search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • தி.மு.க. தேர்தல் பணிமனை முன்பாக அ.தி.மு.க. சின்னத்தை வரைந்ததற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • போலீசார் அ.தி.மு.க.வினரிடம் இப்பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி வாங்கி வாருங்கள் என அறிவுறுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு, கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அதே சமயம் கருங்கல்பாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகே கமலா நகர் செல்லும் வீதியில் தி.மு.க. தேர்தல் பணிமனை உள்ளது.

    அந்த பணிமனையின் முன்பாக அ.தி.மு.க.வினர் அவர்களது சின்னத்தை கோலமாக வரைந்து வைத்து பிரசாரத்துக்காக காத்திருந்தனர். தி.மு.க. தேர்தல் பணிமனை முன்பாக அவர்கள் அ.தி.மு.க. சின்னத்தை வரைந்ததற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அ.தி.மு.க.வினரிடம் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து இந்த வழியாக நீங்கள் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். ஆனால் அ.தி.மு.க.வினர் அதை கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் அ.தி.மு.க.வினரிடம் இப்பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி வாங்கி வாருங்கள் என அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அங்கேயே நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அப்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
    • தலைவர் முற்றுகையிட்டு வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசும், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே முகாமிட்டு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் கண்டிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், செந்தில் பாலாஜி, எ.வ. வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஐ.பெரியசாமி, கீதாஜீவன், காந்தி, சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டை யன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்பட 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிற 24, 25-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். 24-ந்தேதி மாலை வேட்டுக்காட்டு வலசு 19-வது வார்டு, நாச்சாயி டீக்கடை, சம்பத் நகர், பெரிய வலசு, காந்தி நகர், அக்ரஹாரம், வைரபாளையம், ராஜாஜி புரம் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.

    25-ந்தேதி காலை டீச்சர்ஸ் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர், கள்ளுக்கடைமேடு, பழைய ரெயில்வே நிலையம் ரோடு, கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, சென்ட்ரல் தியேட்டர், பன்னீர்செல்வம் பார்க் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 19, 20-ந் தேதிகளில் ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ். தென்னரசுக்கு ஆதரவாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 15-ந்தேதி மற்றும் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று மாலை 3-வது நாளாக காவேரி ரோடு, வண்டியூரான் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், வி.வி.சி.ஆர். நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதைத்தொடர்ந்து 2-வது கட்ட பிரசாரமாக எடப்பாடி பழனிசாமி 24-ந்தேதி மாலை டீச்சர்ஸ் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர், பேபி மருத்துவமனை, வளையக்கார வீதி, காந்தி சிலை, மணிக்கூண்டு போன்ற பகுதிகளிலும், 25-ந்தேதி காலை வெட்டுக்காட்டு வலசு, சம்பத் நகர், பெரியவலசு, சத்யா நகர், ராஜாஜி புரம், முத்துசாமி வீதி, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதேபோல் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணைச்செயலளார் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13,14,15 ஆகிய நாட்களில் பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்ட பிரசாரமாக 21, 22, 23, 24, 25 ஆகிய நாட்களில் பிரசாரம் செய்கிறார்.

    தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. தலைவர் முற்றுகையிட்டு வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    • மாவட்ட கலெக்டரின் எந்தவித அனுமதியும் பெறாமல் தீர்மானம் கொண்டு வந்ததற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

    திருத்தணி:

    ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அப்போது ஒன்றிய குழு தலைவர் பயன்படுத்தி வந்த அரசு ஜீப் பழுதானதால், அவர் கடந்த இரண்டு மாதங்களாக பயன்படுத்திய வாடகை காருக்கு ரூ.71 ஆயிரம் பொது நிதியில் இருந்து வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாவட்ட கலெக்டரின் எந்தவித அனுமதியும் பெறாமல் தீர்மானம் கொண்டு வந்ததற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் தி.மு.க,-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. தி.மு.க. ஒன்றிய தலைவருக்கு எதிராக அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் சேர்ந்து திமுக கவுன்சிலர்களும் செயல்பட்டதால் ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார்.
    • தி.மு.க.வினர் 10 இடங்களிலும், அ.தி.மு.க.வினர் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 18-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று மாலை முதலே கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

    மேலும் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்தனர்.

