என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எ.வ.வேலு"

    • பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் இட வசதி உள்ளது.
    • தென்காசி வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம், செங்கோட்டை தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.ரஹீம் கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரில் உள்ள பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் இட வசதி உள்ளது. இங்கு உள்ள விருந்தினர் ஆய்வு மாளிகை கட்டிடம் மிகவும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பது எங்களது பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மேலும் ஆய்வு மாளிகை கட்டிடம் அமையும் பட்சத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே புதிய கட்டிடம் அமைவதற்கு தாங்கள் ஆவணம் செய்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.
    • வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க” என 3 திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

    நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று 2-வது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது.

    தமிழக எம்.பி.க்கள் வரிசையாக இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக எம்.பிக்கள் பலரும் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டதோடு, வாழ்க உதயநிதி என்றும் கோஷமிட்டனர்.

    அதாவது இன்று பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.

    கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்க பாண்டியன், கலாநிதி வீராசாமி, தருமபுரி எம்.பி ஆ மணி, பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன் ஆகியோரைத் தவிர பிற திமுக எம்.பிக்கள் அமைச்சர் உதயநிதியின் பெயரைக் குறிப்பிட்டனர்.

    மேலும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி மலையரசன், ஆரணி எம்.பி தரணிவேந்தன், திருவண்ணாமலை எம்.பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, "வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க" என கோஷமிட்டனர்.

    கடைசியாக பதவியேற்ற தென்காசி திமுக எம்.பி ராணி, வாழ்க கனிமொழி, வாழ்க அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் என கோஷமிட்டார்.

    கடந்த காலங்களில் அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 'அம்மா வாழ்க' என கோஷமிட்டதற்கு திமுக தலைவர்கள் விமர்சனம் செய்துள்ள நிலையில், இப்போது திமுக எம்.பிக்கள் பலரும் உதயநிதி வாழ்க என கோஷமிடுவது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    திமுகவின் முக்கிய எம்.பி.யான தயாநிதி மாறன் கூட உதயநிதி வாழ்க என கோஷமிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    • பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
    • நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    சென்னை:

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்களும், பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் பெருந்திட்ட வரைவின் கீழ் ரூ.36.41 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், 2024 - 2025-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்ட மன்ற மானியக் கோரிக்கையின்போது, "திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் கிரிவலப் பாதையில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.23 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்" எனவும், "கோவிலில் பக்தர்களின் வசதிக்காக புதியதாக பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அரசுக்கு சொந்தமாக 15 இடங்களில் கழிவறைகள் மற்றும் குளியலறைகள் ஏற்படுத்துதல் மற்றும் 2 இடங்களில் 7 பக்தர்கள் இளைப்பாறும் கூடங்கள் அமைத்தல், ரூ.50 கோடி மதிப்பீட்டில் பக்தர் கள் தங்கும் விடுதி – 2 அமைத்தல் போன்றவை குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாம் நல்லமுறையில் செய்து தந்திட வேண்டும்.

    கிரி வலப்பாதையில் அமைக்கப்படும் கழிவறைகள் மற்றும் குளியலறைகளின் உயரம் சுமார் 13 அடி உயரம் கொண்டதாகவும், நல்ல காற்றோட்டத்துடன் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுவதோடு, அதற்கான அணுகு சாலை கலை நயத்துடன் செம்மையாக அமைக்கப்பட வேண்டும்.

    பக்தர்கள் தங்கும் விடுதியானது நீருற்றுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாக இருந்திட வேண்டும். இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கையினை உடனடியாக தயார் செய்து பணிகளை விரைவுபடுத்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஜோதி, அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • உழவர் சந்தைகள் வெள்ளி விழாவை கொண்டாடி வருகின்றன.
    • தி.மு.க. அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது.

    சேலம்:

    உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் நடைபெற்றது.

    இந்த வெள்ளி விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சூரமங்கலம் உழவர் சந்தையில் வெள்ளி விழாவை தொடங்கி வைத்து விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறிகளின் தரத்தை நேரடியாக ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் நலன் கருதி கடந்த கலைஞர் ஆட்சியில் 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக 100 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது 9 உழவர் சந்தைகள் சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.

    இன்று 25-வது ஆண்டு நிறைவடைந்ததை யொட்டி, வெள்ளி விழாவை இந்த உழவர் சந்தைகள் கொண்டாடி வருகின்றன.

    அதாவது விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இந்த உழவர் சந்தைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.

