search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ்"

    • தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
    • பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்கினர்.

    திருப்பூர்:

    கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகை கிறிஸ்துமஸ்.அவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து கொண்டாடும் நாள். அன்பு, பகிர்வு, சகோதரத்துவம் ஆகிய பண்புகளை போதிக்கும் இவ்விழா நாளை கொண்டாடப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்தே தேவாலயங்கள் சார்பில் வீடுகள்தோறும் சென்று கிறிஸ்துமஸ் பூபாளம் பாடி, வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகள் மற்றும் தேவாலயங்களில் கிறிஸ்துவின் பிறப்பின் நிகழ்வை காட்சிப்படுத்தும் வகையில், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே போன்று ஸ்டார்களும் தொங்கவிடப்பட்டு அவை வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

    மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்தும் புத்தாடை எடுத்தும் பண்டிகையை கொண்டாட தயாராகி உள்ளனர் . தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

    கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு திருப்பலியும், சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் நாளை 25-ந் தேதி அதிகாலை 5மணிக்கு ஆராதனையும் நடக்கிறது.

    இதில் உறவினர்கள், நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, பரஸ்பரம் கேக் உள்ளிட்ட இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வர். மேலும் நாளை தேவாலய குருக்களும், மக்களும் இணைந்து ஏழை மற்றும் ஆதரவற்றவர்களை சந்தித்து ஆடை, உணவு உள்ளிட்டவற்றை வழங்க உள்ளனர்.

    இது குறித்து பேராயர்கள் கூறுகையில், உலகில், தீயவை ஒழிந்து நன்மை பெருக வேண்டும் என்பதற்காகவே ஏசு கிறிஸ்து மண்ணில் அவதரித்தார். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்து அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார். அதை அடிப்படையாக வைத்தே கிறிஸ்து பிறப்பின் போது பிறருக்கு உதவும் செயல் அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் சமயத்தில் மெழுவர்த்தி ஏந்தி கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி ஆராதனை செய்வது வழக்கம். இது நாம் பிறருக்கு வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்றனர். 

    திருப்பூரில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதனால் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், மாட்டுத் தொழுவம், குடில்கள், குழந்தை ஏசு, தாய் மரியன்னை, கிறிஸ்துமஸ் மரத்துண்டு, பரிசு பொருட்கள் ,அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை திருப்பூர் நகரப் பகுதி கடைகளில் சூடுபிடித்தன. கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் முக வடிவிலான கவசம் மற்றும் உடைகளும் விற்பனை ஆகின. பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்கினர்.மேலும் பேக்கரி கடைகளில் விதவிதமான கேக்குகளை வாங்கி சென்றனர். இதனால் பேக்கரி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைேமாதியது. திருப்பூர் காங்கயம் சாலையில் ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளன. கிறிஸ்துமஸ்சையொட்டி இங்குள்ள கடைகளில் அதிக அளவு பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையால் திருப்பூர் மாவட்டம் களை கட்டி காணப்படுகிறது.     

    • தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.
    • இன்று (24-ந்தேதி) நள்ளிரவு தொடங்கி நாளை வரை பாதுகாப்பு பலமாக இருக்கும்.

    சென்னை :

    டிசம்பர் 25-ந்தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி, டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிப்பார்கள்.

    இதுதவிர, தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு, விளக்குகளால் அலங்கரித்து வைத்திருப்பார்கள். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 25-ந்தேதியன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.

    அந்தவகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சாந்தோம், பெசன்ட்நகர் உள்பட தேவாலயங்களில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவில் இருந்தே சிறப்பு ஆராதனையும், பாடகர் குழுவினரால் சிறப்பு பாடல்கள் பாடப்பட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    அதன்படி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தூய ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணிக்கு சிறப்பு ஆராதனையும், நாளை காலை 7.30 மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனையும் நடக்க இருக்கிறது.

