search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழகத்தில் உள்ளவை.
    • எப்போதும் அளிக்கப்படும் கல்விக்கான நிதியை மத்திய அரசு குறைக்கவில்லை.

    பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதலமைச்சர் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழகத்தில் உள்ளவை.

    * அமெரிக்காவுக்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வந்தால் நல்லது தான்.

    * புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    * எப்போதும் அளிக்கப்படும் கல்விக்கான நிதியை மத்திய அரசு குறைக்கவில்லை.

    * விடியல் அமெரிக்காவுக்கு போய் இருக்கிறது. இங்கே விடியுமா என்று தெரியவில்லை என்று கூறினார்.

    • கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.
    • மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையோடு நடக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கன்வென்சன் மகாலில் இன்று கடலூர் தி.மு.க. கவுன்சிலர் கே.ஜி.எஸ்.டி. சரத் திருமணம் நடந்தது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    மணமக்கள் அமைச்சர் உதயநிதிக்கு செங்கோல் வழங்கினர். தொடர்ந்து தி.மு.க. இளைஞரணிக்கு ரூ.2 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினர்.

    மணமக்களை வாழ்த்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தம்பி சரத், நிவேதா திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சரத் இளைஞரணியை சேர்ந்தவர். அவரின் தந்தையும் இளைஞரணியில் பணியாற்றியவர். திருமண விழா கழக நிகழ்ச்சிபோல எழுச்சியுடன் நடக்கிறது.

    திராவிட இயக்கத்தின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். கழகத்தின் முதல் பொருளாளர் நீலமேகத்தின் கொள்ளு பேரன் சரத். அவர் மக்களோடு எளிமையாக பழகக்கூடியவர். அதனால்தான் 23 வயதிலேயே கடலூர் நகராட்சி மாமன்ற உறுப்பினராக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

    இளைஞரணி மாநகர துணை அமைப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர, படிப்பதற்கு உரிமை இல்லை. இன்று ஆண்களுக்கு நிகராக சரிசமமாக பெண்கள் வந்துள்ளனர். பெண்கள் ஆண்களை விட அதிகமாக வெளிநாடு சென்று படிக்கின்றனர். இந்த மாற்றத்தை கொண்டுவந்தது தி.மு.க. பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கொண்டுவந்தவர் கலைஞர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

     


    ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். 3 ஆண்டில் 520 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு பெண்களும் மாதம் சராசரியாக ரூ.ஆயிரம் வரை இத்திட்டத்தால் சேமிக்கின்றனர்.

    அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை தி.மு.க. அரசு வழங்குகிறது.

    இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் ரூ.1,000 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார். காலையில் மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை முதல்வர் கொண்டுவந்துள்ளார். 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

    கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஓராண்டில் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகை பெற்று பயனடைந்துள்ளது பெருமைக்குரிய விஷயம். நான் முதல்வன் திட்டத்தால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

    அரசு பள்ளியில் படித்து வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும், முதல் பயண செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்ற சிறப்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பணிக்கு செல்லும் பெண்களில் 42 சதவீதத்தினர் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் என்பதை பெருமையோடு கூறிக் கொள்கிறேன்.

    இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும், பெண்களும் தமிழக அரசின் சாதனைகளை பட்டி, தொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டும். தமிழக அரசின் தூதுவர்களாக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையோடு நடக்க வேண்டும்.

    பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும். மணமக்கள் இருவரும், பெரியாரும், பகுத்தறிவும் போல, அண்ணாவும், மாநில சுயாட்சியும் போல, கலைஞரும், தி.மு.க.வும்போல, கழக தலைவரும், தமிழக மக்களும் போல பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமண விழாவில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி. க்கள் ரவிக்குமார், கவுதம சிகாமணி, தமிழக அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன், கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன், புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணியாற்றியவர்.
    • மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    செய்தி மக்கள் தொடர்புத்துறையின் முன்னாள் இணை இயக்குநரும் எனது உறவினருமான எல். மணிமாறனின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அவரது அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், செய்தி மக்கள் தொடர்பு துறையில் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக செய்தி மக்கள் தொடர்புத்துறை பணியாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை சிறுசேரியில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் நோக்கியா தொழிற்சாலை.
    • சென்னை தரமணியில் செமிகண்டக்டர் தொழில்நுட்ப வளர்ச்சி மையம்.

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (29.8.2024) அமெரிக்கா நாட்டின், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக 27.8.2024 அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோ நகரிற்கு 28.8.2024 அன்று சென்றடைந்தார்.

    சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கீழ்க்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரங்கள்:-

    1. நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    நோக்கியா நிறுவனமானது ஃபின்னிஷ் பன்னாட்டு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் மின்னணு நிறுவனம் ஆகும். இது ஒரு பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

    சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் முன்னிலையில் நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 450 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்த நிகழ்வில், நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தலைமை உத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர் (Chief Strategy and Technology Officer) நிஷாந்த் பத்ரா, நிலையான நெட்வொர்க் வணிகக் குழு தலைவர் (President - Fixed Network Business Group) திருமதி சாண்டி மோட்லி ஆகியோர் பங்கேற்றனர்.

     2. பேபால் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    பெபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் (PayPal Holdings, Inc.) அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும். இது ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை ஆதரிக்கும் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு உதவுகிறது. காசோலைகள் மற்றும் பண ஆணைகள் போன்ற பாரம்பரிய காகித முறைகளுக்கு மின்னணு மாற்றாக இது செயல்படுகிறது.

    பேபால் நிறுவனம் சென்னையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் (Advanced development center focussed on AI) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நிகழ்வில், பேபால் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் (EVP - Chief Technology Officer) ஸ்ரீனி வெங்கடேசன், சர்வதேச அரசாங்க உறவுகள் தலைவர் (Head of International Govt. Relations) ஜி - யாங் டேவிட் ஃபேன் ஆகியோர் பங்கேற்றனர்.

     3. ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் (Yield Engineering Systems) செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் செயல்முறை உபகரணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். மேம்பட்ட பேக்கேஜிங், ஐஓடி, லைஃப் சயின்ஸ், ஏஆர்.விஆர், எம்இஎம்எஸ், பவர் உள்ளிட்ட பலதரப்பட்ட சந்தைகளில் தொழில்நுட்பத் தலைவர்களுக்கு புதுமைகளை வழங்கும் மேற்பரப்பு மற்றும் பொருட்களை மேம்படுத்தும் அமைப்புகள் (அதாவது வெப்ப செயலாக்கம், ஈரச் செயலாக்கம், பிளாஸ்மா சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு) போன்றவற்றை வழங்குகின்றன.

    அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் கோவையில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 150 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி (Product development and manufacturing facility for Semiconductor equipment) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்த நிகழ்வில், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ரமாகாந்த் அலபதி, முதன்மை நிதி அலுவலர் பிரபாத் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

    4. மைக்ரோசிப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனமானது (Microchip Technology Inc.) ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான உட்பொதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையர் ஆகும். இது பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு (5G, EVகள், IOT, தரவு மையங்கள் போன்றவை) ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான கட்டுப்பாட்டான தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையர் ஆகும்.

    அரிசோனாவின் சாண்ட்லர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசிப் நிறுவனம், உலகளவில் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, தென் கொரியா போன்ற நாடுகளில் பல உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

    மைக்ரோசிப் நிறுவனம் 2012 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. சென்னை மையம் IC வடிவமைப்பு, கணினி உதவி வடிவமைப்பு (CAD), பயன்பாடு மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சென்னையிலுள்ள இந்நிறுவனத்தில் சுமார் 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (R&D Center in Semiconductor Technology) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்த நிகழ்வில், மைக்ரோசிப் நிறுவனத்தின் மூத்த கார்ப்பரேட் துணைத் தலைவர் பேட்ரிக் ஜான்சன், கார்ப்பரேட் துணைத் தலைவர் புரூஸ் வேயர் ஆகியோர் பங்கேற்றனர்.

     5. இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் (Infinx Healthcare) புரிந்துணர்வு ஒப்பந்தம்

    இன்பிங்ஸ் ஹெல்த்கேர் ஒரு முன்னோடி சுகாதார தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் நோயாளிகளுக்கு விரைந்து உதவக்கூடியவை, உரிமைகோரலின் துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகின்றன, தடைகளை அகற்றுகின்றன.

    இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொழில் தொடங்கிட கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே

    50 கோடி ரூபாய் முதலீட்டில் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் (Technology and Global Delivery Center) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்த நிகழ்வில், இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அலுவலர் ராதிகா டாண்டன் பங்கேற்றார்.

    6. அப்ளைடு மெட்டீரியல்ஸ் (Applied Materials) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    அப்ளைடு மெட்டீரியல்ஸ் உலகின் நம்பர் 1 குறைக்கடத்தி மற்றும் காட்சி உபகரணங்கள் நிறுவனம். சில்லுகள் மற்றும் மேம்பட்ட காட்சிகளை தயாரிக்கப் பயன்படும் பொருள் பொறியியல் தீர்வுகளில் முன்னணியில் உள்ளனர்.

    அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனமானது கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா நகரை கார்ப்பரேட் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளவில் 24 நாடுகளில் 150 நகரங்களில் செயல்பட்டு வரும் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

    தமிழ்நாட்டில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் விற்பனை, சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை கோயம்புத்தூரிலும் அமைத்துள்ளது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (Advanced artificial intelligence enabled technology development center for semiconductor manufacturing and equipment) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்த நிகழ்வில், அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் செமிகண்டக்டர் தயாரிப்புகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரபு ராஜா, துணைத் தலைவர் சதீஷ் குப்புராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக நான் இருந்து வருகிறேன். மாநிலம் முழுவதும் பல்வேறு வளர்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் நடத்தி வருகின்றன. தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. உயர்க்கல்வியில் 48 சதவீதம் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்தியாவிலேயே வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது" என்றார்.

    • சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது.
    • கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் 9.99லட்சம் கோடி மதிப்பில் 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதால் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த 8-ந்தேதி அறிவுறுத்தி இருந்தேன். ஆனால் முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என ஓடி ஒளிவது ஏன்? வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் முறை கோரியுள்ளார். அப்போது எந்த மரபுகளின் அடிப்படையில் கோரினார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் தொடங்க ஒப்பந்தம் போட்டாலும் ரூ.17 ஆயிரத்து 616 கோடி மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வராத முதலீடுகளை வந்ததாக கூறி மக்களை ஏமாற்றக்கூடாது. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினேன். அதன்படி பல பதவிகளில் பலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலக சங்கம் கூறியுள்ளது. நியமனம் செய்யப்பட்டவர்களை தேர்வு செய்ய எந்த போட்டி தேர்வும், இட ஒதுக்கீடும் கடைபிடிக்கவில்லை. இது சமூகநீதிக்கு எதிரானது. இது தொடர்பாக அரசு விளக்கமளிக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

    மருத்துவக்கல்லூரிகள் 13-ல் முதல்வர்கள் பணி காலியாக உள்ளது. சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது. உடனே நியமிக்கவேண்டும் என்று கடந்த 16-ந்தேதியே பா.ம.க வலியுறுத்தியது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் முதல்வர்களை நியமிக்க முடியவில்லை என்றால் ஏன் மருத்துவக்கல்லூரியை திறக்கிறீர்கள் என்று கூறியுள்ளது. இனியும் தாமதிக்காமல் முதல்வர் நியமிக்கவேண்டும்.



    தமிழகத்தில் சன்ன அரிசி ரூ.75 ஆகவும், மோட்டா அரிசி ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு 99 லட்சம் டன் தேவையாக உள்ளது. ஆனால் 72 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரிசி உற்பத்தி செய்ய மின் கட்டணத்தை குறைக்கவேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவேண்டும்.

    ரூ. 2 லட்சத்துக்கு 2 1/2 ஆண்டுகளில் ரூ.2.26 கோடி வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மாதத்திற்கு 300 சதவீதமாகும். கந்துவட்டி திமிங்கலத்துடன் காவல்துறை இணைந்து செயல்படுவதால் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடுமையான கந்துவட்டி சட்டத்தை அரசு நிறைவேற்றவேண்டும்.

    தமிழகத்தில் மெல்லும் புகையிலை தடை செய்யப்பட்டு இருந்தாலும் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பே கூல் லிப் புகையிலை விற்பனை தொடங்கியபோதே எச்சரித்தேன். ஆனால் இன்று பள்ளி மாணவர்கள் சகஜமாக பயன்படுத்துகிறார்கள். 10 பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருப்பதால் மாணவர்களை பட்டம் செய்து விட்டுகொள் என்று அரசு சொல்கிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 27-ந்தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

     

    அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். 

    • நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.
    • தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சுமார் 20 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்குபெற்ற தி.மு.க. தற்போதும் கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்திருக்கும் தி.மு.க., மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்காமல், நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.

    'ஒரே வார்த்தையில் அழைத்தோம் மத்திய ராணுவ மந்திரி நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன்? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய மந்திரிகளை வருந்தி அழைத்து, பா.ஜ.க.வுடன் சமரசம் செய்துகொண்ட ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?

    'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையும், 'கல்வி உரிமைச் சட்டம்' (ஆர்.இ.டி.) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும்; தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2019-2024 காலக் கட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்ததுபோல் இல்லாமல், உரத்த குரலில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • துபாய் சென்றடையும் வரை 4 மணி நேரம் அதிகாரிகள் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளனர்.
    • கடந்த 15 நாளில் மட்டும் விமான நிலைய மானேஜருக்கு 3 மெயில்களில் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார்.

