்சி நடக்கும்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

    வங்காளதேசத்தில் அமைய இருக்கும் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் ஏற்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை "நாட்டின் 2-ம் விடுதலை நாள்" என்று தெரிவித்துள்ள முகமது யூனுஸ் தற்போது, ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரான்ஸ் நாட்டில் உள்ளார்.

    யார் இந்த முகமது யூனுஸ் என்பதை இங்கே காண்போம்.

    83 வயதான முகமது யூனுஸ், ஷேக் ஹசீனா அரசின் தீவிர எதிர்ப்பாளர் ஆவார்.

    யூனுஸ் 1983-ல் கிராமீன் வங்கியை நிறுவி, தொழில்முனைவோருக்கு சிறு கடன்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.

    மக்களை வறுமையில் இருந்து விடுவிப்பதில் அவரது கிராமீன் வங்கி வெற்றி பெற்றதுடன் மற்ற நாடுகளிலும் இதேபோன்ற முயற்சிகளுக்கு வழி வகுத்தது.

    ஏழை மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சிறுகடன்களை வழங்குவதில் முன்னோடியாக இருந்த யூனுசுக்கு 2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    யூனுஸ் 2007-ல் ஒரு ராணுவ ஆதரவுடைய ஆட்சி நடக்கும்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்தார். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

    இந்த சூழலில் 2008-ல் ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு, முகமது யூனுசுக்கு எதிராக பல்வேறு விசாரணைகள் தொடங்கின. இதனால் அவர் ஷேக் ஹசீனா அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். 2011-ல் யூனுஸ் கிராமீன் வங்கி இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், மோசடி வழக்கில் யூனுஸ் மீது வங்காளதேசத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டு குற்றச்சாட்டு பதிவு செய்தது. எனினும் யூனுஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளாத நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    • ஹசீனா, டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக உருவெடுத்திருந்தார்.
    • எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹசீனா பலமுறை கைது செய்யப்பட்டார்.

    நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் அந்த நாட்டை வன்முறை தேசமாக மாற்றியது. அதன் எதிரொலியாக வங்காளதேசத்தின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்குரிய ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    அவர், சிறிது நாட்கள் இங்கேயே தங்கி இருந்து பிறகு இங்கிலாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைவது என்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் இந்தியாவில் 6 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்துள்ளார்.

    அதன் பின்னணியையும், ஷேக் ஹசீனா கடந்து வந்த பாதையையும் இங்கே காணலாம்.

    1947-ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவரான ஷேக் ஹசீனாவின் ரத்தத்திலேயே அரசியல் ஊறியுள்ளது. ஏனெனில் 'வங்கதேசத்தின் தந்தை' என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் மகள் தான் இந்த ஷேக் ஹசீனா.

    1971-ல் பாகிஸ்தானுடனான போருக்கு பிறகு சுதந்திர நாடாக உருவெடுத்த வங்காளதேசத்தில் முதல் அதிபராக பதவி வகித்து வங்கதேசத்தை வழிநடத்தினார் ஷேக் முஜிபுர் ரகுமான்.

    அந்த சமயத்தில் ஹசீனா, டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக உருவெடுத்திருந்தார். இளம் வயதிலேயே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தபோதும் தேர்தல் அரசியலில் அவர் இறங்கவில்லை.

    அதிபராக பதவி ஏற்ற 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்டு 15, 1975-ல் ஷேக் முஜிபுர் ரகுமானின் ஆட்சியை கவிழ்த்து, அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம். அதோடு ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

    அந்த சமயத்தில் ஹசீனா தனது கணவரை பார்ப்பதற்காக குழந்தைகளுடன் ஜெர்மனி சென்றிருந்தார். அவருடன் அவரது இளைய சகோதரியும் சென்றிருந்தார். இதனால் அவர்கள் மட்டுமே குடும்பத்தில் உயிர் பிழைத்திருந்தனர்.

    அவர்கள் வங்காளதேசத்துக்கு திரும்ப முடியாத சூழல் நிலவிய நிலையில், இந்தியாவில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். அதன்படி ஹசீனா தனது கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் டெல்லி வந்து, 6 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்து வந்தார்.

