search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர்.
    • காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

    ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? என கூறியுள்ளார்.

    • ஜனநாயக நாட்டில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாபெரும் இயக்கத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
    • தமிழக காவல் துறையானது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    கோபி:

    முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாபெரும் இயக்கத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அவருக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை அரசு தவறி விட்டது. அதற்கு பதிலாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.

    எதிர்க்கட்சியை நசுக்க வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது. இது அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும். தமிழக காவல் துறையானது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு அவர்மீது வழக்கு போடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரிய செயலாகும்.

    இது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்வது இந்த அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு. பா.ஜ.க. வுடன் கூட்டணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
    • நாளை மறுநாள் நடைபெற உள்ள வழக்கு விசாரணையை இரு தரப்பினரும் எதிர்நோக்கி உள்ளனர்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பினர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் மாறுபட்ட தீர்ப்புகள் கூறப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முதலில் தீர்ப்பளித்த நிலையில் 2-வதாக வந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக அமைந்திருந்தது.

    இதை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் 29-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே இதுபற்றி முடி வெடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடைபெற்றது.

    மனுதாரரான மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் குருகிருஷ்ணகுமார், ஜூலை 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செயல்பட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    பொதுக்குழு முடிவுகள் அ.தி.மு.க. நிறுவனரான எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், எனவே கட்சி விதிகளுக்கு மாறாக தங்களை நீக்கிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்தரப்பினரின் கருத்தை கேட்காமலேயே இதனை செய்ய வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் விஜய் நாராயணன், வைத்திய நாதன் ஆகியோர் கடந்த 9 மாதங்களாக ஓ.பி.எஸ். தரப்பினர் இதே வாதங்களை முன்வைத்து வருவதாக தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் தங்கள் தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எதிர்மனுதாரர்களின் (எடப்பாடி பழனிசாமி தரப்பு) விளக்கத்தை கேட்காமல் எப்படி தடைவிதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

    விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 17-ந்தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் பதில் மனுவை தயாரித்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளனர்.

    எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிசாமியின் பதில் மனு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றோ, நாளையோ அல்லது வழக்கு விசாரணை நடைபெறும் நாளான 17-ந் தேதியோ பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

    அ.தி.மு.க. சட்ட விதிகளின்படியே பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை என்பது போன்ற விளக்கங்களுடன் பதில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழு செல்லும் என்றால் தீர்மானங்களும் செல்லுபடியாகும் தானே என்கிற கேள்வியை எழுப்பும் எடப்பாடி ஆதரவாளர்கள் நாளை நடைபெற உள்ள விசாரணையிலும் தங்களுக்கு சாதகமாகவே நிச்சயம் தீர்ப்பு கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள வழக்கு விசாரணையை இரு தரப்பினரும் எதிர்நோக்கி உள்ளனர்.

    • அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
    • அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களுடன் வடிவமைக்கப்பட்டு புதிய அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களுடன் வடிவமைக்கப்பட்டு புதிய அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    இந்த புதிய அட்டைகளை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சென்னை புறநகர் மாவட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடந்தது.'

    மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி உறுப்பினர் அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் கூறும்போது, 'இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றுள்ள அனைத்து கழக உறுப்பினர்களுக்கும் மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கப்படுகிறது' என்றார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.
    • தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசும் போட்டியிட்டனர்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்திருந்தது. அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். நடந்து முடிந்த தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10,156 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி திருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    முன்னாள் முதல்-அமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.

    குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்காக லேப்டாப், சைக்கிள் திட்டங்களை கொண்டு வந்தார். தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்கள் பெண்களிடம் அமோக வரவேற்பு பெற்றன. ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற முதல் அ.தி.மு.க திட்டங்களை நிறுத்தி வருகிறது.

    தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் 42 ஆயிரம் சிறுபான்மை ஓட்டுக்களை நாம் இழந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

    அவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதே தி.மு.க.வினர் தான் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பா.ஜனதாவுடன் 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தனர் என்பதை மறந்து விடக்கூடாது. அ.தி.மு.க. என்றும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவே இருந்து வரும் கட்சியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த மனுக்கள் காலாவதியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து, விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.

