search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி கைது"

    • செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது மனித உரிமை மீறல் எனக் குற்றச்சாட்டு
    • மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்

    தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என செந்தில்பாலாஜி தெரிவித்த போதிலும், அதிகாரிகள் அவரை துன்புறுத்தியுள்ளனர். மிகுந்த மனஉளைச்சல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் நடந்த விதத்தில் மனித உரிமை மீறப்பட்டது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்தனர்.

    இந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் மருத்துவமனை வந்து, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணைக்குப்பின் அவர் கூறியதாவது:-

    செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள வந்தேன். அவர் சோர்வாக காணப்பட்டார். அதனால் காத்திருந்து அவரிடம் விசாரணை நடத்தினேன். அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய பின்னரும் தரையில் தரதரவென இழுத்து துன்புறுத்தினர்.

    நெஞ்சுவலி என்று கூறியபோதிலும் அதிகாரிகள் வாகனத்தில் இருந்து தள்ளி துன்புறுத்தினர். கைது செய்யப்பட்டபோது கடுமையான வகையில் நடத்தப்பட்டேன். மூன்று அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் தற்போது பேசமுடியவில்லை என்று கூறினார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், மனித உரிமை மீறப்பட்டதாக புகார்கள் வந்தனர். புகார் அடிப்படையிலும் தாமாக முன்வந்தும் மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம். தற்போதும் புகார் வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை
    • நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தா

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

    இதைத் தொடா்ந்து, தி.மு.க. சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை நிராகரிக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் அவரை காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய மற்றொரு மனு தாக்கல் ஆனது.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கோரியும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆா்.இளங்கோ, 'அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலனை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும். அவரது இதயத்தில் 3 அடைப்புகள் உள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் இ.எஸ்.ஐ. மருத்துவர்களை வைத்தும் அமலாக்கத்துறை பரிசோதனை செய்துள்ளது.

    அமலாக்கத்துறையின் விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார். அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது. மேலும், கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கைதுக்கான காரணங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் தெரிவிக்கவில்லை எனவும் வாதிட்டார்.

    அப்போது, அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தைப் பொறுத்தவரை, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகள் பொருந்தாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை. எதற்காக கைது செய்கிறோம் என்பதை அவரிடம் தெரிவித்தோம்.

    சம்மன் அளித்தோம். கைது செய்யப்படுவோம் என தெரிந்தே அதற்கான குறிப்பாணையைப் பெற அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார். கைது குறித்து அவரது மனைவிக்கும், சகோதரிக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது.

    ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளது.

    கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே எந்தவித இடைக்கால நிவாரணமும் அளிக்கக்கூடாது.

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது. நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அவா் ஜாமினில் தான் வெளியில் வர முடியும்; அதை நிராகரிக்க கோர முடியாது.

    விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சரிவர ஒத்துழைக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி செவ்வாய்க்கிழமை வரை நன்றாகத்தான் இருந்தார். ஆனால், திடீரென உடல்நலக்குறைவு என்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் தொடா்பாக தமிழக அரசு அளித்திருக்கும் மருத்துவர் அறிக்கையை நம்ப முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும்.

    மருத்துவக் குழுவை நீதிமன்றமே நியமிக்கலாம். அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டார். பிறகு இது தொடர்பான விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்று ஒத்தி வைத்தார்.

    காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது முடிவெடுத்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு மீதும் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.

    அதன்படி முதலில் நீதிமன்ற காவல் தொடர்பான மனு மீது விசாரணை நடந்தது. அந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, "நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக" உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள 3 அடைப்புகளை சரி செய்ய இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள 3 வழக்குகள் அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இது தொடர்பான நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கி சம்மனையும் அனுப்பினார்கள். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலையில் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதன் முடிவில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் போடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அருள்மணி என்பவர் அளித்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.

    தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் பேரில் கூட்டு சதி, மோசடி, 5 பிரிவுகளின் கீழும், கணஷே்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

    நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்துள்ளனர்.

    கோர்ட்டின் அனுமதி கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்த உள்ளனர்.

    செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள 3 அடைப்புகளை சரி செய்ய இருதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆபரேஷன் முடிந்ததும் செந்தில் பாலாஜியை ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த ஓய்வு முடிந்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வருவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக சில நாட்கள் பொறுமை காக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். எந்த ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்ட நபர் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது என்பது சட்டப்படி சாத்தியமாகும்.

