search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    • போராட்டத்தில் பங்கேற்க வந்த என்னிடமோ, பிற தலைவர்களிடமோ போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறவில்லை.
    • பா.ம.க.வினர் மீது பொய்வழக்குப் பதிவு செய்ய திமுக அரசு தூண்டியுள்ளது. சென்னை மாநகரக் காவல்துறையும் அதை அப்படியே செயல்படுத்தியுள்ளது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாட்டில் பொதுமக்களையும், தொழில் துறையினரையும் கடுமையாக பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடத்தியதற்காக என் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மீதும் சென்னை மாநகரக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. திமுக அரசின் தூண்டுதலில் சென்னைக் காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள இந்த அடக்குமுறையும், பொய்வழக்கு பதிவும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

    தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு கடந்த 15-ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே அதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. அந்தப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அனுமதி கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய சென்னை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பி.கே.சேகர் சென்னை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் திரு.சங்கரலிங்கம் என்பவரிடம் மனு அளித்தார். அதை ஆய்வு செய்த காவல்துறை வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டடம் நடத்திக் கொள்ள வாய்மொழியாக அனுமதி அளித்தது. அதன்படி தான் அங்கு போராட்டம் நடத்தப்பட்டது.


    எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடத்துவதற்காக காலை முதலே தொண்டர்கள் கூடிய நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்க வந்த என்னிடமோ, பிற தலைவர்களிடமோ போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறவில்லை. மாறாக, போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்தனர். இத்தகைய சூழலில் போராட்டம் முடிவடைந்த பிறகு அனுமதியின்றி போராடியதாக வழக்குப் பதிவு செய்திருப்பது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.

    மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் நான் பேசினேன். தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு, இன்னும் செயல்படுத்தப்படாத மின் திட்டங்கள் குறித்து ஆதாரங்களுடன் விளக்கினேன். அவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பா.ம.க.வினர் மீது பொய்வழக்குப் பதிவு செய்ய திமுக அரசு தூண்டியுள்ளது. சென்னை மாநகரக் காவல்துறையும் அதை அப்படியே செயல்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 2021-22ஆம் ஆண்டில் 1558 படுகொலைகள், 2022-23ஆம் ஆண்டில் 1596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன. இவற்றை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார். 2023-24 ஆம் ஆண்டில் 1600-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசாலும், காவல்துறையாலும் முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் நடந்தது போன்ற கள்ளச்சாராய சாவுகளை தடுக்க முடியவில்லை. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. சந்துக் கடைகள் எனப்படும் சட்ட விரோத மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மாறாக, மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வழக்குப் பதிவு செய்கிறது திமுக அரசு.

    பா.ம.க. நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி. அடக்குமுறைகளை சந்தித்து வளர்ந்த கட்சி. இத்தகைய பொய் வழக்குகள் மூலம் எங்களைக் கட்டுப்படுத்தி விட முடியாது. மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்தும் அறவழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். சென்னையில் போராட்டம் நடத்தியதற்காக காவல்துறை தொடர்ந்துள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

    • மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    மேலும், கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வக்கீல் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ., சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றார்கள். ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் பலரும் மின்விசிறி, தொலைக்காட்சியை உடைத்ததாக கூறப்படுகிறது.

    • கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
    • வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பா.ம.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. தோற்று இருந்தால் நிச்சயம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்க மாட்டார்கள். இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகம். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

    கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மின்வாரியத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. மின்வாரியத்துக்கு கடன் வெறும் ரூ.10 ஆயிரம் கோடி தான். ஆனால் இன்னும் மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக பொய் கூறுகிறார்கள்.

    இதற்கு காரணம் நிர்வாக திறமை இல்லாத அரசு ஆட்சியில் உள்ளது. மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க கூடாது. வீதிக்கு வந்து போராடுங்கள். மின்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. மாதம் தோறும் மின் கணக்கெடுக்கப்படும் என்றார்கள். அது என்னாச்சு? வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பானு, சிவக்குமார் எம்.எல்.ஏ., ஈகை தயாளன், ரா.செ. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
    • பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை எழும்பூரில் பாமகவினர் போராட்டம் நடத்தினர்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான போராட்டத்தில் ஏராளமான பாமக-வினர் பங்கேற்றனர். மின்கட்டண உயர்வையும், தமிழக அரசையும் கண்டித்து பாமக-வினர் கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில் பாமக போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

    * தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

    * 2 மாதங்களில் தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்.

