என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 263987"
- ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார்.
- கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியா சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்று இரவு விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அதிகாலை லண்டன் சென்றடைந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியா சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்க மாட்டார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
- அவருக்கு பதிலாக வாடிகனின் வெளியுறவு மந்திரி பால் கல்லகர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில் ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பாதுகாப்பு பணிக்கு மட்டும் சுமார் ரூ.7.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.59 கோடி) செலவாகும் என்று நியூயார்க் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வரலாற்றில் மிகவும் செலவு செய்யும் ஒற்றை நாள் நடவடிக்கையாக எலிசபெத்தின் இறுதி சடங்கு இருக்கும். வெளிநாட்டு தலைவர்களை பாதுகாக்க, எம்.ஐ.5 மற்றும் எம்.ஐ.6 உளவுத்துறை நிறுவனங்கள், போலீஸ் மற்றும் ரகசிய சேவைத்துறை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இறுதிச் சடங்கு பாதுகாப்புக்கு மட்டும் ரூ. 59 கோடி செலவிடப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 100 கோடி வரை செலவாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ராணி எலிசபெத், ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் மரணம் அடைந்தார். அங்கிருந்து விமானம் மூலம் இங்கிலாந்துக்கு ராணி உடல் கொண்டு வரப்பட்டது.
இது போன்று அனைத்து நடவடிக்கைகக்கும் ரூ.100 கோடி வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இத்தொகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் குறைந்த பட்சம் ரூ.80 கோடிக்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்க மாட்டார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக வாடிகனின் வெளியுறவு மந்திரி பால் கல்லகர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஷியா உள்பட 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தங்களுக்கு அழைப்பு விடுக்காததற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை ஒழுக்கக்கேடானதாக கருகிறோம் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
- 24 மணி நேரமும் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
- 19-ந்தேதி இறுதிச்சடங்கு நடக்கிறது.
லண்டன் :
இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, இங்கிலாந்து மக்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ராணியின் உடல், அங்கிருந்து வான் வழியாகவும், சாலை வழியாகவும் லண்டனுக்கு எடுத்து வரப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையில் அதிகாரிகள், பணியாளர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் நேற்றுமுன்தினம் மதியம், ராணியின் உடல் பீரங்கி வண்டியில் ஏற்றி, குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதையடுத்து ராணியின் உடல், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் ராணியின் மகனான மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் நடந்து சென்றனர்.
அதையடுத்து வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டது. அதுவும் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர். . பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் பகல் இரவு பாராமல், மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து நின்று ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். சிலர் ஓரிரு வினாடிகள் நின்று பிரார்த்தனையும் செய்கிறார்கள்.
இருப்பினும் 16 கி.மீ. தொலைவுக்கு மேல் வரிசை கட்டி நிற்க மக்களுக்கு அனுமதி இல்லை.
24 மணி நேரமும் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, 19-ந் தேதி திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியுடன் முடிவுக்கு வரும். இந்த அஞ்சலி நிகழ்வு தொடர்ந்து பி.பி.சி. தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
19-ந் தேதி நடைபெறுகிற அரசு இறுதிச்சடங்கு நிகழ்வு மற்றும் விண்ட்சார் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடக்கிற நிகழ்வுகளின் விவரங்களை பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று வெளியிட்டது.
இதன் முக்கிய தகவல்கள் வருமாறு:-
* 19-ந் தேதி உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உலக நாடுகளின் தலைவர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் அரசு மரியாதை நிகழ்ச்சி நடைபெறும்.
* அரசு மரியாதை செலுத்திய உடன் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி லண்டன் நகரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி வழியாக குதிரை பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை எடுத்துச்செல்லப்படும். * அதன்பின்னர் உடல், விண்ட்சார் கோட்டைக்கு அருகேயுள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்துக்கு அர்ப்பணிப்பு பிராத்தனைக்காக எடுத்துச்செல்லப்படும்.
* பிரார்த்தனை முடிந்த உடன் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, 'ராயல் வால்ட்' என்று அழைக்கப்படுகிற விண்ட்சார் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அடக்க அறையில் இறக்கப்படும்.