    சென்னை அடையாறு சி.எஸ்.ஐ. இயேசு அன்பர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நாளை காலை 4.30 மணி, 7 மணி, 8.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள அந்தோணியார் திருத்தலத்தில், இன்று நள்ளிரவு 12 மணிக்கும், நாளை காலை 8 மற்றும் 10 மணிக்கும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

    மேலும், சென்னையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்தும்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். சென்னையிலும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட 350 தேவாலயங்கள் உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இன்று (24-ந்தேதி) நள்ளிரவு தொடங்கி நாளை வரை பாதுகாப்பு பலமாக இருக்கும். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூரில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
    • அப்போது பேசிய அவர் அண்ணா வழியைப் பின்பற்றி திராவிட மாடல் அரசு நடந்து வருகிறது என்றார்.

    சென்னை:

    கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:

    திராவிட மாடல் அரசு என்பது எல்லா மதத்திற்குமானது. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு எதிரான அரசுதான் இது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற வழியில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

    அண்ணா வழியைப் பின்பற்றி திராவிட மாடல் அரசு நடந்து வருகிறது. சாதி, மதம், மொழியின் பெயரால் ஆதிக்கத்தை நிலைநாட்டி ஏழைகளை ஏமாற்ற திராவிட மாடல் அரசு அனுமதிக்காது.

    ஒரு துளி கண்ணீர் ஏழைகளிடம் இருந்து வெளிப்பட்டாலும் அதனை துடைக்கக் கூடிய கைகளாக திராவிட மாடல் அரசின் கைகள் இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கம்.

    சமூக நீதியை பேணி, மனித நேயத்தை வளர்ப்பதே திராவிடத்தின் கொள்கை என தெரிவித்தார்.

    • பிரிண்டர் மிஷின் ராணுவ தளமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது. மற்ற எல்க்ட்ரானிக் கழிவு பொருட்களை கொண்டு குடிலின் மற்ற பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.
    • கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல் கையில் செல்போனுடன், ஹெட்போனில் பாடல் கேட்பது போல் தத்துரூபமாக செய்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம், உப்புகார வீதியில் வசிப்பவர் சுந்தரராசு. அரசு பள்ளி ஆசிரியர். இவர் ஆண்டுதோறும் விதவிதமான பொருட்களை கொண்டு தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது வழக்கம்.

    ஆசிரியர் சுந்தரராசு ஒரு கன செ.மீட்டரில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை விருது பெற்றவர். காய்கறி, பிளாஸ்டிக் பாட்டில்கள் தேங்காய், 25 வகையான சிறு தானியம், 700 புத்தகங்கள், 1000 துணி பைகள், நொறுக்கு தீணிகள், டிஸ்போசல் சிரிஜ் ஊசி ஆகியவற்றை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் குடில் வடிவமைத்து உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து தற்போது 10-வது ஆண்டாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வித்தியாசமான முறையில் கம்ப்யூட்டர் மற்றும் பழுதான மின்னணு பொருட்களை கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

    அதில் கம்யூட்டர் மற்றும் பழைய மானிட்டர் டூம் பகுதியை குடில் தொழுவாகவும், ஹார்டு டிஸ்க்கு, கேமிரா பென்ட்ரைவ், டேப், எல்.சி.டி மானிட்டர், லேப்டாப், இன்டர்நெட் மோடம், ஸ்கேனர் மற்றும் மதர் போர்டுகளை கொண்டு சிட்டி பில்டிங், சி.டி.யை கிறிஸ்துமஸ் மரமாக உருவாக்கியுள்ளார்.

    பிரிண்டர் மிஷின் ராணுவ தளமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது. மற்ற எல்க்ட்ரானிக் கழிவு பொருட்களை கொண்டு குடிலின் மற்ற பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல் கையில் செல்போனுடன், ஹெட்போனில் பாடல் கேட்பது போல் தத்துரூபமாக செய்துள்ளார்.

    இந்தியா அனைத்தும் டிஜிட்டல் மையமாக திகழும் இந்த சூழலில் அவற்றை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் இந்த கிறிஸ்துமஸ் குடில் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர் சுந்தரராசு தெரிவித்தார்.

