search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குனி திருவிழா"

    • அருப்புக்கோட்டை முத்துமாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கடந்த 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்க்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

    விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கட்டளை தாரர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இந்த திருவிழாவானது 15 நாட்கள் நடைபெறும். வருகிற 4-ந்தேதி அம்ம னுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி அக்கினி சட்டி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெறும்

    7-ந்தேதி தேரோட்டம் நடைபெறும் நிகழ்ச்சியில் புரவலர் ராமர் உற்சவ கமிட்டி தலைவர் மனோக ரன், உற்சவ கமிட்டி கன்வீனர் ராஜரத்தினம், உறவின் முறை காரியதரிசி முத்துசாமி, உறவின்முறை தலைவர் காமராஜன், பொருட்காட்சி கமிட்டி தலைவர் ஆலோசகரமான ரவீந்திரன் பொருட்காட்சி கமிட்டி செயலாளர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன் எஸ்.பி.கே கல்வி குழுமம் தலைவர் ஜெயக்குமார், உறவின்முறை உபதலைவர் முத்துக்குமார், பொருளாளர் செந்தூரன், உதவிச் செயலாளர் சிவக் குமார் எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் சார்லஸ் தியாகராஜன், மெட்ரிக் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன், எஸ்.பி.கே. ஜூனியர் நர்சரி பிரைமரி பள்ளி செயலாளர் ராஜ செல்வம், எஸ்.பி.கே. கல்லூரி செயலாளர் குணசேகரன், எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன் தியாகராஜன், பவுர்ண டைப்ரைட்டிங் பள்ளிச் செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் 40-வது பொருட்காட்சி கடந்த 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • 9-ந் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
    • திருப்பரங்குன்றம் கோவிலின் தேரில் எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உள்ளன.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 9-ந் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி முகூர்த்த கால் ஊன்றப்பட்டு கோவில் வாசல் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய தேர் தயார்படுத்தும் பணி தொடங்கியது. 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் மகாதேர் வலம் வரும். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரினைவடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள். அரிச்சந்திர மகராஜா வழங்கியதாக செவிவழி செய்தி கூறும் இந்த தேரினை வடம்பிடித்து இழுப்பதற்கு கோவில் உருவான காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரிய பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி திருப்பரங்குன்றம் அருகே உள்ளபெருங்குடி, பரம்புபட்டி, வலையப்பட்டி, சம்பக்குளம், நிலையூர், கூத்தியார்குண்டு, தோப்பூர், வேடர் புளியங்குளம், தனக்கன்குளம், வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி ஆகிய கிராமங்களுக்கு சென்று தேரினை இழுப்பதற்காக கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அழைப்பு விடுவது நடைமுறையில் உள்ளது. அதன்படி வருகின்ற 2 -ந்தேதி கோவிலில் இருந்து கோவில் முதல் ஸ்தானிகரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான சுவாமிநாதன் தலைமையில் வைராவி, கணக்குப்பிள்ளை, நாட்டாண்மைகள், காவல்காரர்கள் ஆகியோர் அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று முக்கியஸ்தர்கள், நாட்டாண்மைகள் மற்றும் முதன்மைக்காரர்களை சந்தித்து வெற்றிலை, பாக்கு மற்றும் திருவிழா பத்திரிக்கை ஆகியவை தட்டில் வைத்து தேரினை இழுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம் கோவிலின் தேரில் எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உள்ளன. அதில் ஆறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக தராசு பிடித்து இருப்பது போன்று ஒரு சிற்பம் உள்ளது. இது நீதி, நேர்மை, நியாயத்தின் அடையாளமாக அமைந்து உள்ளதாகவும், இதனால் ்திருப்பரங்குன்றத்தை தராசுக்கார பூமி என்று அழைப்பதாகவும் கூறுகிறார்கள்.

