search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க பாஜக வலிந்து கூறுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் இன்று சந்தித்தார். அப்போது அவர்,

    பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளன் கூறுகையில்,

    * தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை கெடுத்து பிரச்சனைகளை உருவாக்க சில கட்சிகள், அமைப்புகள் சதி செய்கின்றன.

    * தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன.

    * பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் அரசியல் சதி இருப்பதாக விசிக கட்சி சந்தேகிக்கிறது.

    * ஆம்ஸ்ட்ராங் பலியான சில நிமிடங்களிலேயே பாஜவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் என பேட்டி தருகிறார்.

    * எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் விசாரிக்க கூடாது என கூறியது ஏன்?

    * ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் உள்ளார்கள் என ஒரு வருடத்திற்கு மேல் பேசப்பட்டு வருகிறது.

    * ஆருத்ரா மோசடியில் தொடர்புடையவர்கள் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க பாஜக வலிந்து கூறுகிறது.

    * கலைஞர் குறித்து கொச்சையாக விமர்சித்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.

    * நீட் தேர்வு முறைகேடு உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மறைக்க பாஜக முயற்சித்து வருகிறது.

    * புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள ஆணையம் அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு என்று அவர் தெரிவித்தார்.

    • குடும்ப தலைவிகளுக்கு நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.
    • ஜூலை 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும்

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்தது.

    இதையடுத்து தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதனையடுத்து 2-ம் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலும் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    ஆக மொத்தம் 1 கோடி யே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1000 சென்றடைகிறது. இதுதவிர மேலும் 11.85 லட்சம் பெண்கள் ரூ.1000 கேட்டு மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனு செய்திருந்த ஒவ்வொருவர் வீட்டுக்கும் பணியாளர்கள் சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், வசதி எந்த அளவுக்கு என்பது பற்றியும் விசாரித்தனர்.

    இதன் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இந்த பட்டியல்படி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப் படும் என்று கேள்விகள் எழுந்தன. இதனையடுத்து இது தொடர்பான முக்கிய அறிவிப்பை விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார்.

    அவர் கூறுகையில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான வர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வங்கிக் கணக்கில் இந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும் என்று கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் சென்று அரசு உதவிபெறும் பள்ளி களிலும் மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த விழாவில் மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று திருவள்ளூர் சென்று விரிவான ஆலோசனையும் நடத்தினார்கள்.

    • அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.
    • ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன்

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்துள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.

    மருத்துவர்கள் தங்கள் நேரத்தை மற்றும் உழைப்பை பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக அரசு அவர்களது கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுப்பதன் மூலம், அரசு மருத்துவர்களின் எதிர்கால கனவுகளைத் தகர்த்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    விடியா திமுக அரசு, மத்திய அரசின் வேலை வாய்ப்பு ஒழிப்பு கொள்கைகளை எதிர்ப்பதாக கூறி மக்களிடம் கபட நாடகம் ஆடுவது இந்த உத்தரவின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதோ அல்லது மாற்றம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. இது முழுமையான இரட்டை வேடத்தை காட்டுகிறது.

    இது மருத்துவப் பட்டமேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே உடனடியாக அரசு பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழா நடைபெற்றது.
    • பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.7.2024) தருமபுரி, பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மகளிர் விடியல் பயணத் திட்டப் பயன்பாட்டிற்காக 20 புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • “அரூர் பேரூராட்சி”, “நகராட்சியாக” தரம் உயர்த்தப்படும்.
    • பஞ்சப்பள்ளி, ராஜ பாளையம் அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும்.

    சென்னை:

    தருமபுரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 15 புதிய அறிவிப்புகள்.

    1. 51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

    2. தருமபுரி வெண்ணம் பட்டி சாலையில், புதிய ரெயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    3. "அரூர் பேரூராட்சி", "நகராட்சியாக" தரம் உயர்த்தப்படும்.

    4. பஞ்சப்பள்ளி, ராஜ பாளையம் அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும்.

    5. சிட்லிங், அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுச் செயலாக்க மையம் அமைக்கப்படும்.

    6. தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.

    7. பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழுதடைந்த 4 வகுப்பறைகள், புதுப்பிக்கப்படும்.

    8. பெரியபட்டி வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளில், 2.54 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அரூர் ஒன்றியத்தில் சிட்லிங் கிராமம், அம்மாப்பேட்டை, மருதிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 3.82 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.

    9. மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் 7 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

    10. இருமத்தூர் தென் பெண்ணை ஆறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு அருகில் புதியதாக திறந்த வெளி கிணறு அமைத்து, நீரேற்று குழாய் அமைக்கப்படும். மேலும் பேருந்து நிலையம் அருகில், கூடுதலாக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, 4.1 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படும்.

