search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மேற்கு பருவமழை"

    • அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
    • கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. தொடர்ந்து மாலையில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. அங்கு 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று மழை பெய்யவில்லை. அந்த அணையில் 115.20 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து கார் பாசனத்திற்காக 1154 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 474 கனஅடி நீர் வந்த கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் சேரன்மகாதேவி, முக்கூடல், மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு கனமழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகா தேவியில் 21 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் 8 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நேற்று மாவட்டம் முழுவதும் பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மாநகரில் நேற்று மாலை 3 மணி அளவில் வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டன.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடி வார பகுதியில் அமைந்துள்ள கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது. தென்காசி நகர் பகுதியில் 1.10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. அங்கு 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு பிறகு திடீரென மழை பெய்தது. இரவு 8 மணி வரையிலும் பெய்த கனமழையால், மழை நீர் செல்ல முடியாத நிலையில் சாக்கடை நீருடன் கலந்து வெள்ளமாக ஓடியது. அங்குள்ள கீழரதவீதி, வலம்புரி விநாயகர் கோவில் ரோடு சந்திக்கும் தேரடி நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பகலில் கடுமையான வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. கயத்தாறு, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மாலை 4 மணிக்கு மேல் கோவில்பட்டி பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் இளையரசனேந்தல் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. கழுகுமலை பகுதியில் 2 மணி நேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு மழை நிற்கும் வரை மின்தடை ஏற்பட்டது.

    • நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.

    இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா, கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கேரளா மட்டுமின்றி அதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று (ஆகஸ்ட் 11) வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் 263.7 மி.மீ மழை பெய்துள்ளது.

    இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பெய்யும் சராசரி மழை அளவு 145.4 மி.மீ ஆகும். ஆகவே தற்போது வரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 81% அதிகமாக பெய்துள்ளது.

    • ரெயில்வே தரைப்பாலம் பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
    • கனமழையால் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை இரவு 2 மணி வரை வெளுத்து வாங்கியது. பின் மறுபடியும் 3 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை காலை 6 மணி வரை விடாமல் பெய்தது. இதனால், விழுப்புரம் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த தண்ணீரை நகராட்சி ஊழியர்கள் 6 ராட்சத மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே தரைப்பாலம் பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது . அப்பகுதியிலும் ராட்சத மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கோலியனூரில் 7 சென்டி மீட்டரும் வளவனூரில் 6.4 சென்டிமீட்டரும் கெடாரில் 9 சென்டிமீட்டரும், முண்டியம்பாக்கத்தில் 4.6 சென்டிமீட்டர் நேமூரில் 3.6 சென்டி மீட்டரும், கஞ்சனூரில் 3.8 சென்டி மீட்டரும் சூரப்பட்டு 8.5 சென்டிமீட்டரு ம்வானூரில் 5.1 சென்டிமீட்டரும் திண்டிவனத்தில் 12.7சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    கடலோரப் பகுதியான மரக்காணத்தில் 10.8 சென்டிமீட்டரும், மலைப்பகுதியான செஞ்சியில் 14.2 சென்டிமீட்டர் மழையும் வளத்தியில் 7.2 சென்டிமீட்டர் திருக்கோவிலூர் அருகே உள்ள மணபூண்டியில் 2.8 சென்டிமீட்டரும், முகையூரில் 10.5 சென்டிமீட்டர் மழையும் திருவெண்ணைநல்லூரில் 3.சென்டிமீட்டர் மழையும் அரசூரில் 1.6.சென்டிமீட்டர் குறைந்தபட்சம் மழையாக பெய்துள்ளது . மாவட்டத்தில் சராசரியாக 7.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    விழுப்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழுப்புரம் , பெரும்பாக்கம், காணை, மாம்பழப்பட்டு, கருங்காளிப்பட்டு, சாலையகரம், கண்டமங்கலம், வழுதாவூர் அரசூர், பொய்கை அரசூர், நன்னாடு, அய்யூர்அகரம், முண்டியம்பாக்கம், கொசப்பாளையம், ஓரத்தூர் ஆகிய இடங்களிலும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மரக்காணம் அருகே கந்தாடு, காணிமேடு, மந்தகப்பட்டு, வெள்ளக்கொண்டாபுரம் பகுதிகளில் கடந்த 3 நாட்கள் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையால் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அனுமந்தை, ஆலத்தூர், பிரம்மதேசம், எண்டியூர், கீழ்புத்துப்பட்டு சுற்றியுள்ள 60 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மரக்காணம் உப்பளம் சுமார் 3500 ஏக்கர் உள்ளது தொடர்ந்து பெய்த மழையால் உப்பளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், இங்கு 3500 ஊழியர்கள் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்லது. மேலும் மரக்காணம் பகுதிகளில் 11 மின்கம்பங்கள் சரிந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதே போல் வாழை மரங்கள், மாமரம், தென்னை மரங்கள், மரவள்ளி கிழங்கு மற்றும் நெற்பயிர் போன்ற தாவரங்கள் மழையில் பாதிப்படைந்துள்ளது.

    • பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்தது.
    • சென்னையில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    ஆண்டுதோறும் தென் மேற்குப் பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கி செப்டம்பா் இறுதி வரை நீடிக்கும். இந்த காலக் கட்டத்தில் தமிழகத்துக்கு பெரிதளவு மழை இருக்காது. இருப்பினும் மேற்குத்தொடா்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

    இந்த நிலையில், இந்த ஆண்டில் தமிழக கடலோர பகுதிகளில் உருவாகிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்தது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் ஜூன் 1 முதல் நேற்று (8-ந் தேதி) வரையிலான தென்மேற்கு பருவமழை இயல்பாக 137.6 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில், இந்த ஆண்டில் 230 மி.மீ. (92.4 மி.மீ. அதிகம்) மழை பதிவா னது. இது இயல்பைவிட 67 சதவீதம் அதிகமாகும்.

    அதிகபட்சமாக நீலகிரியில் 1,015 மி.மீ., கோவையில் 754.2 மி.மீ., காஞ்சிபுரத்தில் 473.1 மி.மீ. மழை பதிவானது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 12.9 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சென்னையில் பல இடங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஜூன் 1 முதல் நேற்று வரை இயல்பாக 205.3 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், இந்த ஆண்டில் 430.3 மி.மீ. (225 மி.மீ.அதிகம்) பெய்துள்ளது.

    அதாவது இயல்பைவிட 112 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.
    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது.

    சேலம்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணையும் கடந்த மாதம் 30-ந் தேதி 120 அடியை எட்டியது.

    கர்நாடக அணைகள் நிரம்பியதால் அதிகபட்சமாக உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து அந்த தண்ணீர் உபரி நீராக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டது. கடந்த 30-ந் தேதி இரவு முதல் இன்று காலை 6 மணி வரை 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 13 ஆயிரத்து 734 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6665 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 124.18 அடியாக உள்ளது.

    இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 359 ஆகனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2729 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 83.46 அடியாக இருந்தது. இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9394 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.

    மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் இன்று காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. ஆனால் பவர் ஹவுஸ் வழியாக வினாடிக்கு தொடர்நது 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள்.
    • ஊரின் நிலையை பார்த்து கண்கலங்கிய அவர்கள், அதனை பொருப்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடரும் நிலையில், பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து சிக்கியபடி இருக்கிறது.

    பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டிய நிலையில், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    பலியானவர்களின் சின்னாபின்னமான உடல்களை மிகவும் பாதுகாப்பாக அகற்றி எடுத்து வருகின்றனர். தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களில் 2 வீரர்கள் தங்களது சொந்த கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    வயநாடு சூரல்மலை பகுதியை சேர்ந்தவர் ஜினோஷ் ஜெயன்(வயது42). அவரது உறவினர் பிரவீன் பிரகாஷ்(37). ஜினோஷ் அவுரங்காபாத்தில் ராணுவ பீரங்கி பிரிவிலும், பிரவீன் மெட்ராஸ் ரெஜிமன்டலிலும் பணியாற்றுகின்றனர். ஜினோசின் சகோதரர் ஜிதில் ஜெயன் தேசிய பேரிடர் மீட்புபடை வீரர் ஆவார்.

