search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கு வியூகம் வகுப்பது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
    • இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஓ.பன்னீர்செல்வம் விரிவாக வெளியிட உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், நாங்களே உண்மையான அ.தி.மு.க. என்று தெரிவித்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில் அந்த பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் நீடிக்கிறார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி இன்று ஆலோசனை நடைபெற்றது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என மொத்தம் 200 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று ரித்தர்டன் சாலையில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கையெழுத்து போட்டு விட்டு அரங்கத்துக்குள் சென்றனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் பெயரிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சட்டப் போராட்டம் நடத்தி வரும் அவர் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கு வியூகம் வகுப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

    இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஓ.பன்னீர்செல்வம் விரிவாக வெளியிட உள்ளார்.

    இதற்கிடையே பண்ருட்டி ராமச்சந்திரனை, நேற்று நள்ளிரவு ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியும் வருகிற 27-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்ட போராட்டங்கள் மற்றும் போட்டியை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி இடமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஜனவரி 4-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று நடத்தும் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் போட்டி கூட்டங்களை நடத்துவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் தங்க சாலை, பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் ஆகிய 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

    கடந்த 13-ந்தேதி சென்னை உள்பட 15 மாவட்டங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் தலைமை தாங்கினார்கள்.

    சென்னையில் மட்டும் சுமார் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி தலைமையில் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெரு, கிண்டி மடுவங்கரை, ஜாபர்கான்பேட்டை ஆகிய 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் தங்க சாலை, பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் ஆகிய 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    பகுதி செயலாளர்கள் முகுந்தன், பரமகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்.கே.நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகிலும், சர்மாநகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தொழிற்பேட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளருமான நா.பாலகங்கா தலைமையில் துறைமுகம் தொகுதியில் சக்கரை செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, எழும்பூர் தொகுதியில் சூளை அவதாமா பாப்பையர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட பி.வி.நாயக்கன் தெருவில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையிலும், ஆயிரம் விளக்கு தெற்கு கோடம்பாக்கம் தர்மாபுரத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமையிலும், ஆயிரம் விளக்கு வடக்கு பகுதியில் சூளைமேட்டில் சங்கரதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் தி.நகர் சத்தியா தலைமையில் கோடம்பாக்கம் பவர் அவுஸ், மற்றும் அண்ணா ஆர்ச் ஆகிய 2 இடங்களிலும் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் பெருங்குடி கந்தன்சாவடி, கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் சந்திப்பு, மடிப்பாக்கம் கூட்ரோடு ஆகிய 4 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆலந்தூரில் பகுதி செயலாளர் பரணி பிரசாத் தலைமையிலும், கண்டோன் மெண்ட் பகுதியில் பகுதி செயலாளர் வேல்ராஜா தலைமையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டார்.

    • கரூரில் அ.தி.மு.க. நிர்வாகியை காரில் கடத்தி தாக்குதல் நடத்தினர்.
    • இதைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு உட்பட்ட கோதூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவர் கரூர் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக உள்ளார்.

    இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் கோதூரில் உள்ள அவரது வீட்டின் அருகே சிவராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த சிலர் சிவராஜை கடத்திச் சென்றுள்ளனர். சுக்காலியூர் அருகிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அவரை கீழே இறக்கி சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    தகவலறிந்த அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த சிவராஜை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இத்தகவல் அ.தி.மு.க.வினரிடையே காட்டுத்தீபோல் பரவியது.

    இதையடுத்து, அ.தி.மு.க.வினர் கரூர் கோவை-ஈரோடு சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் சிவராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று இரவு கரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கிறிஸ்தவ மக்களின் புனித தலமான ஜெருசலேம் சென்றுவர தமிழக அரசின் மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
    • சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. என்றென்றும் திகழும். இதை யாராலும் மாற்ற முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில் நடந்தது.

    இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி ஆயர்களுக்கு ஊட்டினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி பேசியதாவது:-

    இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மக்களின் அன்றாட வாழ்வில் அமைதி, இரக்கம், பணிவு, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை நிலை நிறுத்துவதோடு அனைத்து சமூக மக்களிடையே சகோதரத்துவத்தை மேம்படுத்துகிறது.

