என் மலர்
நீங்கள் தேடியது "நகை கொள்ளை"
- சுமார் 75 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மணக்குடி பகுதியில் நகைக்கடைக்குள் புகுந்து ரூ.43 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நகைக்கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கண்ணாடி பேழையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சுமார் 75 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொள்ளை கும்பல் சென்ற கார் ஐதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழுதானது.
- 2 சுங்க சாவடிகளை கடந்த ஒரே காரில் வேறு வேறு நம்பர் பிளேட் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், ராய பார்ட்டி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது.
வங்கிக்குள் சென்ற கொள்ளை கும்பல் கியாஸ் கட்டர் மூலம் வங்கியில் இருந்த லாக்கரை உடைத்தனர். லாக்கரில் இருந்த ரூ. 13.61 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு காரில் தப்பி சென்றனர்.
வங்கியில் நடந்த கொள்ளை குறித்து போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். கொள்ளை கும்பல் சென்ற கார் ஐதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழுதானது. தனியார் லிப்டிங் வாகனம் மூலம் காரை மெக்கானிக் கடைக்கு எடுத்துச் சென்று பழுது நீக்கினர். பின்னர் தாங்கள் ஜவகர் நகரில் தங்கி இருந்த வாடகை வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்துவிட்டு மகாராஷ்டிரா வழியாக உத்தரப் பிரதேசம் நோக்கி சென்றனர்.
பீபி நகர் சுங்க சாவடியை கடக்கும்போது காரில் வேறு ஒரு நம்பர் பிளேட் மாற்றப்பட்டு இருந்தது. 2 சுங்க சாவடிகளை கடந்த ஒரே காரில் வேறு வேறு நம்பர் பிளேட் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் மகாராஷ்டிரா சென்று கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.50 கிலோ எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் கொள்ளை கும்பலின் முக்கிய குற்றவாளியான ஒருவர் வேறு பகுதி வழியாக தப்பி செல்வது தெரியவந்தது. அவரையும் மடக்கி பிடித்து அவரிடம் இருந்த 7.50 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர்.
- கணவருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கர்ப்பிணி சென்று கொண்டிருந்தார்.
- திருடர்கள் நகை பறிக்கும்போது பைக்கில் இருந்து கர்ப்பிணி தவறி விழுந்தார்.
புதுச்சேரியில் பைக்கில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணியிடமிருந்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கணவருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கர்ப்பிணி சென்று கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் கர்ப்பிணியின் நகையை பறித்து சென்றனர்.
திருடர்கள் நகை பறிக்கும்போது பைக்கில் இருந்து கர்ப்பிணி தவறி விழுந்தார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நகையை பறித்து சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
- வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
- சேதுராமன் வீட்டருகே இருந்த மணிகண்டன் வீட்டிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கருவியபட்டியில் 100 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முத்துமாரியம்மன் கோவில் நிர்வாக தலைவர் சேதுராமன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். சேதுராமன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கோவில் நகைகளும் திருடப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சேதுராமன் வீட்டருகே இருந்த மணிகண்டன் வீட்டிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற உள்ள கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உணவு இடைவேளைக்காக பஸ் டிரைவர் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம், மண்டப்பேட்டையை சேர்ந்தவர் கீதா ரத்தினம். இவர் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை பையில் எடுத்துக்கொண்டு ஐதராபாத் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் ஏறினார்.
30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. உணவு இடைவேளைக்காக பஸ் டிரைவர் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தினார்.
இதனை தொடர்ந்து நர்கெட் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் டீ குடிப்பதற்காக அங்குள்ள ஓட்டல் முன்பு பஸ்சை நிறுத்தனார் . கீதா ரத்தினம் தான் கொண்டு வந்த நகை பையை பஸ்சிலேயே வைத்துவிட்டு கீழே இறங்கினார்.
திரும்பி வந்தபோது அவர் இருக்கையில் வைத்து விட்டு சென்ற நகை பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா ரத்தினம் உடனடியாக பஸ் டிரைவரிடம் தகவல் தெரிவித்தார்.