    அங்கு அவர் 14-ந்தேதி வரை அதாவது 19 நாட்கள் அரசு முறை பயணம் மேற் கொள்கிறார். இன்றிரவு சான்பிரான்சிஸ்கோ சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    31-ந்தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    செப்டம்பர் மாதம் 2-ந் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து 12-ந்தேதி வரை தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு 7-ந் தேதி அயலக தமிழர்களுடனும் கலந்துரையாடுகிறார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த எமிரேட்ஸ் விமானத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதாவது சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதாக முதலமைச்சரின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு 8.40 மணிக்கே சென்னை விமான நிலையம் வந்து விட்டார். அங்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

    அதன் பிறகு விமான நிலையத்திற்குள் சென்று அமர்ந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்தார்.

    அதாவது இந்த விமானம் துபாயில் தரையிறங்கியதும் அங்கு இறங்கி வேறு விமானம் மூலம் அவர் அமெரிக்கா செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த எமிரேட்ஸ் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சென்னை விமான நிலைய டைரக்டருக்கு இ.மெயில் மூலம் (மின்னஞ்சல்) இரவு 7.55 மணிக்கே இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்து கிடந்துள்ளது. ஆனால் அதை யாரும் அப்போது பார்க்கவில்லை. இரவு 10 மணிக்கு மேல்தான் பார்த்துள்ளனர். அதன் பிறகு பதறியடித்து போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். ஆனால் அதற்குள் முதலமைச்சர் பயணம் செய்த எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டு சென்று விட்டது.

    இதனால் அதிகாலை துபாய் சென்றடையும் வரை 4 மணி நேரம் அதிகாரிகள் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளனர். இன்று அதிகாலையில் துபாயில் விமானம் தரையிறங்கிய பிறகு அதில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தான் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாயில் இறங்கியதும் சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    வெடிகுண்டு மிரட்டலில் சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு பல இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த மிரட்டல் புரளிதான் என தெரிய வந்தது.

    வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதால் பயணிகள் சற்று பதற்றம் அடைந்தனர்.

    கடந்த சில நாட்களாகவே விமான நிலையத்திற்கும், விமானங்களுக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கடந்த 15 நாளில் மட்டும் விமான நிலைய மானேஜருக்கு 3 மெயில்களில் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
    • முதலமைச்சர் 17 நாள் பயணமாக நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மே மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், 34 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போதே, முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் சி.வீ.மெய்யநாதனிடம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. மேலும், சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு, ஊரக கடன் ஆகிய துறைகள் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டது. இதனால், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.

    கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழக அமைச்சரவையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது.

    இதை சில அமைச்சர்களே உறுதிப்படுத்தினார்கள். இந்த நிலையில், கடந்த 22-ந்தேதி காலை பரபரப்பு தகவல் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

    ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அப்படி எதுவும் எனக்கு தகவல் வரவில்லை" என்று அந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி, கடந்த ஒரு மாத காலமாகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருந்தது.

    இதற்கு மத்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 17 நாள் பயணமாக நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். தற்போது, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்துக்கு காரணம் வெளிவந்துள்ளது.

    அதாவது, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், விரைவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளிக்க உள்ளது. இதில், அவர் நிச்சயமாக விடுதலையாவார் என தி.மு.க. தலைமை உறுதியாக நம்புகிறது. அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால், மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

    எனவே, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகியவை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. அந்த நேரத்தில், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என்றும், முக்கிய அமைச்சர் ஒருவர் உள்பட 3 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதில், திருவள்ளூர், சேலம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று தெரிகிறது.

    அதனால், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • தமிழ்நாடு பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் பல சிறப்பான புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
    • சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவித்திட வேண்டும்.

    தமிழ்நாட்டிற்கு "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "நாட்டின் கல்வித் துறையில், மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இது என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தின்கீழ் உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது மிகவும் அவசியம் .

    ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்கு திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) ஒப்புதலுக்கு உட்பட்டு நிதி விடுவிக்கப்படுகிறது.

    அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கு 3,586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய அரசின் பங்கு 2,152 கோடி ரூபாய் (60 விழுக்காடு) ,மத்திய அரசின் அந்த பங்களிப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் 2024-லேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான 573 கோடி ரூபாயினை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது . இதுதவிர, முந்தைய ஆண்டுக்கான 249 கோடி ரூபாயையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை .

    இதற்கு முன்பும், தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய கல்வி மந்திரி அவர்களுக்கு தான் கடிதம் எழுதிய பின்னரே நிலுவையில் உள்ள நிதியில் ஒரு பகுதி கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மத்திய மந்திரியை சந்தித்து, உரிய நேரத்தில் மானியங்களை விடுவிக்கக் கோரி ஜூலை மாதம் கோரிக்கை வைத்த நிலையிலும், இதுவரை "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லை.

