என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை அதிகாரி"
- வயதான பெற்றோரை முறையாக கவனித்துக் கொள்ள இயலவில்லை.
- நிபந்தனையை தளர்த்தக் கூடாது என வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மதுரை:
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி தற்போது நிபந்தனை ஜாமினில் உள் ளார். இவர் வாரம் ஒரு முறை திண்டுக்கல் கோர்ட் டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அங்கிட் திவாரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், வாரம் தோறும் சென்று கையெழுத்திடுவது சிரமமாக உள்ளது. இது உடல் மற்றும் மனரீதியாக அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, அதிக செலவையும் ஏற்படுத்துவதாக உள்ளது. வயதான பெற்றோரையும் முறையாக கவனித்துக் கொள்ள இயலவில்லை.
வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது. விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் வாரம் ஒரு முறை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அங்கிட் திவாரிக்கு நிபந்தனை தளர்வு அளித்தால் அவர் சொந்த மாநிலத்திற்கு சென்று விடுவார். எனவே நிபந்தனையை தளர்த்தக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வாரம் ஒரு முறை திங்கட்கிழமை கையெழுத்திடுவதை 2 வாரத்திற்கு ஒருமுறை திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.
- தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன்.
- மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை:
திண்டுக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ஒரு வழக்கு சம்பந்தமாக அவருக்கு சாதகமான நடவடிக்கை எடுக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.
இவர் ஏற்கனவே தனக்கு ஜாமீன் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டத்துக்கு புறம்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் என்னை கைது செய்து உள்ளனர்.
தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். எனக்கு ஜாமீன் அளிக்கும்பட்சத்தில் உரிய நிபந்தனைகளை பின்பற்றி ஒத்துழைப்பேன். எனவே எனக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் வக்கீல் திருவடிக்குமார் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. அதனால் தான் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கில் குற்றபத்திரிகை தயாராக உள்ளது. இந்த சமயத்தில் மனுதாரருக்கு ஜாமீன் அளித்தால் அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பக்கூடும் என்று வாதாடினார்.
பின்னர் ஆஜரான மனுதாரர் வக்கீல், சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கும் வரை மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என கோரினார். விசாரணை முடிவில், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- 8 வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கான நகல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
- இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா இன்று அதன் மீதான உத்தரவை வழங்குவதாக தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கிட் திவாரி தரப்பில் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி அங்கிட் திவாரி தரப்பில் அவரது வக்கீல் செல்வம் 2-வது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வக்கீல் செல்வம் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல் அனுராதா இந்த வழக்கு குறித்து மேல்நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவேதான் தற்போது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தற்போது ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கிட் திவாரி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் காந்தி, செல்வம் ஆகியோர் ஆஜராகி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்த பல வழக்குகள் சிறையில் இருப்பவருக்கு ஜாமீன் வழங்க தடை இல்லை என்பதற்கான வாதங்களை முன் வைத்தனர்.
இது தொடர்பான 8 வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கான நகல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜாமீன் வழங்க கூடாது என்பதற்கான உத்தரவு நகல் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்ததால்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா இன்று அதன் மீதான உத்தரவை வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி அங்கிட் திவாரி மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அவர் உத்தரவிட்டார். 2-வது முறையாக அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
- பணத்தை பெற்றுக் கொண்டு காரில் தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
மதுரை:
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் சுரேஷ் பாபு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க தனக்கு ரூ.3 கோடி லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்கத்துறையில் பணிபுரியும் துணை இயக்குனர் அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவை அணுகி உள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து வாட்ஸ்ஆப் மூலமாக அங்கிட் திவாரி, மீதியுள்ள ரூ.31 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனையடுத்து டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டு கட்டுகளை பேக்கில் வைத்து சுரேஷ் பாபு கொடுத்தார். அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு காரில் தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். அங்கிட் திவாரியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த நிலையில் அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி அங்கிட் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.
இன்று காலை ஜாமீன் வழக்கு குறித்து நீதிபதி சிவஞானம், அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தெரியாது என பதிலளித்தார்.
