search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடு விடும் விழா"

    • ஒடுகத்தூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
    • பேரூராட்சி தலைவரின் கணவரை தாக்கியவர்களை கைது செய்யும் வரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மாடு விடும் நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது தி.மு.க. பேரூராட்சி தலைவர் சத்தியவதியின் கணவர் பாஸ்கரனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க. பேரூராட்சி தலைவரின் தம்பி குபேந்திரன் (45), என்பவர் எங்கள் குடும்பத்தினருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என்று தகராறு செய்துள்ளார்.

    இதனால் பாஸ்கரனுக்கும், குபேந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் பாஸ்கரன் அண்ணா நகர் பகுதிக்கு சென்றார்.

    அவரை வழிமறித்த குபேந்திரன் பாஸ்கரனை சரமாரியாக தாக்கியுள்ளார். அதேபோல், அங்கிருந்த 5 பேர் பாஸ்கரனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, தகவலறிந்த பாஸ்கரன் உறவினர்கள் அவரது மனைவியும் பேரூராட்சி மன்ற தலைவருமான சத்தியாவதி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் ஒடுகத்தூர் பஸ்நிலையம் வந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் ஒடுகத்தூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

    தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேரூராட்சி தலைவரின் கணவரை தாக்கியவர்களை கைது செய்யும் வரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம் என்று கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் காரணமாக ஒடுகத்தூர் பஸ்நிலையம் வரும் அனைத்து பஸ்களும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு முன்பு தடுத்து நிறுத்தி மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் இன்று காலை பாஸ்கரனை தாக்கியவர்களை கைது செய்வதாக கூறிய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒடுகத்தூரில் இன்று 2-வது நாளாக கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒடுகத்தூர் பஜார் வீதி வெறிச்சோடியது.

    • பொது மக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொங்கல் திருவிழா முன்னிட்டு காளை விடும் விழா நடைபெறுவது வழக்கம் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகளை கொண்டு வந்து விடுவது வழக்கம்.

    இதில் திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்புக் கருதியும் போலீஸ் கொடி அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள கடலாடி, கீழ்பாலூர், வீரளூர், மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம் புதூர், கேட்டவரம்பாளையம், உட்பட பல்வேறு கிராமங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

    • வேலூரில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்
    • விழா நடக்கும் பகுதிகளில் கிணறுகளை மூட உத்தரவு

    வேலூர்:

    எருதுவிடும் திருவிழாவில் கால் முறிவு ஏற்பட்ட மாட்டுக்கு 4 வகையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    வாணியம்பாடி வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாபு. விவசாயி. இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த மாடு எருது விடும் திருவிழாவுக்காக தயார் படுத்தி வந்தார்.

    பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதல்பரிசை வென்றுள்ளது. எனவே அந்த காளைக்கு வெள்ளகுட்டை பைபாஸ் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பெத்தூர் என்ற பகுதியில் சமீபத்தில் நடந்த எருதுவிடும் திருவிழாவில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடியது. அதில் முதல்பரிசை வென்றது. ஆனால் மாடு ஓடியபோது திடீரென காளையின் கால் முறிந்து எலும்பு இரண்டு துண்டாகியது.

    படுகாயமடைந்து உயிருக்கு போராடிய காளையை வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

    மாட்டினை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி டாக்டர் நாசர் தலைமையில் டாக்டர் ரவிசங்கர் மற்றும் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

    காளையின் காலில் இரும்பு ராடு மற்றும் பிளேட் ஆகியவை அறுவை சிகிச்சைகள் மூலம் பொருத்தப்பட்டது. மேலும் கால் நரம்பு சிதைவு ஏற்பட்டிருந்ததால் அதற்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

    4 வகையான அறுவை சிகிச்சை

    இதுதவிர, கால் பகுதியில் சதைகள் முற்றிலுமாக சிதைந்திருந்ததால் தொடையில் இருந்து சதைகள் எடுத்து காலில் பொருத்தி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இந்த காளைக்கு மேற்கொள்ளப்பட்ட 4 வகை அறுவை சிகிச்சையும் முதன் முதலாக புதிய முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கிணறுகளை மூட உத்தரவு

    வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    78 இடங்களில் விழாக்கள் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் முதல்கட்டமாக 43 கிராமத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மேற்கொண்டு வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று விழாக்குழுவினருக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அதேவேளையில் விழா நடத்தும் விழாக்குழுவினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு விழா நடத்துவதில் விழாக்குழுவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    கடந்த ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருது விடும் திருவிழாக்களில் ஓடிய காளைகள் பல கிலோ மீட்டர் சீறியபடி ஓடின.

