search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • 26-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 2 மணிவரை கருடசேவை நடக்கிறது, என முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறினார்.

    திருமலை அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி 20-ந்தேதி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    26-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது. 27-ந்தேதி மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

    கொடியேற்றம் அன்று ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி, மாநில அரசின் சார்பில் மூலவர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம் செய்கிறார்.

    அதைத்தொடர்ந்து தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் வாகன சேவை நடக்கிறது. ஆனால் கருட வாகன சேவை மட்டும் இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை நடக்கிறது.

    அக்டோபர் மாதம் 5-ந்தேதி காலை 6 மணிக்கு சக்கர ஸ்தானம், இரவு 9 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது. பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்களை கவனத்தில் கொண்டு, இலவச தரிசனத்தை மட்டும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

    பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர், என்.ஆர்.ஐ. பக்தர்கள், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான சிறப்பு தரிசனங்களை ரத்து செய்துள்ளோம்.

    சேவைகளுடன், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்கள், பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 50 சதவீத அறைகள் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருமலையில் அறைகள் குறைவாக இருப்பதால், பக்தர்கள் அறைகள் பெற்று, திருப்பதியில் தங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சாதாரண நாட்களில் தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத கட்டிடத்தில் காலை 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அன்னப்பிரசாத வினியோகம் நடக்கிறது.

    பிரம்மோற்சவ நாட்களில் காலை 8 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை அன்னப்பிரசாதம் வழங்கப்படும். கருட சேவை அன்று இரவு 2 மணி வரை பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.

    வாகன சேவை முன்பு ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து ஆன்மிக உணர்வைத் தூண்டும் வகையில் நம்பமுடியாத கலை வடிவங்களை ஏற்பாடு செய்வோம்.

    இதேபோல் திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கம், ராமச்சந்திரா புஷ்கரணி, அன்னமாச்சாரியார் கலையரங்கம், திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபம் ஆகிய இடங்களில் இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    ஆச்சாரமான இந்து மதத்தை பரப்பும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் மொத்தம் 1342 கோவில்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். சமர சதாசேவா அறக்கட்டளையோடு இணைந்து எஸ்.சி, எஸ்.டி, பி.சி. மற்றும் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 502 கோவில்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இங்கு பக்தர்களுக்கு தரிசன பாக்கியம் கிடைக்கும்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தயாரிக்கும் 15 வகையான பஞ்சகவ்ய பொருட்கள் பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல், தூபக் குச்சிகள் பக்தர்களால் பிரத்யேகமாக வாங்கப்படுகின்றன. பஞ்சகவ்ய பொருட்கள், ஊதுபத்தி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை மாடுகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பயன்படுத்தப்படும் மலர்களைப் பயன்படுத்தி உலர் மலர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்ரீவாரி உருவப் படங்கள், கீ செயின்கள் மற்றும் பிற பொருட்களை பக்தர்கள் பெருமளவில் வாங்கி செல்கின்றனர்.

    குழந்தைகளின் பல நோய்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க பக்தர்களின் காணிக்கையில் ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரைவில் கட்டப்படும். தற்போதுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுவரை 652 இதய அறுவை சிகிச்சை செய்து ஏழை குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளோம். ஏழுமலையானின் அருளால் வங்கதேசம் போன்ற தொலைதூர நாடுகளில் இருந்து பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்தனர்.

    பசுவை அடிப்படையாகக் கொண்ட இயற்கை விவசாயப் பொருட்களுடன் திருமலை வெங்கடாசலபதிக்கு பிரசாதம் மற்றும் பிற பிரசாதங்கள் தயாரிக்க 12 வகையான பொருட்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க குறைந்த பட்ச ஆதரவு விலையை விட சற்றே கூடுதல் விலை கொடுத்து வருகிறோம்.

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 17 காணிக்கையாளர்கள் திருமலையில் அன்னப்பிரசாதம் தயாரிப்பதற்காக 2004-ம் ஆண்டு முதல் ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காய்கறிகளை இலவசமாக வழங்கி உள்ளனர். இயற்கை விவசாயத்துடன் காய்கறிகளை பயிரிட விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் டோக்கன் இலவசமாக வழங்கப்படுகிறது.
    • பக்தர்கள் குளிப்பதற்கு குளியலறைகள் உள்ளன.