    இதற்காகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சில நாட்கள் கழித்து செந்தில் பாலாஜியிடம் தீவிரமாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் முடிவில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அனுராதா ரமேஷ் என்ற பெண் தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் செந்தில் பாலாஜியின் பினாமி ஒருவருக்கு ரூ.10.9 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதன் பின்னணி குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட பெண்ணின் நிலம் எந்த வகையில் இது போன்று விற்பனை செய்யப்பட்டது என்பது பற்றிய தகவல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி வருவதாக கூறப்படுகிறது.

    செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள 3 வழக்குகள் அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது நாடகமாடி மக்களை திசை திருப்பினர்.
    • மத்திய அரசிற்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் எண்ணுகின்றனர்.

    காரைக்குடி :

    காரைக்குடியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 8 நாட்கள் சோதனை முடிந்து அதில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம், தலைமைச் செயலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தி அதன் பின்னர் தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தனர். இதை சகித்து கொள்ள முடியாதவர்கள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க.வினர் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு காரணம் மக்களிடம் அனுதாபம் பெறலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசிற்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் எண்ணுகின்றனர். ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் அந்த மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடைபிடித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதை அனைத்து மீடியாக்களும் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்படுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கவர்னரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது நாடகமாடி மக்களை திசை திருப்பினர். அதைபோல் இன்று அதே நாடகத்தை கையில் எடுத்துள்ளனர்.

    இது மக்களுக்கு நன்றாக தெரியும். அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு வரை வராத நெஞ்சுவலி அதற்கு பின்னர் எப்படி வந்தது? திடீரென ஒரு நாள் இரவு எப்படி அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு சந்தேகம் உள்ளது. இதற்கு உயர்தர டாக்டர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அமலாக்கத்துறை கைது செய்ததால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

    நேற்று நீட் தேர்வு ரிசல்ட் வந்துள்ளது. இதில் 720-க்கு 720 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதல் மாணவனாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.

    மேலும் இந்திய அளவில் முதல் 10 இடத்தில் நான்கு பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான். இதன் மூலம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்.
    • காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருப்பதாகவும் உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். காவிரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஸ்டண்ட் கருவி பொருத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

    கட்டாயம் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10 மணிக்கு மேல் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, காவிரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
    • ஜாமின் வழங்க கூடாது, இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை என்று அமலாக்கத்துறை வாதம்.

    தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

    அமைச்சருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

    இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் வந்து சிகிச்சை தொடர்பான விவரங்கள் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை கேட்டறிகிறார். அப்போது செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதேசமயம், அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளார்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    வாதத்தின்போது அமலாக்கத்துறை கூறியதாவது:-

    செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது.

    நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது.

    கைதுக்கான காரணங்கள் சொல்லப்பட்டன. கைது செய்யப்படுவோம் என தெரிந்தே செந்தில் பாலாஜி மெமோவை பெற மறுத்துவிட்டார்.

    நீதமன்ற காவல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் ஜாமின் தான் கோர வேண்டும். செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் சரியானது. ஜாமின் வழங்க கூடாது, இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை.

    செந்தில் பாலாஜி நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தார். இன்று திடீரென உடல்நலக் குறைவு என்கிறார்.

    செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சையை அமலாக்கப் பிரிவே வழங்கும்.

    இவ்வாறு அமலாக்கத்துறை வாதிட்டது.

    மேலும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில், 15 நாள் அமலாக்கத்துறை காவல் கேட்ட வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முதலமைச்சர் செய்து வருகிறார் .
    • வரும் 23-ந்தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக படுகொலை.

    * செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் எந்த சட்ட நடைமுறையும் பின்பிற்றப்படவில்லை.

    * செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தி உள்ளனர்.

    * தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பை பாஜக அரசியலுக்காக பயன்படுத்துகிறது.

    * புகார் கொடுத்தவர்களே வழக்கை திரும்பப்பெற்ற நிலையில் அமலாக்கத்துறை இதை கையில் எடுத்துள்ளது.

    * கடந்த 9 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனைகளில் 30-க்கும் குறைவானவர்களே குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளது.

    * 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 112 இடங்களில் மட்டுமே அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    * கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்தவர் செந்தில் பாலாஜி.