    இதனால் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மீது மோதுவது, கீழே விழுந்து மாடுகள் காயமடைவது, கிணற்றுக்குள் மாடுகள் தவறி உள்ளே விழுவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. கிணற்றுக்குள் விழுந்த மாடுகளை மீட்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தின. எனவே இந்தாண்டு புதிதாக விழா நடைபெறும் பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள கிணறுகள் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விழாவில் துள்ளிவரும் காளைகள் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுவதை தடுக்கவும், மதுபோதையில் இளைஞர்கள் கிணற்றுக்குள் விழுவதை தடுக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திறந்த வெளி கிணறுகளை கம்புகள் அல்லது இரும்பு கம்பிகள் கொண்டு தற்காலிகமாக மூடி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.

    • இடம் குறித்து நாளை இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் நடத்து வதற்கு அனுமதி கோரி 182 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள் ளன. அவற்றின் மீது பரிசீலனை செய்யப்பட்டு நாளை இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

    பொங்கல் பண்டிகையை யொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்தப் படுவது வழக்கம். இந்த விழாக்கள் நடத்துவதற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப் படுகிறது.

    இந்த விண்ணப் பங்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடைய கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு எருது விடும் விழா நடத்துவதற்கான அனுமதி கோரும் விண்ணப் பங்கள் ஆன்லைன் மூலம் வந்து சேருவதற்கு நேற்று முன்தினம் மாலை (வெள்ளிக் கிழமை) கடைசி என்று அறி விக்கப்பட்டது.

    எருது விடும் விழாக்கள் அனுமதிக்கப்படும் இடத்தில் மட்டுமே நடத்த வேண்டும். காளையின் பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர் அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு காளையும் கால்நடை துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட பிறகே அனு மதிக்கப்படும்.

    செயல் திறனை அதிகரிக்கும், எரிச்சலூட்டும் மருந்துகள் செலுத்தப்பட்ட காளைகளுக்கு அனுமதியில்லை. ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே ஒட அனுமதிக்கப்படும்.காளைகளுக்கு போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனைகள் மேற் கொண்டும் விழாவிற்கு அழைத்து வரவேண்டும்.

    விழா முடிந்ததும் காளை களுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு செல்லவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    அதன்படி, வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்திட அனுமதி கோரி நேற்று முன்தினம் மாலை வரை மொத்தம் 182 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் மீது பரிசீலனைக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்பட்டு விழா நாள், இடம் குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் மனு
    • 250 முதல் 300 வரை மட்டுமே டோக்கன்கள் வழங்க வேண்டும்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இருந்து மாடு விடும் திருவிழா நடைபெற அனுமதி பெற்றுத் தரக் கோரி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் காலம் தொட்டு சுமார் 100 ஆண்டுகளாக கோவில் திருவிழாக்களின் போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்று வந்தது.

    கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா காரணமாக 30-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    மேலும் பக்கத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் சுமார் 150 இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 இடங்களிலும் நடைபெற்றது.

    சென்ற ஆண்டு இந்த மாவட்டத்தில் மட்டும் தான் தமிழகத்தில் மிக குறைவான இடங்களில் நடைபெற்றது. மேற்படி எருது விடும் திருவிழாவின் பொழுது தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெற்றி டவும் எருதுகள் ஒவ்வொரு முறையும் இரண்டு சுற்றுகள் விட ஆவண செய்யுமாறும்,

    ஏற்கனவே கிராமங்களில் நடைபெற்ற வீதிகளில் எருது விடும் திருவிழா நடைபெற்ற ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் எருது விடும் கிராமங்களில் 250 முதல் 300 வரை மட்டுமே டோக்கன்கள் அட்டைகள் வழங்குமாறும் சங்கத்தின் மூலம் அனுமதித்து பெற்று விடவேண்டும்.

    மேலும் மற்ற மாவட்டங்களில் நடைபெறுவது போல இந்த ஆண்டு அனைத்து கிராமங்களிலும் கோவில் திருவிழாவின் போதும் எருது விடும் திருவிழா நடத்த அனுமதி பெற்று தர வேண்டுகிறோம்.

    அதன்படி திருப்பத்தூர் தாலுகாவில் 33 கிராமங்களிலும், நாட்டறம்பள்ளி தாலுகாவில் 15 கிராமங்களிலும், வாணியம்பாடி தாலுகாவில் 22 கிராமங்களிலும், ஆம்பூர் தாலுகாவில் 7 இடங்களிலும் இந்த எருது விடும் திருவிழா அனுமதிக்கப்பட்டுள்ளது.

