search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமாயணம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார்.
    • ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு 'ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள்.

    நீங்கள் ஆஞ்சநேயரை கோவிலில் தரிசிக்கும்போது அல்லது ஆஞ்சநேயரின் படத்தைப் பார்க்கும் போது பார்த்திருக்கலாம் ஆஞ்சநேயரின் வாலில் ஒரு மணி இருக்கும். வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா? அதற்கும் ஒரு கதை இருக்கு.

    தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன், சீதா பிராட்டியுடனும், தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும், அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

    சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை, குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை. இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.

    போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர், அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில். அதை கவனித்த ஸ்ரீராமன் கூறினார் " யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்றார்.

    போர் ஆரம்பமாயிற்று. கடும்போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள். வேறு வழியில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன்.

    ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைகடத்தியதற்காக ஸ்ரீராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை. வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.

    கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கேற்றாற்போல் அவனது தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரில் இருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது.

    திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப்போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன. ஒரே இருட்டு, நல்லவேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது. சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

    ஒரு வானரம் சொன்னது " இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப்போய்விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி" என்றது "சுக்ரீவனும், அனுமனும் ஒன்றும் செய்யப்போவதில்லை. இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான் என்று சொன்னது இன்னொரு வானரம். ஸ்ரீராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களையெல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டுவந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே. அவர் மட்டும் என்ன செய்தார்" இன்னொரு வானரம் சொன்னது. இதைக்கேட்ட மற்ற வானரங்களும் ஆமாம் ஆமாம்  என்றன.

    இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது. முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள். நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ஸ்ரீ ராமனை மனதில் நினைத்துக் கொண்டு 'ராம் ராம் ராம்' என்று ஜெபம் செய்யுங்கள். ஸ்ரீ ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று சொன்னது. எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

    கடைசியில் ராமபாணத்தால் ராவணனும் கொல்லப்பட்டான். போர் முடிந்தது. சீதாப்பிராட்டியை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா என்றார்"

    பிரபு! எண்ணிவிட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன். இல்லை. மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா" என்றார் ஸ்ரீராமன்.

     ஸ்ரீராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான். தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை. ஆஞ்சநேயா நீயும் என்னுடன் வா. நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம் என்றார் ஸ்ரீராமன்

    ஆஞ்சநேயரும், ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள், உடைந்து கிடந்த தேரின் பாகங்கள், அம்புகள், கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப்பார்த்தார் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை.

    திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார். " அனுமா! அங்கே பார். ஒரு பெரிய மணி தெரிகிறது." ஸ்ரீராமன் என்ன சொல்லப்போகிறார் என்று புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் விரைந்தார்கள் அந்த இடத்திற்கு. அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமனுக்கு இது ஒரு பொருட்டா என்ன...!

    அனுமன் மணியைத் தூக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜெபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும், அனுமனும். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்களின் கண்களில் கண்ணீர்.

    பிரபு! என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம். எங்களை மன்னித்து அருள வேண்டும்" என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.

    அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ஸ்ரீராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். எவ்வளவு பெரிய பாக்கியம் வானரங்களுக்கு. அருகில் நின்றிருந்த அனுமன் பக்கம் திரும்பிய ஸ்ரீராமன், அனுமனைப் பார்த்து சொன்னார் அனுமா...! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா? இந்த கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி, ஞானம், வைராக்கியம் கிட்டும் என்று வாழ்த்தினார்.

    • திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
    • கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார்.

    இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் சேதம் அடைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் காணப்படுவதாக அறிய முடிகிறது. சூரியனை முழுமுதற் தெய்வமாகக் கொண்டதுதான் சவுமார மதம் ஆகும். இந்தியாவில் ஒடிசாவில் பூரி நகருக்கு அருகில் கோனார்க் சூரியனார் கோவில் உள்ளது.

    தமிழ்நாட்டிலும் மகாபலிபுரத்தில் சூரியனுக்கு சிலை உள்ளது. மார்க்கண்டேய புராணத்தில் `ஓம்' என்ற ஒலி உலகத்தில் முதலில் தோன்ற, அவ்வொலியின் விளைவாக `ஒளி' தோன்றியதாகக் கூறப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் சிம்ம ராசிக்கு அதிபதி, சூரியன்.