    திருப்பதியில் பக்தர்களுக்கு மொட்டை போடுவதற்கு 1,189 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 214 பேர் பெண் தொழிலாளர்கள். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இவர்கள் மூன்று ஷிப்டுகளாக பக்தர்களுக்கு சேவை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கோவில் மாட வீதிகளில் வாகன சேவைகள் இருப்பதால், பக்தர்கள் அதிகம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    திருமலையில் உள்ள பிரதான கல்யாணகட்டாவுடன் 10 மினி கல்யாணகட்டாக்கள் உள்ளன. பிரதான கல்யாண கட்டாவைத் தவிர, பி.ஏ.சி.1, பி.ஏ.சி.2, பி.ஏ.சி.3 போன்ற மினி கல்யாணகட்டாக்கள் 247 செயல்படுகின்றன. இவை அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். இவற்றில் சோலார் வாட்டர் ஹீட்டர் உடன் சுடு நீர் வசதி உள்ளது. பக்தர்கள் குளிப்பதற்கு குளியலறைகள் உள்ளன.

    அனைத்து கல்யாண்கட்டாக்களிலும் பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் டோக்கன் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்யாணகட்டாவில் உள்ள அனைத்து ஹால்களிலும் போதுமான எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்களால் தொடர்ந்து சுத்தமாக பராமரிக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார் உற்சவர் மலையப்பசாமி.
    • மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கருடவாகன சேவை நடக்கிறது.

    பவுர்ணமி தினமான நேற்றிரவு ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் கருட வாகன சேவை வெகுவிமரிசையாக நடந்தது . இதை முன்னிட்டு, உற்சவர் ஏழுமலையான் சர்வ நிலையில், அலங்கார திருக்கோலம் பூண்டு கோவிலிலிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.

    அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சாமிக்கு தீப, நைவேத்திய சமர்ப்பணம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கருடவாகன சேவை நடந்தது .

    பவுர்ணமி கருட சேவையொட்டி திருப்பதியில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சாமி தரிசனத்திற்காக இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.

    அதனை தாண்டி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 27-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இந்த விழாவில் கருட சேவை இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அக்டோபர் 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது.
    • நவம்பர் 8-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.

    அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25-ந்தேதி 9 மணிநேரத்துக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணியளவில் 11¼ மணிநேரம் மூடப்பட்டு இருக்கும்.

    இதனால், அன்று கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர்.

    அதேபோல் நவம்பர் மாதம் 8-ந்தேதி மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. எனவே நவம்பர் மாதம் 8-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 10 மணிநேரம் மூடப்பட்டு இருக்கும்.

    இதனால், அன்று கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர்.

    இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு ேகட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • கோவிலில் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது.
    • அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருடசேவை நடக்கிறது.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி கோவிலில் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. திருமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகனச் சேவை நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வி.ஐ.பி. பிரேக் தரிசனம், வயது முதிர்ந்தவர்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் ஆர்ஜித சேவைகள் தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்கள், பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம் என அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. புரோட்டோகால் வி.ஐ.பி.களுக்கு பிரேக் தரிசனம் மட்டுமே இருக்கும்.

    பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய 50 சதவீத அறைகள் உள்ளன. மீதமுள்ள அறைகள் திருமலையில் உள்ள பல்வேறு கவுண்ட்டர்கள் மூலம் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்படும். அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருடசேவை நடப்பதால், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கு வருகிற 30-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை ஆன்லைனில் அல்லது நேரில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. காணிக்கையாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு வாகனச் சேவை நடப்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் திருமலையில் அறைகள் கிடைப்பது அரிது. அதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி பிரமுகரும் நடிகையுமானவர் அர்ச்சனா கவுதம்.
    • இவர் திருப்பதியில் தன்னை அவமானப்படுத்தியதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தன்னை டிக்கெட் இல்லை என கூறி அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் செல்ஃபி வீடியோ வெளியிட்டுள்ளார். திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி வந்துள்ளார்.