    எனவே தடையின்றி எருது விடும் திருவிழா நடத்த கூடிய அனுமதி பெற்று தரும்படி கேட்டுக் கொள்கின்றோம் என தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • ஆன்லைனில் பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
    • 182 விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனுமதிகோரும் விண்ணப்பங்களை ஆன்லைன் முகவரி மூலம் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டும்.

    விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் நேற்று மாலை 5 மணி வரை மட்டுமே ஆன்லைன் முறையில் பெறப்பட்டது. ஆன்லைனில் பதிவு செய்யப்படாத எந்த ஒரு விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அனுமதிக்கப்படும் இடத்தில் மட்டுமே மாடுவிடும் விழா நடத்த வேண்டும். காளையின் பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர் அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு காளையும் கால்நடை துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு மட்டுமே அனுமதிக்கப்படும்.

    செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் எரிச்சலூட்டும் மருந்துகள் செலுத்தப்பட்ட காளைகளுக்கு அனுமதியில்லை.

    ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே ஓட அனுமதிக்கப்படும். காளைகளுக்கு போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டும். விழாவிற்கு அழைத்து வரவேண்டும்.

    விழா முடிந்தும் காளைகளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டும் செல்லவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை எருது விடும் விழா நடத்த அனுமதி கோரி 182 விண்ணப்பம் அளிக்க பட்டுள்ளது.

    வருகிற 9-ந் தேதி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விழா நாள் மற்றும் இடம் குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே அனுமதி
    • 2 மணிக்குள் முடிக்க வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனுமதிகோரும் விண்ணப்பங்களை https://forms.gle/GDWNspXeNc1DfW4r8 என்ற ஆன்லைன் முகவரி மூலம் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டும்.

    விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் நாளை 06.01.2023 மாலை 5 மணி வரை மட்டுமே ஆன்லைன் முறையில் பெறப்படும். இணைய தளத்தில் பதிவு செய்யப்படாத எந்த ஒரு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    அனுமதிக்கப்படும் இடத்தில் மட்டுமே மாடுவிடும் விழா நடத்தப்பட வேண்டும். 09.01.2023 அன்று இறுதி முடிவு எடுக்கப்பட்டு விழா நாள் மற்றும் இடம் குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.

    சம்மந்தப்பட்ட விழாக்குழுவினர் விழா நாளுக்கு 15 நாட்கள் முன்னதாக விண்ணப்பப்படிவம், காப்பீடு செய்யப்பட்டதற்கான ஆவணம், ரூ.10,000-க்கான வரைவோலை, பிரமாண பத்திரம் ஆகியவற்றுடன் கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்படி விண்ணப்பத்துடன் விழாவில் பங்கேற்கும் அதிகபட்ச காளைகளின் எண்ணிக்கை மற்றும் காளைகளின் பட்டியல் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    விழா நடைபெறும் இடம் திறந்தவெளி மைதானமாகவும். குடியிருப்புகளுக்கு தொலைதூரத்தில் உள்ளதாக அமைந்துள்ள திடலினை தேர்வு செய்து அந்த திடலின் வரைபடத்தை கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநரிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

    ஓடு தளம் முடியுமிடத்திலும் 8 அடி உயரத்தில் வாயில் அமைக்கப்பட வேண்டும்.

    இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பேனர்கள் வைக்கப்பட வேண்டும். காளைகளுக்கு தேவையான அளவு தங்குமிடம், தண்ணீர் வசதி மற்றும் தீவண வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

    ஒவ்வொரு காளைகளுடனும் அந்த காளையின் பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர் அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு காளையும் கால்நடை துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு மட்டுமே அனுமதிக்கப்படும்.

    செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் எரிச்சலூட்டும் மருந்துகள் செலுத்தப்பட்ட காளை களுக்கு அனுமதியில்லை. விழாவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அரசு அலுவலர்களுக்கு உரிய முறையில் உணவு,

    குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். விழா தளத்தில் ஒலிபெருக்கிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

    வாடிவாசல், விழா அரங்கம் ஆகியவற்றை முழுமையாக கண்காணிக்க கேமராவோ அல்லது வெப் கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே ஓட அனுமதிக்கப்படும். விழாவினை காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும்.

    இது தவிர மாவட்ட நிர்வாகம் நிலைமைகளுக்கேற்ப பிறப்பிக்கும் உத்தரவுகளை கடைபிடித்து விழா நடத்த தெரிவிக்கப்படுகிறது.

    உரிமையாளர்கள் காளைகளுக்கு போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டும். விழாவிற்கு அழைத்து வரவேண்டும்.

    விழா முடிந்தும் காளைகளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டும் செல்லவேண்டும்.

    ஓடு பாதையின் இறுதியில் காளைகளை பாதுகாப்பாக பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×