    மேலும் தேர்தல் அலுவலகம் திறப்பு, பிரசாரம், வாகனங்கள், பொதுக்கூட்டத்துக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பதாக கூறினர்.

    இதே போல் அ.தி.மு.க.வினர் மீதும் தி.மு.க.வினர் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன்படி தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தி.மு.க.வினர் 10 இடங்களிலும், அ.தி.மு.க.வினர் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பது தெரியவந்தது.

    தி.மு.க. சார்பில் கே.எஸ்.நகர், கே.என்.கே. ரோடு, பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள வன்னியர் தெரு, வைராபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள பணிமனை, அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள பணிமனை, சிந்தன் நகர், வரதப்பா தெரு, பெரியார் நகர் அருகே சாந்தன் கரடு, கருங்கல்பாளையம், கள்ளுக்கடை மேடு ஆகிய இடங்களில் தி.மு.க தேர்தல் அலுவலகமும்,

    திருவள்ளுவர் நகர், கல்யாண சுந்தரம் வீதியில் உள்ள அலுவலகம், ஆலமரத்து தெரு, மணல் மேடு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகமும் அனுமதி இன்றி செயல்படுவது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த அலுவலகங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை தேர்தல் அதிகாரிகள் கள்ளுக்கடை மேட்டில் திறக்கப்பட்டு இருந்த தி.மு.க. தேர்தல் பணிமனையை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து ஒவ்வொரு இடமாக சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்த கட்சியினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவும் செய்து உள்ளனர்.

    • தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படாமல் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

    தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை.

    தொகுதி முழுவதும் தி.மு.க.வினர் கட்டுப்பாட்டில் தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் செயல்படுகின்றனர். அனைத்து கட்சிக்கும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் உரிமை உண்டு. அந்த ஜனநாயக உரிமை இந்த தொகுதியில் பறிக்கப்பட்டுள்ளது.

    ஆளும் கட்சி வேட்பாளர் மட்டும் சுதந்திரமாக வாக்கு கேட்க அனுமதிக்கப்படுகிறார். எதிர்க்கட்சியான எங்களை வாக்காளர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

    தி.மு.க. சார்பாக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார். வாக்காளர்களை ஒவ்வொரு பூத்துக்கு அழைத்து சென்று 3 வேலை உணவு கொடுத்து ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து இரவில் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.

    இதன் மூலம் எங்களுக்கு வாக்காளர்களை சந்திக்கும் வாக்கு கேட்கும் உரிமை மறுக்கப்படுகிறது. தி.மு.க.வினர், காவல் துறையினர் சேர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வாகனங்களை மறிக்கின்றனர். சோதனை என்ற பெயரில் காவல்துறை மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த கூட்டத்தை கூட்ட விடாமல் தடுக்க காவல்துறை அத்துமீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு முறையிட்டும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும்.

    எனவே மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாக இதில் தலையிட்டு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் தி.மு.க.வினர் அழைத்து சென்று அடைத்து வைத்துள்ள வாக்காளர்களை விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் வாக்கு சேகரிக்கும் உரிமையை செய்து தர வேண்டும். இல்லையெனில் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டப்பகலில் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.
    • மக்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் வீதியில் இன்று காலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் செய்தார். அப்போது மேளம் அடித்து வாக்கு சேகரித்தார். அவர் மேளம் அடிக்க திடீரென ஒரு பெண் நடனம் ஆடினார்.

    தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மனதால் வாக்காளர்களை கவர களப்பணி ஆற்றி வருகிறோம். ஆளும் கட்சி 33 அமைச்சர்களும் முகாமிட்டு பணத்தை வாரி இறைத்து வருகிறார்கள். மனமா, பணமா என்றால் மனமே இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் என்ற மன உறுதி கிழக்கு தொகுதி வாக்காளர்களிடம் இருக்கிறது.

    மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமைவதற்கு அச்சாரமாக இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி இருக்கும்.