    கிறிஸ்தவ மக்களின் புனித தலமான ஜெருசலேம் சென்றுவர தமிழக அரசின் மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டது. ரூ.28 ஆயிரமாக இருந்த நிதி உதவி ரூ.38 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

    மேலும் கிறிஸ்தவ தேவாலயத்தின் புனரமைப்பு நிதி ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கியது அ.தி.மு.க. அரசு, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாகவும், முழுமையாகவும் செயல்படும் விதத்தில் அரசின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

    சிறுபான்மை மக்களின் நலன் கருதி 'சிறுபான்மை ஆணையம்' அமைப்பு ரீதியாக விரிவுபடுத்தப்பட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டது.

    தலித் கிறிஸ்தவர்களுக்கு அரசால் வழங்கப்படும் முன்னுரிமைகள் முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் அ.தி.மு.க. கொள்கை ரீதியாக உறுதியுடன் நிலைப்பாட்டில் இருக்கிறது.

    கிறிஸ்தவ மக்கள் மீதான அ.தி.மு.க.வின் பாசப்பிணைப்பை எப்போதும் பிரிக்க முடியாது. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. என்றென்றும் திகழும். இதை யாராலும் மாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், த.மா.கா. பொதுச்செயலாளர் விடியல் சேகர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கடம்பூர் ராஜூ, டாக்டர் சி.விஜயபாஸ்கர், பா.வளர்மதி, கோகுல இந்திரா, எஸ்.அப்துல்ரகீம், மாதவரம் மூர்த்தி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை, அலெக்சாண்டர் மற்றும் ஜான் மகேந்திரன், மதுர வாயல் கிழக்குப்பகுதி செயலாளர் தேவதாஸ், எம்.ஆர்.முனியன், ஏ.மூர்த்தி, ஏ.பரத், பகுதி செயலாளர் நொளம்பூர் இம்மானுவேல், அம்மா பேரவை பகுதி செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தென்னிந்திய திருச்சபை முன்னாள் பிரதம பேராயர் தேவகடாட்சம், பிஷப் ராஜாசிங், பாதிரியார்கள் ஸ்டான்லி செபாஸ்டியன், ராபின் ரவிக்குமார், சார்லஸ் வெஸ்லி ஆகியோர் அருளாசி வழங்கினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் விரிவாக செய்து இருந்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது

    சென்னை:

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். அனைத்து சார்பு அணிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். நியமனம் முடிவடைந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    • புதிய நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நாளை கூட்ட உள்ளார்.
    • சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

    ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார்.

    கட்சியில் 75 மாவட்டங்கள் இருந்தன. அதில் சில மாவட்டங்களை பிரித்து அமைப்பு ரீதியாக 88 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களையும் அவர் நியமனம் செய்தார்.

    மேலும் அனைத்து சார்புஅணிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

    புதிய நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நாளை கூட்ட உள்ளார்.

    சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றிய அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பெரியகுளம் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளவர்களை வளைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    நேற்று போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை வளைக்கும் முயற்சியிலும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

    இதனைதொடர்ந்து இம்மாதத்தின் இறுதியில் பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    நாளை நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்து அவரது ஆதரவாளர்கள் சென்னையில் திரள்கிறார்கள்.

    வெளி மாவட்டங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய குளத்தில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்து ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வமும் இன்று சென்னை திரும்புகிறார்.

    இதன்பின்னர் நாளை நடைபெற உள்ள கூட்டம் தொடர்பாக இன்று மாலையில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையிலும் ஈடுபடுகிறார்.

    • கொங்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை வளைக்கும் முயற்சியில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரியகுளம்:

    அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதனைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார்.

    கட்சியில் 75 மாவட்டங்கள் இருந்தன. அதில் சில மாவட்டங்களை பிரித்து அமைப்பு ரீதியாக 88 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களையும் நியமனம் செய்தார். மேலும் அனைத்து சார்புஅணிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நியமனம் முடிவடைந்தநிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை கூட்ட உள்ளார்.

