search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா போதை"

    • பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தனர்.
    • போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் அதனை புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை கைப்பற்றினர்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா புகைத்தபடி வாலிபர்கள் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோவில் 2 வாலிபர்கள் போதை அதிகரிக்கவே அவர்களை மற்றவர்கள் தூக்கிச் செல்வது போலவும், அதற்கேற்றபடி சினிமா பாடலும் இடம் பெற்றிருந்தது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தனர். அப்போது கஞ்சா போதையில் வீடியோ பதிவிட்டது பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்திக், பாலசுப்பிரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகியோர் என தெரியவரவே அவர்களை கைது செய்தனர்.

    இவர்கள் அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிலும் சாமி வேடமணிந்து ரீல்ஸ் பதிவிட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் அதனை புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மதி, கஞ்சா விற்பனை செய்த பாலசமுத்திரத்தை சேர்ந்த பாஸ்கர், முத்துராஜா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இதுபோல குடிபோதை மற்றும் கஞ்சா போதையில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறிது நேரம் கழித்து மீண்டும் வாலிபர் மட்டும் சிறுவன் இல்லாமல் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.
    • தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், நேரில் வந்து பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மன்மதன். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சீதா என்ற மனைவி உள்ளார்.

    இந்த தம்பதியினருக்கு பல ஆண்டுகள் கழித்து பிறந்த மகன் பொன்னரசு (வயது 10). இந்த சிறுவன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் சிறுவனை காணவில்லை.

    இந்த நிலையில் பதறிப்போன சிறுவனின் உறவினர்கள் அவனை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சிறுவன் மாயமானது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ்அப் முகநூலில் பதிவிட்டு காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    இதனை அடுத்து அதியமான்கோட்டை போலீசார் விசாரித்ததில் சுமார் 12 மணியளவில் பள்ளியில் இருந்த பொன்னரசுவை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்துச் சென்றதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்த சிலர் கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்திற்கு சென்று தீவிர விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுவன் பொன்னரசு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் சென்றது பதிவாகி இருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வாலிபர் மட்டும் சிறுவன் இல்லாமல் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் மகன் இளங்கோ (19) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இளங்கோவை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த கிராம மக்கள் இரவு 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டனர். சிறுவனுக்கு என்ன ஆனது என உறவினர்களும், கிராம மக்களும் ஒன்று சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், நேரில் வந்து பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது இளங்கோ கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சா மயக்கத்தில் இருந்த இளங்கோ பள்ளியில் இருந்த சிறுவனை அழைத்துச் சென்று அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விவசாய கிணற்றுக்கு சென்று இரவு 12 மணி அளவில் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்தில் பொன்னரசுவின் பிணத்தை கிணற்றில் இருந்து மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இளங்கோவனிடம் எதற்காக சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, இலளிக்கம், மிட்டாரெட்டி அள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கஞ்சா சரளமாக புழக்கத்தில் இருப்பதாகவும் மாணவர்கள், இளைஞர்கள் சிலர் இதற்கு அடிமையாகி வருவதும், அதனால்தான் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் சில அலோபதி மருந்து கடைகளில் ரூ.10-க்கு போதை ஊசி போடுவதாக அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தனர்.

    • தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
    • கஞ்சா போதையில் தாயை அடித்து கொன்று புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் சேவாக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (45) கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்களது பெரிய மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் சேவாக் (வயது 21) போக்சோ வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்தார். தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் கடந்த 21-ந் தேதியன்று கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    வீட்டிலிருந்த கஸ்தூரியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தராததால் சேவாக்கிற்கும் கஸ்தூரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தாய், மகன் இருவரையும் காணவில்லை. அவர்களது வீடும் பூட்டியிருந்தது. அவர்களது உறவினர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டிற்குள் கஸ்தூரியின் உறவினர்கள் சென்றனர். அங்கிருந்த பாயில் ரத்தக்கரை படிந்திருந்தது. அதற்கடியில் பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இது குறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

    மேலும், கஞ்சா போதையில் தாயை அடித்து கொன்று புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் சேவாக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர்.
    • கஞ்சா அருந்திய நபர் ஒருவர் கோவில் கருவறையில் புகுந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை, பூச்சக்காட்டிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் வாலிபர் ஒருவர் தன்னை யாரோ வெட்ட வருகிறார்கள் எனக்கூறி கோவில் கருவறைக்குள் சென்று பதுங்கி கொண்டார். இதனை கண்ட கோவில் தரிசனத்துக்காக வந்திருந்த பெண் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் இது குறித்து கூறினார்.

    உடனடியாக கருவறைக்குள் சென்ற நிர்வாகிகள் அங்கு பதுங்கியிருந்த நபரை பிடித்து வெளியே இழுத்து வந்து தர்மஅடி கொடுத்தனர். அடி தாங்க முடியாமல் வலியால் அலறிய வாலிபர் தன்னை ஒருவன் வெட்ட வருவதாகவும், அதனால் உள்ளே வந்து பதுங்கி கொண்ட தாகவும் கூறினான்.

    இதனை தொடர்ந்து திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர். கோவிலுக்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் வாலிபரின் பெயர் கோகுல் என்பதும், அதே பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் இன்று நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அருந்தியுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெட்ட வந்ததாக கூறி கோவிலின் கருவறைக்குள் புகுந்து மறைந்து கொண்டது தெரியவந்தது.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா அருந்திய நபர் ஒருவர் கோவில் கருவறையில் புகுந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • திருவண்ணாமலையில் பொதுமக்கள் மறியல்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கல்நகர் சுடுகாடு பகுதியில் கஞ்சா போதையிலும், மதுபோதையிலும் அவ்வப்போது சிலர் இரவு நேரங்களில் வழிப்பறி மற்றும் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் இரவு நேரங்களில் சென்றுவர அச்சப்படுகின்றனர்.

    கஞ்சா போதையில் வழிப்பறி

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று கல்நகர் சுடுகாடு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்த முகல்புறா தெருவை சேர்ந்த நசீர் மற்றும் முன்னா ஆகியோரை போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் தகராறில் ஈடுபட்ட நபர்களை அவர்கள் பிடிக்க முயன்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை அவர்கள் அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த நபரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து கம்மங்கொள்ளை தெரு, முகல்புறா தெரு, நபிநாயகன் தெருவை சேர்ந்த பொதுமக்கள், கல்நகர் சுடுகாடு அருகில் கஞ்சா, மது போதையில் சிலர் தகராறிலும், வழிப்பறியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தற்போது தகராறில் ஈடுபட்டு தப்பியோடிய மற்ற நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மதியம் 1 மணி வரை தப்பியோடிய நபர்களை போலீசார் கைது செய்யாததை கண்டித்து கம்மங்கொள்ளை தெரு, முகல்புறா தெரு, நபிநாயகன் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கோபால் தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் வந்து போலீசாருடன் இணைந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது தகராறு மற்றும் வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் போதையில் தகராறில் ஈடுபட்ட 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×