    இரண்டு ஆண்டு கால தி.மு.க. மக்கள் விரோத அரசின் வேதனைகளை மூடி மறைக்க பணத்தை அவர்கள் வாரி இறைத்து கொண்டிருக்கிறார்கள். ஆடு, மாடுகளை போல் மக்களை பட்டியில் அடைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள். அதிகாரம் எல்லை மீறி செல்கிறது. அதிகாரிகள் வேண்டுமானால் அதிகாரத்திற்கு பயந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம்.

    ஆனால் மக்கள் இதனை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தேர்தலில் நியாயத்தின் பக்கம், ஜனநாயகத்தின் பக்கம் நின்று சாமானிய தொண்டனான தென்னரசுக்கு வாக்களிப்பார்கள். அமைச்சர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    தேர்தல் களத்தை விட்டு ஓடுவதற்கு அச்சாரமாக மின்சாரத்துறை அமைச்சர் ஓடுகிறார். நாளை தேர்தல் களத்தில் எல்லோரும் ஓடுகின்ற காட்சி விரைவில் வரும். பட்டப்பகலில் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அச்சத்தை போக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு பணநாயகம் அதிகமாக விளையாடுகிறது.
    • தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தினமும் பிரியாணியும் மதுவும் கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர் சுதீஷ் இன்று காலை பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தின் போது தனக்கோடி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ போட்டு குடித்தார். மேலும் பொதுமக்களுக்கும் டீ போட்டு கொடுத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் இளைஞர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எனவே அவருக்கு இந்த முறை வாக்களித்து வெற்றி பெற செய்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற சட்டசபையில் குரல் கொடுப்பார்.

    இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏற்கனவே இங்கு இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஆனால் பொதுமக்களின் கோரிக்கை எதையும் அவர் நிறைவேற்றவில்லை. அதேபோல தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும் முதியவர்.

    இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு பணநாயகம் அதிகமாக விளையாடுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் தினமும் பிரியாணியும் மதுவும் கொடுத்து ஓட்டு கேட்க அழைத்து செல்கிறார்கள். இதை பார்த்த பொதுமக்களிடையே அந்த கட்சிகள் மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.

    நாங்கள் ஓட்டு கேட்க செல்லும் போது எங்கள் கட்சி தொண்டர்களுடன் கட்சி தலைவர் விஜயகாந்தின் விசுவாசிகளான பொதுமக்களும் வருகிறார்கள். ஓட்டு பதிவின் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு தங்கக்காசு மற்றும் பணம் கொடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

    இதையெல்லாம் மீறி எங்களது கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்களும் எங்களுக்கு ஆதரவளித்து முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமகன் ஈவெரா தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
    • 18 மாதத்திற்குள் நகராட்சி துறை மூலம் ரூ.165 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை நிறைவேற்றி உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். குமரி ஆனந்தனுக்கு பிறகு மூத்த தலைவராக இளங்கோவன் உள்ளார். அவர் போட்டியிடுவது பெருமையாக உள்ளது.

    தேர்தல் அறிவித்த உடனே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கினார். இதுதான் கூட்டணி தர்மம். நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு இதுதான். ஆனால் எதிர்க்கட்சியில் நடந்தது என்ன.

    கடந்த முறை தமிழ் மாநில காங்கிரசுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை இந்த முறை ஜி.கே.வாசனிடம் இருந்து எடப்பாடி பறித்துக் கொண்டார். இளங்கோவனுக்கு எழுச்சி பெருகி உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    திருமகன் ஈவெரா இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். 18 மாதத்திற்குள் நகராட்சி துறை மூலம் ரூ.165 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை நிறைவேற்றி உள்ளார். இது கற்பனை செய்ய முடியாத வரலாற்று சாதனை.

    இதேபோல் ரூ.207 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. மேலும் 3-வது கட்டமாக ரூ.600 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வளவு திட்டங்களையும் குறுகிய காலத்தில் திருமகன் நிறைவேற்றியுள்ளார்.

    அவர் விட்டு சென்ற பணிகளை அவரது தந்தை நிறைவேற்றுவார். சாலை திட்ட பணிக்காக ஒரு நாள் இரவு முழுவதும் அமர்ந்து வேலைகளை முடித்துக் கொடுத்தவர் திருமகன்.

    முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி தேர்தலில் பணியாற்றி வருகிறார். உலகில் சிறந்த முதல்வர்களில் அவர் தலை சிறந்த முதல்வராக திகழ்ந்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.

    பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் ஒரு சிரமமான நிலையில் உள்ளது. முதலில் பிளவு பட்ட அ.தி.மு.க.வை சரி செய்ய முயன்றது. எடப்பாடி பா.ஜ.க.விடமிருந்து விலகி தேர்தலை சந்திப்போம் என்றார்.

    இதை ஏன் அவர் அறிவித்தார். பாரதிய ஜனதா படம், மோடி படமோ இருந்தால் தொகுதிக்குள் மக்கள் விட மாட்டார்கள் என கருதி அவ்வாறு அறிவித்தார். தேர்தல் முடிந்ததும் மீண்டும் இணைந்து விடுவார். இது ஒரு நாடகம் தான்.

    நாங்கள் இந்த தேர்தலில் மக்களோடு பணியாற்றி வருகிறோம். இது ஒரு ஜனநாயக நாடு. யாரையும் அடைத்து வைக்க முடியாது. அன்பால் அரவணைத்து வருகிறோம். எங்கள் கூட்டணி லட்சிய கூட்டணி. அவர்கள் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. கூட்டணி தர்மபடி எங்களுக்கு மீண்டும் போட்டியிட முதல்-அமைச்சர் வாய்ப்பளித்தார்.

    ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் கூட்டணி தர்மத்தை அவர்கள் கடைப்பிடித்தார்களா? இதிலிருந்தே யார் கூட்டணியை மதிக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

    சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் இந்த தேர்தலில் எந்த ஒரு விளைவும் ஏற்படாது. சில திட்டங்களை முதலில் தொடங்கும் போது கசப்பாக தான் இருக்கும். ஆனால் அதன் மூலம் வரும் வருவாய் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியும்.

    பேனா சின்னம் வைக்கும் விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள். உலகில் எல்லா இடத்திலும் இது போன்று நினைவுச் சின்னம் வைக்கப்பட்டு வருகிறது.

    பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்வதை வைகோ, திருமாவளவன் , சீமான் போன்றவர்கள் ஏற்கவில்லை. அவர் உயிரோடு இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான். புதுக்கோட்டை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2-வது கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.
    • எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இதே போல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் 2 கட்டமாக 5 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி நாளை (15-ந்தேதி) தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5 மணியளவில் வீரப்பன் சத்திரம் பகுதி, பெரியார் நகர் பகுதிகளில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து வீரப்பம்பாளையம், வெட்டுகாட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகில், கலெக்டர் அலுவலகம், சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, மணிக்கூண்டு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் வீரப்பன்சத்திரம் பகுதியில் தனது முதல் நாள் பிரசாரத்தை முடித்து கொள்கிறார்.

    தொடர்ந்து 16, 17-ந்தேதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர் 2-வது கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம்.
    • கிட்டத்தட்ட 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் கடந்த 3-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்தார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நேற்று அவர் மீண்டும் அதுபோன்ற புகார் மனுவை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம். அப்போது 238 வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு செய்தீர்களா? என கேட்டிருந்தனர். அதன்படி நாங்கள் பூத் வாரியாக சரிபார்த்தோம். அப்போது 30,056 பேர் உரிய முகவரியில் இல்லை. இறந்துபோன 7,947 பேர் இடம்பெற்று இருந்தனர். 1,009 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்று இருந்தனர்.

    இப்படி கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர்கள், அதாவது 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து விட்டோம். தற்போது இங்கும் தந்திருக்கிறோம். தற்போது அளித்துள்ள புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் தருவதைப் பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.

