search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசி தரூர்"

    • ராகுல் காந்தி இன்று பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் தொடங்க உள்ளார்.
    • குலாம்நபி ஆசாத் என் மதிப்புக்குரிய மூத்த தலைவர்.

    திருவனந்தபுரம் :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் 'பாரத் ஜோடோ யாத்ரா' (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் நடைபயணம் தொடங்க உள்ளார்.

    இந்த தருணத்தில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவரும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவருமான மூத்த தலைவர் சசி தரூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்வதை விட காங்கிரஸ் ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று குலாம்நபி ஆசாத் போன்றோர் விமர்சித்துள்ளார்களே, இதில் உங்கள் கருத்து என்ன?

    பதில்:- குலாம்நபி ஆசாத் என் மதிப்புக்குரிய மூத்த தலைவர். அவா் குறிப்பிட்ட கருத்து பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

    ஆனால் இந்திய ஒற்றுமை பயணம் இந்தியாவில் ஒற்றுமையை ஏற்படுத்தும், காங்கிரசில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும். விழுமியங்கள், லட்சியங்கள் மற்றும் மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாட்டை ஒருங்கிணைக்கக்கூடிய கட்சி காங்கிரஸ்தான்.

    கேள்வி:- காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவது தொடர்பான வாய்ப்பு பற்றி?

    பதில்:- நான் தேர்தல் நடத்தப்படுவதைத்தான் வரவேற்றேன். இது கட்சிக்கு நல்லது என்று நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ள வேறு எந்த கட்சி அதன் தலைவர் பதவிக்கு வெளிப்படையான தேர்தல் நடத்துகிறது?

    ஜனநாயக கொள்கையின் இந்த பொதுவான அறிக்கை, நான் போட்டியிடுவதற்கான வாய்ப்பை நாடு முழுவதும் உள்ள ஏராளமானோர் உடனடியாக வரவேற்க வழிவகுத்தது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளேன்.

    கேள்வி:- பா.ஜ.க. தலைவர் அத்வானி 1990-களின் முற்பகுதியில் மேற்கொண்ட ரத யாத்திரை போன்ற சமூக அரசியல் தாக்கத்தை இந்த இந்திய ஒற்றுமை பயணம் ஏற்படுத்துமா?

    பதில்:- அது சாத்தியம்தான். ஆனால் பயணம் தொடரும்போதுதான் அதன் தாக்கத்தை அளவிட முடியும். காங்கிரசின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு இது அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன்.

    கேள்வி:- இந்த நடைபயணம் கட்சிக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா?

    பதில்:- நிச்சயமாக நான் அதை நம்புகிறேன்.

    மற்ற கட்சிகள், அரசியல் சார்பில்லாத தனிநபர்கள், சிவில் சமூக குழுக்கள் உள்பட அனைவருடனும் நாங்கள் பணியாற்றும் வேளையில், ஒரு அரசியல் கட்சியால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பெரிய நடவடிக்கையும் சந்தேகத்துக்கு இடமின்றி, ஒரு அரசியல் செய்தியைக் கொண்டுள்ளது. அந்த செய்தி, இந்தியாவை ஒருங்கிணைக்க இயலக்கூடிய கட்சி எங்கள் கட்சி என்பதுதான். இது பொதுமக்களால் ஈர்க்கப்படுகிறபோது, அது கட்சிக்கு மறுமலர்ச்சியைத் தொடங்கி வைக்கும்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    • காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
    • காந்தி குடும்பத்தை சாராத சிலரும் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகி இருந்தன.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி நடக்கிறது. இதில் ராகுல் காந்தியை போட்டியிட வைப்பதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேநேரம் காந்தி குடும்பத்தை சாராத சிலரும் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகி இருந்தன. இதில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோரின் பெயர்கள் வலுவாக அடிபடுகின்றன.

    எனினும் இந்த தகவலை கடந்த வாரம் புறந்தள்ளிய அசோக் கெலாட், ராகுல் காந்தியை கட்சித்தலைமை ஏற்பதற்கு கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம் என தெரிவித்தார். ஆனால் சசிதரூரோ, தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இது குறித்து முடிவு செய்வேன் என அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அசோக் கெலாட்டை, சசிதரூர் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம், தலைவர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என கருதப்படும் அசோக் கெலாட்டும், சசிதரூரும் சந்தித்து பேசியிருக்கும் விவகாரம் காங்கிரசார் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.
    • அக்டோபர் 17-ந்தேதி தலைவர் தேர்தல் நடக்க உள்ளது.

    புதுடெல்லி :

    நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் அடுத்த மாதம் 17-ந்தேதி தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிக்கை வரும் 22-ந்தேதி வெளியாகிறது. 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற அக்டோபர் மாதம் 8-ந்தேதி கடைசி நாள். போட்டி இருந்தால் அக்டோபர் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 19-ந்தேதி முடிவு வெளியாகும்.