- அங்கிட் திவாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரியான அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பதாகவும், இதிலிருந்து தப்பிக்க ரூ.51 லட்சம் பணம் தரவேண்டுமென கேட்டுள்ளார்.
அதன்படி கடந்த 1-ம் தேதி திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியபோது போலீசார் அங்கிட் திவாரியை கையும், களவுமாக பிடித்து கைதுசெய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் மனுவை ஏற்றுக்கொண்டு அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
அதன்படி, நேற்று முன்தினம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து அங்கிட் திவாரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். மதுரையில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 2 லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டது. அந்த லேப்டாப்களை அங்கிட் திவாரியை வைத்து திறக்கச் செய்தனர். அதில் அமலாக்கத்துறை சோதனையின் போது யார் யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இருந்தன.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தனக்கு தெரியாது என்று பதிலளித்ததுடன், சில கேள்விகளுக்கு மவுனமாக இருந்துள்ளார். இருந்தபோதும் அமலாக்கத் துறையை காரணம் காட்டி பல்வேறு நபர்களிடம் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்கி அதை தனது துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கியது தெரிந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் அங்கிட் திவாரி மதுரையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் 3 நாள் காவல் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு அங்கிட் திவாரியை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கிட் திவாரியின் 15 நாள் காவல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தனர்.
அவர் மதுரை சிறையில் சாதாரண கைதிகளை போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், வருமான வரியை கட்டி வருபவர் என்பதால் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்க கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். அரசுத்தரப்பு சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கிட் திவாரியை டிசம்பர் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 28-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.
- நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கிட் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது கடந்த 1ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார்.
அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவருக்கு டாக்டர்கள் கவுன்சிலிங் அளித்தனர். தான் வருமானவரி செலுத்தக்கூடிய நபர் என்பதால் தனக்கு முதல் வகுப்பு அறை வேண்டும் என அவர் வைத்த கோரிக்கையை சிறைத்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகள் வாரம் ஒருமுறை செல்போன் மூலம் தங்கள் குடும்பத்தினரிடம் பேச அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்தி அங்கிட் திவாரி தனது குடும்பத்தினரிடம் பேசியபோது கதறி அழுதார். அப்போது அவர்கள் அங்கிட் திவாரிக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.
இதனிடையே அங்கிட் திவாரி தான் பெற்ற லஞ்ச பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார். எனவே லஞ்ச பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி மனு அளித்திருந்தனர். அந்த மனு இன்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கிட் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவரது சார்பில் வக்கீல் செல்வம் என்பவர் ஆஜரானார்.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் சேகரிக்க உள்ளதால் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு அங்கிட் திவாரியின் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேட்ட 3 நாள் காவலை வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து போலீசார் அவரை தங்கள் பாதுகாப்பில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அழைத்துச் சென்றனர். மீண்டும் 14ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
- கையும் களவுமாக ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்துடன் அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
- இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா அங்கிட் திவாரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டாக்டர் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் விடுவிக்கப்பட்ட நிலையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் எடுத்து தாங்கள் விசாரிக்க இருப்பதாகவும், விசாரணை நடத்தாமல் இருக்க வேண்டுமானால் ரூ.51 லட்சம் தர வேண்டும் என மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கிட் திவாரி கூறியுள்ளார்.
அதன்படி 2-வது தவணையாக ரூ.20 லட்சத்தை பெற்றுக் கொண்டு திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு காரில் திரும்பிச் சென்றபோது விரட்டிச்சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிட் திவாரியை கைது செய்தனர். 15 மணி நேர விசாரணைக்கு பின்பு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை வருகிற 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி மோகனா உத்தரவிட்டார். இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கிட் திவாரி தரப்பில் வக்கீல் விவேக் பாரதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அங்கிட் திவாரி சார்பில் வாதிட்ட விவேக் பாரதி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதிவாதிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார்.
ஆனால் இதனை எதிர்த்த அரசு தரப்பு வக்கீல் அணுராதா, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி கையும் களவுமாக ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்துடன் அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா அங்கிட் திவாரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அங்கிட் திவாரி கடந்த 2018ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்தார்.
