search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் மோதல்"

    • 3 பைபர் படகுகளையும் விசைப்படகில் கட்டி இழுத்துச் சென்றனர்.
    • இரும்பு உருண்டை, ஐஸ்க ட்டி போன்றவற்றையும் வீசி தாக்குதல்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் எல்லையம்மன் கோவில்தெருவை சேர்ந்த சத்யராஜ் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சற்குணம் (35), செந்தில் (50) வில்பிரட் ஆகியோர் கடந்த 28-ந்தேதி காலை செருதூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இதேபோல், செருதூர் வடக்குத்தெருவை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அவரும் அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (40), ஆனந்தவேல் (38), அஜித் (24) ஆகியோரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    இதேபோல், செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த செந்தில் (42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த மணிவண்ணன் (28), காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த அருள் வடிவேல் (40), சரவணன் பிள்ளை, சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரமேஷ் (38) ஆகியோரும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அப்போது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தோப்புத்துறையில் இருந்து கிழக்கே சுமார் 23 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் தங்களது படகை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அங்கு 2 விசைப்படகுகளில் வந்த மீனவர்கள் இவர்களது வலையை அறுத்துவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து கேட்டதற்கு தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மேற்கண்ட 3 பைபர் படகுகளையும் அவர்களது விசைப்படகில் கட்டி இழுத்துச் சென்றனர். அதோடு மட்டுமின்றி இரும்பு உருண்டை, ஐஸ்க ட்டி போன்றவற்றையும் வீசி தாக்கி உள்ளனர்.

    பின்னர், காயங்களுடன் மீனவர்கள் நேற்று மாலை கரை திரும்பினர். தகவல் அறிந்ததும் சக மீனவர்கள் உதவியுடன் காயமடைந்த செந்தில், வில்பிரட், சத்தியமூர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    • பைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகை:

    நாகப்பட்டினம் மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த செருதூரை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகையில் பைபர், விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது விசைப்படகு மீனவர்களுக்கும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    அந்த காட்சியில் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பைபர் படகு மீனவர்கள், இரண்டு விசை படகின் மீது மோதுவது போன்று பதிவாகி இருந்தது. நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கிடையே மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், தகராறில் படகுகளை மோத செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நங்கூரமிட்டு இருந்த பைபர் படகின் கயிற்றை, விசைப்படகு மாட்டி இழுத்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் 4 பைபர் படகுகளில் 2 பைபர் படகுகள் கரை வந்து சேர்ந்துள்ளதாகவும் மற்ற 2 பைபர் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மோதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர்.
    • கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்மநாதன் (வயது 33), சிவநேசசெல்வம் (25), காலாத்திநாதன் (22). 3 பேரும் சகோதர்கள். இவர்கள் நேற்றிரவு பைபர் படகில் நாகை துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி, பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகில் அங்கு மீன் பிடிக்க வந்தனர். பின்னர் ஆத்மநாதன் மீன் பிடிப்பதற்காக கடலில் விரித்து வைத்திருந்த வலையை அறுத்து விட்டு சென்றனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கோஷ்டி மோதலாக உருவெடுத்தது.

    இதில் ஆத்திரமடைந்த பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர். இதனால் பைபர் படகு நடுகடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலாத்திநாதன் ஆகிய 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். கடலில் விழுந்தவர்கள் கவிழ்ந்த பைபர் படகை பிடித்து கொண்டு நீந்தினர். இதைத் தொடர்ந்து பாலகுமார் உள்ளிட்ட 8 பேரும், கடலில் தத்தளித்த 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இந்நிலையில் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த நம்பியார்நகரை சேர்ந்த மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்களை மீட்க வந்தனர். இதற்குள் கடலில் விழுந்த காலாத்திநாதன் மாயமானார். இதைத் தொடர்ந்து ஆத்மநாதன், சிவநேசசெல்வம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவநேசசெல்வம் இறந்தார். ஆத்மநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். பாலகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க 2 கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோஷ்டி மோதலில் மீனவர் ஒருவர் இறந்தது, கடலில் விழுந்து மீனவர் மாயம் ஆகிய சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து முத்துகுடா வரையிலும் 32 மீனவ கிராமங்கள் உள்ளன.
    • இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து முத்துகுடா வரையிலும் 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மீன் பிடித்தொழிலுக்காக கடலுக்குள் சென்று வருகின்றன.

    அதே போன்று ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லுகின்றன. இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் கரை பகுதியிலிருந்து 5 நாட்டிக்கல் வரையிலும், 5 நாட்டிக்கலுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வரையறுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கின்ற கரை பகுதியிலிருந்தே விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

    ஏனெனில் விசைப்படகுகளில் அரிவலை போன்ற வலைகளை பயன்படுத்துவதால் மீன் வளர்ச்சிக்கு ஆதாரமான கடல்பாசி, பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் அனைத்தும் அரிக்கப்படுவதால் எதிர் காலத்தில் கடலில் மீன் இனமே இருக்காது எனக் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்களின் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புதுக்குடி பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனர்வர்கள், அத்துமீறிய கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளனர்.

    அப்போது இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து தங்கள் பகுதியிலுள்ள வலைகளை சேதப்படுத்தி மீன்பிடித்ததாகக் கூறி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 3 விசைப்படகுகள் மற்றும் அதில் சென்ற 12 மீனவர்களையும் புதுக்குடி நாட்டுப் படகு மீனவர்கள் சிறைபிடித்தனர்.