    இவர்கள் 3 பேரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தங்களது ஊரான சூரல்மலைக்கு கடந்த 31-ந்தேதி வந்தனர். அவர்கள் தங்களது ஊரில் இடிந்து கிடந்த கட்டிடங்கள், மண் குவியல் மற்றும் பாறைகளுக்கு அடியில் கிடந்த உடல்களை மீட்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தங்களது ஊரின் நிலையை பார்த்து கண்கலங்கிய அவர்கள், அதனை பொருப்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நிலச்சரிவில் இவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் இறந்து விட்டனர். அவர்களது உருக்குலைந்த உடல்களை வேதனையுடன் மீட்டிருக்கின்றனர். அவர்கள் எங்களது ஊரில் இப்படி ஒரு பேரிழப்பு ஏற்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுவோம் என்று எதிர்பார்க்கவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


    தனக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவம் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரரான ஜிதில் ஜெயன் வேதனையுடன் கூறியதாவது:-

    இந்த பயங்கர நிலச்சரிவில் எங்களின் வீடு தப்பியது. எனது நண்பர்கள் ஸ்ரீலேஷ், லெனின் மற்றும் சுமேஷ் ஆகியோர் பலியாகிவிட்டனர். இவர்களது உடலை நான் பார்த்தது, எங்களுக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டது ஒரு வேதனையான அனுபவம்.

    இதுபோன்று ஒரு தேடுதல் பணியில் ஈடுபடவேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. எங்களது சொந்த ஊர் என்பதால் இங்குள்ள நிலப்பரப்பு எங்களுக்கு பரிட்சயமாக இருந்தது. இது எங்களுடைய தேடுதல் முயற்சிக்கு உதவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலச்சரிவில் ராணுவ வீரர்களின் உறவினர்களான ஜெகதீஷ், அவரது மனைவி சரிதா, மகன் சரண் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களில் ஜெகதீஷ் மற்றும் சரணின் உடல்களை இவர்கள் தான் மீட்டுள்ளனர். ஆனால் சரிதாவின் உடல் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாயமானவர்கள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பள்ளத்தாக்கு மற்றும் அதன் கரையோர பகுதிகளில் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை கிராமங்களும் உருக் குலைந்தன.

    அந்த பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மண்ணுக்குள் பலர் உயிரோடு புதைந்துவிட்ட நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். மேலும் பலர் காணாமல் போனார்கள். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள்.

    இதில் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பலியானர்களின் உடல்கள் சிதைந்தும், துண்டு துண்டா கிய நிலையிலும் மீட்கப்பட்டன. மீட்பு பணி நேற்று 7-வது நாளாக நீடித்த நிலையில் பலியானர்களின் எண்ணிக்கை 400-ஐ தொட்டது.

    மேலும் மாயமாகியிருக்கும் 200பேரை தேடும் பணி தொடர்கிறது. அவர்களை கண்டுபிடிக்க நவீன ராடர்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட கருவிகள், ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.

    மாயமானவர்கள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது தேடுதல் பணி இன்று 8-வது நாளாக நடந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள், சாலியாறு மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் முழுமையாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அங்கு ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் வழக்கம்போல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் கிடக்கிறார்களா? என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.


    இந்த பகுதிகள் மட்டு மின்றி மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத பள்ளத்தாக்கு பகுதியில் இன்று தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அதாவது சூச்சிப்பாறை மற்றும் பொதுக்கல்லு என்ற பகுதிகளுக்கு இடையில் தான் அந்த பள்ளத்தாக்கு இருக்கிறது.