    இந்த விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடிலை இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என அனைத்து மதத்தை சார்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ஆசிரியர் சுந்தரராசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
    • சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை நாளை மறுநாள் (24-ந்தேதி) முதல் விடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.

    கிறிஸ்தவ பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு இன்றுடன் தேர்வு முடிகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்கள் நாளை வரை தேர்வு எழுதுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊர் செல்பவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கி உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வருவதால் பெரும்பாலானவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

    பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.

    நாளை (23-ந்தேதி) பயணம் செய்ய ஆம்னி பஸ்களில் குறைந்த அளவில் இடங்கள் உள்ளன. ரெட் பஸ் இணையதளத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல்வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு வழக்கமாக குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,300 வரை டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏ.சி. செமி சிலீப்பருக்கு ரூ.2,200 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.3000 முதல் ரூ.4,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனி டிவி வசதி அதில் கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில பஸ்களில் ரூ.3,500, ரூ.4000-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடிக்கு ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகர்கோவிலுக்கு ஏசி படுக்கை வசதிக்கு ரூ.3,600 வரையிலும், மதுரைக்கு ஏசி படுக்கை வசதிக்கு ரூ.1,700 முதல் ரூ.3000 வரை வசூலிக்கிறார்கள்.

    ஒரு சில ஆம்னி பஸ்களில் ரூ.2,400, ரூ.2,700, ரூ.2,800 என பல்வேறு விதமான கட்டணம் பெறப்படுகிறது. ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.2,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,800, ரூ.2000 கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கிறார்கள். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

    தற்போது ரெயில்களில் இடம் நிரம்பிவிட்டதால் வேறு வழியில்லாமல் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்வார்கள் என்ற நோக்கத்தில் விமான கட்டணத்திற்கு இணையாக உயர்த்தி உள்ளனர்.

    சனிக்கிழமையிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்கு பிறகு தான் இயல்பான கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    • சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பஸ்களில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
    • குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பஸ்கள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு பண்டிகை விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.

    சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பஸ்களில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பஸ்கள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரை, திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதாலும் ரெயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி வரக்கூடும் என்பதால் கூடுதலாக 500 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    நாளை பிற்பகலில் இருந்து சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். பொதுமக்கள் தேவையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆளுநர் மாளிகையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேக் வெட்டினார்.
    • அப்போது பேசிய அவர் இயேசு மற்றவர்களுக்காக வாழ்ந்தார், மற்றவர்களுக்காக துன்பப்பட்டார் என்றார்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு கேக் வெட்டினார்.

    இந்த விழாவில் கிறிஸ்துமஸ் கரோல் இசை நிகழ்ச்சி நடத்திய கலைஞர்களை ஆளுநர் பாராட்டினார். மதத் தலைவர்கள், ஜி20 நாடுகளைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். அதன்பின், ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

    மனித நேயத்தைக் காப்பதற்காக இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்தார். இயேசு மற்றவர்களுக்காக வாழ்ந்தார், மற்றவர்களுக்காக துன்பப்பட்டார். தம்மை சிலுவையில் அறைந்தவர்களிடம் கூட அன்பு செலுத்தியதோடு, அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேடினார்.

    எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் மட்டுமில்லாமல், அனைவருக்கும் அன்பு, மன்னிப்பு, இரக்கம் என்ற செய்தியை அளித்தவர் இயேசு கிறிஸ்து.

    பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த சவாலான காலகட்டத்தில் ஜி20 நாடுகள் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ளது.

    உலக நாடுகளில் இது ஒரு முக்கிய அம்சமாகவும், பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

    • பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
    • வர்த்தக அணித் தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், கலை இலக்கிய அணிச் செயலாளர் பிரேம்சந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்குகிறார்கள்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு பள்ளிக்கரணையில் கிறிஸ்துமஸ் விழா மாவட்டத் தலைவர் மடிப்பாக்கம் எஸ்.சாமுவேல் ரவி தலைமையில் நடைபெறுகிறது.

