search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் வன்முறை"

    • ஒருநாள் சட்டசபை கூட்டத்திற்கு குகி-ஜோமி பழங்குடியின அமைப்பு எதிர்ப்பு
    • நாகா எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது

    மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அமைதி நிலவி வருகிறது. புலம்பெயர்ந்தவர்களை, அவர்களது சொந்த இடத்தில் மீண்டும் அமர வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று மணிப்பூர் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இன்று ஒருநாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஒருநாள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி-ஜோமி பழங்குடியின அமைப்பு, கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. இந்த சமூகத்தினரை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் மெய்தி சமூகத்தினர் அதிகமாக வாழும் இம்பால் பகுதிக்கு செல்வது பாதுகாப்பனது அல்ல எனத் தெரிவித்துள்ளனர். சட்டமன்றம் இம்பாலில்தான் உள்ளது. நாகா எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

    சட்டசபை கூட்டத்தை நடத்த தடைவிதிக்க குகி-ஜோமி சமூகத்தினர் கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

    பிப்ரவரி- மார்ச் மாதத்தில் பட்ஜெட்டிற்கு செசனுக்காக சட்டமன்றம் கூடியது. அதன்பின் தற்போது ஒருநாள் கூட இருக்கிறது.

    • மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.
    • மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந் தேதி, பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 160 பேர் பலியானார்கள். மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    இதையடுத்து, 20 வழக்குகளை சி.பி.ஐ.யிடம் மணிப்பூர் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அந்த வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. தொடங்கி உள்ளது.

    அவற்றில், ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கும் அடங்கும். மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.

    டான்சிங் ஹங்சிங் என்ற 7 வயது சிறுவனின் தாயார் மீனா ஹங்சிங், மெய்தி இனத்தை சேர்ந்தவர். அவனுடைய தந்தை ஜோசுவா ஹங்சிங், குகி பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஒரு நிவாரண முகாமில் டான்சிங் ஹங்சிங் தங்கி இருந்தபோது, மெய்தி இன போராட்டக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், துப்பாக்கி குண்டு ஒரு இரும்பு தூணில் பட்டு தெறித்து, டான்சிங்கை காயப்படுத்தியது. அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

    சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண் லிடியாவும் மெய்தி இன கிறிஸ்தவர்கள் என்பதால், அவர்கள் சிறுவனுடன் ஆம்புலன்சில் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

    ஆனால், மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது. டிரைவரையும், நர்சையும் விரட்டியடித்தது.

    சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண்ணும் தங்களை விட்டுவிடுமாறு எவ்வளவோ கெஞ்சியும் போராட்ட கும்பல் ேகட்கவில்லை. ஆம்புலன்சுக்கு தீவைத்தனர். இதில் சிறுவனுடன் 3 பேரும் உயிருடன் எரிந்து சாம்பலாகினர்.

    போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கும்பலை கலைக்க முயன்றபோதிலும், பலன் கிட்டவில்லை.

    இச்சம்பவம் தொடர்பாக லம்பெல் போலீஸ் நிலையத்தில் போலீசார் பதிவு செய்த வழக்கும், கங்போக்பி போலீஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    கடந்த மே 3-ந் தேதி, குகி பழங்குடியின தலைவர்களால், தான் கற்பழிக்கப்பட்டதாக ஒரு மெய்தி இன பெண் அளித்த புகாரும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளில் அடங்கும்.

    • குகி தோவாய் கிராமம் மற்றும் வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    • சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினர்.

    மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் என்கிற கிராமத்தில் ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    லிட்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இருந்து இன்று அதிகாலையில் கடுமையான துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.

    இதையடுத்து, குகி தோவாய் கிராமம் மற்றும் வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்களின் உடல்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

    மேலும், மூன்று பேரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினர்.

    மணிப்பூர் மாநிலத்தில் ஏற்கனவே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையால் மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது
    • தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர செயல் அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனம் கிளம்பியது. தற்போது மணிப்பூரில் அமைதி திரும்பிய வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் மூன்று முக்கிய விசயங்கள்தான் மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்ப்பலிக்கு முக்கிய காரணம் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    77-வது சுதந்திர தினவிழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரேன் சிங் பேசியதாவது:-

    'குறிப்பிட்ட தவறான புரிதல்கள், சுயநலனுக்கான செயல்கள், நாட்டை சீர்குலைப்பதற்கான வெளிநாட்டு சதி ஆகியவை மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாமலில் வசிக்க காரணமாகிவிட்டது.

    பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. சொந்த வீட்டிற்கு உடனடியாக செல்ல முடியாதவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு மாற்றப்படுவார்கள். தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ளதற்கு எதிராக அரசு எதையும் செய்யவில்லை. யாரும் அவ்வாறு செய்ய முடியாது.

    ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டத்தை வழங்கவும், மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    • மணிப்பூரில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகார பூர்வமற்ற வதந்தியான தகவல்கள் பெரும் வன்முறை ஏற்பட வழிவகுக்கின்றன.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம், தீவைப்பு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்தபடி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதன் தொடர்ச்சியாக மணிப்பூரில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சமூக வலைதள பயன்பாடும் ஒரு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகார பூர்வமற்ற வதந்தியான தகவல்கள் பெரும் வன்முறை ஏற்பட வழிவகுக்கின்றன.

    இதை தொடர்ந்து மணிப்பூரில், "பிரிவினைவாத, தேசவிரோத, வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல்களை" ஊக்குவிக்கும் எந்தவொரு சமூகவலைதள குழுக்களில் இருந்தும் வெளியேறுமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசு துறைகளும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மாநில உள்துறை ஆணையர் ரஞ்சித்சிங் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    • பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார்.
    • மணிப்பூர் பிரச்சினை முடிந்து விட்டது போல பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணிப்பூர் மாநிலத்தில் 100 நாட்களுக்கு மேலாக பதட்டம் நிலவுகிறது. 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்கின்றனர்.

    இப்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த 230 பேர் மியான்மர் காடுகளில் தவிக்கின்றனர்.

    மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் விளக்கம் தேவை என்பதே எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார். பெண்கள் அவமானப்படுத்தப்பட்டது பற்றி விளக்கம் அளிக்கவில்லை.

    மணிப்பூர் பிரச்சினை முடிந்து விட்டது போல பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது. மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை கண்டு பிரதமர் மோடி, உள் துறை மந்திரி அமித்ஷா அச்சம் அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து பாதியில் வெளியேறினர்.
    • மேற்கு வங்காளத்தில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது.

    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சியின் பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சி மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் நடந்தது. இதில் பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது:-

    பாராளுமன்றத்தில் நாம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்து, நாடு முழுவதும் எதிர்மறை கருத்துக்களை பரப்பியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து பாதியில் வெளியேறினர்.

    அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க பயந்தனர் என்பது தான் உண்மை. மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின.

    மணிப்பூர் மக்களின் வலியை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மணிப்பூரை சூறையாடி உள்ளனர்.

    மணிப்பூர் குறித்த விவகாரத்தை அவர்கள் விரும்பவில்லை. மணிப்பூரை வைத்து அரசியல் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள். பல விவகாரங்கள் குறித்து பேசும் அவர்கள் மணிப்பூரை மட்டும் பேசவில்லை. மணிப்பூர் மீது எதிர்க் கட்சிகளுக்கு அக்கறை கிடையாது.

    மேற்கு வங்க மாநில உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வேட்புமனு தாக்கலை தடுத்து நிறுத்தினர்.

    மேற்கு வங்காளத்தில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ரத்தக்களரி அரசியலை பின்பற்றுகிறது. மேற்கு வங்காளத்தில் ரத்தத்தில் அரசியல் நடத்துகிறது. எந்த ஒரு பா.ஜனதா வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்பதற்காக எதையும் செய்தனர்.

    பா.ஜனதாவினரை மட்டு மல்ல வாக்காளர்களையும் மிரட்டினர். வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆட்களை ஏற்பாடு செய்தனர். இது தான் அவர்கள் மாநிலத்தில் செய்யும் அரசியலின் விதம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த தேவையான அனைத்தும் பிரதமரிடம் உள்ளன.
    • பாராளுமன்றத்தில் 2 மணி நேரமாக உரையாற்றிய பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசியது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மணிப்பூர் பற்றி எரிந்து, கொலைகளும், பாலியல் கொடுமைகளும் நடைபெறும்போது பிரதமர் மோடி ஜோக் அடித்து வருகிறார். மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என்று தான் பிரதமர் நினைக்கிறார். அதை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை.

    பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மணிப்பூரில் பாரத அன்னையை கொலை செய்துவிட்டதாக குறிப்பிட்டேன்.

    மணிப்பூர் இன்று ஒரே மாநிலமாக இல்லை. இரண்டு மாநிலமாக பிளவுபட்டு கிடக்கிறது. அதனால்தான் மணிப்பூரில் பாஜக, பாரத அன்னையை கொலை செய்துவிட்டது என்று குறிப்பிட்டேன்.

    பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை, பெண்களை கிண்டல் செய்கிறார்.

    நான் பல பிரதமர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு பிரதமரை பார்த்ததில்லை. பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என்பது எனக்கு தெரியும், ஆனால் பொதுவெளியில் சொல்ல இயலாது.

    பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட விவாதம் பிரதமர் பற்றியது அல்ல, மணிப்பூரை பற்றியது.

    நான் பேசிய பாரத மாதா என்ற வார்த்தைகள் பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    நமது நாட்டில் என்ன நடக்கிறது என்று பிரதமருக்கு தெரியவில்லை.

    அரசியலில் 19 ஆண்டு காலமாக இருக்கும் நான் பல மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் மணிப்பூர் மாநிலத்தில் நான் கேட்டது, பார்த்தது எல்லாம் அசாதாரணமானது.

    மணிப்பூரில் அரசு ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அதை மாநில முதலமைச்சரால் தடுக்க முடியவில்லை. மணிப்பூரில் நடப்பவற்றை இந்திய ராணுவத்தால் 2 நாட்களில் நிறுத்த முடியும்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வதன் மூலம் எங்கள் நடவடிக்கையை நிறுத்த முடியாது.

    மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த தேவையான அனைத்தும் பிரதமரிடம் உள்ளன. ஆனால் அதனை செய்ய மறுக்கிறார் பிரதமர் மோடி.

    பிரதமரின் கைகளில் பல சாதனங்களும் கருவிகளும் உள்ளன. ஆனால் அதனை அவர் பிரயோகிப்பதில்லை. பாரத அன்னை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன்.

    பாராளுமன்றத்தில் 2 மணி நேரமாக உரையாற்றிய பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

    பிரதமர் என்பவர் கட்சி தலைவரை போன்று அரசியல் செய்ய கூடாது. பிரதமர் பொதுவானவராக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூரில் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்
    • ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழு விசாரிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

    மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறைக்கு 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் உயிருக்குப் பயந்து ஊரை காலி செய்து நிவாரண முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். மூன்று மாதங்களாகியும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. வன்முறை தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த மாதம் இரண்டு பெண்கள் தொடர்பான வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை மேற்பார்வையிடுவதற்கு, உயர்நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைக்குமாறு கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டது.

    தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்த உத்தரவு நேற்று இரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த உத்தரவில், மணிப்பூரில் பெண்கள் கொடூரமாக சித்ரவதைகளுக்கு ஆளான விதம் குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. கும்பலாக சேர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை தொடர்வதற்கு, அவர்கள் அதிக அளவில் உள்ள பிரிவில் உள்ளவர்கள் என்றால் குற்றத்தில் இருந்து தப்பிவிடலாம் போன்ற பல காரணங்கள் உள்ளன.

    மதவெறி போன்ற வன்முறை நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தப்பியவர்களை அடிபணிய வைக்கும் தகவலை வெளிப்படுத்தவே பாலியல் வன்முறை போன்ற கொடூர வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள்.

    மோதலின்போது பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை, கொடுமையைத் தவிர வேறு ஏதுமில்லை. இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயலில் ஈடுபடுவோரை தடுக்கவும், வன்முறையில் தாக்கப்படுபவர்களை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும்.

    மேலும், பெண்களுக்கு எதிராக மே 4-ந்தேதியில் இருந்து நடைபெற்ற வன்முறைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பெரும்பான்மை சமூகமான மைதேயி சமூகத்தினர் பட்டியல் பழங்குடி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே 3-ம் தேதி மலை மாவட்டங்களில் 'பழங்குடியினர் ஒற்றுமை பேரணி' நடத்தப்பட்டது. அவர்களுக்கு எதிராக மைதேயி சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடைய மோதல் ஏற்பட்டு, கடும் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

    மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

    • அரசியல் கட்சி தலைவர்கள்தான் மோடியை விமர்சனம் செய்கிறார்கள்
    • வடகிழக்கு மாநிலங்களில் 2014-க்குப் பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது

    மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் இரண்டு பெண்கள் தொடர்பான வீடியோ வைரல் ஆனதால், மணிப்பூர் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரும் வகையில் முக்கியத்துவம் பெற்றது.