    * இன்றும் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவது பெரும் மோசடி.

    * திமுக அரசிற்கு நிர்வாக திறமை என்பதே கிடையாது.

    * பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.

    * அரசு துறைகளில் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக அன்புமணி குற்றச்சாட்டி உள்ளார்.

    • வீடுகளுக்கே மதுவை நேரடியாக கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
    • ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா? வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

    வீடுகளுக்கே கொண்டு சென்று மதுவை விற்பனை செய்வது என்பது மக்கள் நலனை விரும்பும் அரசுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தீமை ஆகும். ஆனால், தமிழக அரசு அத்தகைய தீமையை செய்யாது என்று உறுதியாக கூற முடியவில்லை. அதற்கு காரணம், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகள், திருமண விழாக்கள் போன்றவற்றில் மதுவகைகளை வினியோகித்தல், மதுக்கடைகளில் காகிதக் குடுவைகளில் குறைந்த விலையில் மது விற்பனை செய்வது போன்ற புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்யத் துடித்த வரலாறு தமிழக அரசுக்கு உண்டு. அதனால் தான் இந்த செய்தியும் உண்மையாக இருக்குமோ? என்று நம்பத் தோன்றுகிறது.

    மது, புகையிலை எதுவாக இருந்தாலும் நுகர்வோருக்கு எளிதில் கிடைக்காத வகையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆகும். அதன் மூலம் தான் மது - புகையிலை ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் நம்பிக்கை ஆகும். ஏற்கனவே தெருவுக்குத்தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் தான் மாணவர்கள் மதுவை வாங்கிச் சென்று பள்ளிகளில் வைத்து அருந்தும் கொடுமை நிகழ்கிறது. வீடுகளுக்கே மதுவை நேரடியாக கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

    போதை குறைந்த மது வீடுகளுக்கே நேரடியாக வினியோகிக்கபட்டால், அது வீடுகளில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும் மதுவுக்கு அடிமையாக்கவே இந்த வழக்கம் வழிகோலும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும்.

    தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த முதலமச்சர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது. மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிறப்புப் பொதுவினியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
    • மக்களின் குறைகளை அறிந்து அவற்றை போக்குவது தான் அரசின் கடமை ஆகும்.

    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ஒரு தரப்பினருக்கு நிறுத்தவும், மீதமுள்ளவர்களுக்கு விலையை உயர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மூன்றாவது முறையாக மின்கட்டண உயர்வு என்ற இடியை ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது இறக்கியுள்ள தமிழக அரசு, துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவதையும் நிறுத்தி ஏழைகளின் வயிற்றில் மீண்டும், மீண்டும் அடிக்கக் கூடாது.

    2007-ஆம் ஆண்டில் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்ட போது, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஓரளவாவது போக்கும் நோக்கத்துடன் பருப்பு, பாமாயில், மளிகை சாமான்கள் வழங்கும் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த உளுந்து, மளிகை சாமான்கள் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் நிறுத்த தமிழக அரசு முயற்சிப்பது அநீதியாகும்.

    பாமாயில், துவரம்பருப்பு வழங்கும் திட்டத்திற்கான மானியச் செலவு அதிகரித்து விட்டதால், அத்திட்டத்தை கைவிடும்படி நிதித்துறை கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பருப்பு , பாமாயில் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தவும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் விவகாரத்தில் அரசின் முடிவைத் தான் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். அதிகாரிகளின் யோசனைகளை அரசு ஏற்கக் கூடாது. அதிகாரிகளின் யோசனைகளுக்கு கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் செவி சாய்த்திருந்தால் ஓமந்தூரார் ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காது; அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் அது நீட்டிக்கப்பட்டிருக்காது. காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டமும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காது.

    சிறப்புப் பொதுவினியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது தான் மக்கள் நல அரசுக்கு அழகாக இருக்குமே தவிர, குறுக்குவது சரியாக இருக்காது. 2021-ஆம் ஆண்டில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உளுந்து வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதை செயல்படுத்தாமல் இருக்கும் திட்டத்தையும் சீர்குலைக்க முயல்வது அழகல்ல.