    இதற்கிடையில் படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சென்ற மீன்வளத்துறையினர், காவல்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு 12 மீனவர்கள் மட்டும் காவல்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்னர். மேலும் சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகுகள் புதுக்குடி கடல் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடலில் வலை விரித்து மீன்பிடிப்பதில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் நடைபெற்றுவருவது தொடர்கதையாகி உள்ளது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே இருதரப்பு மீனவர்களின் கோரிக்கையாகும்.

    • சின்ன முட்டம் மீனவர்கள் ஒரு வீடியோவை கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல் குழும போலீசாரிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர்.
    • புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கூடங்குளம் கடலோர காவல்படை போலீசாருக்கும் மீனவர்கள் மனு அளித்தனர்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த சமாதானராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். அந்த விசைப்படகை முட்டத்தை சேர்ந்த கிறிஸ்டி என்பவர் ஓட்டினார்.

    நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் இருந்து சுமார் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அதனை அறிந்த இடிந்த கரை மீனவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் 12 நாட்டுப்படகுகளில் கடலுக்குள் சென்றனர். அவர்கள், சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.

    அந்த பகுதியில் தாங்கள் மீன்பிடிக்க வலை விரித்து வைத்திருப்பதாகவும், சின்னமுட்டம் மீனவர்களால் அந்த வலைகள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டதாகவும் கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. அப்போது ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சின்ன முட்டம் மீனவர்கள் ஒரு வீடியோவை கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல் குழும போலீசாரிடம் காண்பித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தனர்.

    அதன்அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கூடங்குளம் கடலோர காவல்படை போலீசாருக்கும் மீனவர்கள் மனு அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் நவீன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களான ஜெனிகர், சிபி, பீட்டர், ஆனந்த், சைல்ஸ், ராயப்பன், வளன் மற்றும் பெயர் தெரியாத 30 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இடிந்தகரை மீனவர்களும் கூடங்குளம் கடலோர காவல்படை போலீசில் சின்னமுட்டம் மீனவர்கள் மீது ஒரு புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக மீனவர்களிடையே மீன் பிடித் தொழில் செய்வதில் மோதல் ஏற்பட்டு வருகிறது.
    • மீன்பிடிப்பதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்துவருவதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    பழவேற்காட்டை சுற்றி உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பழவேற்காடு ஏரி மற்றும் கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக மீனவர்களிடையே மீன் பிடித் தொழில் செய்வதில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் பழவேற்காட்டில் உள்ள மீன் ஏலக் கூடத்துக்கு விற்பனைக்கு வரும் மீன்கள் வரத்து பெருமளவு குறைந்து விட்டது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று பழவேற்காடு மீன்சந்தையில் வழக்கமான மீன்விற்பனை இல்லை. குறைந்த அளவே மீன்கள் விற்பனைக்கு வந்ததால் மீன்சந்தை களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    பெரிய வகை மீன்கள் அதிக அளவில் வராததால் விற்பனைக்கு இருந்த சிறிய வகை மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்து இருந்தது.

    ரூ.200-க்கு விற்கப்பட்ட இறால் இன்று காலை ரூ.500 வரை விற்கப்பட்டது. இதேபோல் ரூ.300-க்கு விற்ற நண்டு ரூ. 800 வரை விற்பனை ஆனது.

    ரூ.500-க்கு விற்ற வஞ்சிரம் ரூ.1000 வரையிலும், ரூ.100-க்கு விற்ற மத்தி ரூ.300-க்கும், கானங்கத்தை ரூ. 500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, பழவேற்காடு பகுதியில் மீன்பிடிப்பதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்துவருவதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விற்பனைக்கு மீன்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது என்றனர்.

    • கடலில் பயன்படுத்தும் வலையை பழவேற்காடு ஏரியில் பயன்படுத்தக் கூடாது.
    • இரு தரப்பினரும் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்களுக்கும், நடுவூர் மாதா குப்பம், ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம் மீனவர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது.

    கடலில் மீன் பிடிக்கும் கூனங்குப்பம் மீனவர்கள் ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்பட வில்லை.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    கடலில் பயன்படுத்தும் வலையை பழவேற்காடு ஏரியில் பயன்படுத்தக் கூடாது எனவும், பாரம்பரிய ஒதுக்கீடு பகுதியில் மட்டுமே மீன்பிடிக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார். இதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    இருதரப்பு மீனவர்களிடையேயும் இன்னும் சுமூகமான முடிவு வர வில்லை.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழவேற்காடு ஏரியில் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, கூனங்குப்பம் மீனவர்களும் அங்கு மீன்பிடித்ததாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இதுகுறித்து இரு தரப்பினரும் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே பழவேற்காடு ஏரியில் கோட்டைக்குப்பம் மீனவர்கள் நேற்று மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது, ஏரியின் ஓரக்கரைபாடு எனப்படும் இடத்தில் கூனங்குப்பம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் அந்த பகுதியை தாண்டி வலையை வீசியதாக கூறி கோட்டைக்குப்பம் மீனவர்களுக்கும், கூனங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் அங்கு வந்தனர். அவர்களுக்கும் கூனங்குப்பம் மீனவர்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் நடுவூர் மாதா குப்பத்தை சேர்ந்த ராபர்ட், சந்தியாகிராஜ், சகாயராஜ், மார்டீன், ஆரோக்கியராஜ், பாலு, சாலமன் ஆகிய 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் 5 பேர்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதட்ட மானநிலை ஏற்பட்டு உள்ளது. பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே மோதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி நேற்று இரவு கோட்டைக்குப்பம், நடுவூர்மாதா குப்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பழவேற்காடு பஸ்நிலையம் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க பழவேற்காட்டில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    ×