    சேலத்தில் உள்ள சூரமங்கலம் உழவர் சந்தையில் 170 முதல் 200 வரை கடைகள் உள்ளன. அந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் விற்பனையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த உழவர் சந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.

    அவர்களிடம் கேட்ட போது, உழவர் சந்தைகளில் தரமான, புதிய காய்கறிகள் கிடைப்பதாக பெருமை யோடு சொல்லுகிறார்கள்.

    அந்த வகையில் உழவர் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உழவர் சந்தைகளை மேம்படுத்த 27.50 கோடி ரூபாய் அளவில் ஒதுக்கீடு செய்து, சீரமைக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல விவசாயத்திற்கு என தனி நிதிநிலை அறிக்கையை கொண்டு வந்தவர் ஸ்டாலின். அதாவது தனி நிதிநிலை அறிக்கையில் கடந்த 21- 22 ம் ஆண்டில் 32.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அதனை தொடர்ந்து 2022 -2023 -ல் 33 ஆயிரம் கோடியும், 2023 -2024- ம் ஆண்டில் ரூ.38 ஆயிரத்து 904 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார்.

    அது மட்டுமில்லாமல் நீர் வளத் துறையை உருவாக்கி அதற்காக மூத்த அமைச்சர் துரைமுருகனை நியமித்து, நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது. தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலுவிடம் திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விவசாயிகளுக்கு தமிழக அரசு எதும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளாரே? என்று கேட்டதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    தோழமைக் கட்சிகளைப் பொறுத்தவரை இந்த ஆட்சியை பாராட்டி வருகிறார்கள்.

    ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக பா.ம.க. தற்போது மனசாட்சியை மறந்து பேசி வருகிறது. வேளாண்மைக்கு தனியாக நிதி ஒதுக்குகிறோம், அதற்கான செலவு செய்யப்படுகிறது.

    ஆனால் காழ்புணர்ச்சி காரணமாக மனசாட்சியை மறந்து பேசுகின்றனர். மனசாட்சியோடு இருப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள் என பா.ம.க.விற்கு காட்டமான பதில் அளித்தார்.

    • வரும் ஆண்டில் திட்டம் தயார் செய்யும் பணி தொடங்கப்படும்.
    • சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

    தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, (தி.மு.க.) கேளம்பாக்கம்-வண்டலூர் இணைப்பு சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என சட்ட சபையில் கோரிக்கை வைத்தார்.

    அதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தெரிவித்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் ஆண்டில் அதற்கான திட்டம் தயார் செய்யும் பணி தொடங்கப்படும் என்றார்.

    மாடம்பாக்கம், சிட்ல பாக்கம், குறிஞ்சி நகர் பகுதி யில் கூடுதல் வீடுகள் வந்து உள்ளதால் 3 துணை மின் நிலையங்கள் அமைத்து அதில் கூடுதல் நிருவு திறன் அமைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்கையில் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • '11 தோல்வி பழனிசாமி' என்ற அவப்பெயரை துடைக்க, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஓடியிருக்கிறார்
    • எந்த தகுதியுமே இல்லாமல் குறுக்கு வழியில் முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிச்சாமி.

    11 தோல்வி பழனிசாமி என்ற அவப்பெயரை துடைக்க, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஓடியிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் முதலமைச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடிய கோழை பழனிசாமி, வெளியே சென்று வழக்கம் போலவே தன் உளறல்களை பேட்டியாக கொட்டியிருக்கிறார். சட்டப்பேரவையில் முதலமைச்சரும் அமைச்சர்களும் சான்றுகளுடன் தோலுரித்த விரக்தியில் செய்தியாளர்களிடம் வண்டி வண்டியாக பொய்களை கொட்டியிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் பழனிசாமி. இப்படிதான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது.

    2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்றவர்தான் புரட்சித் தமிழர்!

    ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, '11 தோல்வி பழனிசாமி' என்ற அவப் பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் கோழை போல பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார். தன்னுடைய எஜமான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாதம்தாங்கி பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். தான் அசிங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிமுகவையே பலீபீடமாக்கியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா? அல்லது ஓடி ஒளிவாரா?

