search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • வைத்திலிங்கத்தை பொறுத்தவரை தஞ்சை மண்டலத்தில் குறிப்பாக ஒரத்தநாட்டில் தனி செல்வாக்கு வைத்திருப்பவர்.
    • ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் பலமான தலைவர்களாக அவர் வைத்திருந்தவர்களில் வைத்தி லிங்கமும் ஒருவராக இருந்தார்.

    ஓ.பி.எஸ் அணியின் பலம் வாய்ந்த தலைவர் வைத்திலிங்கம். சட்டப்போராட்டங்களை முன்னெடுத்த போது அ.தி.மு.க.வை கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையோடு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அணிவகுத்து நின்றார். ஆனால் இப்போது அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் வசம் ஆகிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த அஸ்திரங்கள் அனைத்தும் வீணாகி போனது. அடுத்து என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாத நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தவித்துக்கொண்டிருக்கிறார்.

    தன் கையை கொஞ்சமாவது பலம் ஆக்கி கொள்ள டி.டி.வி.தினகரனோடு கைகோர்த்து இருக்கிறார். இது எந்த அளவுக்கு எதிர்காலத்தில் பலன் கொடுக்கும் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. வைத்திலிங்கத்தை பொறுத்தவரை தஞ்சை மண்டலத்தில் குறிப்பாக ஒரத்தநாட்டில் தனி செல்வாக்கு வைத்திருப்பவர். ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் பலமான தலைவர்களாக அவர் வைத்திருந்தவர்களில் வைத்தி லிங்கமும் ஒருவராக இருந்தார். குறிப்பாக நால்வர் அணியில் இவரும் இடம் பிடித்து இருந்தார். இப்படி தனக்கென செல்வாக்கை வைத்திருந்தும் அரசியலின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில்தான் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்துடனும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் அவரால் செல்ல முடியாது. இந்த சூழ்நிலையை சமயோசிதமாக பயன்படுத்திக்கொள்ள தி.மு.க. திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே அந்த பகுதியில் தி.மு.க.வுக்கு பலமான தலைவர்கள் இல்லை. பழனிமாணிக்கம் இருந்தாலும் அவரது செயல்பாடு தீவிரமாக இல்லை என்ற கருத்து கட்சிக்குள்ளேயே நிலவுகிறது. இப்போது அந்த பகுதியை கவனித்து வரும் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திருச்சியை சேர்ந்தவர். அதேபோல் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் மன்னார்குடியை சேர்ந்தவர்.

    எனவே தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதியில் தி.மு.க.வுக்கு வலிமை சேர்க்க வைத்திலிங்கம் கிடைத்தால் நல்லது என்ற எண்ணம் தி.மு.க.வினரிடையே ஏற்பட்டுள்ளது. இதற்காக வைத்தி லிங்கத்துக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதியில் உள்ள உடன்பிறப்புகள் உறுதிபடுத்தினார்கள். நிச்சயம் பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள் வைத்தி லிங்கம் தி.மு.க.வில் ஐக்கியமாவார் என்று உறுதிபட கூறுகிறார்கள்.

    • அ.தி.மு.க.வை வழிநடத்த பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இன்று அதேபோல் உற்சாக மனநிலைக்கு வந்திருக்கிறார்.
    • கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்திருப்பதால் அவர் மீதான பா.ஜ.க. தலைவர்களின் அணுகு முறையிலும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். புதிய வானம் புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூ மழை பொழிகிறது என்று பாடிக் கொண்டே உற்சாகத்தில் ஆடுவார்.

    அவர் தொடங்கிய அ.தி.மு.க.வை வழிநடத்த பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இன்று அதேபோல் உற்சாக மனநிலைக்கு வந்திருக்கிறார். சட்டப் போராட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தொடர் வெற்றி பெற்ற அவர் தற்போது தேர்வாணையத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் அனுப்பிய கட்சி சட்டத் திருத்தங்கள், புதிய சேர்க்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தலைமை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதோடு அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அவற்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

    இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமை உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்திருப்பதால் அவர் மீதான பா.ஜ.க. தலைவர்களின் அணுகு முறையிலும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமியிடம் இனி மென்மையாகத் தான் செல்ல வேண்டும் என்ற நிலை பா.ஜ.க. தலைவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