பஸ் டிரைவர் பஸ்சை நேராக அப்துல்லாபூர் மெட் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். போலீசார் பஸ்சில் இருந்த அனைத்து பயணிகள் மற்றும் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
இருப்பினும் நகை பையை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
- திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு சவரிமுத்து புகார் அளித்தார்.
- சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-பழனி சாலை பைபாஸ் பகுதியில் நைனார் முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து. இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா. இவரும் ஜம்புளியம்பட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்காக ஜவுளி எடுக்க குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றனர்.
இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் உள்ளே இருந்த கதவின் பூட்டும் கம்பியால் நெளிக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு சவரிமுத்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பகுதியில் மொத்தம் 10 வீடுகள் மட்டுமே உள்ளன. ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை கவனித்தும், இவர்கள் வீட்டில் திருமணத்திற்கு நகைகள் இருப்பதை நோட்டமிட்டும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். மேலும் மோப்பநாயை வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டாக்டர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ரூ.பல லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. அந்த வழக்கில் இதுவரை கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி சிவா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன்(வயது 45). இவர் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஷாப்பிங், பாத்திரக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையின் முதல் தளத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
கடந்த 22-ந்தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை ஆரோக்கிய ரெமன் கடையை திறந்தபோது கடையின் மாடியில் இருந்த ஜன்னல் உடைக்கப்பட்டு அடகு கடையில் லாக்கரில் வைத்திருந்த 278 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் பிரசன்ன குமார் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அந்த கடையின் பின்புறத்தில் மர்ம நபர்கள் சென்று, அதன் அருகே இருந்த கடையின் காம்பவுண்டு சுவரில் ஏறி, கொள்ளை நடந்த கடையின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கடையின் அமைப்பை பற்றி முழுமையாக தெரிந்த உள்ளூர் நபர்களின் உதவியுடன் வெளியில் இருந்து வந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் பஜார் பகுதியில் இருந்த மற்ற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த நபர்கள் 2 பேரும் கொள்ளை நடந்த கடை முன்பு சிறிது நேரம் நின்று விட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நகர்கிறது.
போலீசார் சந்தேகம் அடைந்த அந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் தொடர்ந்து ஒரு காரும் செல்கிறது. அந்த கார் சென்ற திசையை நோக்கி தனிப்படையினரும் சென்று வருகின்றனர். அந்த கார் செல்லும் பாதையில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதும் அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து கார் செல்கிறது. இதனால் கொள்ளை அடித்த நகைகளை அந்த காரில் எடுத்துக் கொண்டு அந்த நபர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் கேமராவில் பதிவாகியுள்ள உருவங்களை வைத்து 2 பேரை போலீசார் சந்தேகத்தில் தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பகுதிகளில் அதிகம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்களையும் டவர் மூலமாக சோதனை செய்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக 2 பேரை சந்தேகப்படுகிறோம். மேலும் 1 கார், மோட்டார் சைக்கிள் இந்த திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கொள்ளையர்கள் சிக்கிவிடுவார்கள்.
இன்றைய காலகட்டத்தில் சாதாரண டீக்கடைகளில் கூட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி வைத்துள்ளனர். இவ்வளவு நகைகள் உள்ள பகுதியில் பொருத்தப்படாமல் இருக்கிறது. அனைத்து வணிகர்களும் கண்டிப்பாக தங்களது கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். அதுவே அவர்களது உடைமைகளை பாதுகாக்க பெருமளவு உதவும் என்று கூறினர்.
- நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் வின்சென்ட் மகன் ரெமன் (வயது 45).
இவர் மூலக்கரைப்பட்டி மெயின் பஜாரில் வணிக வளாகம் வைத்துள்ளார். இந்த வணிக வளாகத்தில் அவர் தனியார் நிதி நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை, பேன்சி கடைகள் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கடை ஊழியர்கள் கடைகளை அடைத்து சென்றனர். இன்று காலை வணிக வளாகத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் பின்பக்க ஜன்னல் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ரெமனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் உடனடியாக வணிக வளாகத்துக்கு விரைந்து சென்றார்.