    இந்த நிலையில் அரசியல்வாதிகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால், மணிப்பூரில் உள்ளவர்கள் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மீது குறை கூறவில்லை என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மத்திய அரசால் இப்படி நடக்கிறது என்று யாரும் கூறவில்லை. முன்பெல்லாம் என்ன நடந்தாலும் பழி டெல்லிக்கு வந்திருக்கும். இப்போது இது எங்கள் மோதல். இதற்கும் டெல்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும்.

    இந்த மோதல் மே மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல பகுதியில் இருந்து பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் மோடியை விமர்சனம் செய்கிறாரக்ள். ஆனால், மணிப்பூரில் இருந்து யாரும் பிரதமர் மோடியை குறைகூறவில்லை.

    2014-ல் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மெதுவான வளர்ச்சி இருந்தது. இணைப்பு அடிப்படையில் தற்போது திடீரென பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.'' என்றார்.

    காங்கிரஸ் கட்சியில் 20 வருடங்களுக்கு மேல் இருந்த ஹிமாந்த பிஸ்வா 2015-ல் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • அவமானத்தால் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாலியல் வன்கொடுமை, வீடுகள் சூறை, தீவைப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. இதனால் ஏராளமானோர் ஊரை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். மே 3ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடந்த வன்முறை தொடர்பாக 6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வன்முறையின் கோரமுகம் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மே மாத துவக்கத்தில் வன்முறையின்போது 2 பெண்கள் நிர்வாணமாக ஊருக்குள் அழைத்து வந்தது தொடர்பான வீடியோ வெளியானபின்னர் மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கலவரம் நடந்த அன்று மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பலில் இருந்து உயிர்தப்பி நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மே 3ம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய அந்த பெண், தனது வீடு வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, அந்த வீட்டில் இருந்து தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் அவரது அண்ணி ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறி உள்ளார்.

    'என்னையும் எனது குடும்பத்தின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவதற்காகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இதுவரை தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்தேன். அவமானத்தால் என் வாழ்வை நானே முடித்துக் கொள்ள விரும்பினேன். பின்னர் பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பேசும் செய்திகளைப் பார்த்த பிறகு, போலீசில் புகார் அளிப்பதற்கு எனக்கு தைரியம் வந்தது' என அந்த பெண் கூறியிருக்கிறார்.

    அவரது புகார் தொடர்பாக பிஷ்னுபூர் காவல் நிலையத்தில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    நான் என் மருமகளை என் முதுகில் தூக்கிக்கொண்டு என் இரண்டு மகன்களையும் கையில் பிடித்துக்கொண்டு என் அண்ணியுடன் அந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தேன். அண்ணியும் ஒரு குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது நான் தடுமாறி சாலையில் விழுந்தேன். அப்போது என் அண்ணி என்னை நோக்கி ஓடி வந்து என் மருமகளை என் முதுகில் இருந்து தூக்கிக் கொண்டு என் இரண்டு மகன்களுடன் தப்பி ஓடினார்.

    பின்னர் ஒரு வழியாக நான் எழுந்திருக்கையில், ஐந்தாறு ஆண்கள் என்னைப் பிடித்துவிட்டனர். அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதுடன் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இவ்வாறு அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

    'ஜீரோ எஃப்ஐஆர்' என்பது எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம். குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையம் அந்த எப்.ஐ.ஆரை சரியான அதிகார வரம்பிற்கு அனுப்ப வேண்டும். பின்னர் அந்த காவல்நிலையம் அதை விசாரிக்கும். இந்த வழக்கைப் பொருத்தவரை சுராசந்த்பூரில் உள்ள காவல் நிலையம் விசாரணை நடத்துகிறது.

    • வன்முறை சம்பவங்களுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
    • தொடர்ச்சியாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்று தொடங்கப்பட்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. வன்முறை சம்பவங்களுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து நீடித்ததால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதையொட்டி கடந்த மாதம் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வரை பள்ளிகள் திறக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை இன்று தொடங்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். 2 மாதங்களுக்கு பிறகு பள்ளியில் தங்கள் நண்பர்களை நேரில் பார்த்ததும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×