    இந்த மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள அடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஓசையின்றி தயாராகி வருகிறார். விரைவில் அ.தி.மு.க.வின் நிர்வாக அமைப்புகளில் மாற்றம் வரப்படலாம் என்கிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதி தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பதவிகளை பிரித்து வழங்க எடப்பாடி பழனிசாமி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக அண்ணாமலை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட தொடங்கி இருக்கிறார்.
    • ஒரே விஷயத்துக்காக கவர்னரை தனித்தனியாக சந்திப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    அ.தி.மு.க.வுடன் மோதுவதே அண்ணாமலைக்கு வேலையாகி போய்விட்டது என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. சார்பில் எத்தகைய அறிவிப்பு வெளியிட்டாலும் அதற்கு பதிலடி கொடுப்பது போல அதற்கு முன்பே அதை செய்து முடித்துவிடுவது என்பதில் அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார். இதனால் பலதடவை அண்ணாமலைக்கும், அ.தி.மு.க. தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் அ.தி.மு.க. தலைவர்களிடம் அண்ணாமலை பேசிய பிறகு இந்த மாதிரி சர்ச்சை ஓய்ந்துவிடும் என்றே பலரும் எதிர் பார்த்தனர். ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக அண்ணாமலை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட தொடங்கி இருக்கிறார்.

    கவர்னரை சந்தித்து திங்கட்கிழமை மனு கொடுக்க போவதாக எடப்பாடி பழனிசாமி சொன்னதும் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமையே கவர்னரை சந்திக்க போவதாக அறிவித்துள்ளார். அண்ணாமலை ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று அ.தி.மு.க. தலைவர்கள் சற்று ஆதங்கமும், எரிச்சலும் அடைந்துள்ளனர். ஒரே விஷயத்துக்காக கவர்னரை தனித்தனியாக சந்திப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதில் அ.தி.மு.க.வை மட்டம் தட்டும் வகையில் நடந்துகொள்வதை தான் ஏற்க இயலவில்லை என்று அ.தி.மு.க.வினர் கொந்தளிக்கிறார்கள்.

    அப்படி கொந்தளிப்பு ஏற்படுவதை விட அ.தி.மு.க.வுடன் இணைந்து கவர்னரை சந்திக்க சென்றால் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இனியாவது அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட அண்ணாமலை முன்வரு வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது.
    • கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

    பவானி:

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி நகரில் இன்று மாலை காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஆப்பக்கூடல் கோவிந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் பவானி நகரில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டி இருந்தனர். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி நகர அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பரிந்துரைப்படி நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு பவானி போலீசில் ஓ.பி.எஸ். அணி மீது புகார் செய்தனர்.

    அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஆனால் நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்திற்கு அ.தி.மு.க.வை சாராத மாற்றுக்கட்சியினர் நகரின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடி, சின்னங்கள் போஸ்டர்கள் பயன்படுத்தி அ.தி.மு.க.வின் மாண்பை கெடுக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தனர்.

    பவானி நகரில் ஓ.பி.எஸ். அணியினர் இன்று நடத்தும் செயல் வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.
    • கவர்னர் மாளிகையிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க உள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொன்விழா மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

    அதன்பிறகு தி.மு.க. ஆட்சியின் 2 ஆண்டு கால அவல நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தி.மு.க.வின் அத்துமீறல்கள், முறைகேடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    குறிப்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ரூ.30 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு ஆடியோ பற்றி மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியை தி.மு.க. அரசு மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விஷ சாராய பலி குறித்து அவர் பேசியதாவது:-

    விஷ சாராயம் குடித்தவர்களில் 62 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுதான் காரணம். ஆளும் கட்சி துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது.

    இந்த விஷயத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நான் இதுபற்றி பேசியதற்கு கூட முதலமைச்சரிடம் இருந்து விளக்கமான பதில் வரவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லக் கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்களை முதலமைச்சர் மறைத்து விட்டார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வியாபாரிகள் பயந்தார்கள். தி.மு.க. ஆட்சியில் அந்த பயம் யாருக்குமே இல்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த வழக்கை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது.

    எனவே நாம் இந்த விஷயத்தை விடக்கூடாது. கவர்னரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். தி.மு.க.வின் ஊழல்களையும் பட்டியலிடுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ந்தேதி காலை 10.25 மணிக்கு சென்னை, சின்னமலை தாலுகா அலுவலக சாலை, ஏசு கிறிஸ்து சபை அருகில் இருந்து கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக புறப்பட்டு கவர்னர் மாளிகையை சென்றடைந்து முக்கிய நிர்வாகிகள் கவர்னரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வருகிற 22-ந்தேதி தி.மு.க. ஆட்சி மீது புகார் தெரிவித்து கவர்னரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் இருந்து ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளேன்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர் குலைந்துள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. அமளிக்காடாக மாறி உள்ளது. இதுபற்றி விரிவாக கவர்னரிடம் மனு கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தான் பா.ஜனதா தனித்து போட்டியிடும். இல்லாவிட்டால் பதவியையே ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.
    • கூட்டணியை அகில இந்திய அளவில் உறுதிப்படுத்தினாலும் மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லை.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) கோவை அருகே உள்ள ஈச்சனாரியில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.