    இந்த தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற குரல் அந்தக் கட்சிக்குள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    இதே போன்ற கோரிக்கையை முன் வைத்து அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோயும் மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 23 தலைவர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரமும் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    இவர்களுக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி. மாணிக்கம் தாகூர், "கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது. வெளிப்படையாக தேர்தல் நடத்துவது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்" என கூறியது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது மறுமலர்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டும்.
    • ஒட்டு மொத்த கட்சியும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி  நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும், இது வெளிப்படையான தேர்தல் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்திருந்தார்.

    இந்த தேர்தலில் போட்டியிட அக்கட்சியை சேர்ந்த மூத்த எம்.பி. சசிதரூர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக மலையாள நாளிதழ் மாத்ருபூமியில் அவர் எழுதியிருந்த கட்டுரை புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது.

    அந்த கட்டுரையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு முன்பாக, அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களை நடத்தியிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்கிலாந்தின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தேர்தலை, காங்கிரஸ் தலைவர் தேர்தலுடன் அவர் ஒப்பீடு செய்துள்ளார்.

    கடந்த 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் தெரசா மேக்கு பதிலாக ஒரு டஜன் வேட்பாளர்கள் போட்டியிட்டதை உலகம் கண்டது என்றும், அதில் போரிஸ் ஜான்சன் முதலிடம் பிடித்தார் என்றும் சசிதரூர் கூறியுள்ளார். இது போன்ற சூழல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் உருவானால் அது கட்சியின் மீது தேசிய வாக்காளர்கள் இடையே ஆர்வத்தை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்றும், புதிய தலைவரை தேர்வு செய்வது கட்சி மறுமலர்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்றும் சசிதரூர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த கட்சியும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அதனால் மிக அவசரமாக நிரப்பப்பட வேண்டிய பதவி என்பது காங்கிரஸ் தலைவர் பதவி என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இதனிடையே, செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் தேர்தல் தொடர்பான தமது கட்டுரையை ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என்றும் கூறியுள்ளார்.

    • சசி தரூர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் கடும் போட்டி உருவாகும் என்று கூறப்படுகிறது.
    • சசி தரூர் போட்டியிட்டால் சோனியா நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவாரா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று சோனியா தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து செப்டம்பர் 22-ந்தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. 24-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 30-ந்தேதி வரை மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படும் பட்சத்தில் 17-ந்தேதி டெல்லியில் ஓட்டுப்பதிவு நடைபெறும். சுமார் 9 ஆயிரம் பேர் வாக்களிப்பார்கள். 19-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவு வெளியிடப்படும்.

    தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியை ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. மல்லிகார்ஜூன கார்கே, அசோக் கெலாட் உள்பட மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை தேர்தலில் போட்டியிட செய்ய தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று ராகுல் காந்தி பிடிவாதமாக கூறி உள்ளார். பிரியங்காவையும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அவர் தடை விதித்துள்ளார். தங்கள் குடும்பத்தை சேராத ஒருவரை தலைவர் பதவியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராகுல் கூறி வருகிறார்.

    கடைசி வரை ராகுல் தனது மனதை மாற்றிக் கொள்ளாவிட்டால், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை தலைவர் தேர்தலில் களம் இறக்க சோனியா திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சோனியா, ராகுலை கடுமையாக எதிர்க்கும் ஜி-23 தலைவர்கள் தங்களது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர். ஜி-23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஜிதின் பிரசாத் ஆகிய 3 பேரும் காங்கிரசில் இருந்து விலகி விட்டனர். எனவே எதிர்ப்பாளர்களில் 20 மூத்த தலைவர்கள் மட்டுமே உள்ளனர்.

    அவர்கள் காங்கிரஸ் கட்சியை சீரமைக்க தேர்தல் நடத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளனர். தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடும் பட்சத்தில் எதிர்த்து ஜி-23 தலைவர்களின் சார்பில் ஒருவரை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். சசி தரூரை களம் இறக்க எதிர்ப்பாளர்கள் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

    கேரள நாளிதழ் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி சசிதரூர் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் தலைவர் தேர்தலில் போட்டி உறுதி என்று சூசகமாக கூறியுள்ளார். இதற்கிடையே அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் சோனியா, ராகுல் மற்றும் அவர்களது ஆதரவு தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சசி தரூர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் கடும் போட்டி உருவாகும் என்று கூறப்படுகிறது. அவர் போட்டியிட்டால் சோனியா நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவாரா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடந்தபோது சீதாராம் கேசரி, ராஜேஷ் பைலட், சரத் பவார் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். அப்போது சோனியா நிறுத்திய சீதாராம் கேசரி மொத்தம் உள்ள 7,460 வாக்குகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேஷ் பைலட்டும், சரத் பவாரும் 1,736 வாக்குகளே பெற்றனர். கடந்த 2000-ம் ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அப்போது சோனியாவுக்கும் ஜிதேந்திர பிரசாத்துக்கும் போட்டி ஏற்பட்டது.

    ஜிதேந்திர பிரசாத் வெறும் 94 வாக்குகள்தான் பெற்றார். சுமார் 7,500 வாக்குகள் பெற்று சோனியா வெற்றிபெற்றார். அதற்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

    ×