    * கொங்கு மண்டலத்திலாவது வாக்கு வாங்கலாம் என எண்ணிய பாஜகவின் திட்டத்தை செந்தில் பாலாஜி தகர்த்ததால் கைது நடவடிக்கை.

    * ஒரு தனி நபரின் பகை மற்றும் கொள்கை பகை ஆகியவை காரணமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

    * பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முதலமைச்சர் செய்து வருகிறார் .

    * வரும் 23-ந்தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    * பதற்றத்தில் உள்ள பாஜக அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வருகிறது.

    * அண்ணாமலை தோல்விக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என அவர் நம்புகிறார். அதனால் செந்தில் பாலாஜி மீது கோபம்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
    • அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பண மோசடி தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்றும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை அமலாகத்துறையினர் ஆன்லைன் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்து இருந்தனர். 

    அதன்பின்னர் மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளனர். மருத்துவ குழு அறிக்கை இஎஸ்ஐ முதல்வருக்கு அளிக்கப்படும். இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர் அறிக்கையினை அமலாக்கத்துறையினரிடம் அளிப்பார். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொள்ளும்.

    இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வந்தார். செந்தில் பாலாஜியின் சிகிச்சை தொடர்பான விவரங்கள் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை நீதிபதி கேட்டறிகிறார். அப்போது செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுதது செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதேசமயம், அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி விலகியுள்ளார்.
    • நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தார்.

    அந்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

    அதில், "தனது கணவர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்த போது சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை. எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார்" என்று மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் கொண்ட அமர்வு மதியம் 2.15 மணிக்கு மனு மீது விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.

    இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி ஒருவர் விலகியுள்ளார்.

    அமர்வில் இருந்த இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் விலகியுள்ளதால் மீண்டும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மனு பட்டியலிடப்படும். நடைமுறையை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    இதனிடையே, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த வழக்கை நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருத்துவ குழு அறிக்கை இஎஸ்ஐ முதல்வருக்கு அளிக்கப்படும்.
    • இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர் அறிக்கையினை அமலாக்கத்துறையினரிடம் அளிப்பார்.

    சென்னை:

    ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்றும் அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை அமலாகத்துறையினர் ஆன்லைன் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்து இருந்தனர்.

    இந்நிலையில், மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

    இதையடுத்து செந்தில் பாலாஜியை பரிசோதித்த இஎஸ்ஐ மருத்துவர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    மருத்துவ குழு அறிக்கை இஎஸ்ஐ முதல்வருக்கு அளிக்கப்படும். இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர் அறிக்கையினை அமலாக்கத்துறையினரிடம் அளிப்பார். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • கைது செய்யப்படும் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • கைது நடவடிக்கைகளின் மூலம் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது.

    தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்படும்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அதன்படி, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. கைது நடவடிக்கைகளின் மூலம் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது.

    அரசியல் பழிவாங்கலால் பாராமுகமாகி நமது ஜனநாயகத்திற்கு மாற்ற முடியாத சேதத்தை பாஜக ஏற்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • செந்தில் பாலாஜி தன் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
    • செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும், தி.மு.க.விற்கும், மக்களுக்கும் நல்லது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பை செய்தவன் தண்டனை அனுபவிப்பான் என்பதை மூதாதையர்கள் கூறியுள்ளனர். யாராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் அது பொருந்தும்.

    தான் தூய்மையானவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. ஆனால் இதற்கு தி.மு.க. துணை போகக்கூடாது.

    செந்தில் பாலாஜி தன் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும் தி.மு.க.விற்கும், மக்களுக்கும் நல்லது. அவருக்கு துணை நின்றால் தி.மு.க. அரசாங்கம் ஆள்வதற்கு அருகதை அற்றவர்கள் ஆவார்கள்.

    இது 2015-ல் உள்ள பழைய வழக்கு, அப்போது தி.மு.க.வினர், அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தார்கள், அதே மனிதர் தி.மு.க.விற்கு வந்தவுடன் கங்கையில் குளித்து புனிதமானவர் என்பதா? தமிழக அரசு அவருக்கு ஆதரவு கொடுக்க கூடாது. அப்படி ஆதரவு கொடுத்தால் அது ஊழலுக்கு துணை போகும் செயல்.

    இதுவரை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நேர்மையாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×