search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நாளை மறுநாள் (20-ந்தேதி) நடைபெறுகிறது.
    • வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு 21-ந்தேதி கடைசி நாளாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    கடந்த 9 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக கட்சியை வழிநடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் சட்டவிதியாகும். இதை தொடர்ந்து பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த வாரம் (26-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாளை (19-ந்தேதி) மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரிகள் இருவரும் அவரது வேட்பு மனுவை பெற்றுக்கொண்டனர்.

    இதையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரை வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிட்டனர். முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்துகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நாளை மறுநாள் (20-ந்தேதி) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு 21-ந்தேதி கடைசி நாளாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறு யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யாத நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. சட்டவிதியை குறிப்பிட்டு அதன்படியே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. சட்ட விதி 20அ பிரிவு 1(ஏ) (பி) (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஓ.பி.எஸ். அணியினர் அ.தி.மு.க. சட்டவிதிகளை சுட்டிக்காட்டி தொடர்ச்சியாக சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில் தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட பாய்ச்சலை தொடங்கியுள்ளார். இதன்மூலம் அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமையாக வருகிற 26-ந்தேதி எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள்.

    • உதவி கமிஷனர்கள் சார்லஸ், துரை ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் முன்பும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது.

    பரபரப்பான இந்த சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமியை முறைப்படி தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நாளில்தான் அ.தி.மு.க. அலுவலகத்தில் வரலாறு காணாத மோதல் வெடித்தது.

    அதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று காலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். உதவி கமிஷனர்கள் சார்லஸ், துரை ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்யப்போவதாக கூறிக்கொண்டு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் யாராவது வந்தால் அவர்களை பிடித்து கொடுக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகளும், போலீசாரும் வெளியாட்கள் ஊடுருவி தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் செயலாற்றி வருகிறார்கள். ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமைக்கழகம் முன்பும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும்.
    • பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் பேசினார். மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு கருத்து தெரிவித்தார்.

    கூட்டத்தில், அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை கட்சி பணிகளில் 'பிஸி'யாக இருப்பேன்.

    வருகிற தேர்தலில் அ.தி. மு.க. உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து, கூட்டத்தில் இருந்த மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எழுந்து, உங்களுடைய (அண்ணாமலை) பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்றார். தொடர்ந்து, மதுரையை சேர்ந்த ஷா என்ற கட்சி நிர்வாகி நாராயணன் திருப்பதியின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார். இதேநேரத்தில் ஏராளமானோர் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதன் பின்னர், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கேட்டார். இதனால் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கூட்டத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காந்தி, சரஸ்வதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறுகிறது.
    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 18 , 19-ம் தேதிகளில் மாலை 3 மணி வரை நடக்கிறது. 20-ம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். வாக்கு எண்ணிக்கை 27-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்கள், மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று, கட்சி சட்ட விதி 20 (அ) பிரிவு - 1 (ஏ), (பி), (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறுவதையொட்டி கட்சி தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு எதிரானவர்கள், சமூக விரோதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் ரூ.25000 செலுத்தி விருப்ப மனு பெறலாம்.
    • மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கட்சியின் சட்ட விதியின்படி பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

    பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் நாளை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். மார்ச் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்ப பெறலாம். மார்ச் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 27ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    பொதுச்செயலளார் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25000 செலுத்தி விருப்ப மனு பெறலாம். விதிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு கட்சி விதிகள் அதிகாரம் ஏதும் வழங்கவில்லை.
    • கட்சியில் இருந்து நீக்கும் முன் குற்றச்சாட்டு அறிக்கை வழங்கியிருக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இைண ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன.

    பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனுதாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், "இந்த வழக்கை தொடர்ந்துள்ள மனோஜ் பாண்டியன் தற்போது கட்சி உறுப்பினரே கிடையாது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை பொதுக்குழு உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்தனர்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கலைக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்து ஒற்றை தலைமையை அ.தி.மு.க.வில் ஏற்படுத்துவது என்பது தொண்டர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம்.

    பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மனுதாரர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறி இருந்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் கூறியதாவது:-

    கட்சி சட்ட விதிகளை பின்பற்றாமல், மனுதாரர்களை நீக்கம் செய்துள்ளனர். மனுதாரர்கள் விதிகளின்படி தங்கள் தரப்பு விளக்கம் கேட்கவில்லை. எடப்பாடி தரப்பு சர்வாதிகார போக்குடன் செயல்பட்டுள்ளது.

    இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற பின் எதற்காக சட்டமன்றத்தில் கட்சி சாராத உறுப்பினராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இருக்க வேண்டும்.

    கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு கட்சி விதிகள் அதிகாரம் ஏதும் வழங்கவில்லை. கட்சியில் இருந்து நீக்கும் முன் குற்றச்சாட்டு அறிக்கை வழங்கியிருக்க வேண்டும்.

    நோட்டீஸ் கொடுக்கும் முன் சஸ்பெண்ட் தான் செய்ய முடியும். நேரடியாக கட்சியில் இருந்து நீக்க முடியாது. மேலும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் பரிந்துரை தான் செய்ய முடியும்.

    2022 ஜூலை 11-க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து மனோஜ் பாண்டியன் தரப்பு வக்கீல் சலீம் வாதாடுகையில் கூறியதாவது:-

    இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியை இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீடிக்கின்றன. அப்படி இருக்கும் போது இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பதில்மனு தாக்கல் செய்ய முடியாது.

    சட்டமன்ற கூட்டத்தொடர் 20-ந்தேதி கூடுகிறது. இதுசம்பந்தமாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும் பதில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் ஆஜரானார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும் விசாரணையை வருகிற ஏப்ரல் 11-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
    • எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டு ஆட்சி காலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எம்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

    அ.தி.மு.க.வின் மக்கள் சக்தியாக மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தனர். அவர்கள் வழியில் மக்கள் சக்தியாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

    மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை போலீசார் தடுத்து நிறுத்தாமல் அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க. சார்பில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டது.

    ஒரு அரசு மக்களின் சாதனை அரசாக தான் இருக்கணும். ஆனால் தி.மு.க. வேதனை அரசாக உள்ளது. விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டு ஆட்சி காலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே தட்டிக் கேட்க முடியும். காற்றை சுவர் எழுப்பி தடுக்க முடியாது. கடலை அணை கட்டி தடுக்க முடியாது. அதேப்போல் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம் என்றார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அவருக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்.

    முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதுபோன்று செயலில் இனி ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அதிமு.வில் உள்ள அத்தனை பேரும் எந்த தியாகத்தையும் செய்வோம்.

    உச்சநீதிமன்றமே அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர் சார்பில் நீக்கப்பட்டது அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.

    எனவே அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி வரப்போகிறார். மிக விரைவில் அவர் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தொகுதிகளுக்கு உட்பட்ட தொண்டர்களுக்கு புதிய அடையாள உரிமை சீட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விருகை வி.என்.ரவி வழங்கினார்.
    • அடையாள உரிமை சீட்டு இருந்தால்தான் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓட்டு போட உரிமை உண்டு.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்க தீவிர பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்துடன் எடப்பாடி பழனிசாமி படமும் பொறிக்கப்பட்டு அடையாள உரிமை சீட்டு என புதிதாக வழங்கப்பட்டு வருகிறது.

    முன்பகுதியில் உறுப்பினர் உரிமை சீட்டு எனவும் அமைதி, வளம், வளர்ச்சி என்றும் பின்பகுதியில் அ.தி.மு.க. உறுப்பினர் பெயர், வார்டு எண், பகுதி, மாவட்டம், வயது, பாலினம், வரிசை எண், சேர்ந்த ஆண்டு என குறிப்பிடப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையொப்பமும் இடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அடையாள உரிமை சீட்டு இருந்தால்தான் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓட்டு போட உரிமை உண்டு.

    தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்டத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தொகுதிகளுக்கு உட்பட்ட தொண்டர்களுக்கு புதிய அடையாள உரிமை சீட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விருகை வி.என்.ரவி வழங்கினார்.

    அவர் பேசும்போது தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி நமது மாவட்டம் முதலிடத்தில் இருக்க வேண்டும், பாராளுமன்ற தேர்தல் பணியையும் இப்போதே பகுதி வட்ட வாரியாக தொடங்கி பணியாற்றி வெற்றி இலக்கை எட்ட வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சாமிநாதன், கடும்பாடி, எ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சைதை சுகுமார், ஷேக் அலி, கதிர் முருகன், வெற்றிவேல், வக்கீல் பழனி எஸ்.எம்.சரவணன், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, எஸ்.பி.குமார், இனியன், விருகை தர்மர், வைகுண்ட ராஜன், சுரேஷ், வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வழக்கமாக, தனிப்பட்ட சங்க விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால், உள்கட்சி விவகாரங்களில் ஐகோர்ட்டை தலையிடும்படி மனுதாரர் கோர முடியாது.
    • கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மனுதாரர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    இந்த வழக்கில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. கட்சியில் தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் பதவியே உள்ளது. ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை இந்த வழக்கில் தவறாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கும் மனோஜ் பாண்டியன், தற்போது கட்சியின் உறுப்பினரே அல்ல.

