search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • சபாநாயகர் அப்பாவு தி.மு.க. தலைவர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக எட்ப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
    • நாளை நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக இன்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.

    இதனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டசபையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு தி.மு.க. தலைவர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே, சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் குறித்து அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்து நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. இதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நாளை நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்சினை நீடித்தது.
    • சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பிரச்சினை இன்னும் ஓயவில்லை. சட்டசபையிலும் இன்று இது எதிரொலித்தது.

    தமிழக சட்டசபை இன்று கூடியது. அதற்கு முன்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் சபாநாயகர் முடிவு எதுவும் சொல்லவில்லை. இதனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்சினை நீடித்தது. இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
    • எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

    சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தும் அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சட்டசபையில் இருந்து அவர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அறிவிக்காததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனிப்பட்ட முறையில் அசவுகரியங்கள் இருந்தால் மட்டுமே இருக்கைகளை மாற்றித் தருமாறு கோரிக்கை வைக்க முடியும்.
    • மற்றபடி இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது சபாநாயகர் உரிமைக்கு உட்பட்டது என்றார்.

    சென்னை:

    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எழுப்பிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

    இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் விரிவான விளக்கத்தை அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் தரப்பிலும், துணைதலைவர் தரப்பிலும் என்னிடம் வேண்டுகோள் வைத்து என்னிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்தபோது அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டதின் படி, எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வம் இருந்து வருகிறார்.

    இடையில் இடைக்கால பொதுச்செலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் கையெழுத்திட்ட மனுவை என்னிடம் அளித்துள்ளனர். அதில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதில் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாகவும், எனவே துணை தலைவர் இருக்கையை அவருக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்தனர். 9.25க்கு வந்து பார்த்துவிட்டு 9.37-க்குள் இருக்கையை மாற்ற வேண்டும் என கூறுகிறார்கள். எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி என்பது சட்டசபை விதிகளின்கீழ் கிடையாது. எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே சட்டசபை விதிகளின்கீழ் வரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    எனவே தனிப்பட்ட முறையில் அசவுகரியங்கள் இருந்தால் மட்டுமே இருக்கைகளை மாற்றித் தருமாறு கோரிக்கை வைக்க முடியும். மற்றபடி இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது எனது உரிமைக்கு உட்பட்டது.

    அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணை தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வமும் என்னிடம் மனு அளித்துள்ளார். அதில் தேர்தல் ஆணைய பதிவேடுகளில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாகவும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் தற்போது வரை குறிப்பிட்டுள்ளார்.

    உச்ச நீதிமன்றத்திலும் பொதுச்செயலாளர் தேர்தலை வழக்கு முடியும் வரை நடத்த மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இருக்கை விவகாரத்தை பொறுத்தவரையில் பழைய சம்பவம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். கலைஞர் கருணாநிதி சட்டசபைக்கு வந்து செல்ல வசதியாக இருக்கை ஒதுக்க வேண்டும் என்று சக்கரபாணி மனு அளித்தார். அப்போது அந்த மனு ஏற்று கொள்ளப்படவில்லை. ஆனால், சட்டசபைக்கு கலைஞர் வந்து சென்றார் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

    அதற்காக இதை நான் செய்கிறேன் என்று கருதக்கூடாது. சட்டசபையை பொறுத்தவரையில் பேரவையின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக உள்ளார். அதன்படி 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சபை கண்ணியத்தோடு நடைபெற்று வருகிறது. மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச அனைவருக்கும் சமமான அனுமதி வழங்கி வருகிறது.

    எனவே இருக்கைகள் விவகாரத்தை பொறுத்தவரை யாரை எங்கே அமர வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இன்று அந்த பிரச்சினையை கையில் எடுத்து கொண்டு அ.தி.மு.க.வினர் நடந்து கொண்ட விதத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.

    ஜானகி அம்மையார் பதவியேற்றபோது நடந்து கொண்டது போன்றும் கலைஞர் கருணாநிதி கையில் இருந்து பட்ஜெட் உரையை கிழித்து எரிந்ததை போன்றும் கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அ.தி.மு.க.வினர் வந்துள்ளனர்.

    கேள்வி நேரத்தை நடத்த விடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் சபையில் நடந்து கொண்டதை காண முடிந்தது.

    இன்று சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படும் நிலையில் நாம் சபையில் இருந்தால் ஏதேனும் சங்கடம் ஏற்படும் என்று நினைத்து இருக்கலாமோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியவையும் சபையில் வைக்கப்படுகிறது. இதைக் கண்டும் அவர்கள் அஞ்சி விட்டார்களா என்றும் தெரியவில்லை.