அங்கு வணிக வளாகத்தில் உள்ள நிதி நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நிதி நிறுவனத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தனர்.
இதுதொடர்பாக அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த போது சுமார் 250 பவுன் நகைகள் வரை அடகு வைக்கப்பட்டிருந்ததும், அவை கொள்ளை போயிருந்ததும் தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1¼ கோடி ஆகும். மேலும் நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ரெமன் மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்கள் நடமாட்டம் மிகுந்த மெயின் பஜாரில் உள்ள வணிக வளாகத்திலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது.
- கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
சென்னை புறநகர் பகுதியை குறி வைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவேற்காடு பகுதியில் என்ஜினீயர் ஒருவர் வீட்டில் முகமூடி கும்பல் 103 பவுன் நகையை கொள்ளையடித்து கைவரிசை காட்டி உள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம், ஈ.ஜி.பி. நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
வெளிநாட்டில் ஜனார்த்தனன் வேலை பார்த்து வந்த நிலையில் அயனம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் ஜனார்த்தனன் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அண்ணாநகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் இரவு 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ அதில் இருந்த 103 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர்.
அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜனார்த்தனன் வீட்டில் இருந்து வெளியே செல்லும் நேரத்தை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
என்ஜினீயர் ஜனார்த்தனன் கடந்த 10 ஆண்டுகளாக சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டியில் தங்கியிருந்தார்.
தற்போது மகளின் படிப்புக்காக கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் அயனம்பாக்கம் பகுதிக்கு வாடகைக்கு குடி வந்துள்ளார். அவர் இருந்த வீட்டின் மேல் பகுதியில் வேறொருவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போது தான் மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். அந்த பகுதியில் வீடுகள் நெருக்கமாக இல்லை. இதனால் கொள்ளையர்கள் வந்து சென்றது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை.
கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு வீட்டை திறந்து செல்வது பதிவாகி உள்ளது.
இரவு 7.45 மணிக்கு வீட்டுக்குள் செல்லும் கொள்ளையன் 8.15 மணிக்கு நகை-பணத்துடன் வெளியே செல்கிறான். அவனுடன் கூட்டாளிகள் மேலும் சிலரும் வந்திருக்கலாம். அவர்கள் வீட்டின் வெளி பகுதியில் நோட்டமிட்டு காத்திருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
முகமூடி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பழைய குற்றவாளி களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
என்ஜினீயர் வீட்டில் 103 பவுன் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புவனகிரி:
புவனகிரி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பு. மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டு ரங்கன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பூபதி (70). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். பூபதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று இரவு பூபதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று அதிகாலை எழுந்த பூபதி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போடவே அருகே வசித்து வருபவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் உதவியுடன் பூபதி புவனகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பு. மணவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்துள்ளது.
- போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கோவில்குளம் சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (வயது 34). இவர்களுக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாரிமுத்து வேலைக்கு சென்றுவிட்டார். பார்வதி வீட்டை பூட்டி விட்டு தனது மகனை அழைத்துக்கொண்டு வயல் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி வீட்டுக்குள் ஓடிச்சென்று பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவின் கதவு திறக்கப்பட்டு கிடந்தது.
அதில் இருந்த துணி மணிகள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர் யாரோ ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து நகையை திருடிச்சென்றதை அறிந்த பார்வதி, உடனடியாக அம்பை போலீசில் தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் இல்லாததால் அம்பை- ஆலங்குளம் சாலையில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை.
- இதே வளாகத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியிருந்தார்.
விருதுநகரில் சிமெண்ட் ஆலையின் துணை மேலாளர்கள் வீடுகளில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிமெண்ட் ஆலை வளாக குடியிருப்பு பகுதியில் துணை பொது மேலாளர்கள் பால முருகன், ராமச்சந்திரன் ஆகிய இருவரின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இருவரும் விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வளாகத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.