    அர்ச்சனா கவுதம்

    அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி அதன் பிறகு வி.ஐ.பி. டிக்கெட் ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அர்ச்சனா கவுதம் அங்கிருந்த ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அந்த அலுவலகத்தில் இருந்தபடி செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோவை நடிகை அர்ச்சனா கவுதம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


    அர்ச்சனா கவுதம்

    அதில் இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டதாகவும். மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விஐபி தரிசனம் என்ற பெயரில் ரூ.10,500 கேட்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


    • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • பிரம்மோற்சவ விழாவின்போது உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்படும்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடக்கின்றன. அதில் மிக முக்கிய விழாவாக வருடாந்திர பிரம்மோற்சவம் கருதப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவின்போது நடக்கும் மிக முக்கிய நிகழ்ச்சிகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. 9 நாட்கள் நடக்கும் மெகா திருவிழாவின்போது, வெங்கடாசலபதி கோவிலின் நான்கு மாட வீதிகளில் நடக்கும் ஊர்வலம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    உற்சவர் மலையப்பசாமி மொத்தம் 16 வகையான வாகனங்களில் (2 தேர்கள் உள்பட) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்தக் காட்சியை நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் கண்டு களிப்பர்.

    கோவிலின் மாடவீதிகளில் கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் "ஏடுகுண்டல வாடா வெங்கடரமணா கோவிந்தா... கோவிந்தா"... எனப் பக்திகோஷம் எழுப்புவது விண்ணதிரும்.

    வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கும் வாரத்தின் முந்தைய வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று வைகானச ஆகம விதிகளின்படி, வெங்கடாசலபதி கோவில் பாரம்பரிய முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. இதற்கு "ஆலய சுத்தி" எனப்படும். கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் அழைப்பர்.

    பிரம்மோற்சவ விழா தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக மண் சேகரிக்கும் செயல்முறை கடைப்பிடிக்கப்படும். இதற்கு மிருத சங்கிரஹணம் எனப்படும். அங்குரார்ப்பணம் என்றும் கூறுவர்.

    அதைத்தொடர்ந்து 9 நாள் மெகா திருவிழா தொடக்கத்தைக் குறிக்கும் கருட கொடியேற்றம் நடக்கிறது. கோவிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில் மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் "கருடன் உருவம்" வரையப்பட்ட கொடியை பிரதான அர்ச்சகர் ஏற்றுவர்.

    பிரம்மோற்சவ விழாவில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும், அனைத்துலக தெய்வங்களுக்கும் கருடன் அழைப்பு விடுப்பதாக நம்பப்படுகிறது.

    கொடியேற்றம் முடிந்ததும் உற்சவர் மலையப்பசாமி கோவிலை சுற்றி நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். ஒரு சில வாகனங்களில் உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி உலா வருவார்.

    வீதிஉலா முடிந்ததும் கோவிலுக்குள் "ஸ்ரீவாரி கொலுவு" நடத்தப்படும். பிரம்மோற்சவ விழாவின்போது உற்சவர்களுக்கு கோவிலில் உள்ள ரெங்கநாயகர் மண்டபத்தில் நறுமணப் பொருட்களால் "ஸ்நாபன திருமஞ்சனம்" எனப்படும் அபிஷேகம் நடத்தப்படும். இது, உற்சவர்களை குளிர்விப்பதாக கருதப்படுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில் சந்தனப் பொடியால் உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்து, நீராடுவது சூர்ணாபிஷேகம் ஆகும்.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில், உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி, சுதர்சன சக்கரத்தாழ்வார் புஷ்கரணிக்கு எழுந்தருள்வார்கள். அங்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கும். கோவில் புஷ்கரணியில் 3 முறை சக்கரத்தாழ்வாரை புனித நீரில் மூழ்கி எடுத்து நீராட்டுவர். இதற்கு "சக்கரஸ்நானம்" எனப்படுகிறது.

    பிரம்மோற்சவ விழா நிறைவில் கொடியிறக்கம் நடக்கும். அப்போது தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டு இருந்த கருட கொடி இறக்கப்படும். இத்துடன் 9 நாள் பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நிறைவடைகிறது.

    மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

    • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாள் கருடசேவை நடக்கும்.

    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாள் கருடசேவை நடக்கும். அன்று உற்சவர் மலையப்பசாமிக்கு பிரத்யேக குடை அலங்காரம் செய்யப்படும்.

    ஒரு இந்து அமைப்பு உற்சவர் மலையப்பசாமிக்கு சமர்ப்பிப்பதற்காக பிரத்யேக குடைகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருமலையை நோக்கி வரும். குடை ஊர்வலத்தின்போது எந்தவொரு பக்தரும் காணிக்கை போடக்கூடாது.