    சமீபத்தில், பி.எம்.ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சிப்பது தெரிய வந்துள்ளது .புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .தேசிய கல்விக் கொள்கை 2020-ல் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை என்றும், பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை .

    தமிழ்நாடு போன்ற முன்னோடி மாநிலங்கள், பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் பல சிறப்பான புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று பிராந்திய அடிப்படையில் சமூக-பொருளாதார நிலைமைகள், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்களை பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும் போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும்

    "சமக்ரா சிக்ஷா" என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிதியினை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய நிலையில் வாழும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும். இத்தகைய நடவடிக்கை "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின் நோக்கமான "எந்தவொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது" என்பதற்கு எதிரானது .

    எனவே, "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவித்திட வேண்டும். இதில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையினை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது" என்று தெரிவித்துள்ளார். 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
    • முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க உங்கள் வாழ்த்துகளுடன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்கிறேன்.

    முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன்.

    ரூ.3,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன.

    கடந்த 3 ஆண்டுகளில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளது. இதனால் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் துரித கதியில் செயல்பட்டு வருகின்றன.

    ரூ.9,99, 093 கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.

    கடந்த 21-ம் தேதி நடைபெற்ற மூதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 நிறுவன திட்டங்களை தொடங்கி வைத்தேன் என தெரிவித்துள்ளார்.

    • செப்டம்பர் 2-ந் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன்.
    • உங்கள் மீது உங்களில் ஒருவனான எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார். இதைத்தொடர்ந்து தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நமது திராவிட மாடல் அரசு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது. அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்று (ஆகஸ்ட் 27) தமிழ் நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.

    திராவிட மாடல் ஆட்சி அமைந்ததிலிருந்தே தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கேற்ற கொள்கை வகுக்கப்பட்டு, பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடுகளைக் கொண்டு வந்தபடியே இருக்கிறோம். தேடி வருகின்ற முதலீடுகளைப் போலவே, தேடிச் சென்று முதலீடுகளை ஈர்க்கும் பணியையும், இன்றைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் உள்ள போட்டிகளைக் கருத்திற் கொண்டு செயலாற்றி வருகிறது நமது அரசு.

    தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நம் மாநிலத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புகழும் தரமும் மிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன.

    2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதன் வாயிலாகக் கடந்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

    கடந்த 21-8-2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும ரூபாய் 17,616 கோடி மதிப்பிலான 19 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், ரூபாய் 51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்வாகன நிறுவனம் தனது தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை ஏற்கனவே என் தலைமையில் தூத்துக்குடியில் நடத்தி, பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

    திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

    ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனானப் பயணத்தில் மற்றொரு கட்டம்தான், உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப் பயணம்.

    ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேசுகிறேன்.

    அதன்பின், செப்டம்பர் 2-ந் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கிறேன். "பார்ச்சூன் 500" நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாடவிருக்கிறேன்.

    இவை அனைத்தும் தொழில்முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்காவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித்தராமல் இருக்க முடியுமா? செப்டம்பர் 7-ம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது.

    1971-ம் ஆண்டு நம் உயிர்நிகர் தலைவர்-தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் மண்டபத்தில் அரிய உரை நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுகளுடன், ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதுவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்கா வாழ் தமிழர்களைச் சந்திப்பது எனக்கும் அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாக அமையும்.

    ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பது தான். இந்தக் குறுகிய இடைவெளியில், தமிழ்நாடு அரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றித் தொடரவும், மக்கள் நலன் சார்ந்து திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் பயன்கள் தொடர்ந்து கிடைத்திடவும் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    கழகத்தின் மாநில அளவிலான பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெறவுள்ள கழகத்தின் பவளவிழா ஆண்டின் முப்பெரும் விழாவை எழுச்சியுடன் நடத்திடுவதற்கான பணிகளை இப்போதே தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைபடாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், மதிப்பிற்குரிய கழக நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன்.

    அமைச்சரவைக் கூட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் ஏற்கனவே இதனை வலியுறுத்தி இருக்கிறேன். ஆட்சிப் பணியும், கழகப்பணியும் தொய்வின்றித் தொடர்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

    அவற்றுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கின்ற வகையில், செயலில் வேகம்-சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள்.

    நம் மீது விமர்சனம் செய்ய விரும்புவோர், விவாதம் நடத்துவோர் ஆகியோருக்கு ஆட்சியிலும் கட்சியிலும் நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும். வார்த்தைகளால் பதில் சொல்லி அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியதில்லை.

    உங்கள் மீது உங்களில் ஒருவனான எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன்.

    அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும். பார்வை கண்காணிக்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×