    தற்போது எதிர்க்கட்சிகள் அங்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலையை ஆளுங்கட்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போதுள்ள தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். பாதுகாப்பு, மத்திய காவல்படையினர் கையில் வரவேண்டும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.
    • இடையன்காட்டு வலசு, என்.எம்.எஸ். காம்பவுண்ட், பெரியார் நகர் போன்ற இடங்களில் பிரசாரம் செய்து ஜி.கே.வாசன் ஆதரவு திரட்டுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் வீரப்பன் சத்திரம், பெரியார் நகர் பகுதிக்கு உட்பட்ட வெட்டுக்காட்டு வலசு, நாராயண வலசு, டவர்லைன் காலனி, குமலன் குட்டை, கலெக்டர் அலுவலகம், சம்பத்நகர், பெரியவலசு நால்ரோடு, கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, என்.எம்.எஸ். காம்பவுண்ட், பெரியார் நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

    • பென்னாகரத்தில் அ.தி.மு.க. கூட்டம் டெபாசிட் இழந்ததுபோல ஈரோட்டிலும் டெபாசிட்டை இழக்கும்.
    • இரட்டை இலை இந்த தேர்தலில் நிற்பதால் அ.தி.மு.க.வின் பல பிரிவை காட்டிலும் அதிகம் மகிழ்வது தி.மு.க.தான்.

    சென்னை:

    தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆளும் கட்சியின் இரட்டை இலையை தனது சுயேட்சை சின்னமான குக்கரால் 40 ஆயிரம் வாக்குகளில் வெல்ல முடிந்த தினகரன் இன்று சின்னம் கிடைக்காததால் நிற்கவில்லை என்பது பாடத்தெரியாதவன் பசுந்தமிழையும் ஆடத்தெரியாதவன் மேடையையும் குறை சொன்னதனைப்போல உள்ளது.

    விடிய விடிய சிலம்பம் ஆடிவிட்டு விடிந்த பின் கிழவியை அடித்த கதையாய் நிற்காத தேர்தலுக்கு தினகரன், ஓ.பி.எஸ். இத்தனை கமிட்டிகளா? வெல்வது தளபதி தான் என்று தெரிந்தும் எதற்கு இந்த கானல்நீர் ஆர்ப்பாட்டம்.

    பென்னாகரத்தில் அ.தி.மு.க. கூட்டம் டெபாசிட் இழந்தது போல ஈரோட்டிலும் டெபாசிட்டை இழக்கும். திண்டுக்கல்லில் மருங்காபுரியில் அ.தி.மு.க. வென்றதுபோல் ஈரோட்டில் வெல்லும் என்று செங்கோட்டையன் கூறுகிறார்.

    1980-ல் இரட்டை இலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 38 இடங்களில் தோற்றதையும் 1996-ல் பர்கூரில் ஜெயலலிதாவே இரட்டை இலையில் சுகவனத்திடம் தோற்றதையும் பென்னாகரத்தில் 2010-ல் இரட்டை இலை டெபாசிட் இழந்ததையும், 2017-ல் சுயேட்சை சின்னத்திடம் ஆளும் கட்சியாக இருந்துகொண்டு இரட்டை இலை 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதையும் மறக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. கட்சியை விட்டு நீக்கியதாக சொல்லப்பட்ட ஓ.பி.எஸ்.சிடமும் அவரது ஆதரவாளர்களுக்கு கடிதம் விடுத்ததும் இரட்டை இலையை பெறுகின்ற சூழல் என்றால் அதை வேண்டாம் எனக்கூறி புதிய சின்னம் வாங்கி உங்கள் செல்வாக்கை நிரூபித்து இருக்கலாமே? தன்மானத்துடன் வெளியேறி இருக்கலாமே?

    இரட்டை இலை இந்த தேர்தலில் நிற்பதால் அ.தி.மு.க.வின் பல பிரிவை காட்டிலும் அதிகம் மகிழ்வது தி.மு.க.தான். ஏனெனில் தேர்தல் தோல்விக்கு பின் இரட்டை இலை இருந்திருந்தால் வென்று இருப்போம் என நழுவும் பேச்சுக்கு இடம் தராமல் இப்போதே தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து வெல்வது நல்லது.

    தளபதியின் இரண்டு ஆண்டு ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். சிலருக்கு நோட்டாவுடன் போட்டி, அ.தி.மு.க.வுக்கு டெபாசிட்டுடன் போட்டா போட்டி. மதுரையில் சிலம்போடு கோவலன் கதை முடித்தது, ஈரோட்டில் இடைத்தேர்தலோடு எடப்பாடி கூட்டம் கதை முடிந்தது என்பதை இந்த தேர்தல் காட்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×