    மக்களின் குறைகளை அறிந்து அவற்றை போக்குவது தான் அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே தொடர வேண்டும். ஏற்கனவே வாக்குறுதி அளித்தவாறு உளுந்து வழங்கும் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் பாமக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும்.

    சென்னை

    சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    * மின் கட்டணம் என்பது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம்.

    * எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது என்றார் முதலமைச்சர்.

    * மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் பாமக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும்.

    * தொடர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது என்று கூறினார்.

    • தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன.
    • உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு - தமிழக மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு.

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83% அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும். தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது. ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழ்நாடு அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பு. ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம்.

    தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும்.

    ஜூலை 1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதை சுட்டிக்காட்டி அதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு.

    ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்" தெரிவித்துள்ளார். 

    • அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, வகுப்பறைகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை.
    • அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய தமிழக அரசோ, தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் கல்விக் கட்டணக் கொள்ளையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் என்று போற்றப்பட்ட கர்மவீரர் காமராசரின் 122-ஆம் பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமகனார் அவர் தான். தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது மட்டுமின்றி, வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.

    ஆனால், தமிழ்நாட்டில் இன்று அரசு பள்ளிகளின் நிலைமை கண்ணீரை வரவழைக்கிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, வகுப்பறைகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை. அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய தமிழக அரசோ, தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் கல்விக் கட்டணக் கொள்ளையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி அரசு பள்ளிகளை அனைவரும் தேடி வந்து கற்கும் கல்விக் கோயில்களாக மாற்றுவதற்கு இந்த நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி (வினாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். கர்நாடக அரசின் இந்த நியாயமற்ற முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கபினி அணைக்கு வரும் தண்ணீரை இனி ஒரு மணி நேரம் கூட அணையில் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் அணைக்கு வரும் தண்ணீரில் வினாடிக்கு 8000 கன அடி தண்ணீரை திறந்து விட்டு, மீதமுள்ள நீரை தனது பாசனத் தேவைக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறது. இப்போதும் தமிழ்நாட்டை தனது வடிகாலாகத்தான் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, தமிழகத்திற்கு மனமுவந்து தண்ணீர் வழங்கவில்லை.

    கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. இதைக் கண்டிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளை தி.மு.க. அரசு எந்த அளவுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது தான் வருந்தத்தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

    கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த இரு நாட்களுக்குள் கூட்டி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அதையும் கர்நாடகம் மதிக்காவிட்டால், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

      சென்னை:

      பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

      தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 3,949 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

      மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. இதுவரை இல்லாத வகையில் தனியார் பள்ளிகளுக்கு அரசே பாராட்டு விழா நடத்துவது தேவையற்றது; நியாயமற்றது. தனியார் பள்ளிகளுக்கு வலிந்து சலுகை காட்டும் நோக்கத்துடன் தான் இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கான பாராட்டு விழாவை வேறு சில நிகழ்ச்சிகளுடன் இணைத்து ஐம்பெரும் விழாவாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு நடத்தியது. அதில் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

      ஆனால், தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழாவில் பள்ளி முதல்வர்கள், பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி பள்ளி முதலாளிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது சாதனை அல்ல. தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை எட்டுவது எளிதான ஒன்று தான். தனியார் பள்ளிகளுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் அளிப்பதன் பின்னணியில் ஏதோ உள்ளது. அது என்னவென்று தி.மு.க. அரசை அறிந்தவர்களுக்கு நன்றாக புரியும். தனியார் பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து பாராட்டு விழா நடத்த வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதற்கு தனியார் பள்ளிகள் தகுதியானவையும் இல்லை.

      இன்று தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கினர் தனியார் பள்ளிகளில் பயிலும் அவலம் நிலவுகிறது. மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பயில்கின்றனர். இது அரசின் பெரும் தோல்வி ஆகும். இத்தகைய சூழலில் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்துவது அரசின் தோல்விக்கு விழா எடுப்பதற்கு ஒப்பானதாகும். அந்த தவறை தமிழக அரசு செய்யக்கூடாது.

      இத்தகைய விழாக்களை நடத்துவதை விட்டுவிட்டு அதற்காக செய்யப்படும் செலவில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 4-ந்தேதி நடைபெறவுள்ள பாராட்டு விழாவை ரத்து செய்து விட்டு, அதற்கான ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதுடன், அவர்களுக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்க வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      ×