    பன்னிரண்டு ராசிகளில் சூரியன் வலம் வருவதைக் கொண்டு, 12 சூரியர்கள் இருப்பதாகவும் சொல்வதுண்டு. சூரியனை வணங்க அகத்தியரால், `ஆதித்ய ஹிருதயம்' என்ற மந்திரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மந்திரத்தை, ராம- லட்சுமணர்களுக்கு விஸ்வாமித்திரர் உபதேசித்ததாக ராமாயணம் மூலம் அறிகிறோம்.

    தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது, சூரியனார் கோவில். மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தின், கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறம் உஷாதேவியும், வலதுபுறம் பிரத்யுஷா தேவி என்னும் சாயாதேவியும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். சூரிய பகவான் தன்னுடைய இரு கரங்களிலும் செந்தாமரை மலரை ஏந்தி புன்சிரிப்புடன் அருள்கிறார்.

    இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியை தரிசித்த பின் சூரியனாரை வணங்குதல் முறையாகும். இந்த கோவிலில் சூரியனைத் தவிர, மற்ற கோள்களான சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன.

    • தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.

    டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அம்மாநிலத்தின் பெருமையை விளக்கும் வகையில் வாகன ஊர்வலம் நடைபெறும்.

    இந்த முறை தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அதில், கடந்த 22 ஆண்டுகளாக ஐதராபாத் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் நாராயணம்மா என்பவரும் கலந்துகொள்கிறார்.

    ரங்காரெட்டி மாவட்டம், யாச்சாரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 22 ஆண்டுகளில் நாள் தவறாமல் பணியாற்றி வருவதுடன், கூடுதல் நேரம் ஒதுக்கி துப்புரவு தொழிலை அக்கறையுடன் செய்து வருகிறார்.

    மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இதற்காக நாராயணம்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோன்று, சூர்யாபேட்டை மாவட்டம், கோதாடா பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. பட்டதாரியான இவர் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஒரு ஆட்டோவில், கூண்டு போல் ஏற்பாடு செய்யப்பட்ட மொபைல் கழிப்பறையை இணைத்து ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், சினிமா அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நிறுத்தி வைப்பார். இது பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகும்.

    இதை யார் வேண்டுமானாலும் இலவசமாக உபயோகிக்கலாம். இதுபோன்ற சேவையை நாகலட்சுமி தவறாமல் செய்து வருகிறார்.

    சிறப்பாக செயலாற்றி வரும் சைலஜா, அனிதா ராணி, சுரேகா, ரமாதேவி, லட்சுமி ஆகிய 5 பெண் ஊராட்சி மன்ற தலைவிகளையும் தெலுங்கானா அரசு தேர்வு செய்துள்ளது.

    • கணவன் மனைவி இருவரும் இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.
    • ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    திருப்பதி:

    தெலங்கானா மாநிலம், சிர்சில்லா ஜவுளி நகரத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். பட்டு நெசவு தொழிலாளி. இவரது மனைவி ரேகா.

    கணவன் மனைவி இருவரும் இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.

    8 கிராம் தங்கம், 20 கிராம் பட்டு இழைகள் கொண்டு 20 நாட்களில் பட்டுப் சேலை விஷேசமாக தயார் செய்துள்ளனர்.

    அதில் ஸ்ரீராமரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

    புடவையின் ஒரு புறத்தில் அயோத்தி ராமர் கோவில், ஸ்ரீராம பட்டாபிஷேகம் மற்றும் ஜெய் ஸ்ரீராம் என தெலுங்கிலும், மறுபுறம் ஜெய் ஸ்ரீராம் என இந்தியிலும் நெய்யப்பட்டுள்ளன.

    ஸ்ரீராமரின் படங்கள் புடவையின் விளிம்பில் வைக்கப்பட்டு, சேலையின் மீதமுள்ள பகுதி ஸ்ரீ ராமர் பிறந்தது முதல் முடிசூட்டு விழா வரையிலான ராமாயண காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    இவ்வளவு சிறப்பு அம்சங்களுடன் நெய்யப்பட்டுள்ள பட்டுப் புடவையை வரும் ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் காட்டுகின்றனர்.

    பின்னர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    • இந்நாட்களில் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவதும் வழக்கம்.
    • இது தவிர தனிப் பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது

    கடலூர்:

    நவராத்திரி விழாவானது அம்பிகைக்கு ஒன்பது விதமான புஷ்பங்களை கொண்டு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து ஒன்பது நாட்கள் வழிபடுவதாகும். இந்நாட்களில் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவதும் வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழா இன்று தொடங்கி 23-ந்தேதி முடிவடைகிறது.

    கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் களிமண், காகித கூழ் போன்றவற்றால் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதில் ராமாயணம், மகா பாரதம், கிருஷ்ணரின் லீலைகள் சம்பந்தமான கதைகளை விளக்கும் வகையிலான பொம்மைகளை தயாரித்து வைத்துள்ளனர். இது தவிர தனிப் பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர் நகர சாலை ஓரங்களிலும், கோவில் வளாகங்கள் முன்பிலும், கடைகளிலும் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • சத்ரு சம்ஹார யாகம்.
    • ஆஞ்சநேயருக்கு நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.

    மண்ணுலகில் மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரை கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.

    கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம். ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.

    தோல்வி என்பதையே கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு திரும்புகிறான். ஆனால் அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.

    தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.

    எதற்கு? ராம லெட்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.

    அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.

    ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.

    காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால் ராவணா... உன்னை வெல்ல எந்த சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.

    ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது விபீஷணுக்கு தெரியும்.

    பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?

    உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான். ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.

    இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.

    சத்ரு சம்ஹார யாகம் செய்ய, அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.

    யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில் போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.

    அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை அழைத்தார். வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன் சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.

    ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.

    தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

    மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.

    இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.

    காக்கும் தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.

    சுதர்சனத்தின் வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.

    சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.

    அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.

    ஆனால் மயில் ராவணன் யார்?

    பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.

    பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.

    இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன். அவனை உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.

    அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.

    அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.

    அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.

    நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து தருகிறேன். இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.

    அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.

    மயில் ராவணனை வென்று சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.

    பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.

    • அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம்.
    • சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார்.

    வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும்.

    வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.

    அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது.

    இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.

    ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.

    வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம்.

    ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார்.

    இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார்.

    இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை பிரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.

    • சுசீந்திரம் ஆஞ்சநேயர் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
    • அபயவரத ஆஞ்சநேயர் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது.

    குபேர ஆஞ்சநேயர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் குபேர ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர், ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.

    இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார்.இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்வலிக்கிறார். இவரது வாலின் நுனிப்பகுதி தலைக்கு மேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இவரை வணங்கினால் குபேர சம்பத்து பெருகும் என்பது நம்பிக்கை.

    பெருமாள் கருவறைக்குள் ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில் உள்ள மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர்.

    ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.

    அபயவரத ஆஞ்சநேயர்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.

    ஜெயமங்கள ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நந்தி சிலை ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள் கூறினர்.

    வீரஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆனால் இவரது காலின் கீழ்பகுதி ஆற்றுநீர் படும் வகையில் பூமிக்குள் அமைந்திருப்பது சிறப்பு.

    அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர்: விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 36 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார்.

    பக்த ஆஞ்சநேயர்: நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமும், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

    யோக நிலையில் ஆஞ்சநேயர்: மதுரை கோ.புதூர் சூர்யாநகர் முத்தப்பா சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 30 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.

    பிரமாண்டமாய் ஆஞ்சநேயர் தரிசனம்: தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல் புரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    அநுமேசுவரர்: சீதாப்பிராட்டியாரை எங்கு தேடியும் காணாமையால் மனம் நொந்து ஓரிடத்தில் ஈசனை ஸ்தாபித்து வேண்டினார் அனுமன். அதனால் அநுமேசுவரர் என்றும் அவ்வூர் அநுமன் பள்ளியாகவும், பூஜை பொருட்டு இறைவன் அனுமன் ஏற்படுத்திய நீர்க்குணி அநுமநதி என்றும் வழங்கலாயிற்று.

    சத்திய ஆஞ்சநேயர்: செங்கல்பட்டில் கோட்டைச் சுவரில் எழுந்தருளியிருக்கிறார் இவர். மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ள இவருடைய சன்னதியில் சத்தியம் செய்வதுண்டு. இங்கே பொய் சத்தியம் செய்வோர் அழிவர் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

    வால் அறுபட்ட ஆஞ்சநேயர்: ராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கின்றார் இவர். காசியிலிருந்த விசுவநாதலிங்கம் கொண்டு வரச் சென்ற ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமாகவே, ஸ்ரீராமன் சீதையை மணலால் லிங்கம் அமைக்கச் செய்து பூஜையை முடித்து விடுகிறார்.