    'சட்டசபையில் நான் 2 மணி நேரம் பேசிய வீடியோவை கேட்டால் தரவில்லை' என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. உங்கள் ஆட்சியின் லட்சணம் என்ன? என தெரிந்து கொண்டாவது பழனிசாமி பேட்டி கொடுத்திருக்கலாம். அதிமுக ஆட்சியில், 'சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்' என ஜெகதீசன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில், 'நிதி நெருக்கடி காரணமாக நேரடி ஒளிபரப்புக்கு வாய்ப்பில்லை' என்று நீதிமன்றத்தில் கையை விரித்தவர்கள்தான், இன்று நேரடி ஒளிபரப்பை செய்யும் எங்களைப் பார்த்து வியாக்கியானம் பேசுகிறார்கள். அதிமுகவின் பத்தாண்டு ஆட்சியில் சட்டசபை நடவடிக்கைகளை அரசின் திரைப்படப் பிரிவின் சார்பில் வீடியோ எடுத்து எடிட் செய்து அவர்கள்தான் டிவிக்களுக்கு வழங்கினார்கள். அதில் ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. எதிர்க் கட்சியினர் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது நினைவில் இல்லையா?

    மாணவர்களின் மருத்து கனவை சீரழிக்கும் நீட் தேர்வை தனது ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு வந்து துரோகம் செய்தவர் பழனிசாமி. அதை மறைக்க திராவிட மாடல் அரசின் மீது வீண்பழியை சுமத்துகிறார். நீட் தேர்வை ரத்து செய்ய ஏ.கே.ராஜன் கமிட்டி நியமனம், அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நீட் ரத்து மசோதா என நீட் தேர்வை ரத்து செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வழிகளிலும் திராவிட மாடல் அரசு முயற்சிகளை செய்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நீட் தேர்விற்கு எதிராக திமுக அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் போராடியது. அப்படி நடத்திய போராட்டங்களை அதிமுகவால் பட்டியல் காட்ட முடியும்?

    நீட் தேர்வு விலக்கு மசோதா கிடப்பில் போடப்பட்டு, வழக்கு நீதிமன்றத்துக்கு வந்து ஓராண்டுக்கு வெளியிலேயே தெரியாமல் அதிமுக ஆட்சியில்தான் இருந்தது. சட்டப்பேரவையில் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை" என முதலமைச்சர் கேள்வியெழுப்பி பழனிசாமியின் துரோகத்தை தோலுரித்தார். அதற்கு பதில் சொல்ல கோழை பழனிசாமிக்கு துணிவு இருந்ததா?

    நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என பிடிவாதமாக நடைமுறைப்படுத்தி வரும் பாஜகவோடு அதிமுக கள்ளக்கூட்டாளி வைத்திருக்கிறது. அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என 'இந்தியா'கூட்டணியை வலுப்படுத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராகுல் காந்தியும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தார். துரதிஸ்டவசமாக மீண்டும் பாஜக ஆட்சிக் கட்டிலேறிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யாமல் ஆதிக்கம் செய்யும் தனது கள்ளக்கூட்டாளி பாஜகவைப் பற்றி விமர்சிக்க கோழை பழனிசாமிக்கு மனம் வரவில்லையே ஏன்? எடப்பாடி பழனிசாமி உறவினர் என்.ராமலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 5வது நாளாக வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. அடுத்து நம்ம வீட்டுக்கு வந்துவிடுவார்களோ என்ற பயம் பழனிசாமிக்கு இருக்குமல்லவா? ''கோபால் என்னை போல தைரியமான ஆளா… பயந்தவன் தானே. விரட்டி விரட்டி வெட்டினது எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போகும் இல்லையா'' என வடிவேலுவின் சூனாபானா கேரக்டர்தான் பழனிசாமி.

    மகளிர் உரிமைத்தொகையையும், மகளிர் விடியல் பயணத்தையும் இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார் பழனிச்சாமி. அவருடைய ஆட்சியில் காயலான் கடை கணக்காக ஓடிக்கொண்டிருந்த பேருந்துகளை அகற்றிவிட்டு, புதிய பேருந்துகள் வாங்கி தமிழ்நாடு முழுக்க விட்டிருக்கிறது திராவிட மாடல அரசு. அதிலும் மகளிர் இலவச பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை முற்றிலும் புதுமையானதாகவும் சிறப்பானதாகவும் வடிவமைத்து விட்டிருக்கிறோம். இதெல்லாம் பேருந்தில் செல்பவர்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி தெரியும். விடியல் பயணம் திட்ட பஸ்ஸுக்கு லிப்ஸ்டிக் அடித்து விட்டுள்ளார்கள் என்று கொச்சைப்படுத்தி ஒட்டுமொத்த மகளிரையும் கேவலப்படுத்தியிருக்கிறார்.

    அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 இலட்சம் கோடிக்கும் மேலாக கடன் வாங்கியபோதும் அதனால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கோ தமிழ்நாட்டு மக்கள் பயன் பெறும் சிறப்பு திட்டம் எதையும் செயல் படுத்தாமல் ஊழல் ஆட்சி நடத்திய ஊதாரி பழனிசாமி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வரலாற்றில் இல்லாத வகையில் உயர்த்தி தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் அரசின் திட்டங்களின் மூலம் பயனடைய செய்திருக்கும் திராவிட மாடல் அரசைப் பற்றி குறை சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது.

    கடன் வாங்கி மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன், விடியல் பயணம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்கிறார்கள் இந்த கடனை எப்போது அடைப்பார்கள் என்று என்னவோ ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக எடப்பாடி ஆதங்கப்பட்டிருக்கிறார். அந்த கடனை அடைக்கும் திரனும் திறமையும் முதல்வருக்கு உண்டு. எடப்பாடி அவர்களே... எங்கள் முதலமைச்சர் இன்றைக்காகவோ நாளைக்காகவோ சிந்திப்பவர் அல்ல. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக சிந்திக்கும் அக்கறையுள்ள ஒரு தலைவர்.

    அண்ணா பல்கலைக்கழக விவாகரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என சட்ட மன்றத்தில் முதலமைச்சர் அதிமுகவினரிடம் கேட்டு அவர்களின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தினார். முதலமைச்சரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடி வந்து விட்டு பத்திரிக்கையாளர்களிடம் வீராவேசமாக பழனிசாமி பேசியிருப்பதை பார்த்து மக்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாநகர் சிறுமி வழக்கில் அதிமுகவை சேர்ந்தவருக்கு இருந்த தொடர்பு சந்திக்கு வந்துள்ளதை மறைக்க பழனிசாமி நடத்திய கபட நாடகம்தான் யார் அந்த சார்? எனும் வதந்தி அரசியல் என்பது மக்களுக்கு தெளிவாகிவிட்டது.

    தந்தை பெரியாரையே சீமான் கடுமையாக அசிங்கப்படுத்தியிருக்கிறார். அவரை வன்மையாக கண்டிக்காமல் வலிக்காத மாதிரி வார்த்தைகளை விட்டிருக்கிறார் பழனிசாமி. இது அதிமுக இயக்கத்துக்கே அவமானம். தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அநீதியான யுஜிசி அறிவிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் போன்ற முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பதான் பாஜகவின் அடியாளான சீமான் இப்படி பேசி இருக்கிறார் என்று புரிந்தததால்தான் பாம்புக்கும் வலிக்காமல் தடிக்கும் வலிக்காமல் பார்த்துக்கொண்டு கண்டிக்கிறார் பழனிசாமி. இதற்கு பதிலாக அண்ணா திமுக என்னும் பெயரையே அமித்ஷா திமுக என்றோ ஆர்எஸ்எஸ் திமுக என்றோ மாற்றிக் கொள்ளலாம்.

    பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டமன்றத்தில் பதில் சொல்ல முடியாதவர் சட்டமன்றத்தில் வாங்கி கட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் வெளியே போய் பொய்களை விதைத்திருக்கிறார்.

    எந்த தகுதியுமே இல்லாமல் குறுக்கு வழியில் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அந்த முதலமைச்சர் பதவிக்கு சிறுமைதான் சேர்த்தார். தன்மானத்துக்கும் சுய கௌரவத்துக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக்கே இழுக்காகவும் அவமான சின்னமாகவும் ஒன்றிய அரசுக்கு கும்பிடு போட்டு அடிமையாகி தமிழ்நாட்டு மாண்பையே குலைத்தவர் பழனிசாமி" என்று தெரிவித்துள்ளார்.

    • ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவரங்கம், சிலை கட்டும் பணி தொடங்கியது.
    • அமைச்சர் எ.வ.வேலு நினைவரங்க பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    கோவில்பட்டி, ஆக.31-

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 45 சென்ட் இடத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவரங்கம், சிலை மற்றும் நூலகம் கட்டும் பணி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.

    இந்நிலையில் தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நினைவரங்க பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், நெல்லை கண்காணிப்பு பொறியாளர் மாதவன், தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர் தேவி, உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவி பொறியாளர்கள் சரத்குமார், சந்திரசேகர், கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் சுசிலா, தி.மு.க. நிர்வாகிகள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ரமேஷ், பீட்டர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×