    பாஸ்டர் டி.கோபால்ராஜ் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்குகிறார். பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். வர்த்தக அணித் தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், கலை இலக்கிய அணிச் செயலாளர் பிரேம்சந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்குகிறார்கள்.

    இதில் நிர்வாகிகள் ஆர்.சிவகுமார், ஜி.சந்தானம், டி.உதயகுமார், வி.எஸ்.கே.செந்தில்குமார், சி.பி.செல்வன், ஏ.அமல்ராஜ், ஜெ.கிருபாகரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    • டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன.
    • ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது வாடிக்கை.

    கொரோனா தாக்கத்தால் 2 ஆண்டுகள் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக அதிகளவில் மக்கள் கூடவில்லை. இந்த ஆண்டு கொரோனா அச்சம் முற்றிலுமாக விலகி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுவை தயாராகி வருகிறது.

    டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் புதுவையில் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விடப்பட உள்ளது. புதுவையில் தற்போது குளு, குளுவென குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஓட்டல்கள், விடுதிகளில் முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நட்சத்திர விடுதி முதல் சாதாரண விடுதி வரை ஆன்லைன் மூலம் வெளிமாநிலத்தினர் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன. ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் அனுமதி பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

    பல்வேறு மைதானம், திடல்கள், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புதுவையில் பல்வேறு கடற்கரைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை சில நாட்களே உள்ளதால் பண்டிகை பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    மிஷன்வீதி, காந்திவீதி, நேருவீதிகளில் கிறிஸ்துமஸ் குடிலுக்கு தேவையான பொருட்கள் விற்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மிஷன்வீதி ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே குடில்களுக்கு தேவையான சொரூபங்கள் விற்பனை ஜரூராக நடக்கிறது. கிறிஸ்துமஸ் கேரல்ஸ், கலைநிகழ்ச்சிகளும் களைகட்டியுள்ளது.

    தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 24-ந் தேதி நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலியும், 25-ந்தேதி காலை பிரார்த்தனையும் நடக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார், குடில்களை அமைத்து கிறிஸ்து பிறப்பு பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

    • பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது
    • மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கன்குடியில் பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரியின் வளாகத்தில் பேவர் பிளாக் பாதை அமைக்கப்பட்டு அதை கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்தார்கள்.இதையடுத்து கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சிக்கு ஆயர் தலைமை தாங்கி கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்து செய்தியை வழங்கினார். விழாவிற்கு கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளர் பி. சிங்கராயர், லால்குடி மறைவட்ட முதன்மை குரு ஆர்.பீட்டர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.மேலும் இவ்விழாவிற்கு பல்வேறு அருட்பணியார்கள், அருட் சகோதரிகள், விருந்தினர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் முனைவர் எஸ்ஜான் கென்னடி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி கல்லூரியில் பயிலும் பயிற்சி ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமிக்கு, கல்லூரி முதல்வரும், தாளாளருமான முனைவர் ஜான் கென்னடி சால்வை அணிவித்து வரவேற்றார். அருகில் மறைமாவட்ட பொருளாளர் சிங்கராயர், லால்குடி மறைமாவட்ட அதிபர் பீட்டர் ஆரோக்கியராஜ் உள்ளனர்.


    • புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி- தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெறும்

    நாகர்கோவில்:

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவின் 25-ம் ஆண்டையொட்டி வெள்ளிவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி, 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) கிறிஸ்துமஸ் பேரின்ப பெரு விழாவாக நடைபெறு கிறது.

    இதில் தேவ ஊழியர்கள் அனிசன், சாமுவேல், எலி யாஸ் ஜேக்கப் (துபாய்) ரவி மணி(பெங்களூரு)ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தி அளிக்கி றார்கள். மேலும், ஜெர்சன் எடின்புரோ மற்றும் ஆல்பன் தாமஸ் ஆகியோர் பாடல் ஆராதனை நடத்துகிறார்கள். அதனைதொடர்ந்து சிறப்பு செய்தியாளர் பால்தி னகரன் செய்தி அளிக்கிறார்.