    11. அரூர் ஊராட்சி ஒன்றியம், பறையப்பட்டி புதூர் முதல் பறையப்பட்டி காலனி வரை, கணபதிப்பட்டி தார்சாலை மற்றும் வீரப்பநாயக்கன் பட்டி தார்ச் சாலைப் பணிகள் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளி முதல் கோபிநாதம்பட்டி செல்லும் தார்ச் சாலை ஆகியவை 60 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் புதுப்பிக்கப்படும்.

    12. கெளாப்பறை ஆதிதிராவிடர் காலனி மயானம் செல்லும் சாலையில், வரட்டாறு ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்படும்.

    13. சிட்லிங் ஊராட்சி, நாட்டான்வளவு முதல் கம்பாளை சாலைக்கு இடையே, காட்டாற்று ஓடையின் குறுக்கே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படும்.

    14. பறையப் பட்டி புதூர் ஊராட்சி ஜி.கே.ரோடு கிராமத்தில் ஒரு புதிய 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், இருமத்தூர் ஊராட்சி, போளையம்பள்ளி ஊராட்சி, மொரப்பூர் ஊராட்சிகளில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்படும்.

    15. பாளையம்புதூர் ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோம்பை, மூலக்கோம்பை, ராஜீவ்காந்தி நகர் மற்றும் நாயக்கனேரி பகுதிகளில் இணைப்புச் சாலைகளைப் புதுப்பிக்கவும், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேர்ச்சாலை மற்றும் மூலக்கம்பை கிராமச் சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றவும்; தொம்பரகாம்பட்டி மேற்கு வன்னியர்தெருவில்

    10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக்கிணறு மற்றும் மின்மோட்டார் ஆகியவை அமைக்கவும் ஆக மொத்தம் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

    • மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
    • மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம்.

    தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் ஊராட்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை நான் நேரடியாக சந்தித்தேன். அந்த நிகழ்ச்சிக்கு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று பெயர் வைத்தோம். கொளத்தூர் மட்டுமல்ல, அதாவது என்னுடைய தொகுதி கொளத்தூர் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள் தான் என்ற எண்ணத்துடன் அந்த பயணத்தை தொடங்கினேன். மேடையில் எனக்கு அருகில் ஒரு பெரிய பெட்டி வைத்து, அதில், பொதுமக்கள் தங்களுடைய தொகுதிக்கான தேவைகளை, கோரிக்கைகளை எழுதி போட வைத்தோம்.

    ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அதில் சாத்தியமாக இருக்கக்கூடிய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி காட்டுவேன் என்று சொன்னேன்.

    ஆட்சிக்கு வந்ததும், உங்களுடைய மனுக்களை கவனிப்பதற்காகவே புதியதாக ஒரு துறையை உருவாக்கினேன். அந்த துறையின் பெயர் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை துறைவாரியாக பிரித்தோம். அதிலிருந்து, நடைமுறை சாத்தியம் உள்ள 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டோம். மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியம் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தலுக்கு முன்னால் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டவுடன், எங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கவில்லை. இனிமேல்தான், கடமை தொடங்குகிறது என்று நினைத்து, உழைப்பைக் கொடுத்தோம். அதனால்தான், தொடர்ந்து மனுக்களை பெற்றோம். அதை முறைப்படுத்தினோம். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, "முதல்வரின் முகவரி" என்று புதியதாக ஒரு துறையை உருவாக்கினோம்.

    மக்களால் தரப்படும் எல்லா மனுக்களையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தோம். அனைத்து மக்களின் கோரிக்கைகளும் தலைமைச் செயலகத்திற்கு வந்துவிடுகிறது.

    நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், முதல்வரின் முகவரி துறையின்கீழ் தற்போது வரைக்கும் பெறப்பட்ட, 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்களில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்கிறோம். அதிலும், இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும், 72 ஆயிரத்து 438 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

    30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் உருவானதுதான் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம்.