    பின்னர் 1981-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு திரும்பி அவரது தந்தையின் அவாமி லீக் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றார்.

    நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை கொண்டு வர, ராணுவ ஆட்சியை எதிர்த்து பிற அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்து போராட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றார்.

    அதன் பலனாக 1996-ல் முதன் முறையாக வங்காளதேசத்தின் பிரதமர் ஆனார். இந்தியாவுடன் நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் மற்றும் நாட்டின் தென்கிழக்கில் உள்ள பழங்குடி கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் போன்றவற்றுக்காக போற்றப்பட்டார்.

    ஹசீனாவின் ஆட்சியில் வங்காளதேசம் வளர்ச்சி பாதையில் சென்றாலும், அவரது அரசு மீது ஊழல் புகார்கள் எழுந்ததுடன், இந்தியாவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதாக விமர்சனங்களும் எழுந்தன.

    இதனால் 2001-ல், கூட்டணியில் இருந்து பின் போட்டியாளராக மாறிய வங்கதேச தேசியவாத கட்சியின் பேகம் கலீதா ஜியாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார்.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹசீனா பலமுறை கைது செய்யப்பட்டார். மேலும் அவரை படுகொலை செய்ய முயற்சிகள் நடந்தன. குறிப்பாக 2004-ல் நடந்த கொலை முயற்சியின்போது அவரது காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. அதோடு, ஹசீனாவை வங்காளதேசத்தை விட்டு கட்டாயமாக வெளியேற்றவும் பலமுறை முயற்சிக்கப்பட்டது. எனினும் அதில் இருந்து தப்பினார்.

    பின்னர் 2009-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஹசீனா மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தார். ஹசீனா ஆட்சியின் கீழ் வங்காளதேசம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டது. இப்போது வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது வங்காளதேசம்.

    கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வங்காளதேசத்தின் தனிநபர் வருமானம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் வங்காளதேசத்தில் 2.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு வங்கதேசத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்தது, பணவீக்கம் வானளவுக்கு உயர்ந்தது, அன்னிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    இதற்கு ஹசீனா அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று விமர்சகர்கள் குற்றம்சாட்டினர். வங்காளதேசத்தின் முந்தைய பொருளாதார வெற்றி, ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே உதவியது என்று கூறப்பட்டது. இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஹசீனா மற்றும் அவரது அரசு மறுத்தது.

    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களோடு சேர்த்து வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். ஒரு காலத்தில் பிற கட்சிகளோடு இணைந்து ஜனநாயகத்திற்காக போராடிய தலைவரின் செயல்பாட்டில் பெரும் திருப்புமுனையாக இது பார்க்கப்படுகிறது.

    • ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
    • ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர்.

    வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனையடுத்து, ஷேக் ஹசீனா மாளிக்கைக்குள் சென்ற போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரத்திற்கு தீ வைத்தனர். மாளிகையில் உள்ள சமையல் அறைக்கு சென்று சமைத்து வைத்த உணவுகளை ருசி பார்த்தனர். அங்கிருந்து படுக்கையில் படுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர் ஷேக் ஹசீனா வரைந்து வைத்திருந்த போட்டோக்கள், அவருடைய சேலைகள் கண்ணில் பட்டதையெல்லாம் கொள்ளைடியத்தனர்.

    பெரும்பாலான போராட்டக்காரர்கள் மாளிகை வளாகத்தில் வளர்க்கப்பட்ட வாத்து, முயல், கோழி போன்றவற்றை பிடித்துச் சென்றனர்.

    ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேசத்தின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் உடைக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையின் தலை மீது ஏறி போராட்டக்காரர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு இறுதியில் இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

    • போராட்டக்காரர்கள் அரசு சொத்துகளை தீவைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.
    • அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரின் சர்வதேச ஹோட்டலை தீ வைத்து எரித்த வீடியோ வெளியாகியுள்ளது.

    வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திடீரென ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தை ஷேக் ஹசீனா பக்கம் திருப்பினர்.

    போராட்டம் வன்முறை ஆக வெடித்து கட்டுக்கடங்காத வகையில் சென்ற நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியுள்ளார்.