    • 6-ந்தேதி மாடன் தம்புரான் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    • 7-ந்தேதி அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் வீதி உலா வருதல் நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி பரகோடிகண்டன் சாஸ்தா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு தேவாரம் நிகழ்ச்சி, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள், 9.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் மேல்சாந்தி கிருஷ்ணன் பட்டர் பூஜையை நடத்தினார். இதில் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தன், ஸ்ரீகாரியம் சேர்மராஜா, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், வடக்கூர் ஊர் தலைவர் ஈஸ்வரபிள்ளை, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், கவுன்சிலர்கள் நாகலெட்சுமி, மாதேவன்பிள்ளை, மணி, மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், சோலை கணபதிப்பிள்ளை, சங்கரலிங்கம், விநாயகம், முத்துராமன், ஆசிரியர்கள் அருணாசலம், ஆனையப்பன், பிச்சை, முத்துசுவாமி, வீரபாகு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு அப்பர் சாமி எழுந்தருளுதல், இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி, 9 மணிக்கு சாஸ்தா, அம்பாள் மற்றும் விநாயகர் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சாஸ்தா, அம்பாள் பந்தல் வாகனத்தில் பவனி வருதல், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், இரவு 7 மணிக்கு அன்னதானம், கலை நிகழ்ச்சி, 10 மணிக்கு சாஸ்தா மேஷ வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை சாஸ்தா, அம்பாள் வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேகம், இரவு அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 6-ந்தேதி காலை 11 மணிக்கு மாடன் தம்புரான் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்னதானத்தை வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தொடங்கி வைக்கிறார். 8.30 மணிக்கு தம்புரான் விளையாட்டு, 11 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 7-ந்தேதி காலை 8 மணிக்கு சாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்திலும், அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் ஆராட்டுக்கு எழுந்தருளுதல், இரவு 8 மணிக்கு சாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்திலும், அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மேயர் மகேஷ், ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 8-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழா நேற்று இரவு தொடங்கியது. முன்னதாக காலையில் நவசக்தி ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நிகழ்ச்சியும், மூலவர் பிரகாரத்தில் உற்சவ அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து 10.30 மணியளவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்புக்கட்டி விரதம் இருக்க தொடங்கினர். விழாவையொட்டி இன்று இரவு சிம்ம வாகனத்திலும், தொடர்ந்து குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வரும் 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்றைய தினம் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் கோவிலுக்கு வர முடியாதவர்கள் கோவில் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறார். மறுநாள் 6-ந்தேதி இரவு மின்சார தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

    7-ந்தேதி பக்தர்கள் பால்குடம், அக்னி மற்றும் அலகு குத்துதல், அங்க பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 5.50 மணிக்கு ஊஞ்சல் வைபவம் நிகழ்ச்சியும், இரவு 10.20மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 8-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடடேசன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 4-ந்தேதி கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

    மேலும் கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று தீர்த்த காவடி எடுத்து பழனிக்கு வந்து அபிஷேகம் செய்வது பழனி முருகன் கோவிலில் சிறப்பு அம்சமாகும்.

    புகழ்பெற்ற இந்த திருவிழா, உபகோவிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் அன்றையதினம் மலைக்கோவிலில் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டும் நடைபெறுகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது. அதேபோல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம், 4-ந்தேதி மாலை கிரிவீதியில் நடைபெறுகிறது. 7-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • 6-ந்தேதி இரவு விக்னேஸ்வர பூஜை நிகழ்ச்சி நடக்கிறது.
    • 11-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழ்வது சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில். இக்கோவிலில் வருகிற 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 4-ந்தேதி காலை வள்ளி தேவசேனா, சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு வெள்ளி ரதத்தில் வீதி உலா மற்றும் நாட்டிய குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    6-ந்தேதி இரவு விக்னேஸ்வர பூஜை நிகழ்ச்சியும், 7-ந் தேதி காலை வள்ளி தேவசேனா, சண்முக பெருமாள், வேடமூர்த்தி, வள்ளிநாயகி நாரதர், நம்பிராஜன், நந்தமோகினி உற்சவ மண்டபம் எழுந்தருளிகின்றனர்.

    8-ந்தேதி காலை அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி, அளவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், சண்முக பெருமாள், வள்ளிநாயகியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 9, 10 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சியும், 11-ந்தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், வள்ளி தேவசேனா, சண்முகசாமி புறப்படுதல், வேடமூர்த்தி, வள்ளிநாயகியார் பல்லக்கில் வீதி உலா காட்சி நடக்கிறது.

    12-ந்தேதி காலை சண்முக பெருமாளுக்கு 108 சங்காபிஷேகமும், இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • 3-ந்தேதி துரியோதன வதம் கதகளி நடக்கிறது.
    • 4-ந்தேதி சாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா காவில் இருந்து கொடிக்கயிறு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    இந்த ஊர்வலம் மேளதாளம் முழங்க பல்வேறு இந்து இயக்கத்தினர், பக்தர்கள் புடைசூழ ஆற்றூர், கழுவன்திட்டை, சந்தை சந்திப்பு வழியாக கோவிலை அடைந்தது. பின்னர் கோவில் பிரகாரம் மற்றும் கருவறையை சுற்றி வந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் ஆதிகேசவ பெருமாள் முன்பு கொடிக்கயிறு சமர்ப்பிக்கப்பட்டது. திருவிழாவின் முதல் நாளான நேற்று காலையில் நிர்மால்ய தரிசனம், ஹரிநாம கீர்த்தனத்தை, சிறப்பு அபிஷேகம் போன்றவை நடந்தது.

    காலை 9 மணிக்கு வாத்தியங்கள் முழங்க, சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்று விழா பூஜைகளை கோவில் தந்திரி சஜித் சங்கரநாராயணரு நடத்தினார். குழித்துறை தேவசம் சூப்பிரண்டு சிவகுமார், கோவில் மேலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் தீபாராதனை, இரவு நாற்காலி வாகனத்தில் சாமி பவனி வருதல் ஆகியவை நடந்தது.

    விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு நவநீத நாராயணீய சமிதி வழங்கும் நாராயண பாராயணம், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி போன்றவையும், நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 6 மணிக்கு நம்மாழ்வார் குறித்து ஆன்மிக சொற்பொழிவு, இரவு 7.45 மணிக்கு தேவார பஜனை, இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி ஆகியவையும் நடக்கிறது.

    வருகிற 31-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 7.30 மணிக்கு பரத நாட்டியம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் ஆகியவையும், 3-ந் தேதி இரவு 9 மணிக்கு நாற்காலி வாகனத்தில் சாமி பவனி வருதல், இரவு 10.30 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளியும் நடக்கிறது. 4-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, 9.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், 12 மணிக்கு கிராதம் கதகளி ஆகியவையும், விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி ஆராட்டு விழாவுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல் போன்றவையும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது.
    • 7-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் உள்ள மலை மீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவரான முருகனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவசம் அணிந்து மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர் களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    அதன்பிறகு காலை 6.45 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பல்லக்கில் அங்குள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து காலை 7 மணிக்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் மயில் உருவம் பொறிக்கப்பட்ட துவஜா யோகம் என்னும் கொடியை ஏற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கொடிமரத்துக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவில் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இரவு சூரியபிரபை வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளி மலைவலக்காட்சி நடைபெற்றது.

    மேலும் விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற இருக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திரத்தன்று காலை 6 மணிக்கு நடக்கிறது. 5-ந்தேதி தெப்ப உற்சவமும், 6-ந்தேதி முத்து பல்லக்கு உற்சவமும், 7-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.

    • 30-ந்தேதி வள்ளி நாயகி திருமணம் நடக்கிறது.
    • 1-ந்தேதி தங்க ரதத்தில் வீதி உலா நடக்கிறது.

    காரைக்குடி அருகே உள்ளது குன்றக்குடி. இங்கு புகழ் பெற்ற சண்முகநாதபெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான இந்த விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு வெள்ளிக்கேடயத்தில் சண்முகநாதபெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    வருகிற 30-ந்தேதி வள்ளி நாயகி திருமணம் நிகழ்ச்சியும், 1-ந்தேதி தங்க ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ந்தேதி இரவு 8 மணிக்கு தெப்பம் மற்றும் வெள்ளி ரதம் நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 3-ந்தேதி காலையில் தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்ட நிகழ்ச்சியும், இரவு திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந்தேதி பங்குனி உத்திர விழாவையொட்டி காலை உத்திரம் தீர்த்த விழாவும், பக்தர்கள் காவடி, அக்னி காவடி, அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், இரவு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பங்குனி பெருவிழா இன்று முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடக்கிறது.
    • மாட வீதிகளில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா 28-ந்தேதி (இன்று) முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

    அதாவது தேவடி தெருவில் இருந்து - நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு நோக்கி, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி. கோவில் தெரு, ஆடம்ஸ் தெரு மற்றும் ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு நோக்கி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கி, லஸ் சந்திப்பு, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கி, முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாறு தெரு நோக்கியும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவத்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை, வெங்கட கிருஷ்ணா ரோடு, தேவநாதன் தெரு, செயின்ட் மேரீஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி அடையலாம்.

    அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி சந்திப்பு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம். மயிலாப்பூர் கோவில் குளம் அருகில் உள்ள மாநகர பஸ் நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.

    வருகிற 30-ந்தேதி அதிகாரநந்தி திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், ஏப்ரல் 3-ந்தேதி தேர் திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் ஏப்ரல் 4-ந்தேதி அறுபத்து மூவர் திருவிழா பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும், மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

    வருகிற 30 மற்றும் ஏப்ரல் 3, 4-ந்தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

    கிழக்கு மற்றும் வடக்கு புறம் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் தெற்கு புறம் இருந்து வரும் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீசுவரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற வழிவிடு முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 83-வது பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    முன்னதாக விக்னேஸ்வர பூஜை, திரு மஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றி தீபாராதனை காண்பித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கொடியேற்றம் நடந்து முடிந்தபின் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவில் வருகிற 5-ந்தேதி காலை சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நொச்சி வயல் ஊரணி கரையில் உள்ள பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.

    அங்கு காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவை காவடிகளுடன் ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். அன்று இரவு 7 மணிக்கு கோவில் முன்பு பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • 29-ந்தேதி வேணுவனநாதர் தோன்றி வரலாறு வாசித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 4-ந்தேதி செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனையை தொடர்ந்து கொடிபட்டம் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கொடிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி உள்பிரகார தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    கொடிமரத்திற்கு மஞ்சள், வாசனை பொடி, பால், தயிர், இளநீர், அன்னம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 4-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி வேணுவனநாதர் தோன்றி வரலாறு வாசித்தல் நிகழ்ச்சியும், இரவு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருநாளான அடுத்த மாதம் 4-ந் தேதி இரவு கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற்பார்வையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    ×