எம்.என். நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த அவர் சில உயர் அதிகாரிகளின் உடந்தையுடன் பல்வேறு வழக்குகளில் பெரும் தொகையை பேரம் பேசி கிடைக்கும் பணத்தை 7 அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களை பெறுவதற்காக அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இது தொடர்பாக அவருடன் தொடர்பில் உள்ள அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அங்கிட் திவாரியிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நாளை திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில் மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு வழக்கு குறித்து பேசினார்.
அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் டாக்டர் சுரேஷ்பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என கூறியுள்ளார். பின்னர் பேரம் பேசி இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என கூறியுள்ளார்.
அவரிடம் ஏற்கனவே ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரி பெற்றுள்ளார். 2-வது தவணையாக திண்டுக்கல்லில் பணம் பெற முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை காரில் துரத்திச்சென்று கைது செய்தனர். அவரிடம் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி மோகனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி வேறு யாரிடமும் இதேபோல் மிரட்டி பணம் பெற்றாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச்சென்றனர். மேலும் அங்கிட் திவாரிக்கு நெருக்கமான அதிகாரிகளிடம், அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அங்கிட் திவாரியிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நாளை திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற போலீசார் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் சிறையில் இருந்த அவர் இன்று மதுரைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- சில உயர் அதிகாரிகள் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
- அங்கிட் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
மதுரை:
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அங்கிட் திவாரி (வயது 32). இவர், கடந்த 2018-ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அதாவது, விசாரணை அதிகாரி அந்தஸ்தில் இவர் இருந்துள்ளார்.
காலங்கரை பகுதியில் எம்.என்.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அங்கிட் திவாரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் சுரேஷ்பாபுவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக மேல்விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக முதல் தவணையாக கடந்த நவம்பர் 1-ந் தேதி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றார். 2-வது தவணையாக ரூ.20 லட்சம் பெறும்போது கையும், களவுமாக அவரை கைது செய்தனர். பின்னர் அங்கிட் திவாரி, நீதிமன்ற காவலில் 15 நாள் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடனடியாக அங்கிட் திவாரி பணிபுரியும் மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலும், மதுரையில் உள்ள அவரது வீட்டிலும் அதிரடியாக சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவு வந்தது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருந்தது. பெண் ஊழியர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை 7 மணி வரை என விடிய விடிய கிட்டத்தட்ட 13 மணி நேரம் தொடர்ச்சியாக சோதனை நடந்தது. பின்னர் அமலாக்கத்துறை அலுவலகம் மூடப்பட்டது.
சோதனை குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியது வருமாறு:-
ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பியபோது, போலீசாரிடம் சிக்கிய அங்கிட் திவாரியிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
சில உயர் அதிகாரிகள் அவர் லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். பெரும் தொகையை குறி வைத்து லஞ்ச பேரம் பேசுவது இந்த அதிகாரிகளுக்கு வாடிக்கையாக இருந்துள்ளது.
தாங்கள் லட்சக்கணக்கில் லஞ்சமாக வாங்கும் பணத்தை 7 அதிகாரிகள் பங்கு போட்டுக்கொண்டு உள்ளனர். எனவே அவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும் இந்த சோதனை உதவி இருக்கிறது.
விரைவில் அந்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். முழுமையான விசாரணைக்குபின்னரே, இதுகுறித்து மற்ற தகவல்களை தெரிவிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அங்கிட் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக நாளை (திங்கட்கிழமை) திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
- கடந்த 1.11.2023-ந்தேதி நத்தம் அருகே மதுரை செல்லும் வழியில் ரூ.20 லட்சம் பணம் அவருக்கு கொடுக்கப்பட்டது.
- மீண்டும் ரூ.20 லட்சத்தை தயார் செய்து அங்கிட் திவாரியை தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக டாக்டர் சுரேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 29.10.2023-ந்தேதி ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து டாக்டர் சுரேஷ்பாபுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தனக்கு தமிழ் தெரியாது. எனவே ஆங்கிலத்தில் உரையாடவும் என கூறிவிட்டு மறுநாள் 30.10.2023-ந்தேதி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டார்.