    23-ந்தேதி மாலை சரியாக 5.30 மணிக்கு அருமனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 52 கலைகுழுக்களைச் சேர்ந்த சுமார் 1000 கலைஞர்கள் நடத்தும் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவள வன் எம்.பி. தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெறும். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் முத்தரசன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் விஜய்வசந்த், செல்லகுமார், தி.மு.க.வைச் சேர்ந்த மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்.

    ம.தி.மு.க அமைப்பு செயலா ளர் துரை வைகோ. எஸ். டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைதலைவர் தெஹ்லான் பாஹவி, மாநில தலைவர் நெல்லை முபாரக் பெங்க ளூரு ராபாட் கிறிஸ்டோபர், எஸ்.ஆர்.எம். கல்வி குழும தலைவர் மற்றும் ஐ.ஜே.கே கட்சியினுடைய மாநில தலைவர் ரவி பச்சைமுத்து திரைப்பட இயக்குனர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த். இந்திய குடியரசு கட்சி தமிழக தலைவர் சூசை முன்னாள் மற்றும் இன்னாள் பேராயர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு கேக் வெட்டி சிறப்புரையாற்றுகிறார். தெலுங்கானா முதல்-மந்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தொடர்ந்து பாடகர் கானா பாலா, ரேஷ்மா ராகவேந்திரன் ஆகியோரின் பின்னணி பாடல்களுடன் அமைந்த பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இத்தகவலை அருமனை கிறிஸ்தவ இயக்கசெயலாளர் அருமனை ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

    • நாங்கள் கூட்டணி வைக்கிறபோது நாட்டிற்கு பல நன்மைகளை செய்வதற்கு அது பயன்படுகிறது.
    • இனிகோ செய்யும் கூட்டணி இந்த சமுதாயத்துக்கு பயன்படுகிறது.

    சென்னை:

    கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெரு விழா நேற்று கொண்டாடப்பட்டது. அன்பின் கிறிஸ்துமஸ் விழா என்று பெயரிடப்பட்ட இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கிறிஸ்துபிறப்பு பிரமாண்ட குடிலை திறந்து வைத்தார். அவரை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

    விழாவில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி மேடையில் இருந்த கிறிஸ்தவ பேராயர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.

    கிறிஸ்துமஸ் விழாவை இனிகோ இருதயராஜ் தொடர்ந்து 13 ஆண்டு காலமாக நடத்தி கொண்டிருக்கிறார்.

    நாங்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி அமைப்போம். 5 வருடத்திற்கு ஒருமுறை அந்த கூட்டணி அமைக்கப்படும். ஆனால் இவர் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வருடமும் கூட்டணி அமைத்து கொண்டிருக்கிறார். என்னையும் தவறாமல் அழைத்து வருகிறார்.

    நாங்கள் கூட்டணி வைக்கிறபோது நாட்டிற்கு பல நன்மைகளை செய்வதற்கு அது பயன்படுகிறது.

    ஆனால் இனிகோ செய்யும் கூட்டணி இந்த சமுதாயத்துக்கு பயன்படுகிறது.

    இது மதத்தின் விழாவாக இல்லாமல் ஒருமத நம்பிக்கையாளர்கள் பங்கேற்க கூடிய விழாவாக இல்லாமல் அனைத்து மதத்தவரும் பங்கேற்க கூடிய வகையில் இந்த விழா நடக்கிறது.

    இங்கே பேசியவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு முன்வராவிட்டால் மாநில அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

    மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றகழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை இனிகோ இருதயராஜ் வழங்கினார். மு.க.ஸ்டாலின் ஒன்றரை ஆண்டில் செய்த சாதனைகளை தொகுத்து இனிகோ இருதயராஜ் வெளியிட்ட காணொலி காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதை தமிழ்நாடு முழுவதும்எடுத்து சென்று மக்களிடத்தில் போட்டு காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

    ×