    கடந்த 2 நாட்களாக பெரியகுளம் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை வெளியிட உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளவர்களையும் வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்வரிசையில் கொங்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை வளைக்கும் முயற்சியில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபதில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதனைதொடர்ந்து இம்மாதத்தின் இறுதியில் பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வானகரம் வருவதையொட்டி வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா வானகரத்தில் உள்ள ஏசு அழைக்கிறார் வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சமத்துவத்தை விதைக்கும் வகையில் இவ்விழா நடத்தப்படுகிறது.

    இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வெட்டி பேராயர்களுக்கு ஊட்டுகிறார். பின்னர் கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியை வழங்குகிறார்.

    விழாவிற்கு தொடக்கமாக பிஷப் ராஜாசிங் துவக்க ஜெபம் ஏறெடுக்கிறார். லெப்டினண்ட் கர்னல் எம்.ஆபிரகாம் லிங்கன் வேதாகமம் வாசிக்கிறார். ஜாலி ஆபிரகாம் குழுவினர் மற்றும் சென்னை சர்ச்பார்க் பள்ளி மாணவிகள் பாடல்கள் பாடுகின்றனர்.

    பாதிரியார் ஸ்டேன்லி செபாஸ்டியன் ஆயர் எஸ்.ராபின் ரவிக்குமார் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்குகின்றனர். சி.எஸ்.ஐ. முன்னாள் பிரதம பேராயர் ஜி.தேவகடாட்சம் கிறிஸ்துமஸ் செய்தி வழங்குகிறார்.

    முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் வாழ்த்துரை வழங்குகிறார். நிகழ்ச்சியை சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தொகுத்து வழங்குகிறார்.

    முடிவில் சிறுபான்மை பிரிவு பொருளாளர் டி.ஜான் மகேந்திரன் நன்றி கூறுகிறார். ஆயர் ஜெ.சார்லஸ் வெஸ்லி நிறைவு ஜெபம் செய்ய விழா நிறைவடைகிறது.

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வானகரம் வருவதையொட்டி வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    • கூட்டத்தில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. பிரதிநிதிகள் இந்த புகார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தெரிவிக்கபட்டதாக அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர்.
    • மாவட்டம் முழுவதும் ஊரக வேலையளிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் அரசு நிதி வீணாக்கப்பட்டிருப்பது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கப்படுகிறது.

    இதற்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.271 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள், நிதி இழப்பு, பணிகள் நடைபெறாமல் ஊதியம் பெறுதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

    இதையடுத்து இந்த திட்டத்தில் 2020-21, 2021-22-ம் ஆண்டுக்கான தணிக்கையானது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் மாவட்ட வள அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை தணிக்கையாளர் மூலம் கடந்த 5-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிதள பொறுப்பாளர்கள் மூலம் முறைகேடு, நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    இதனை சம்பந்தப்பட்ட ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு‌ திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    நாமக்கல் ஒன்றியத்தில் 25 கிராமங்களில் நடந்த இந்த கூட்டத்தில் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஊராட்சியில் மட்டும் ரூ.7.43 லட்சம் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியப்பட்டு அதிகாரிகள் மூலம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    குறிப்பாக 100 நாள் வேலைக்கு பதிலாக 113 நாட்கள் வரையில் வேலை வழங்கியது, வேலைக்கு செல்லாமல் பலருக்கு ஊதியம் வழங்கியது, கழிவு நீர் கால்வாய் பணிகள் தொடக்க விழா நடைபெற்ற நிலையில் அதற்கான பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாதது போன்றவற்றை ஆவணங்கள் வாயிலாக மக்களுடைய காண்பித்தனர்.

    இந்த நிலையில் கூட்டத்தில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. பிரதிநிதிகள் இந்த புகார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தெரிவிக்கபட்டதாக அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். அதை வேளையில் தி.மு.க.வினர் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூச்சலிட்டனர். இதனால் இருதரப்புக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் நிலை உருவாகியது. அங்கிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு இரு தரப்பையும் கூட்டத்தை விட்டு வெளியேற்றினர்.