    அதில் அவர், சென்னையில் நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு சட்ட விரோதமானது. அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த வழக்கு, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த மனுக்கள் காலாவதியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல் ராஜலட்சுமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து உள்ளதாக கூறினார்.

    மேலும், இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்ற நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து, விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலைய உள்வளாகத்தில் இருந்து வெளியே வருவதற்காக சிறிய பஸ்சில் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார். அப்போது அதே பஸ்சில் இருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசி தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனால் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் அவரை தடுத்தனர். அப்போது அங்கு மோதல் ஏற்பட்டது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக இருதரப்பிலும் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன் அளித்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது, அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேசுவரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 11 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கருப்புச்சட்டை அணிந்திருந்தனர். அவர்கள் தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், அண்ணாதுரை, பைக்காரா கருப்புசாமி, சோலைராஜா, முத்துவேல், கலைச்செல்வம், கே.வி.கே. கண்ணன், பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், பரவை ராஜா, வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன், ராஜேந்திரன், ஓம்.கே. சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.வினர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம்-கண்டமங்கலத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் புதுவை-விழுப்புரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அ.ம.மு.க. பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதனை கண்டித்து விழுப்புரம் நகர அ.திமு.க. சார்பில் விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சாலை மறியல் நடைபெற்றது. நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் செங்குட்டுவன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நிர்வாகிகள் மந்தக்கரை ஜானகிராமன், ராஜகோபால், லியாகத் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதனால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் புதுவை-விழுப்புரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் (வடக்கு) கண்ணன், ராமதாஸ் (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சாலை மறியல் காரணமாக சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர்.

    மேல்மலையனூர் வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு தொடர்ந்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜதத்தன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன், அவை தலைவர் துளசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் செல்வம் வரவேற்றார். இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சத்தியராஜ், ஒன்றில் தகவல் தொழில் நுட்ப செயலாளர் லோகநாதன், ஒன்றிய துணை செயலாளர் பாலா, நிர்வாகிகள் அயாத், ஷாகத், பாலாஜி, துரை காசிநாதன், காசி பாலாஜி, தனசேகர், பூங்காவனம், தர்மன், பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர்.
    • கோமல், ஆர்.கே. அன்பரசன் ஆகியோர் அ.தி.மு.க.வின் இணைந்தனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.உமாதேவன், அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் கோமல் ஆர்.கே. அன்பரசன் ஆகியோர் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    • அ.தி.மு.க.வினர் சூழ்ந்து கொண்டு அ.ம.மு.க. பிரமுகர் ராஜேஸ்வரனை தாக்கி செல்போனை பறித்து வைத்துக்கொண்டனர்.
    • சட்டத்தை கையில் எடுத்து தாக்குதலில் ஈடுபட்டது தவறு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு சென்றார்.

    விமான நிலையத்தில் இருந்து பயணிகளை வெளியில் அழைத்துச்செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்சில் நின்றபடியே சக பயணிகளுடன் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் திடீரென எடப்பாடி பழனிசாமியை வீடியோ எடுத்தபடியே பேசினார். 'எதிர்க்கட்சி தலைவர் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

    சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர்... துரோகத்தின் அடையாளம்... 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தென்நாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என்று சத்தமாக பேசியபடியே அவர் இருந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர் வீடியோ எடுக்கப்பட்ட செல்போனை தட்டி பறித்தார். இதுதொடர்பான வீடியோ உடனடியாக சமூக வலைதளங்களில் பரவியது.

    எடப்பாடி பழனிசாமியின் நேருக்கு நேராக அவரை பற்றி அவதூறாக பேசிய நபர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பதும், இவர் அ.ம.மு.க. பிரமுகர் என்பதும் தெரிய வந்தது.

    இதன் பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி எடப்பாடி பழனிசாமி வெளியில் வந்தார். அப்போது ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் ராஜேஸ்வரன் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவருக்கு சரமாரியாக அடி-உதை விழுந்தது.

    இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக அ.ம.மு.க. பிரமுகர் ராஜேந்திரன் மீது அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ராஜேஸ்வரனும் தனியாக புகார் அளித்தார். அதில், 'எடப்பாடி பழனிசாமியுடன் வந்திருந்த அ.தி.மு.க.வினர் தன்னை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 393 ஐ.பி.சி. (செல்போனை பறித்தல்), 506-2 (கொலை மிரட்டல்), 328 (தாக்குதல்) , 294.பி (அவதூறாக பேசுதல்) என்பது உள்பட 7 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வினர் 4 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ராஜேஸ்வரன் மீது 2 பிரிவில் வழக்கு போட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி திட்டியதாக அ.தி.மு.க.வினர் அளித்த புகார் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். அ.தி.மு.க.வினர் சூழ்ந்துகொண்டு அ.ம.மு.க. பிரமுகர் ராஜேஸ்வரனை தாக்கி செல்போனை பறித்து வைத்துக்கொண்டனர்.

    அந்த செல்போனை நீண்ட நேரமாக கொடுக்காமல் அவர்கள் இழுத்தடித்தனர் என்றும் நீண்ட போராட்டத்துக்கு பிறகே செல்போனை கொடுத்தனர்' என்றும் தெரிவித்தார்.

    ராஜேஸ்வரன் அவதூறாக பேசியது தொடர்பாக அ.தி.மு.க.வினர் புகார் மட்டும் அளித்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்போம். சட்டத்தை கையில் எடுத்து தாக்குதலில் ஈடுபட்டது தவறு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அவனியாபுரம் பைபாஸ், வில்லாபுரம், தெற்கு வாசல் வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார்.
    • வில்லாபுரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மதுரை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை 10.30 மணி அளவில் விமானத்தில் மதுரை வந்தடைந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இதை தொடர்ந்து பெருங்குடியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவனியாபுரம் பைபாஸ், வில்லாபுரம், தெற்கு வாசல் வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அங்கு வில்லாபுரம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் சாலைகளின் இருபுறமும் குழுமி இருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கீழவாசல், தவிட்டுச்சந்தை, பந்தடி, விளக்குத்தூண் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திரளான அ.தி.மு.க.வினர் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி வரவேற்றனர்.

    இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகளில் பயபக்தியுடன் எடப்பாடி பழனிசாமி சாமி கும்பிட்டார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கீழவாசல், நெல்பேட்டை, கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம், அவுட் போஸ்ட் வழியாக அழகர்கோவில் ரோட்டில் உள்ள கோர்ட்யார்டு நட்சத்திர ஒட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து ஓட்டல் வரை அனைத்து பகுதிகளிலும் ஏராளமான அ.தி.மு.க.வினர் சாலைகளின் இருபுறமும் நின்று அவரை வரவேற்றனர்.

    இன்று மதியம் 3 மணி அளவில் மதுரையில் இருந்து புறப்படும் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் சென்று அங்குள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சிவகங்கையில் எம்.ஜி.ஆர்., வேலுநாச்சியார் சிலைகளுக்கும் மாலை அணிவிக்கிறார்.

    பின்னர் மாலை 6 மணியளவில் சிவகங்கை-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • இரு கட்சிகளுக்குள்ளும் ஏற்பட்டுள்ள உரசல் போக்கு மேல்மட்டத்தலைவர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
    • கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை டெல்லி மேலிடத்தின் காதுகளில் போடுவதற்காகவே சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து வெளியேறி வரும் நிர்வாகிகள் சிலர் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள்.

    இது பா.ஜனதா தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவில் இருந்து நிர்வாகிகளை இழுத்து கட்சி நடத்த வேண்டிய நிலைக்கு திராவிட கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    பா.ஜனதாவினருக்கு சகிப்புத் தன்மை இல்லை. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று கூறினார். அதேநேரம் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி தொடருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    இருப்பினும் இரு கட்சிகளுக்குள்ளும் ஏற்பட்டுள்ள இந்த உரசல் போக்கு மேல்மட்டத்தலைவர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் இது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.

    மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு மாலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், காமராஜ், டாக்டர் விஜய பாஸ்கர் ஆகிய 3 பேரும் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் கவர்னர் டாக்டர் தமிழிசையை சந்தித்து பேசி இருக்கிறார்கள். சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

    கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை டெல்லி மேலிடத்தின் காதுகளில் போடுவதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

    ×