search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் போர்"

    • போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை.
    • சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.

    காசா:

    காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலியானது தெரிய வந்துள்ளது. பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அமைப்பு இத்தகவலை தெரிவித்தது.

    அந்த அமைப்பு மேலும் கூறியதாவது:-

    இஸ்ரேல் விமான தாக்குதல்களில், 50 உள்ளூர், சர்வதேச ஊடக அமைப்புகள் குறிவைக்கப்பட்டன. 11 பத்திரிகையாளர்கள் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை.

    காசா பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் இணையதள பிரச்சினையால் பத்திரிகையாளர்கள் சரிவர செயல்பட முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுக்கிறது. இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.

    இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    • பலர் கட்டிடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காசா:

    இஸ்ரேல் படையினரின் வான்வழித் தாக்குதலால் காசா மக்கள் திக்கு தெரியாமல் திண்டாடி வருகிறார்கள்.

    ரபாத் மற்றும் கான்யூனிசில் 3 வீடுகள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலிய விமான தாக்குதலில் ஒரே இரவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.

    இஸ்ரேலின் உத்தர வின்படி காசா நகரில் இருந்தும், வடக்கு பகுதிகளில் இருந்தும் வெளியேறி குடும்பங்கள் தான் கொல்லப்பட்டனர்.

    காசாவின் தெற்கில் உள்ள கான்யூனிஸ், ரபா, டெல் அல்பலாஹ் ஆகிய பகுதிகளில் கடுமையான குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. பலர் கட்டிடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக எகிப்து உதவி பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளது.

    பாலஸ்தீனர்களுக்கான ஐ.நா. அகதிகள் நிவாரண அமைப்பினர் கூறும்போது, 'தெற்கு காசாவில் குடிநீர், உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், மின்சாரம் இல்லாததால் மருத்துவ மனையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கண் முன்பே மனித பேரழிவு ஏற்படுகிறது' என்று கூறியுள்ளார்.

    உலக சுகாதார அமைப்பினர் கூறும்போது, 'மொத்தம் 23 லட்சம் மக்கள் கொண்ட காசாவில் தினசரி ஒருவருக்கு ஒரு லிட்டருக்கு குறைவான நீர் மட்டுமே கிடைக்கிறது. மின்சாரம் நிறுத்தபட்டதால் பிறந்த குழந்தைகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் அபாயத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    • இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
    • காசாவில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்த போரால் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் 5வது விமானம் டெல்லி வந்தடைந்தது. அவர்களை  மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

    பின்னர் அவர் கூறுகையில், "இந்தியர்கள் எங்கெல்லாம் சிக்கித் தவிக்கிறார்களோ, அவர்களை மீட்டெடுப்பதே எங்கள் முன்னுரிமை. நாங்கள் ஆபரேஷன் கங்கா மற்றும் ஆபரேஷன் காவேரியை வெற்றிகரமாக நடத்தி, இப்போது ஆபரேஷன் அஜய்யின் கீழ் நாங்கள் இஸ்ரேலில் இருந்து மக்களை அழைத்து வருகிறோம். இது ஐந்தாவது விமானம், நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். 1180 பேரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். வெளியேற்றத்தை தொடங்கும் முதல் நாடு நாங்கள் தான், மேலும் எங்கள் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் அழைத்து வருகிறோம்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுதந்திரப் போர் முடிவடையவில்லை.
    • ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.

    ஜெருசலேம்:

    ஹமாசுக்கு எதிராக நடைபெற்று வரும் போர், மனிதகுலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் "ஒளியின் சக்திகளுக்கும்", விலங்குகளை உள்ளடக்கிய "இருளின் சக்திகளுக்கும்" இடையேயான யுத்தம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "75 ஆண்டுகள் கடந்தும் கூட, சுதந்திரப் போர் முடிவடையவில்லை. ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,, "ஹமாஸை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட வேண்டும். இந்தப் போர் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குமான போரும் கூட. இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏனெனில் இது இந்த பிராந்தியத்தில் எங்களின் இருப்பைப் பற்றியது.

    ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தின் ஒரு பகுதிதான் ஹமாஸ். இவர்கள் மத்திய கிழக்கு பகுதிகளை படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இப்போது, இஸ்ரேல் யாரை எதிர்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள பலர் புரிந்துகொண்டிருப்பார்கள். ஹமாஸ் நாஜிக்களின் புதிய வெர்ஷன். நாஜிக்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்சை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட்டது போல, ஹமாஸை தோற்கடிக்கவும் ஒன்றுபட வேண்டும். ஈரானும், ஹிஸ்புல்லாவும் எங்களை சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்படி செய்தால் இந்த முறை நீங்கள் செலுத்தும் விலை மிக அதிகமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

    • டெல்அவிவ் சென்றபோது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • விமானம் ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    புதுடெல்லி:

    போர் நடந்து வரும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்டு வர ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக சிறப்பு விமானங்கள் அனுப்பி அவர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.

    இந்தியர்களை மீட்பதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து டெல்அவிவ் சென்றது. இந்த விமானம் நேற்று நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது.

    ஆனால் டெல்அவிவ் சென்றபோது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த விமானம் ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்ட பின் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது.
    • காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

    இதனிடையே போர் தொடங்கிய உடன் காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது. இதன்காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வந்தனர்.

    இந்நிலையில் தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காசாவுக்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திய இஸ்ரேலின் முடிவுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    • புதுடெல்லி வந்த 49 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.
    • 8 தமிழர்கள் மதுரை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.

    சென்னை:

    இஸ்ரேலில் இருந்து இதுவரை 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

    இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில், இதுவரை இரண்டு கட்டங்களாக புதுடெல்லி வந்த ௪௯ தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று இஸ்ரேலில் இருந்து இரண்டு விமானங்களில் புதுடெல்லி வந்தடைந்த 49 தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசினால் விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 32 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 9 தமிழர்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும், 8 தமிழர்கள் மதுரை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.

    சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீராசாமி, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைத்தனர். மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்களால் வரவேற்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுவரை, இஸ்ரேலில் இருந்து 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
    • மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி முதல் தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், காசாவில் மோதலின் முதல் ஏழு நாட்களில் இதுவுரை 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, ஐ.நாவின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலியட் டூமா கூறுகையில்," காசாவில் நடந்த போரின் முதல் ஏழு நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
    • லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் இன்று 9வது நாளாக நீடித்து வருகிறது.

    கடந்த 7-ம்தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாமுனை மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இரு தரப்பிலும் இதுவரை அப்பாவி பொதுமக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. இதையடுத்து போர் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. எல்லையில் 3 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் தெற்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, இஸ்ரேலிய வடக்கு எல்லைக் கிராமத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

    லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.

    • டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி கவுசல் கிஷோர் நேரில் சென்று வரவேற்றார்.
    • இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது

    புதுடெல்லி:

    இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, முதல்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன் தினம் காலை டெல்லி வந்தடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் நேற்று மீட்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2வது மீட்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்தடைந்தது.

    இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் மூன்றாவது விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி கவுசல் கிஷோர் நேரில் சென்று வரவேற்றார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி கவுஷல் கிஷோர், "பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் அர்ப்பணிப்புடன், இஸ்ரேலில் இருந்து இந்திய குடிமக்கள் இங்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி வந்ததும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

    இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது

    • இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
    • ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா முனையில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்து பேசினார். அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாடிய நெதன்யாகு, 'அடுத்தகட்டத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?' என்று கேட்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

    • மக்கள் வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் தென்காசாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
    • எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், பொதுமக்களை தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தொடர்ந்து, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

    எனவே மக்கள் வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் தென்காசாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் அருகில் உள்ள எகிப்து நாட்டிற்குள்தான் செல்ல வேண்டும்.

    இந்த நாட்டிற்குள் செல்ல ஒரே வழி தென்காசாவில் உள்ள ரஃபா கிராஸிங் எனும் பாதை ஆகும், அதனையும் இஸ்ரேல் மூடிவிட்டதாகவும், இனிமேல் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் இஸ்ரேல் அனுமதி பெற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் எங்களை தொடர்பு கொண்டுதான் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    ×