தன் மீதான வழக்கு முடிந்துவிட்டதாக கூறியபோதும், உங்கள் மீதான புகாரில் உண்மை உள்ளது. எனவே நீங்கள் விசாரணைக்கு வராவிட்டால் சம்மன் அனுப்பி அதனை விசாரிக்க நேரிடும் என மிரட்டினார்.
அதன்பிறகு பல நாட்களில் வாட்ஸ்ஆப் மூலமும், தொலைபேசி மூலமும் போன் செய்து தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கச்சொல்லி விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். மேலும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி பணம் தரவேண்டும் என கூறினார்.
அதற்கு டாக்டர் சுரேஷ்பாபு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறியபோது வேறு ஒரு நபரை பேசவைத்து ரூ.51 லட்சம் கொடுத்தால்போதும் உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கவேண்டி உள்ளது. தீபாவளி செலவுக்கு பணம் தேவைப்படுகிறது எனக்கூறினார். அதன்படி கடந்த 1.11.2023-ந்தேதி நத்தம் அருகே மதுரை செல்லும் வழியில் ரூ.20 லட்சம் பணம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்த பணத்தைதான் கையில் வாங்காமல் டிக்கியில் வைத்துவிடுமாறு கூறினார்.
எனது கார் டிரைவர் அவரது டிக்கியில் பணம் வைத்தபோது அதனை வீடியோ பதிவு செய்து கொண்டேன். ஆனால் மீதி பணத்தை ஒரு வாரத்தில் தர வேண்டும் என கண்டிப்பாக கூறினார். அவ்வாறு தராவிட்டால் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் அமலாக்கத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என மிரட்டினார்.
உங்கள் ஊரிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் பல தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறோம். அது உங்களுக்கு தெரியும் எனவும் கூறினார். இதனையடுத்து மீண்டும் ரூ.20 லட்சத்தை தயார் செய்து அங்கிட் திவாரியை தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை. தான் காவிரிஆற்று மணல் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், பல்வேறு முக்கிய பணிகளுக்காக சென்னைக்கும், டெல்லிக்கும் சென்றுவருவதாகவும் தெரிவித்தார். இதனால் தன்னால் அங்கு வர வாய்ப்பில்லை என கூறிவிட்டார்.
மேலும் உங்களுக்கு ஹவாலா பணம் பரிமாற்றம் செய்பவர்கள் யாரும் தெரியாதா என கேட்டார். அவர்களை பற்றி எல்லாம் தனக்கு தெரியாது என டாக்டர் சுரேஷ்பாபு கூறியுள்ளார். தான் ஊருக்கு வந்து பணத்தை வாங்கி கொள்வதாக கூறிவிட்டு அடிக்கடி செல்போனில் குறுந்தகவல் மட்டும் அனுப்பி வந்தார். டிசம்பர் 1-ந்தேதி காலையில் வாங்கி கொள்வதாக கூறியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கொண்டனர். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மதுரை அமலாக்கத்துறையில் பணிபுரிந்துவரும் ஹர்த்திக் என்பவரும் திவாரிக்கு ஆதரவாக தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அங்கிட் திவாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
- அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
- அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு டாக்டரை வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 3 கோடி பேரம் பேசி ரூபாய் 20 லட்சம் லஞ்சப் பணம் பெற்று காரில் தப்ப முயன்ற மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் 25 கி.மீ. தூரம் விரட்டி சென்று பலவந்தமாக மடக்கி கைது செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வந்த புனிதர்கள் போல் வேடம் தரித்து வந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
அமலாக்கத்துறையோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிற அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை பெற்று குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருக்கிறாரா? அப்படி தயாராக இல்லையெனில் தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என கூறுவதோடு, பொது மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமற்ற அவதூறான கருத்து தான் என்ற முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இனியும் தொடருமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இரவு 11 மணியளவில் திண்டுக்கல் கிளைச் சிறைச்சாலையில் அங்கிட் திவாரி அடைக்கப்பட்டார்
- கைதான அங்கிட் திவாரி மத்திய பிரதேசமாநிலம் போபாலை சேர்ந்தவர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியில் இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறார். இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு முடிவடைந்த நிலையில் அதே வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி(32) என்பவர் டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டார். சுரேஷ்பாபுவின் சொத்து குவிப்பு வழக்கை தாங்கள் கையில் எடுக்க இருப்பதாகவும், இதனை கைவிடவேண்டும் எனில் ரூ.5 கோடி லஞ்சமாக தரவேண்டும் என கேட்டுள்ளார்.