    அந்த இடத்துக்கு ராணுவம் மற்றும் வனத்துறையினர் திறமைவாய்ந்த வீரர்கள் 12 பேர் ஹெலிகாப்டர் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சன்ரைஸ் என்று அழைக்கப்படும் அந்த பள்ளத்தாக்கு மற்றும் அதன் கரையோர பகுதிகளில் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    பள்ளத்தாக்கு பகுதியில் யாரேனும் இறந்து கிடக்கிறார்களா? என்று பார்க்கப்பட்டது. மேலும் பள்ளத்தாக்கில் யாரேனும் இறந்துகிடந்தால், அவர்களது உடலை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காட்டாற்று வெள்ளத்தில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டவர்கள் இந்த பள்ளத்தாக்கில் பிணமாக கிடக்கலாம் என்று கருதப்படுவதால் பல உடல்கள் இன்று கண்டெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வழக்கமான பகுதிகளில் இன்று மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

    • மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
    • சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்து வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

    இந்தநிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

    நாளை (7-ந் தேதி) டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் வாலாஜா, ஆத்தூரில் (சேலம்) அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கம், காட்பாடி, கலவை பகுதியில் லேசான மழை பதிவாகி உள்ளது.

    • அமராவதி அணையில் கடந்த ஆண்டு 1.94 டி.எம்.சி. இருப்பு இருந்தது.
    • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மூலம் இயல்பைவிட 4 சதவீதம் அதிகம் மழை கிடைத்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள முக்கியமான அணை மற்றும் நீர்த்தேக்கங்கள் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.297 டி.எம்.சி.யாகும். தற்போது மழையால் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரித்து இருப்பதால் நேற்றைய நிலவரப்படி 174.579 டி.எம்.சி. இருப்பு இருக்கிறது. அதாவது 78 சதவீதம் நீர் உள்ளது. குடிநீர், பாசன தேவைக்கு இந்த நீர் போதுமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன் மூலம் அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாததால் இதே காலக்கட்டத்தில் (2023-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி) வெறும் 82.707 டி.எம்.சி. அதாவது 36.87 சதவீதம்தான் நீர் இருந்தது. இதனை ஒப்பிடுகையில் நடப்பாண்டு 2 மடங்கு நீர் இருப்பு அதிகம் உள்ளது.

    குறிப்பாக 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு 24.76 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 93.47 டி.எம்.சி. இருப்பு உள்ளது. அதேபோல், பவானிசாகர் அணையில் கடந்த ஆண்டு 17.72 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 24.77 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டு இருப்பைவிட அதிகமாகும்.

    அமராவதி அணையில் கடந்த ஆண்டு 1.94 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 3.93 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். முல்லைப்பெரியாறு அணையில் கடந்த ஆண்டு 2.91 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 5 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும். வைகை அணையில் கடந்த ஆண்டு 1.82 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 2.96 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

     

    பாபநாசம் அணை

    பாபநாசம் அணை

    பாபநாசம் அணையில் தற்போது 4.13 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு அதிகமாகும்.

    மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு 435 மில்லியன் கனஅடி இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 1.57 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு அதிகமாகும். பேச்சிப்பாறை அணையில் கடந்த ஆண்டு 1.88 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 3.76 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு அதிகமாகும்.

    பெருஞ்சாணி அணையில் கடந்த ஆண்டு 188 மில்லியன் கனஅடி இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 2.42 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும். கிருஷ்ணகிரி அணையில் கடந்த ஆண்டு 1.47 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 1.45 டி.எம்.சி. இருப்பு உள்ளது.

    இது கடந்த ஆண்டை விட சற்று குறைவாக உள்ளது. சாத்தனூர் அணையில் கடந்த ஆண்டு 5.30 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 1.59 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு குறைவாகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததும் ஒரு காரணமாகும்.