* இறுதியாக அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிற அடக்க ஆராதனை, மன்னர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நடக்கிறது. அதன்பின்னர் ராணியின் உடலானது, கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும்.
* ராணி இறுதிச்சடங்கின்போது ஐக்கிய ராஜ்யம் ( இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து) முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு 19-ந்தேதி லண்டனில் நடைபெறுகிறது.
- லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லண்டன் :
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது.
ராணியின் மறைவால் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது இறுதி சடங்கு வருகிற 19-ந் தேதி லண்டனில் நடைபெறுகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இதனிடையே ஸ்காட்லாந்து தலைநகர் எடின்போராவில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு முதலில் அரச குடும்பத்தினரும், பின்னர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ராணியின் உடலை மன்னர் 3-ம் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். பின்னர் ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.22 மணி அளவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து ராணியின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ராணியின் சவப்பெட்டியின் மீது அவரது கிரீடம் வைக்கப்பட்டிருந்தது.
ஊர்வலத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு பின்னால் மன்னர் 3-ம் சார்லஸ், அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி நடந்து சென்றனர்.
அதேபோல் மன்னர் 3-ம் சார்லசின் உடன்பிறப்புகளான இளவரசி ஆனி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்டு ஆகியோரும் ராணியின் சவப்பெட்டி பின்னால் நடந்து சென்றனர்.
மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசி ஆனி, இளவரசர்கள் எட்வர்டு மற்றும் வில்லியம் ஆகியோர் ராணுவ உடைகளை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
அதே சமயம் அரச பதவிகளை துறந்த இளவரசர் ஹாரியும், பாலியல் புகாரில் சிக்கி அரச பதவிகளை இழந்த இளவரசர் ஆண்ட்ரூவும் சாதாரண உடையில் பங்கேற்றனர்.
அவர்களுடன் பாரம்பரிய உடைகளை அணிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் ராணியின் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த பிரமாண்டமான ஊர்வலத்தை பார்ப்பதற்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் வரை வழிநெடுகிலும் நூற்றுக்கணகக்கான மக்கள் திரண்டிருந்தனர். மதியம் 3 மணி அளவில் ஊர்வலம் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தை அடைந்தது.
பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் திறக்கப்பட்டது.
ஆனால் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்தே பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
ராணியின் இறுதி சடங்கு நடைபெறுகிற வருகிற 19-ந் தேதி காலை 6.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர்.
இதையொட்டி லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பல கி.மீ. தூரத்துக்கு வரிசையில் காத்து நிற்கும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி விமான நிலைய சோதனை போன்றதொரு சோதனைக்கு பின்னர் மக்கள் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்குள் நுழைந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- எடின்பெர்க் தேவாலயத்தில் இருந்து எலிசபெத் ராணியின் உடல் லண்டனை வந்தடைந்தது.
- எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
லண்டன்:
பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். அவரது உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டு, அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்குபல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர். எடின்பெர்க் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எலிசபெத் ராணியின் உடல் இன்று லண்டனை சென்றடைந்தது.
எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 17ம் தேதி லண்டன் செல்லும் ஜனாதிபதி முர்மு, 19ம் தேதி வரை லண்டனில் இருக்கிறார்.
- ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல லட்சம் மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- இலங்கை வம்சாவளியான 56 வயது வனேசா நாதகுமாரன் என்ற பெண், வரிசையில் முதல் ஆளாய் இடம்பிடிக்க நேற்று முன்தினம் முதல் காத்து நிற்கிறார்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர்.
அங்கு எலிசபெத் என்ற ஒரு பெண் 7 முறை வரிசையில் மணிக்கணிக்கில் காத்துக்கிடந்து ராணியின் உடலுக்கு மீண்டும் மீண்டும் அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "நான் மீண்டும் மீண்டும் வரிசையில் சென்று ராணிக்கு அஞ்சலி செலுத்தினேன். ஏனென்றால் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. நான் என் மரியாதையை இப்படி செலுத்த விரும்பினேன். ஒவ்வொரு முறையும் தேவாலயத்துக்குள் சென்று, ராணிக்கு அஞ்சலி செலுத்தி வார்த்தைக்கு வராத உணர்வை அனுபவித்தேன்" என தெரிவித்தார்.