அவர் சற்று தயங்கவே ரூ.3 கோடி தருமாறு கேட்டுள்ளார். அதற்கும் டாக்டர் சுரேஷ்பாபு சம்மதிக்கவில்லை. இதனையடுத்து ரூ.50 லட்சம் பேசி முதல் தவணையாக ரூ.20 லட்சம் கொடுத்துவிட்டு 2-ம் தவணையாக ரூ.31 லட்சம் கொடுக்க முயன்றபோது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும், களவுமாக பிடிபட்டார்.
நேற்று காலை அங்கிட் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துவந்து இரவு வரை விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு இரவு 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி மோகனா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இரவு 11 மணியளவில் திண்டுக்கல் கிளைச் சிறைச்சாலையில் அங்கிட் திவாரி அடைக்கப்பட்டார். ஆனால் அவர் மிகுந்த சோகத்துடன் அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் யாருடனும் பேசாமல் இருந்தார். நள்ளிரவு சமயத்தில் அவர் கதறி அழுததால் சிறைக்காவலர்கள் அவருக்கு வேறு எதுவும் உதவி வேண்டுமா? என கேட்டனர். ஆனால் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. விடிய விடிய தூங்காமல் தனது அறையிலேயே அழுதபடி இருந்தார்.
அதிகாரிகள் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைதான அங்கிட் திவாரி மத்திய பிரதேசமாநிலம் போபாலை சேர்ந்தவர். ஆர்.கே.திவாரியின் மகனான அவர் அமலாக்கத்துறையில் கடந்த 2018-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார். வடமாநிலங்களில் பணிபுரிந்து வந்த அவர் கடந்த ஏப்ரல் மாதம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 29-ந்தேதி திண்டுக்கல் அரசு டாக்டரான சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் கூறி மிரட்டியுள்ளார்.
டாக்டர் மதுரைக்கு சென்றபோது அவரது காரில் ஏறிக்கொண்ட அங்கிட் திவாரி நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என கேட்டுள்ளார். அதன்பின்னர் ரூ.50 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசினார். இதைத்தொடர்ந்து முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை நத்தத்தில் வைத்து வாங்கி கொண்டார். பேசியபடி மீதி பணத்தையும் தரவேண்டும் எனவும், தனது மேல் அதிகாரிகளுக்கு பங்கு தரவேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ் மூலம் மிரட்டினார்.
தனக்கு வந்த மிரட்டல் குறித்து டாக்டர் சுரேஷ்பாபு நவம்பர் 30-ந்தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரை கொடைரோடு சுங்கச்சாவடி அருகே சுற்றிவளைத்து கைது செய்தனர். பணத்தை அங்கிட்திவாரி வாங்கும்போது தான் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக கையால் வாங்காமல் கார் டிக்கியில் வைத்து செல்லுமாறு கூறுவது வழக்கம். அதன்படிதான் டாக்டர் சுரேஷ்பாபுவிடமும் பணத்தை கையில் வாங்காமல் கார் டிக்கியில் வைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இவர் பல்வேறு இடங்களில் சோதனைக்கு செல்லும்போது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் கத்தை கத்தையாக பணம், நகைகளை பார்த்து நாமும் இதேபோல் ஆடம்பரமாக வாழ வேண்டும் என நினைத்துள்ளார். அதேபோல் குற்றவழக்கில் இருந்து தப்பிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களது செல்போனுக்கு சில மாதங்கள் கழித்து போன் செய்து அவர்களிடமிருந்து லஞ்சம் பெற்று வந்துள்ளார். தான் வாங்கிய பணத்தில் உயர் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுத்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்களில் சோதனை முடிவுக்கு பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்