    தொடர்ந்து நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது . இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    வரும் நாட்களில் தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தில் அனைத்து அட்டை தாரர்களுக்கும் வேலை நாட்கள் பகிர்ந்து அளிக்கப்படும். நாமக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டம்பாடி ஊராட்சியில் ரூ.7.43 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் மேலும் உள்ள 24 ஊராட்சிகளிலும் சேர்ந்து மொத்தமாக ரூ.13 கோடி வரை நிதியிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    இந்த தொகையை அந்தந்த ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர் மூலம் வசூலித்து அதற்கான வங்கி கணக்குகளில் செலுத்தி வருகிறோம். மாவட்ட முழுவதும் ஊரக வேலையளிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் அரசு நிதி வீணாக்கப்பட்டுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன் தலைமை தாங்கினர்
    • ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    பொன்னேரி:

    பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் அதிமுக சார்பில் மீஞ்சூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் மற்றும் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன் தலைமை தலைமை தாங்கினர். அப்போது திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜா, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மாவட்ட மாணவரனி செயலாளர் ராகேஷ், கவுன்சிலர்கள், பானுபிரசாத், சுமித்ரா குமார், செல்வழகி எர்ணாவூரான், கோளூர் கோதண்டம், மீஞ்சூர் மாரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

    • பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் டி.கே.எம் சாலையில் திரண்டு, ஊர்வலமாக சென்று அங்கு கடைவீதியில் கூடியிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
    • மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மாமல்லபுரம் அ.தி.மு.க.வினர் சார்பில், தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என குற்றம் சாட்டி, அதை கண்டித்து நகர செயலாளர் கணேசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தனபால், முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் தினேஷ்குமார், வேலாயுதம், தணிகைவேல், ஜெயச்சந்திரன், செல்வம், விஜயரங்கன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    பின்னர் பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் டி.கே.எம் சாலையில் திரண்டு, ஊர்வலமாக சென்று அங்கு கடைவீதியில் கூடியிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

    • தமிழகத்தில் 20 சதவீத மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது.
    • அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால் தான் செய்ய முடிகிறது.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இல்லம் தேடி கல்வி திட்டங்கள் இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. பெரிய அளவில் பலன் தரவில்லை என்று என்.சி.இ.ஆர்.டி. நடத்திய ஆய்வின் மூலமாக தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அடிப்படை கல்வியை வலுப்படுத்தி மாற்று திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

    தமிழகத்தில் 20 சதவீத மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது. அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால் தான் செய்ய முடிகிறது. 52 சதவீத மாணவர்களால் நாள்காட்டியில் தேதி, மாதத்தை கூட சரியாக சொல்ல முடியாத ஒரு அவல நிலை உள்ளது.

    அதிலும் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் மிகவும் பின்தங்கி உள்ளது. அதே நேரம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 40-ல் இருந்து 45 சதவீதம் வரை மாணவர்கள் தாய் மொழியை நன்கு படிக்கவும், அடிப்படை கணக்குகளுக்கு பதில் அளிக்கவும் முடிகிறது. இதன் மூலம் தமிழகத்திலே கல்வி கற்றலில் பின்தங்கி இருப்பது வேதனையின் வேதனையாகும்.

    கொரோனா தாக்கம் இருப்பதாக நாம் வைத்துக் கொண்டாலும் கூட, இந்த 2 ஆண்டுகளாக இன்னும் பள்ளிக்கு முழுமையாக மாணவர்களை வரவழைத்து, அவர்களுக்கு கல்வி பயில்வதற்கு இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் எல்லாம், தோல்வியிலே முடிந்திருப்பதே ஆய்வின் மூலம் தெரிகிறது.

    ஆகவே பிரிட்ஜ் கோர்ஸ் என்ற இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் தமிழக அரசால் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. எனினும் தமிழக மாணவர்களின் அடிப்படை கற்றல் பின்தங்கி இருப்பது வேதனையின் உச்சமாக உள்ளது. தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×