    சோலையாறு அணையில் கடந்த ஆண்டு 3.94 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 5.12 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும். பரம்பிக்குளம் அணையில் கடந்த ஆண்டு 5.67 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 12.42 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும். ஆழியாறு அணையில் கடந்த ஆண்டு 635 மில்லியன் கன அடி இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 3.78 டி.எம்.சி. இருப்பு உள்ளது.

    இது கடந்த ஆண்டை விட சுமார் 5 மடங்கு அதிகமாகும். திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு 376 மில்லியன் கன அடி இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 595 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும். மொத்தத்தில் முக்கிய அணைகளில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கான போதுமான நீர் இருப்பு உள்ளது என்று நீர் வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

    இதேபோல் சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பருவகால மழை மற்றும் தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் நீர் இந்த ஏரிகளுக்கு வருகிறது.

    இதில் தற்போது பூண்டி ஏரியில் நீர்த்திறப்பு பகுதிகளில் உள்ள கதவணைகள் பழுதானதால் சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பணியால் எதிர்பார்த்த அளவு நீர் பூண்டி ஏரியில் நிரப்ப முடியவில்லை.

    பருவமழை மூலம் பெறப்படும் நீர் ஏரிகளுக்கு கொண்டுவரப்பட்டு வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது. அந்தவகையில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

     

    மழை காரணமாக பூண்டி ஏரிக்கு 160 கனஅடி, புழல் 95 கன அடி மற்றும் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரத்து 46 கனஅடி நீர் வந்துள்ளது. 1.4 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 838.45 மில்லியன் கன அடி இருப்பு அதாவது 57.23 சதவீதம் இருப்பு உள்ளது. இதன் மூலம் குடிநீர் தேவைக்காக 1,424 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    இதேபோல் பூண்டி ஏரியில் இருந்து 127 கன அடியும், சோழவரத்தில் இருந்து 12, புழல் 224, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 15, செம்பரம்பாக்கம் 137 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரிகளில் இருக்கும் 5.2 டி.எம்.சி. நீர் மூலம் 5 மாதத்திற்கு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மூலம் இயல்பைவிட 4 சதவீதம் அதிகம் மழை கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கோடை மழையும் பெரிய அளவில் கைக்கொடுத்தது.

    அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் 31-ம் தேதி வரையிலான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் பதிவாகக்கூடிய 12 சென்டி மீட்டர் மழையைவிட 18 சதவீதமாக அதாவது, 15 சென்டி மீட்டர் மழை பெய்து இருந்தது.

    இதனைத்தொடர்ந்து தென்மேற்கு பருவமழை காலம் கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு குறைவு என்றாலும், வெப்பசலனம், மேற்கு திசை காற்று வேகமாறுபாடு, வளிமண்டல கீழடுக்கு, மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்யக்கூடும். அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி, நேற்று வரையிலான நிலவரப்படி, தமிழ்நாட்டில் 49 சதவீதம் இயல்பைவிட அதிகமாகவே மழை கொட்டியுள்ளது.

    • நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
    • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்தமாத இறுதியில் தொடர்ந்து கனமழை பெய்தபடி இருந்தது. இதன் காரணமாக கடந்த 30-ந்தேதி அதிகாலை முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

    அதுமட்டுமின்றி சாலியாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ராட்சத பாறைகள் விழுந்ததில் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் நொறுங்கி மண்ணோடு மண்ணானது.

    நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த பயங்கர சம்பவத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பலர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர்.

    நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கடற்படை, கப்பற்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக களமிறக்கப்பட்டனர். இதில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    மனித உடல்கள் சிக்கிய படியே இருந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்த படி இருந்தது. சம்பவம் நடந்து 5-வது நாளான நேற்று வரை 356 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் உள்ளிட்ட இடிபாடுகளை பொக்லைன் உள்ளிட்ட எந்திரங்கள் மூலமாக அகற்றி பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    நிலச்சரிவில் சிக்கி பலியான 350-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி இருக்கின்றனர். அவர்களில் 24 தமிழர்களும் அடங்குவர். அவர்கள் மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


    அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மண்ணுக்குள் உயிரோடு இருப்பவர்களை கண்டறியக் கூடிய நவீக கருவிகள் உள்ளிட்டவைகளை பயன் படுத்தினர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை கண்டறியும் பணியில் ராணுவம் மற்றும் காவல் துறையில் உள்ள மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன. அது மட்டுமின்றி ட்ரோன்களை பயன்படுத்தியும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

    நிலச்சரிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள் பலியாகியிருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக தேடுதல் பணியில் மீட்பு படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 357 ஆக உயர்ந்தது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி 6-வது நாளாக இன்று நடந்தது.

    ராணுவத்தில் தரைப்படை, கடற்படை, விமானப்படை வீரர்கள், தேசிய பேரிடம் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மருத்துவ குழுவினர், கடலோர காவல்படையினர், சமூக ஆர்வலர்கள் என 11 பிரிவினர் தேடுதல் பணியில் களமிறங்கி இருக்கின்றனர்.

    அந்த பிரிவுகளை சேர்ந்த 1,264 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணி நடக்கிறது. நவீன சென்சார் கருவிகள், ட்ரோன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் மாயமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நவீன ரேடார் கருவிகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி உயர்தொழில் நுட்பம் கொண்ட 4 ரேடார்கள் டெல்லி மற்றும் சியாச்சினில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்டன. "லைவ் விக்டிம் ரேடார்" என்று அழைக்கப்படும் அந்த ரேடார்கள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டன.

    இந்த ரேடார்கள் மண்ணுக்குள் யாரேனும் உயிருடன் புதைந்து கிடக்கிறார்களா? என்பதை கண்டறியும். அவற்றின் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மண்ணுக்குள் யாரேனும் புதைந்து கிடக்கிறார்களா? என்று ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நிலச்சரிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமான 300-க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    • இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, பகத் பாசில், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் ஜோதிகா, நஸ்ரியா ஆகியோரும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பல மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும் என கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்திருந்தனர். தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி, அதிமுக சார்பில் ரூ.1 கோடி, காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி என நிதி உதவி வழங்கினர்.

    அதை தொடர்ந்து, நடிகர் மோகன் லால் ரூ.3 கோடியும், நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, பகத் பாசில், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் ஜோதிகா, நஸ்ரியா ஆகியோரும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

    அந்த வரிசையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வீடுகள் இருந்த இடத்தில் ஒருசில கட்டிடங்கள் மட்டுமே இருக்கின்றன.
    • நிலச்சரிவால் மிகப்பெரிய அழிவை வயநாடு சந்தித்திருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்ட மாகிவிட்டன. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ராட்சத பாறைகள் மற்றும் பெரிய மரங்கள் கட்டிடங்களை நொறுக்கி விட்டன.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மக்கள் வசித்து வந்த பகுதிதானா? என்ற கேள்வி எழும் வகையில் எங்கு பார்த்தாலும் பாறைகள், மரக்குவியல்களாக கிடக்கின்றன. அவற்றை பெரும்பாடுபட்டு ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் அகற்றி தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர்.

    நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடத்தில் ஒருசில கட்டிடங்கள் மட்டுமே இருக்கின்றன. அவையும் பலத்த சேதமடைந்த நிலையில் தான் உள்ளன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,208 வீடுகள் முற்றிலுமாக இடிந்து அழிந்துவிட்டது.

    முண்டக்கை பகுதியில் 540 வீடுகளும், சூரல்மலை பகுதியில் 600 வீடுகளும், அட்டமலை பகுதியில் 68 வீடுகளும் முற்றிலுமாக இடிந்துவிட்டன.

    மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ அதிகாரிகளே, இப்படியொரு பேரழிவை பார்த்ததில்லை என்று கூறியிருக்கின்றனர். அந்த அளவுக்கு நிலச்சரிவால் மிகப்பெரிய அழிவை வயநாடு சந்தித்திருக்கிறது.

    ×