அங்கு 24 மணி நேர அஞ்சலிக்கு பின்னர் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, எடின்பரோ விமான நிலையத்துக்கு நேற்று எடுத்துச்செல்லப்பட்டது. அங்கிருந்து ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை அவரது மகள் இளவரசி ஆனி விமானப்படையின் விமானத்தில் நேற்று லண்டன் எடுத்துச்சென்றார்.
லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 'பவ்' அறையில் அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று பிற்பகலில் ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.
வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஒரு மேடையில் ராணி உடல் அடங்கிய சவப்பெட்டி வைக்கப்படுகிறது. சவப்பெட்டியின் மீது கிரீடம் மற்றும் செங்கோல் ஆகியவை வைக்கப்படுகின்றன.
இன்று உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி முதல், இறுதிச்சடங்கு நடைபெறுகிற 19-ந்தேதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை பார்த்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
ஆனால் விமான நிலைய சோதனை போன்றதொரு சோதனையை கடந்துதான் பொதுமக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்குள் நுழைய முடியும். சிறிய அளவிலான பைகளை மட்டுமே பொதுமக்கள் எடுத்துச்செல்ல முடியும்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல லட்சம் மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ராணியின் உடல் நேற்று லண்டன் நகருக்கு வந்து சேருவதற்கு முன்பாகவே அங்குள்ள லாம்பேத் பாலம் அருகில் பொதுமக்கள் வந்து குவியத்தொடங்கி விட்டனர். அவர்கள் தொடர்ந்து வரிசையில் காத்து நிற்கிறார்கள்.
இலங்கை வம்சாவளியான 56 வயது வனேசா நாதகுமாரன் என்ற பெண், வரிசையில் முதல் ஆளாய் இடம்பிடிக்க நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) முதல் காத்து நிற்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, "இது ஒரு தனித்துவமான தருணம். வாழ்நாள் நிகழ்வு. காமன்வெல்த் நாடுகளுக்கும், உலகத்துக்கும் மாபெரும் சேவையாற்றிய ராணிக்கு நாங்கள் இப்படி காத்துக்கிடந்து அஞ்சலி செலுத்த விரும்புகிறோம்" என தெரிவித்தார்.
இப்படி பலர் குடும்பம் குடும்பமாய் வந்து கூடாரம் அமைக்காத குறையாய் தேவையான சாப்பாடு, தண்ணீர், அத்தியாவசிய பொருட்களுடன் வந்து காத்துக்கிடக்கின்றனர்.
- ஸ்காட்லாந்தில் இருந்து எலிசபெத் ராணியின் உடல் இன்று லண்டன் கொண்டு வரப்பட்டது.
- பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்படும் ராணியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரில் உயிரிழந்தார். அவரது உடல் கார் மூலம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பெர்க் கொண்டு வரப்பட்டது. அங்கு உள்ள புனித கில்ஸ் தேவாலயத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்டது.
இதையொட்டி, தேவாலயத்தை சுற்றி உள்ள கட்டடங்களில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலைச் சுற்றி ஸ்காட்லாந்து அரச வழிமுறைப்படி வெள்ளை மலர்கள் வைக்கப்பட்டு, அரண்மனை மெய்க்காப்பாளர்களும், வில்லாளர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பிட்ட இடைவெளி விட்டு, பாதுகாப்பு வளையம் போடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஸ்காட்லாந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், எடின்பெர்க் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எலிசபெத் ராணியின் உடல் இன்று லண்டனை சென்றடைந்தது.
அங்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் 4 நாட்கள் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ராணியின் உடலுக்கு பல லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடிக்கப்படுகிறது.
- வருகிற 18-ந்தேதி இரவு 8 மணிக்கு நாடு முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (வயது 96) முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந்தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.
அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி கடந்த 11-ந்தேதி பால்மோரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. நேற்று ராணியின் உடல் செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்து செல்லப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக எலிசபெத் உடல் வைக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
ராணி எலிசபெத் உடல் இன்று தனி விமானம் மூலம் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை (14-ந்தேதி) பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்குக்கு ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக 4 நாட்கள் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடிக்கப்படுகிறது. வருகிற 18-ந்தேதி இரவு 8 மணிக்கு நாடு முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள்.
19-ந்தேதி எலிசபெத்தின் இறுதி சடங்கு நடக்கிறது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அன்று இங்கிலாந்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மறைந்த ராணி எலிசபெத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
- “என் அன்பான அம்மா” உடனான தொடர்புகள் நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
லண்டன்
இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96) முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.
ராணியின் மறைவை தொடர்ந்து பட்டத்து இளவரசராக இருந்த சார்லஸ் (வயது 73) மன்னர் ஆனார். இங்கிலாந்தின் புதிய மன்னர் 3-ம் சார்லஸ் என அழைக்கப்படுவார்.
மறைந்த ராணி எலிசபெத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்களின் இரங்கலுக்கு மன்னர் சார்லஸ் நேற்று பதில் அளித்து பேசினார்.
அப்போது தனது தாயை நினைவு கூர்ந்து உருக்கமாக பேசினார். மன்னர் தனது உரையில் கூறியதாவது:-
நமது ஜனநாயகத்தின் உயிர் மற்றும் சுவாசக்கருவி நாடாளுமன்றம்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியது போல் ராணி எலிசபெத், வாழும் அனைத்து இளவரசர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தார். அவரை பின்பற்றி அரசியலமைப்பு நிர்வாகத்தின் விலைமதிப்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்துவேன்.
"என் அன்பான அம்மா" உடனான தொடர்புகள் நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன. வெள்ளி விழா நீரூற்று முதல் பழைய அரண்மனை முற்றத்தில் உள்ள சூரியக் கடிகாரம் வரை அவரது பொன்விழாவைக் குறிக்கும் அம்சங்கள் நிறைந்துள்ளன.
இவ்வாறு மன்னர் சார்லஸ் கூறினார்.
இங்கிலாந்து மன்னராக நாடாளுமன்றத்தில் சார்லஸ் உரையாற்றியது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராணி எலிசபெத்தின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி முதல் 19-ந் தேதி காலை 6.30 மணி வரை வைக்கப்படுகிறது.
இதில் அஞ்சலி செலுத்துவோருக்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராணி எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்ப்பதால் மிக நீண்ட வரிசை காணப்படும். பல மணி நேரத்துக்கு, குறிப்பாக இரவு வரை நீங்கள் வரிசையில் நிற்க நேரிடும். வரிசை தொடர்ந்து நகர்ந்தவாறே இருக்கும் என்பதால், அமர்வதற்கு குறைவான வாய்ப்பே கிடைக்கும்.
ராணியின் உடல் வைக்கப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தை சுற்றிலும் சாலைகள் மூடப்படும். இதனால் பொது போக்குவரத்து இல்லாமல் நீண்ட தாமதம் ஏற்படலாம்.
அஞ்சலி செலுத்த வருவோரிடம் விமான நிலையத்தில் நடைபெறும் பரிசோதனைகள் போல சோதனையிடப்படும். ஒரு திறப்பு வைத்த சிறிய பை ஒன்று மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படும்.
நீண்ட காத்திருப்பு ஏற்படும் என்பதால் குடை, செல்போன் பவர் பேங்க் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர வேண்டும்.
உணவு, பானங்கள் எடுத்து வரக்கூடாது. மலர்களோ அல்லது மெழுகுவர்த்தி, புகைப்படங்கள் போன்ற பிற பொருட்களையும் அஞ்சலிக்கு கொண்டு வரக்கூடாது.
இந்த நிகழ்வின் கண்ணியத்தை மதித்து சரியான முறையில் நடந்து கொள்ளவும், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் அமைதியாக இருக்கவும் வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதைத்தவிர அங்கு 'செல்பி', புகைப்படம், வீடியோ பதிவு போன்றவற்றுக்கு தடை விதித்திருப்பதுடன், பட்டாசு, லேசர் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.
- இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறினார்.
- ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து 8-ந்தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார்.
லண்டன் :
இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார்.
இளவரசர் வில்லியம்-கேதரின் தம்பதி, இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர் ஒன்றாக இணைந்து, விண்ட்சார் கோட்டையின் வாயிலில் ராணிக்கு மலரஞ்சலி செலுத்திய பொதுமக்களிடம் பேசி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் மறைந்த தனது பாட்டியும், ராணியுமான எலிசபெத் தனக்கு ஒரு வழிகாட்டி கருவி போல இருந்ததாக ஹாரி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக தங்கள் ஆர்க்வெல் இணையதளத்தில் அவர், ராணி எலிசபெத் அசைக்க முடியாத கருணை மற்றும் கண்ணியத்துடன் இருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். மேலும், ராணுவ தளபதியாக ராணியை முதன்முதலில் சந்தித்தது, தனது அன்பான மனைவியை ராணி முதன்முதலில் சந்தித்து, அன்பான கொள்ளுப் பேரக்குழந்தைகளை (தனது குழந்தைகள்) கட்டிப்பிடித்த முதல் தருணம் போன்றவற்றை குறிப்பிட்டும் நெகிழ்ச்சியடைந்து உள்ளார்.
- மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர்.
- இவர் வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார்.
லண்டன் :
இங்கிலாந்தில் மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர். தனது வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார். கடைசியாக அவரிடம் மிக் மற்றும் சாண்டி என்ற 2 இளம் நாய்கள் இருந்தன.
அத்துடன் கேண்டி என்ற டோர்கி ரக நாய் ஒன்றும் இருந்தது. தற்போது ராணி மறைந்ததை தொடர்ந்து இந்த நாய்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருந்தது. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், இந்த நாய்களை இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவி சாரா ஆகியோர் பராமரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை ஆண்ட்ரூ குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.
மிக் மற்றும் சாண்டி ஆகிய 2 நாய்க்குட்டிகளை கடந்த ஆண்டு ஆண்ட்ரூவும், அவரது மகள்களும்தான் ராணி எலிசபெத்துக்கு பரிசளித்து இருந்தனர். தற்போது மீண்டும் அவை ஆண்ட்ரூ குடும்பத்தினரிடமே வந்துள்ளது.
- பால்மோரல் அரண்மனையில் இருந்து வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
- 19-ந் தேதி ராணியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு.
ஸ்காட்லாந்து:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவர் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் தங்கியிருந்த போது உயிர் பிரிந்தது.
இந்நிலையில் ராணி எலிசபெத்தின் உடலை லண்டனுக்கு கொண்டு இறுதி ஊர்வலம் இன்று தொடங்கியது. முதலில் அவரது உடல் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து வாகனம் மூலம் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு இன்று பிற்பகல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
சுமார் 6 மணி நேரம் இந்த பயணம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழி நெடுகிலும் காத்திருக்கும் மக்கள் ராணியின் உடல் கொண்டு செல்லும் வாகனத்திற்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் வரை ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் உடல் வைக்கப்பட்டு பின்னர் செயின்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்காட்லாந்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்பின் ராணி உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி அரசு குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக் கொள்வார்கள். 13-ந்தேதி பிற்பகலில் எலிசபெத் உடல், எடின்பர்க் விமான நிலையத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டு மாலை இங்கிலாந்தின் நார்த்டோல் விமான தளத்தை வந்தடையும்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக ராணி உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின் 14-ந்தேதி உள்ளூர் நேரப்படி மதியம் முதல் எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் வைக்கப்படும். ராணி உடலுக்கு லண்டன் மக்கள் 4 நாட்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்ச்சிகள் முடிந்தபின் 19-ந்தேதி காலை ராணியின் உடல் அடங்கிய பெட்டி ஊர்வலமாக வெஸ்ட் மின்ஸ்டர் அப்பேவுக்கு எடுத்து செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அதன்பின் வின்ட்சர் கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு ராணியின் கணவர் பிலி பின் கல்லறைக்கு அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வாறு பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்