    தேசிய பொதுச்செயலாளர்கள் வினோத் தவுடு, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள். மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ஏற்கனவே கடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தான் பா.ஜனதா தனித்து போட்டியிடும். இல்லாவிட்டால் பதவியையே ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.

    இதனால் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் உரசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை அமித் ஷா சமாதானப்படுத்தினார். அ.தி.மு.க. கூட்டணியையும் உறுதிப்படுத்தினார்.

    அகில இந்திய அளவில் உறுதிப்படுத்தினாலும் மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லை.

    அதற்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படியானால் தான் இரு கட்சி தொண்டர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் தான் நாளை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தனித்து போட்டியில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை அண்ணாமலை வெளியிடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த செயற்குழு கூட்டத்தை பரபரப்பாக எதிர்பார்க்கிறார்கள்.

    • விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
    • அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.

    இந்நிலையில், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

    நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை யில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதிஉதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த 314 தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 கோடியே 14 லட்சம் குடும்ப நல நிதி வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. விழாவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார்.

    நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.கமலக்கண்ணன் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், கோகுல இந்திரா, வைகை செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்ட நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வின் பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது.

    அ.தி.மு.க.வின் சட்ட விதிகள் திருத்தம் நிர்வாகிகள் மாற்றம் ஆகியவற்றையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதுடன் தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது.

    இது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை 1½ கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்த எடுக்கப்பட்டு வரும் பணிகளை வேகப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

    உறுப்பினர் சேர்க்கை கடந்த காலங்களில் நடந்தது போல் இல்லாமல் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு வார்டு வாரியாக முகாம் போட்டு பணியை வேகப்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

    முக்கியமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது.

    பூத் கமிட்டியை வலுப்படுத்துவது மட்டுமின்றி ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளுடன் இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது பற்றியும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்குகிறார்.

    மதுரையில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அ.தி.மு.க. தொண்டர்களின் பலத்தை காட்டும் வகையில் மிக பிரமாண்டமாக மாநாடாக நடத்துவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் விஷச்சாராயத்துக்கு 22 பேர் பலியாகி விட்ட நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்து அ.தி.மு.க. மாவட்டம் தோறும் போராட்டம் நடத்துவது குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்தக் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஒன்றிணைந்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி. தினகரன் ஒன்றிணைந்துள்ள நிலையில் நாளை மாலை நடைபெற உள்ள கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்பவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

    அவரது உறவினர்களிடம் உணவு, உடை, பழங்களை வழங்கினார். அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களுக்கு சிறுநீரக கோளாறு, கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டார்கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது. ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல் பின்புலம் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி போலி மதுபானத்தை விற்பனை செய்ததின் மூலமாக அப்பாவி மக்கள் அதை குடித்ததில் மரக்காணம் பகுதியில் பலர் உயிர் இழந்து விட்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராயம் விற்றவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தோம்.

    ஆனால் இந்த 2 ஆண்டு ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விட்டனர். போலி மதுபான விற்பனையாளர்கள் அதிகரித்து விட்டனர். இன்று 1,500 பேர் வரை கைதாகி இருக்கிறார்கள். அப்படி என்றால் கள்ளச்சாராய வியாபாரிகளை அரசுக்கு முன் கூட்டியே தெரிந்து உள்ளது.

    இதற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

    கள்ளச்சாராய பலிக்கு சமூக போராளிகளும், நடிகரும் குரல் கொடுக்கவில்லை. டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 சதவீதம் கமிஷன் பெறுகிறார்கள். கேட்டால் மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது அனைத்து யூடியூப்களிலும் வெளிவந்துள்ளது.

    இந்த வகையில் கிடைத்த ரூ.30 ஆயிரம் கோடியை என்ன செய்வதென்றே தெரியவில்லை என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

    கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை குறித்து போலீசுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் இந்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர் கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனையில் சம்பந்தப்பட்டுள்ளார்.

    இதனை கட்டுப்படுத்த தவறியதால்தான் தற்போது 18 உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் கிராமத்தில் 13 பேர் இறந்திருக்கிறார்கள்.

    செந்தில் பாலாஜி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளது. அந்த வழக்கு தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் காலதாமதம் ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் சிறப்பு வழக்கறிஞரை நியமித்து இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பு வந்துள்ளதை உங்களிடம் கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×