    பின்வந்த அனுமன் ஆத்திரத்தில் மணல் லிங்கத்தை அப்பால் தள்ள முயல, அது முடியாமல் போகவே, வாலினால் சுற்றி பலம்கொண்ட மட்டும் இழுத்தார். அப்போது, அவரது வால் அறுந்து போனது. தனது தவறுணர்ந்து ராமனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வால் வளரப் பெற்றார். இங்கு, வால் அறுபட்ட நிலையில் உள்ள ஆஞ்சநேயரின் சிலையைக் காணலாம்.

    பாலரூப ஆஞ்சநேயர்: உடுப்பிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் ஒரு சிறுகுன்றில் துர்க்கை கோயில் ஒன்றுள்ளது. அதன் கீழ் குளக்கரையில் கோவணாண்டியாக பாலரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உடலெல்லாம் உரோமம் தெரியும்படி அருமையாக அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.

    யோக ஆஞ்சநேயர்: வேலூர் சோளிங்கரில் உள்ள ஒரு சிறிய குன்றில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை நேராக இருந்து தரிசிப்பவராய், நரசிம்மரைப் போலவே யோக நிலையில் இவர் இருக்கின்றார்.

    யந்த்ரோத்தாரக அனுமன்: ஹம்பியில் எழுந்தருளியிருப்பவர் இவர். ஆஞ்சநேயரை யந்திரத்தில் வடிவாக அமைத்துள்ளனர். பத்ம தளத்தோடு கூடிய ஒரு வட்டத்தின் நடுவே ஆறுகோணம் கொண்ட யந்திரம் வரையப்பட்டுள்ளது.

    அதன் மத்தியில் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். கோணங்களிலே பீஜாக்ஷரங்கள் உள்ளன. வட்டத்தின் உட்புறம் தியான ஸ்லோகம் கிரந்த எழுத்தில் உள்ளது.

    ஜன்மபூமி ஆஞ்சநேயர்: பன்னூரில் உள்ள ஆஞ்சநேயர், ஆலயத்தில் கையைக் கூப்பிக் கொண்டு பவ்யமாக நிற்கும் பக்த ஆஞ்சநேயர் ஜன்மபூமி ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார்.

    பிரபத்யாஞ்சநேயர்: மங்கள கிரி (ஆந்திரா) கல்யாண சரஸ் திருக்குளத்தின் கரையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். இவரே மங்களகிரியின் காவல் தெய்வம். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டம் செல்லும்போது ஆஞ்சநேயரை மங்களகிரியிலேயே தங்கி நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கும்படி பணித்துவிட்டுச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது.

    திரிநேத்ர சதுர்புஜ அனுமார்: நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலிலே தான் இந்தத் திரிநேத்ரதசபுஜ அனுமார் வீற்றிருக்கிறார். மூன்று கண்களுடனும் பத்துக் கைகளுடனும் காட்சி தருகின்றார்.

    • ராமாயணம் முழுவதும் சரணாகதி தத்துவம் ஊடுருவி கிடக்கின்றது.
    • காலனின் கையில் சிக்காமல் எந்த உயிரும் தப்பிப்பதற்கு இல்லை.

    ஓரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டவும் மக்களை நல்வழிப்படுத்தவும் சரணாகதி தத்துவத்தை போதிப்பதற்காகவும் ஏற்பட்டது. இந்த அவதாரம் தாய் தந்தையரிடம், குருவிடம், உடன் பிறந்தோரிடம், மனைவியிடம், விரோதியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் உதாரண புருஷனாக திகழ்கிறான் ஸ்ரீ ரகுராமன்.

    அரசனாக எப்படி நல்லாட்சி செய்ய வேண்டும். குடி மக்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதையும் விளக்கிக் காட்டுகிறான். மக்களுடைய மகிழ்சியிலும் துக்கத்திலும் ஸ்ரீராமன் பங்கு கொள்வதை மிக அழகாக காட்டுகிறது ராமாயணம்.

    விபீஷணன் இலங்கையை விட்டு ஸ்ரீராமனிடம் அடைக்கலம் கேட்டு வரும் போது ஸ்ரீ ஹனுமான் போன்றோரின் அபிப்பிராயத்தைக் கேட்டபின் சரணாகதி தத்துவத்தை மிக அழகாக விளக்குகிறான் ஸ்ரீராமன்.

    என்னை சரணம் அடையக் கூட வேண்டாம். தோழன் என்று நினைத்து என்னிடம் வந்தாலே போதும். அவனை ஒருகாலமும் கைவிடமாட்டேன் என்றான் ஸ்ரீராமன். இதையே சீதாபிராட்டியம் ராவணனிடம் கூறுகிறான்.