    குடை ஊர்வலத்தின்போது பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்றடைவதில்லை. ஊர்வலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளுக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர (சாலகட்ல) பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி ஆலோசனை செய்வது தொடர்பாக அனந்தபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரவிபிரகாஷ் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள கோவில், மாட வீதிகள், தரிசன வரிசைகள், பக்தர்கள் ஓய்வறைகள், விடுதிகள், அன்னதானக்கூடம், புஷ்கரணி உள்பட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நமது கடமை. பக்தர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல்-மந்திரி ஒ.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்ய திருமலைக்கு வருகிறார்.

    கருடசேவை அன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். வாகனச் சேவையின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீவிரவாத செயல்களை முறியடிக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நடந்து முடிய போலீசாரின் அறிவுரைகளை பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 4-ல் உள்ள கட்டுப்பாட்டு அறை கூட்ட அரங்கில் பிரம்மோற்சவ விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டாக ஆய்வு நடத்தினார்.

    கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர் பங்கேற்று, இந்த ஆண்டு நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

    மேலும் அனந்தபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திருமலை 2-டவுன் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, என்ன மாதிரியான குற்றங்கள் நடக்கின்றன, குற்றங்களை கட்டுப்படுத்த போலீசார் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்? என்பதைக் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது திருமலை-திருப்பதி ேதவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர், திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா, பறக்கும்படை அதிகாரி பாலிரெட்டி, போக்குவரத்துப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், திருமலை-2 டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • கடந்த மாதம் 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
    • இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 30 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நேர்த்திக் கடன் வேண்டி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அதில் கடந்த மாதம் தினமும் ரூ.4 கோடிக்கு மேல் உண்டியல் வசூலானது. அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5.86 கோடி வரை உண்டியல் வசூலானது.

    22 நாளில் ரூ.100 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. கடந்த மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது. இது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.

    கடந்த மாதம் 10 லட்சத்து 79 ஆயிரத்து 900 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். 1.7 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை மாதம் 23.40 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். 10.97 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.139.33 கோடி உண்டியல் வசூலானது.

    ஜூன் மாதத்தில் 23.23 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் ரூ.123.74 கோடி செலுத்தினர். மே மாதத்தில் 130 கோடி உண்டியல் வசூலானது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.

    இந்த நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமானம் 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு மொத்த வருமானம் ரூ.1500 கோடியை தாண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • 20-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடக்கம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடக்கும் விழா விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    1-ந்தேதி ரிஷி பஞ்சமி, 6 மற்றும் 21-ந்தேதி சர்வ ஏகாதசி, 7-ந்தேதி வாமன ஜெயந்தி, 9-ந்தேதி அனந்த பத்மநாப விரதம், 11-ந்தேதி மகாளய பக்‌ஷம் ஆரம்பம், 13-ந்தேதி பிருஹத்யும விரதம் (உண்ட்ரால தத்தே), 20-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 25-ந்தேதி மஹாளய அமாவாசை, 26-ந்தேதி பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம், 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

    மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

    • மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாஜலபதி சுவாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • 5 தலை நாகம் கொண்ட சின்ன சேஷ வாகனம், சிம்மவாகனம் ஆகிய புதிய வாகனங்கள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பிரம்மோற்சவ திருவிழாவின் போது 10 நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாஜலபதி சுவாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    இதற்காக திருப்பதியில் இருப்பது போன்று பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், கற்பக விருட்ச வாகனம், அனுமான் வாகனம், கஜவாகனம், சூரிய சந்திர பிரப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், மோகினி பல்லக்கு ஆகிய 12 வாகனங்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் ஒவ்வொரு வாகனங்களும் சராசரியாக குறைந்தபட்சம் ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.6லட்சம் செலவில் இந்த வாகனங்களை வடிவமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த வாகனங்களை கும்ப கோணத்தில் மர சிற்ப சிற்பிகள் மூலம் வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுஉள்ளது. இந்த நிலையில் திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 7 தலைநாகம் கொண்ட பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் ஆகிய 3 புதிய வாகனங்கள் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இது தவிர 5 தலை நாகம் கொண்ட சின்ன சேஷ வாகனம், சிம்மவாகனம் ஆகிய புதிய வாகனங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. மீதி உள்ள வாகனங்கள் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு விரைவில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும் அதன் பிறகு நவம்பர் மாதம் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் பவித்ர உற்ச திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.

    ×