    கடந்த 2022 ஜூன் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு முன் ஜூன் 14-ந்தேதி நான்கு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாற வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

    இதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி, என்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமும் ஏற்று பதிவு செய்து கொண்டது.

    கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் சட்ட ஆணையம் தனக்கு கடிதம் எழுதி உள்ளது. அதன் அடிப்படையில் ஜி 20 மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவும், கட்சி உறுப்பினர்களும் ஜெயலலிதாவை தங்கள் இதயத்தில் தெய்வமாக, அன்னையாக நிறுத்தியுள்ளனர். கலைக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதும், மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாறுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுக்குழுவின் விருப்பம்.

    வழக்கமாக, தனிப்பட்ட சங்க விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால், உள்கட்சி விவகாரங்களில் இந்த ஐகோர்ட்டை தலையிடும்படி மனுதாரர் கோர முடியாது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மனுதாரர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    கட்சியின் பெரும்பான்மையினரின் முடிவை சிறுபான்மையினர் முடக்க முடியாது. கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய பொதுக்குழுவுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது.

    கட்சியின் பொதுக்குழு நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை தாக்கிய மனுதாரருக்கு பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாது என்ற வாதத்தை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ள நிலையில், கட்சியில் இருந்து தன்னை நீக்க அவர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது என மனுதாரர் கூற முடியாது.

    கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை. அதனால், எந்த நிவாரணமும் கோர முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்கு பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது என்பதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்களிடம் கொடுத்த ஆவணங்கள் அனைத்தையும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்றார். அங்கு பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை உடைத்து ஓ.பி.எஸ்.சும் அவரது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்துக்குள் சென்றனர். பின்னர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை சூறையாடி அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர்.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் தலைமை கழகம் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் தனி அறையில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பீரோவை உடைத்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதில் இருந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கு விசாரணை பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அ.தி.மு.க. சார்பில் என்னென்ன பொருட்கள் திருடப்பட்டன என்பது பற்றிய பட்டியலை தலைமை கழக நிர்வாகிகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வழங்கி இருந்தனர்.

    இதையடுத்து அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மீட்கும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தி தகவல்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஒப்படைத்துள்ளனர். தலைமை கழகம் தொடர்பான ஆவணங்கள் வெளிமாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. அலுவலக சொத்துக்கள், தலைமை கழகத்தின் பெயரில் கட்சி பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களின் ஆர்.சி.புக் உள்ளிட்ட ஆவணங்கள் உள்பட 118 ஆவணங்களையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைத்து உள்ளனர்.

    அ.தி.மு.க. அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்களிடம் கொடுத்த ஆவணங்கள் அனைத்தையும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளனர்.

    இதையடுத்து அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான 118 ஆவணங்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உரிமை கோரி உள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகம் தங்கள் வசமே உள்ளது என்றும் இதுதொடர்பாக ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டி வாதாட உள்ளனர்.

    எனவே அ.தி.மு.க. தொடர்பான அனைத்து ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி இருக்கிறார்கள்.

    இதற்கிடையே ஓ.பி.எஸ். தரப்பினரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு அளிக்க உள்ளனர். அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஆவணங்களை கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்த இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான விவகாரம் முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஆவணங்களை வழங்கக் கூடாது என்று ஓ.பி.எஸ். தரப்பு வக்கீல்கள் வாதாட உள்ளனர்.

    இந்த விசாரணை முடிவில்தான் அ.தி.மு.க. அலுவலக ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்படுமா? என்பது தெரியவரும்.

    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    மதுரை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் மதுரைக்கு வந்தார். அப்போது அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் என்பவர் மதுரை விமான நிலையத்தில் வீடியோ எடுத்து அவதூறாக பேசினார்.

    இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜேஸ்வரனுக்கு அடி-உதை விழுந்தது. இதுபற்றி அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதே சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில் அ.தி.மு.க.வினர், மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தனர்.

    அப்போது போலீசார் தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை, அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். இருந்தபோதிலும் அ.தி.மு.க.வினர் கலைந்து செல்லாமல் போலீசாரின் தடையையும் மீறி அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டம் செய்தனர்.

    இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அன்புதாசன், சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார், அ.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், பகுதி செயலாளர்கள் முத்துவேல், கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர் மற்றும் 500 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து சிலர் வேறு கட்சிக்கு செல்லுபவர்கள் தொண்டர்கள் அல்ல.
    • டெண்டர்கள் கிடைக்கும் என்று அங்கே சென்று இருக்கிறார்கள். நம்மை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்கள்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6-வது ஆண்டு தொடக்கவிழா ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.

    விழாவில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அங்குள்ள 70 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட செயலாளர்கள் வி.சுகுமார்பாபு, சி.பி.ராமஜெயம்,ஏ.ஆர்.பழனி, ஆர்.ஆனந்தன்,எல்.ராஜேந்திரன், கே.முகம்மது சித்திக், கே.விதுபாலன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் டி.டி.வி தினகரன் பேசியதாவது:-

    நமது கட்சியின் 6-வது ஆண்டு தொடக்க விழாவிற்கு வந்துள்ள அனைவரையும் உண்மையான அம்மாவின் வாரிசுகளாக உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மார்ச் 15-ல் வேலூர் பொதுக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கம்பீரமான கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று அம்மா முன்னேற்ற கழகம் பிறந்தநாள். கடந்த 5 ஆண்டுகளில் நாம் எத்தனையோ சோதனைகளை சந்தித்து உள்ளோம். அம்மாவின் பிள்ளைகள் நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள்.

    ஒரு சிறு தொய்வு, தயக்கமின்றி நம்மால் இந்த இயக்கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல முடியும். அம்மாவின் கொள்கைகளையும், லட்சியங்களையும் அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்கின்ற கடமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கு இருக்கிறது.

    தொண்டர்களில் ஒருவனாக என்னை இன்றைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். வருங்காலத்தில் அம்மாவின் லட்சியங்களை நமது சந்ததிகளுக்கு கொண்டு செல்லக்கூடிய இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருக்கும்.

    காரணம் இங்கு உள்ள தொண்டர்கள் உண்மையான தொண்டர்கள். டெண்டர்களுக்காக வந்தவர்கள் அல்ல டெண்டர்களுக்காக வந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து சிலர் வேறு கட்சிக்கு செல்லுபவர்கள் தொண்டர்கள் அல்ல.

    டெண்டர்கள் கிடைக்கும் என்று அங்கே சென்று இருக்கிறார்கள். நம்மை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் உண்மையான அம்மாவின் தொண்டர்கள் அல்ல. ஆட்சி அதிகாரம் எதிரிகளின் கையில் இருந்தாலும் அதையெல்லாம் வேண்டாம் என்று ஆட்சி அதிகாரத்தின் லாபங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து இங்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். வீரத்தோடும், தீரத்தோடும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பின்னடைவும் இந்த இயக்கத்தை பாதிக்கப்படவில்லை.

    காரணம் இது ஏதோ சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல இது அம்மா என்ற மூன்றெழுத்தின் லட்சியங்களை தொடர்ந்து கொண்டு செல்கின்ற இயக்கம். பல லட்சம் தொண்டர்கள் என்னோடு அணிவகுத்து இருக்கிறீர்கள். நமது இயக்கத்திற்காக பாடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் அமைப்பு ரீதியாக 5 ஆண்டுகளில் இந்த இயக்கம் எல்லா பகுதிகளிலும் வேரூன்றி இருக்கிறது.

    வருங்காலத்திலே இது அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கும் இயக்கமாக வளர்ந்து வரும். புரட்சித் தலைவர் ஆரம்பித்த இயக்கம் இன்று துரோகிகளின் கையிலே சிக்கிக் கொண்டுள்ளது.

    ஆட்சி அதிகாரம், பண பலத்தால் இன்றைக்கு மின்மினி பூச்சிகளாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சுயநலத்தின் உச்சமாக ஆணவத்தின், அகங்காரத்தின் உச்சமாக திகழ்கிறார்கள்.

    அம்மாவின் ஆட்சியை அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை . பண பலத்தால் ஜனநாயகத்தை வென்று விடலாம் என்றார்கள். முடியாது என்று காலம் அவர்களுக்கு உணர்த்தி இருக்கிறது.

    ஆனால் தீய சக்தியான திமுகவை ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களது சுயநலமும், அதிகாரம், ஆணவம் இதற்கு காரணம். வருங்காலத்தில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திமுகவை வீழ்த்தி காட்டுவோம் என்கின்ற உறுதியினை ஏற்போம்.

    இந்த இயக்கம் இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் அம்மாவின் இயக்கம் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×