search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்டோனியோ குட்டரெஸ்"

    • காங்கோவில் ஐ.நா. குழுவில் பணியாற்றி வருபவர் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்.
    • மேஜர் ராதிகா சென் ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க விருதை பெற்றார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் மே 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வரும் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்னுக்கு மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது அறிவிக்கப்பட்டது.

    காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளராக பணியாற்றினார் மேஜர் சென்.

    அவர் மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் பட்டாலியனுக்கான படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். மேஜர் சுமன் கவானிக்கு பிறகு இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் 2-வது இந்திய அமைதி காக்கும் வீரர் மேஜர் சென் ஆவார்.

    மேஜர் சென்னின் சேவையைப் பாராட்டிய குட்டரெஸ், அவர் ஒரு உண்மையான தலைவர் மற்றும் முன்மாதிரி. அவரது சேவை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு உண்மையான வரவு. வடக்கு கிவுவில் அதிகரித்து வரும் மோதல் சூழலில், அவரது துருப்புக்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தீவிரமாக ஈடுபட்டன. பணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மேஜர் ராதிகா சென் கூறுகையில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி. சவாலான சூழலில் பணியாற்றும் அனைத்து அமைதி காக்கும் படையினரின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதால் இந்த விருது எனக்கு சிறப்பு வாய்ந்தது. மேலும் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர தங்களால் இயன்றதை வழங்குகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று நடந்த விழாவில் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருதை மேஜர் ராதிகா சென் பெற்றார்.

    • தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

    காசா:

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கி 6 மாதங்களை கடந்துவிட்டது. இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் காசாவின் ரபா நகரில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அவர் கொல்லப்பட்டார். 

    அவர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் (டி.எஸ்.எஸ்.) ஊழியர் ஆவார். பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் பயணித்த மற்றொரு ஊழியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஐ.நா. பணியாளர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நான் கண்டிக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போரை நிறுத்தவும் அனைத்து பணயக் கைதிகளை விடுவிக்கவும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, "காசாவில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பிடுவதற்காக ஐநா ஊழியர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வார்கள். அவர்களின் வழக்கமான வேலையின் ஒரு பகுதியாக இருவரும் காரில் மருத்துவமனைக்குச் சென்றனர். அது ரபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை. அவர்களது வாகனம் எப்படி தாக்கப்பட்டது என்பது குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்


    • உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக் கடந்துள்ளது.
    • அடுத்த ஆண்டுக்குள் இந்த போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக ஐ.நா.பொது செயலாளர் கூறினார்.

    நியூயார்க்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக் கடந்துள்ளது.

    உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷியாவுக்கு ஐ.நா. சபை, உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதனை நிராகரித்து ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இரு நாட்டு அதிபர்களைச் சந்தித்து பேசினார். உக்ரைன் ரஷியா போரை நிறுத்தும்படி வலியுறுத்தினார்.

    இந்நிலையில், உக்ரைன் ரஷியா இடையிலான போர் 2023-ல் முடிவுக்கு வரும் என ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர்

    அன்டோனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக குட்டரெஸ் நேற்று நடந்த மாநாட்டில் பேசுகையில், உக்ரைனில் எதிர்காலத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை தான் காணவில்லை. ஏற்கனவே அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் தொடரும்.

    ஆனால் 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் உக்ரைன் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்தையும் செய்யவேண்டும். இது நடக்கும் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள் என ஐ.நா.சபை தலைவர் குட்டரெஸ் தெரிவித்தார்.
    • பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சமாளிக்க தேசிய செயல்திட்டங்களை அரசுகள் செயல்படுத்த வேண்டும்.

    வாஷிங்டன்:

    சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆற்றிய உரையில் கூறியதாவது:

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகளவில் மிகவும் பரவலாக நிகழும் மனித உரிமை மீறலாகும்.

    ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.

    கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரக் கொந்தளிப்பு வரை தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடலாலும் மற்றும் மனதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    உலக நாடுகளின் அரசுகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தேசிய அளவில் செயல் திட்டத்தை வகுத்து, நடைமுறைப் படுத்த வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று குரல் எழுப்புங்கள் என தெரிவித்தார்.

    • ஏவுகணை சோதனைக்கு நடத்திய வடகொரியாவுக்கு ஐநா.சபை கண்டனம் தெரிவித்தது.
    • ஐ.நா.இழிவான அணுகுமுறையை மேற் கொண்டுள்ளதாக வடகொரியா கருத்து.

    பியோங்யாங்:

    தென்கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு நடத்திய வடகொரியாவுக்கு ஐநா.சபை கண்டனம் தெரிவித்தது.

    எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்வதை வடகொரியா உடனடியாக கைவிட வேண்டும் ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தமது அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் வட கொரியா வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சாசனத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகள் உள்பட அனைத்து விஷயங்களிலும் பாரபட்சமற்ற தன்மை மற்றும் சமத்துவத்தைப் பேணுவதே  சரியான பணி என்று கூறியுள்ளார்.

    ஆனால் அவற்றை புறக்கணித்து, ஐ.நா.பொதுச்செயலாளர் மிகவும் இழிவான அணுகு முறையை மேற் கொண்டுள்ளதாகவும், இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்துவதை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கவனிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது அமெரிக்காவின் கைப்பாவையாக ஐ.நா.செயல்படுவதை தெளிவாக நிரூபிக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.

    • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் 2-வது முறை தேர்வானார்.
    • இவர் அரசுமுறைப் பயணமாக இன்று (அக்டோபர் 18-ம் தேதி ) இந்தியா வருகிறார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று (அக்டோபர் 18-ம் தேதி ) இந்தியா வருகிறார்.

    போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், 3 நாள் அரசுமுறைப் பயணமாக அக்டோபர் 18-ம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தியா வரும் ஐநா பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

    இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அண்டோனியோ குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

    • பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழு ஐ.நா அமைப்பைத் திரட்ட அனைத்தையும் செய்வேன்.
    • பருவநிலை மாற்றத்தை தடுக்க, பாகிஸ்தான் குறைந்த பங்களிப்பதை வழங்கியுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த ஜூன்மாதம் முதல் இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய வெள்ள மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புடன் சென்று ஆய்வு செய்த குட்டரெஸ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் அரசை பாராட்டு தெரிவித்தார்.

    பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்நாட்டிற்கு ஆதரவாக முழு ஐ.நா அமைப்பைத் திரட்டவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் உறுதியளித்தார். பருவநிலை மாற்றத்தை தடுக்க பாகிஸ்தான் போன்ற நாடுகள் குறைந்த பங்களிப்பதையே வழங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக அந்த நாடுகள் அதன் விளைவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

    இயற்கை பேரழிவு தவறான இலக்கை தாக்கியுள்ளது, பருவநிலை மாற்றத்திற்கு பொறுப்பானவர்கள்தான் இந்த வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகள் காற்று மாசு அளவை வெகுவாகக் குறைக்க வேண்டும்,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ள பாகிஸ்தானுக்கு ஆதரவை வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

    • பாகிஸ்தானில் பெய்த கனமழைக்கு இதுவரை 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • கனமழை, வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட ஐ.நா. பொதுச்செயலாளர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலைமாற்ற மந்திரி தெரிவித்தார்.

    பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் அது தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ள பகுதிகளை பார்வையிட ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்குகிறார். மேலும், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×