    முதற்கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராம ஊராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் வாயிலாகப் பெறப்பட்ட சுமார் 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதுவரைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம். இந்த தருமபுரி மாவட்டத்தில் நகரப் பகுதிகளில், 3 ஆயிரத்து 107 மனுக்கள் பெறப்பட்டு, 30 நாட்களில் 1,868 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

    ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    எடுத்துக்காட்டாக, உங்களிடம் ஒன்றிரண்டு கடிதத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூரணி என்பவர், தன்னுடைய வீட்டு வாசல் முன்பு கழிவுநீர் தேங்குவது தொடர்பாக எழுதியிருந்த மனுவுக்கு, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் தீர்வு கண்டோம். அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதத்தில், என்ன சொல்லியிருந்தார்கள் என்றால், இதய நோயாளியான அவர்களுக்கு தேவையான மருந்துகள், அரசு மருத்துவமனையிலேயே கிடைத்து விடுவதாகவும், ஆனால், ஒரே ஒரு மாத்திரையை மட்டும் வெளியே வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அந்த மாத்திரையின் விலை, ஒரு அட்டை 215 ரூபாய். ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரை என்று, ஒரு மாதத்திற்கு 60 மாத்திரை சாப்பிடவேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் இதற்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும், கடந்த எட்டு மாதமாக, இந்தத் தொகையில்தான் மருந்து வாங்குவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் சொல்லியிருந்தார்.

    அடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீனி வேதமுத்து என்பவர் எழுதிய கடிதத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருந்த கைலாசபுரம் செட்டியூரனி சாலையை சீரமைத்து கொடுத்ததற்கு நன்றி சொல்லியிருந்தார்.

    பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டு, செயல்படுத்தி கொடுப்பது மூலமாக, எல்லோரும் மனநிறைவு அடையும் ஆட்சியாக நம்முடைய கழக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஏதாவது ஒரு பயன்கிடைக்க அதில் அவர்கள் பயனடைந்து கொண்டு வருகிறார்கள். அதேபோன்று 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலமாக 'யாருக்கும் எந்தக் குறையும் இல்லை' என்ற நிலையை உருவாக்க நாங்கள் இப்போது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

    இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரெயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை. நல்ல குணமில்லை. பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை. தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை.

    ஒன்றிய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

    தி.மு.க.வைப் பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம். இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம். மக்களுக்கு உண்மையாக இருந்து, உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம். இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை உன்னதமான சிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம்,

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • எங்களை கேலி செய்த எதிர்க்கட்சியினர் முன்னிலையில் எங்களுக்கு வெற்றி தந்தீர்கள்.
    • தனித்துறையை உருவாக்கி மக்களின் கோரிக்கையில் சாத்தியமுள்ள அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான விழா தர்மபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    * ஆட்சிக்கு வந்தவுடன் துறைவாரியாக மனுக்கள் பிரிக்கப்பட்டு 2.29 லட்சம் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    * கொளத்தூர் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து தொகுதியும் என்னுடையது என்ற நோக்கில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம்.

    * புகார் பெட்டியில் பெற்ற மனுக்களுக்கு ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்கு தீர்வு காணப்படும் என கூறினேன்.

    * எங்களை கேலி செய்த எதிர்க்கட்சியினர் முன்னிலையில் எங்களுக்கு வெற்றி தந்தீர்கள்.

    * தனித்துறையை உருவாக்கி மக்களின் கோரிக்கையில் சாத்தியமுள்ள அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * ஆட்சிக்கு முன் மட்டுமல்ல, ஆட்சிக்கு பின்னரும் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டவை மூலம் மனு பெற்றோம்.

    * முதல்வரின் முகவரியின் கீழ் பெற்ற 68 லட்சம் மனுக்களில் 66 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    * மக்களின் கோரிக்கை எங்கள் பார்வையில் இருந்து தவறக்கூடாது என்று செயல்பட்டோம்.

    * தர்மபுரி மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.

    * அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து மக்கள் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர்.

    * ஒவ்வொரு வீட்டிற்கும் ஏதாவது ஒரு அரசு திட்டம் பயன்படுகிறது.

    * ரூ.51 கோடி செலவில் அரூர் அரசு மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

    * தர்மபுரி வெண்ணம்பட்டி சாலையில், ரூ.38 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

    * தீர்த்தமலையில் துணை விரிவாக்க வேளாண் மையம் அமைக்கப்படும்.

    * பாளையம்புதூர் அரசு பள்ளி வகுப்பறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

    * பேரூராட்சியாக உள்ள அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    * மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி தருகிறோம்.

    * மக்களுடன் முதல்வர்.. யாருக்கும் எந்த குறையும் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

    * தமிழ்நாட்டில் தொடர் தோல்வி அடைந்த பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

    * 10 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் இந்த விரிவாக்கத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
    • விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றதால் அங்கு மட்டும் இந்த திட்டம் இன்று தொடங்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் எளிதாக சென்று சேருவதற்காக தீட்டப்பட்ட திட்டம் மக்களுடன் முதல்வர் திட்டமாகும்.