    இடைக்கால அரசு அமைப்பதாக வங்காளதேசம் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடி வருகின்றனர். பல இடங்களில் அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு தீவைத்துள்ளனர்.

    அந்த வகையில் ஜோஷோர் மாவட்டத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவருக்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீவைத்து கொளுத்தினர். இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்குள் இருந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. சபீர் சர்வதேச ஹோட்டல் அவாமி லீக் கட்சியின் பொது செயலாளர் ஷஹின் சக்லாதாருக்கு சொந்தமானதாகும்.

    போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்களை சூறையாடுவதுடன், தீ வைத்து சேதப்படுத்தியும் வருகிறார்கள்.

    • வங்காளதேச வன்முறைக்கு பின்னால் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக தகவல்.
    • ஷேக் ஹசீனாவுக்கு இங்கிலாந்து அரசு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக முடிவு ஏதும் எடுக்கவில்லை.

    வங்காளதேசம் நாட்டில் வேலைவாய்ப்பில் தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்த பிறகு, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

    இதனால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். வன்முறையில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சீனாவின் பாதுகாப்புத்துறை ஆகியவை வங்காளதேசத்தில் மாணவர் அமைப்புகளை தூண்டிவிட்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளது. பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் வங்காளதேசத்தின் தேசியவாத கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே இங்கிலாந்திடம் ஷேக் ஹசீனா அடைக்கலம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம் நிலவி வரும் வன்முறை தொடர்பாக ஐ.நா. தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் "இதுவரை இல்லாத வன்முறை மற்றும் உயிரழப்புகள் வங்காளதேசத்தில் இரண்டு வாரங்களில் நடைபெற்றுள்ளன. ராணுவத் தளபதியால் ஒரு இடைக்கால அரசு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தை நோக்கிய நடவடிக்கையை பார்க்க நாங்கள் விரும்புகிறோம்.

    வன்முறைறை முடிவுக்கு கொண்டு வர, மீண்டும் அமைதி திரும்ப, மேலும் உயிரிழப்பை தவிர்க்க அனைத்து தரப்பிலும் இருந்து ஒன்றிணைந்து பணியாற்றுவது அவசியம்.

    இங்கிலாந்து- வங்காளதேசம் மக்களிடையே ஆழமான தொடர்பு உள்ளது. காமன்வெல்த் மதிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா லண்டனிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் லண்டம் இது தொடர்பாக அதிகார்ப்பூர்வ பதில் ஏதும் அளிக்கவில்லை.

    ஷேக் ஹசீனாவின் தங்கை மகள் (niece) துலிப் சித்திக் (இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ள ஷேக் ரெஹானாவின் மகள்) ஹம்ப்ஸ்டீட் என்ற வடக்கு லண்டனில் இருந்து பகுதியில் இருந்து தொழிலாளர் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கருவூல துறையின் ஜூனியர் மந்திரியாக உள்ளார். இதனால் ஷேக் ஹசீனா கடைசியாக லண்டன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டார்.
    • ஜூலை 1 முதல் ஆகஸ்டு 5 வரை கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.

    வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.

    இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், வங்காளதேச பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது.

    மேலும், ஜூலை 1 முதல் ஆகஸ்டு 5 வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அதிபர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    • வங்காளதேச போராட்டத்தில் வெளிநாடு சக்திகளின் தலையீடு இருப்பதாக தகவல்.
    • குறிப்பாக பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக தகவல் வெளியானது குறித்து ராகுல் காந்தி கேள்வி.

    இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்துள்ளார். ராணுவம் இடைக்கால அரசு அமைக்க இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

    வங்காளதேச தேசத்தில் அசாதாரண நிலை நிலவி வரும் நிலையில் இந்திய அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தில், போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த சில வாரங்களாக டாக்காவில் நடந்த செயல்களில் வெளிநாட்டு சக்திகளின், குறிப்பாக பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக செய்திகள் வந்ததாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மத்திய அரசு "இந்த கோணத்தில் விசாரித்து வருகிறோம். வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வங்காளதேசத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் பாகிஸ்தான் டிப்ளோமேட்டிக் அதிகாரி ஒருவர் தனது சமூக ஊடக டிஸ்பிளே படத்தை தொடர்ந்து மாற்றி வந்ததாக செய்திகள் வெளியானது. இது ஏதாவது பெரிய விஷயத்தை சுட்டிக் காட்டுகிறதா? என்று ஆய்வு செய்து வருகிறோம்" என பதில் அளித்தது.

    மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஜே.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசின் கே.சி. வேணு கோபால், தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு, தேசியவாத காங்கிரசை சேர்ந்த (சரத்பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    • எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லைக் காவல் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வங்காளதேசத்தில் 19,000 இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    வங்காளதேச விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று மதியம் அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருவதற்கு மிகக் குறுகியகால ஒப்புதல் ஒன்றை கோரினார்.

    அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லைக் காவல் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    வங்காளதேசத்தின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    வங்காளதேசத்தில் 19,000 இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 9,000 மாணவர்கள் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியா திரும்பியுள்ளனர்.

    ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர். பாதுகாப்பு அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

    வங்காளதேச அதிகாரிகளிடமிருந்து விமான அனுமதிக்கான கோரிக்கையையும் நாங்கள் பெற்றோம். அவர் நேற்று மாலை டெல்லி வந்தார் என தெரிவித்தார்.

    • பேராசிரியரான முகமது யூனுஸ் 2006ல் உலக புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.
    • முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

    வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இதனையடுத்து, வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக நோபர் பரிசு வென்ற முகமது யூனுஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்காள தேசத்தின் சிட்டகாங் பல்கலைக்கழக (Chittagong University) பேராசிரியரான முகமது யூனுஸ் (Muhammad Yunus) 2006ல் உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.

    1976ல் வறுமையில் வாழ்பவர்களிடம் ஈடாக எதையும் கோராமல் சிறு தொகைகளை கடனாக வழங்கும் கிராமின் வங்கி (Grameen Bank) எனும் பொருளாதார சித்தாந்தத்திற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக அவருக்கு இந்தாண்டு தொடக்கத்தில் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.

    வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • டாக்காவில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் உள்ளார்.
    • லண்டனில் தற்காலிகமாக குடியேற அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.

    லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார்.

    ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது.

    இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மெர் பிரதமராக உள்ளார். இவரது தலைமையிலான இங்கிலாந்து "அடைக்கலம் கேட்கும் தனிநபர்கள் அவர்கள் சென்றடையும் முதல் பாதுகாப்பான நாட்டில் அதை செய்ய வேண்டும். தேவைப்படும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி இங்கிலாந்து பெருமைக்குரிய சாதனைப் படைத்துள்ளது. எனினும் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் கேட்கும் அல்லது இடைக்கால தஞ்சம் அடைவதற்கான வசதி இல்லை" எனத் தெரிவித்துள்ளது.

    இருந்த போதிலும் முறையாக அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ஜோதிடரின் கணிப்பு தற்போது நடந்துள்ளது.
    • கடந்த ஆண்டு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    வங்கதேசத்தில் ஏற்பட்டு உள்நாட்டு கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகி ஷேக் ஹசீனா, அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். உலகத்தையை உற்று நோக்க வைத்துள்ள இச்சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

    அதாவது, பிரபல ஜோதிடரான பிரசாந்த் கினி, ஷேக் ஹசீனாவுக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே கணித்து இருந்தார். அந்த வகையில், ஜோதிடரின் கணிப்பு தற்போது நடந்துள்ளது. இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே, ஷேக் ஹசீனாவை மே மற்றும் ஆகஸ்ட் 2024 மாதங்களுக்கிடையே கவனமாக இருக்குமாறு எச்சரித்து இருந்தார்.

    இதுதொடர்பாக அவர், கடந்த ஆண்டு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், "ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா சிக்கலில் இருப்பார். மே, ஜூன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் 2024-இல் அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்படலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது அதே பதிவை மீண்டும் டேக் செய்த கினி, "ஆகஸ்ட் 2024-இல் ஷேக் ஹசீனாவுக்கு பிரச்சனை ஏற்படும் என்று கணித்திருந்தேன்," என்று எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

    ×