    ஸ்ரீராமனுடன் உனக்கு தோழமை ஏற்படட்டும் என்ற ராமாயணத்தில் ஒவ்வொரு காண்டத்திலும் சரணாகதியின் பெருமை கூறப்படுகிறது.

    தேவர்களின் சரணாகதி போன்று ராமாயணம் முழுவதும் முனிவர்களின் சரணாகதி பரதன் சரணாகதி விபீஷணன் சரணாகதி போன்று ராமாயணம் முழுவதும் சரணாகதி தத்துவம் ஊடுருவி கிடக்கின்றது. அதனால் வைஷ்ணவர்கள் ராமாயணத்தை சரணாகதி சாஸ்திரம் என்றே போற்றுவர்.

    நாமும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்ரீசீதாப்பிராட்டியையும் சரணாகதி அடைவோம். ஸ்ரீராமநாமத்தை ஜெபிப்போம். சகல பாவங்களையும் நீக்கி சகல நன்மைகளையும் பெறுவோம்.

    ஸ்ரீராமன் ஓர்அனுஷ்டான சீலர். ஆன்மீக செல்வர். இணையற்ற பராக்கிரமசாலி. ஈகையால் உயர்ந்தவர். உத்தமமான பல குணங்களை கொண்டவர். ஊரார் போற்றும் ஊறுதியான வீரம் பல படைத்தவர். எத்திசையும் புகழ் பெற்ற புனிதன். ஏற்றம் மிக்கவன். ஒழுக்கத்தால் ஒப்பற்றவன். ஒளஷதமாய் அனைவரையும் காத்து ரக்ஷிப்பவர்.

    இம்மணுலகில் பிறக்கின்ற எவரும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். அவனவன் இறக்கும் நாள் முன்பே முடிவு செய்யப்பட்டு விடுகிறது. நிலையாமை ஒன்றே தனது பெருமையாய் கொண்டது இவ்வுலகம்.

    மனிதனோ காலாகாலத்திற்கு இங்கேயே நிலைத்திருக்கப்போவதாய் எண்ணி இறுமாப்பு அடைகிறான். படைப்பின் உண்மை பிறந்தவர் எல்லாம் இறந்தே ஆக வேண்டும். இந்த உண்மையை அறிந்தவர் எத்தனைபேர்? தன் வாழ்க்கையை உறுதி செய்ய மனிதன் முயல்கிறான். ஆனால் மனித வாழ்வை இறுதி செய்ய காலன் வந்துவிடுகிறான்.

    காலனின் கையில் சிக்காமல் எந்த உயிரும் தப்பிப்பதற்கு இல்லை. இந்த வாழ்க்கை நிலையற்றது. ஒரு நாளில் கூற்றுவனின் பிடி இறுகும் என்பதை யார் புரிந்து கொண்டிருக்கிறாரோ அவன் அறநெறி தவறாது வாழ்வான். ஸ்ரீராமனை சரணாகதி அடைந்து தானதர்மங்கள் செய்து வாழ்வை அர்த்தமுடையதாக்கி கொள்வான்.

    • கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி அளிக்கிறார்.

    வைகாசி ஆகமப்படி கருடனின் அவதார நாளை நட்சத்திர அடிப்படையில் ஆடி சுவாதியன்று கொண்டாடுவார்கள். பாஞ்சராத்ர ஆகமப்படி திதியின் அடிப்படையில் கருட பஞ்சமியாகக் கொண்டாடுவார்கள்.

    கருட பகவானுக்கு ருத்ரா, கீர்த்தி என்று இரண்டு தேவிகள், இவர்களே அரங்கநாயகிக்கு இரு கண்களாகத் திகழ்கிறார்களாம். கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.

    கஜேந்திர மோட்ச வைபவத்தில், கஜேந்திரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கவ்வி இழுக்க, கஜேந்திரன் திருமாலை 'ஆதிமூலமே' என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயு வேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்த்தார்.

    ராமாயண காலத்தில் போர்க்களத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப் போட, அவர்கள் மயங்கி விழுந்தபோது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார்.

    கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார்.

    கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடானாக வானில் காட்சி கொடுத்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி அளிக்கிறார்.

    கருட பகவானை துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைக்கும். சர்ப்பதோஷ நிவர்த்தி ஆகிய அனைத்து நலன்களும் கிடைக்கும்.

    ×