    இத்திட்டம் முதற்கட்டமாக நகரப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்டு உள்ளூர் அளவிலேயே முகாம்களை நடத்தி அங்கு அளிக்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தி 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதில் தீர்வு காணப்பட்டது. இதன்படி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு கிடைத்த தீர்வினால் மக்கள் பலர் திருப்தி அடைந்தனர்.

    வெற்றிகரமாக நகரப் பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டம் தற்போது ஊரக பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படுகிறது.

    மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டம் சென்று தொடங்கி வைத்தார்.

    இதற்கான விழா தர்மபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் இந்த விரிவாக்கத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றதால் அங்கு மட்டும் இந்த திட்டம் இன்று தொடங்கப்படவில்லை.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவில் பேசும் போது, இந்த திட்டத்தால் மக்கள் பயனடையும் விதம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

    கிராமப்புற மக்கள் அதிகம் அணுகும் 15 அரசு துறைகள் அடையாளம் காணப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 முகாம்களை நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் சாந்தி, எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன்.
    • எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன். மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், ரவிச்சந்திரன், மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

    • ஆளும் கட்சியினர் பதில் அளிப்பது தொடர்கதை தான்.
    • செவி கொடுக்கப்படாத பிரச்சினைகள் பூதாகாரமாக வெடிக்கும்.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், அதற்கு ஆளும் கட்சியினர் பதில் அளிப்பதும் தொடர்கதை தான்.

    தீர்க்கப்படாமல் இருக்கும் மக்கள் பிரச்சினை, ஆர்ப்பாட்டம் முதலானவை அரசு இயந்திரத்தில் சகஜமான ஒன்றுதான். இதற்கான அளவீட்டில் மாறுபாடு ஏற்பட்டாலோ, பிரச்சினை அல்லது போராட்டத்தின் வீரியம் அதிகரித்தாலோ சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக அது உருவெடுக்கும். சமயங்களில் செவி கொடுக்கப்படாத பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும்.

    அந்த வகையில், உளவுத்துறை, காவல் துறை, சட்டம் ஒழுங்கு என அரசு இயந்திரத்தில் ஏதோ ஒன்றின் தோல்வியால் கடந்த வாரம் தேசிய கட்சி ஒன்றின் மாநிலத் தலைவர் அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்ட கோர சம்பவம் அரங்கேறியது.

    ஸ்விக்கி, சொமாட்டோ ஊழியர்களை போன்ற உடை அணிந்து, இருசக்கர வாகனங்களில் வந்த 6பேர் நின்று கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ஐ சரமாரியாக வெட்டினர். அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த கும்பல் வந்த வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றது. கடுமையான தாக்குதலுக்கு ஆளான ஆம்ஸ்ட்ராங் உடனே உயிரிழந்தார்.

     


    ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னையின் மத்திய பகுதியில், அதுவும் பொது வெளியில் வைத்து ஒரு கட்சியின் மாநில தலைவர் கொல்லப்பட்ட  சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிலைமை கைமீறி செல்லும் தருவாயில், காவல் துறையினர் இந்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கையை துவங்கிவிட்டதாக தெரிவித்தனர்.

    மேலும், ஒரே இரவில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய கைது நடவடிக்கைகளும் அரங்கேறின. இதனிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் கடந்த 31 நாட்களில் மட்டும் 131 படுகொலைகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அரசியல் கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையெனில், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்றும் கேள்வியெழுப்பினார்.

     

    முன்னதாக கடந்த மே மாதத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இது தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்த விசாரணையில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இதுதவிர நெல்லையில், பிரபல ரவுடி தீபக் ராஜா அவரது காதலி கண் முன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்டவர் சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த மூன்று மாதங்கள் வரை பின்னோக்கி செல்லும்போது இதே போன்று மேலும் சில படுகொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. படுகொலை தவிர கள்ளச்சாராய விவகாரம் மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையை கூட்டுவதில் பங்கு வகித்தது. அரசியல் படுகொலைகள், கள்ளச்சாராயம் என அடுத்தடுத்த குற்ற சம்பவங்களே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளன.




    புதுப்புது பிரச்சினைகள் எழும்போதெல்லாம் மாநிலம் முழுக்க அரசு நிர்வாக அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். மேலும், தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதிகாரிகள் மாற்றம், அவசர ஆலோசனை மற்றும் புது உத்தரவுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சீர்செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்புகிறார். பொது மக்களும் இதே நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் இதுவரை 2,04,860 பேர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
    • 858 கோடி மதிப்பீட்டில் 7.42 இலட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே, 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மேலும், காரைக்குடி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக உயர்த்தப்படும் என அண்மையில் அறிவித்துள்ளார். இப்படி நகர்ப்புற வசதிகள் வளரவளர, நகராட்சி நிர்வாகமும் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வசதிகளைப் பெருக்குவதில் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் "கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தைப் புதிதாக உருவாக்கியுள்ளார்.

    நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் இதுவரை 2,04,860 பேர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    11 மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத்திட்டம் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ரூ.5500 கோடி ஒன்றிய அரசின் பங்களிப்பு ரூ.5390 கோடி மொத்தம் ரூ.10,890 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

    சேதமடைந்த சாலைகளில் 9,346 கி.மீ. சாலைகள் நடப்புத் திட்டங்களின் கீழ் சீரமைக்கவும் மீதமுள்ள 2,526 கி.மீ நீளமுள்ள சேதமடைந்த சாலைகள் அரசின் சிறப்பு நிதி ரூ.1,000 கோடியில் 2022-2023 முதல் 2025-2026 வரை நான்கு ஆண்டுகளில் பணி முடிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை புற நகர்ப்பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி மற்றும் மாங்காடு, குன்றத்தூர் மற்றும் திருவேற்காடு நகராட்சிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு 30.31 கி.மீ நீளத்திற்கு ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் 21 மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் திருவேற்காடு நகராட்சிகளில் 69.56 கி.மீ நீளத்திற்கு ரூ.145.24 கோடி மதிப்பீட்டில் 53 மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி 2022-2023ம் திட்டத்தின் கீழ் ரூ.42.55 கோடி மதிப்பீட்டில் 43.094 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கொசஸ்தலை ஆறு மற்றும் சென்னையைச் சுற்றி நடைபெறும் பணிகள் உட்பட ரூ.6,778 கோடி மதிப்பீட்டில் 2,641 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டும், மேலும், 669 கி.மீ. நீளப் பணிகள் நடைபெறுகின்றன.

    8,911 கோடி மதிப்பீட்டில் 28 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. 858 கோடி மதிப்பீட்டில் 7.42 இலட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

    1,200 கோடி மதிப்பீட்டில் 55 பேருந்து நிலையப் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் 100 பேருந்து நிலையப் பணிகள் நடைபெறுகின்றன.

    690 கோடி மதிப்பீட்டில் 62 சந்தைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 86 இடங்களில் சந்தைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. 100 அறிவுசார் மையங்கள் நகராட்சி மாநகராட்சியால் தொடக்கப்பட்டுள்ளன.

    ரூ.424 கோடி மதிப்பீட்டில் 681 பூங்கா அபிவிருத்திப் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் 396 பூங்கா மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ரூ.700 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தப்படுத்திச் சீரமைக்கப்பட்டடுள்ளன.

    ரூ.373 கோடி மதிப்பீட்டில் புதிய மின் மயானங்கள் நிறுவும் பணிகளும் நவீனப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன. ரூ.153 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அலுவலகக் கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன.

    ரூ.771 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறை கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன.

    திறந்த வெளியில் மலம் கழித்தலை அகற்றிட ரூ.152 கோடி மதிப்பீட்டில் 72,214 தனி நபர் கழிவறைகளும் 2,081 சமுதாயக் கழிப்பிடங்களும் கட்டி முடிக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

    1405 பேருக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 2,500 பேரை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு வைத்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களைப் பணிக்கு எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டு; அதன்படித் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. தேர்வுத் தாள்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் 2,500 பேருடன் மேலும் 3,000 பேரும் தேர்வு செய்யப்பட்டு நகராட்சிகளில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், புதுமையான திட்டங்களினால் பல்வேறு பெருமைகளைப் பெற்று நகராட்சி நிர்வாகத்துறையின் பணிகளால் நகர மயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    • மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது.
    • பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்குகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.

    இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (11-ந்தேதி) ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு 10 மணிக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா, மனுக்கள் பெறுதல் மற்றும் துறை சார்ந்த அரங்குகளை பார்வையிடுகிறார்.

    இதை தொடர்ந்து 20 புதிய நகர பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் விழா மேடை வந்தடைகிறார்.

    இதனை அடுத்து கலெக்டர் சாந்தி வரவேற்புரையாற்றுகிறார்.

    காலை 11 மணிக்கு முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கலெக்டர் சாந்தி நினைவு பரிசுகளை வழங்குகிறார். விழா அரங்கில் திட்டப்பணிகளின் குறும்படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து 11.10 மணிக்கு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.20 மணிக்கு பேரூரை ஆற்றுகிறார். இதை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்குகிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வரை சாலையில் வழிநெடுங்கிலும் தொண்டர்கள் தி.மு.க. கட்சி கொடியை கட்டி வருகின்றனர்.

    ×