    சட்டசபையில் இருந்து தங்களது கருத்துக்களை சொல்லி இருக்க வேண்டிய அ.தி.மு.க.வினர் வேண்டும் என்றே அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபை தொடங்கும் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி வேகமாக வந்து ஓ.பன்னீர்செல்வத்தின் அருகே தனது இருக்கையில் அமர்ந்தார்.
    • இருவரும் பரஸ்பர வணக்கம் கூட தெரிவிக்கவில்லை. அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9.30 மணியளவில் இருந்து வரத்தொடங்கினார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டசபைக்கு வராததால் இன்று அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அதேபோல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9.25 மணிக்கு சட்டசபை வளாகத்துக்கு வந்தனர்.

    எடப்பாடி பழனிசாமி அவரது அறையில் அமர்ந்து இருக்க மற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை அவரது அறையில் சென்று பார்த்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சட்டசபையில் பதில் சொல்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் சொன்ன விஷயத்தை எடப்பாடி பழனிசாமியிடம் சென்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். அதன் பிறகு அவர் உள்பட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் வந்தார்கள்.

    அதற்கு முன்னதாகவே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய 4 பேரும் சபையில் அமர்ந்திருந்தனர்.

    சபை தொடங்கும் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி வேகமாக வந்து ஓ.பன்னீர்செல்வத்தின் அருகே தனது இருக்கையில் அமர்ந்தார். இருவரும் பரஸ்பர வணக்கம் கூட தெரிவிக்கவில்லை. அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

    அவர்களுக்கு எதிரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்தனர்.

    சரியாக 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வந்ததும் சபை நடவடிக்கைகள் தொடங்கின. முதல் நிகழ்ச்சியாக கேள்விநேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இந்த சமயத்தில் எல்லோரும் அமர்ந்திருக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து இருக்கை விவகாரம் தொடர்பாக நாங்கள் கொடுத்த கடிதத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்டார்.

    உடனே சபாநாயகர், நான் இப்போது கேள்வி நேரத்துக்கு அனுமதித்துள்ளேன். எனவே உட்காருங்கள். கேள்வி நேரம் முடிந்ததும் உங்களுக்கு பேச வாய்ப்பு தருகிறேன் என்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் சொன்ன கருத்தை சபாநாயகரிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் எழுந்து நின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுங்கள் என்று உரத்த குரலில் தெரிவித்தனர்.

    ஆனால் மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து பழனிசாமி தான் சொன்ன கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தி பேசினார்.

    அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு. 'சட்டசபையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது. சபாநாயகர் கேள்வி நேரத்தை அனுமதித்த பிறகு நீங்கள் இப்படி பேசுவது முறையல்ல' என்றார்.

    ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எழுந்து நின்று சபாநாயகருக்கு எதிராக முழக்கம் எழுப்ப தொடங்கினார்கள். இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட தொடங்கியது. அமளிக்கு இடையே சபாநாயகர் அனைவரிடமும் உட்காரும் படி கூறினார்.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் கேள்வி நேரத்தின் போது சமரசம் செய்துகொள்ள மாட்டேன். கேள்வி நேரத்துக்கு பிறகு உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள் பதில் சொல்கிறேன்' என்றார்.

    ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நின்றுகொண்டே பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர். 'நீங்கள் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது. நீங்கள் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாதது அல்ல.

    சட்டசபை விதி என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்வேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் கேட்பதாக தெரியவில்லை. நீங்கள் கலங்கம் விளைவிக்க இங்கு வந்தீர்களா? உங்கள் நடவடிக்கை அப்படித்தான் தெரிகிறது.

    ஏற்கனவே 1988-ம் ஆண்டு ஜானகி அம்மாள் பதவி பிரமாணத்தின் போதும் இதேபோல் தான் செய்தீர்கள். எனவே சபை அமைதியாக நடைபெற ஒத்துழையுங்கள். கேள்வி நேரம் முடிந்ததும் நீங்கள் பேசுவதற்கு நேரம் தருகிறேன். அமைதியாக இருங்கள்' என்றார்.

    ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அவரது இருக்கையில் அமராமல் நின்று கொண்டே பேசினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

    சபாநாயகர்:-இப்படி கூச்சல் போட்டு அவை மாண்பை கெடுக்காதீர்கள். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மக்கள் பிரச்சினையை பற்றி பேசத்தான் இந்த அவை.

    ஆனால் மக்கள் பிரச்சினை பற்றி பேச நீங்கள் தடையாக இருக்கிறீர்கள். பேரவை விதி 22-ல் என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால் முதல் ஒரு மணிநேரம் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று உள்ளது. நீங்கள் கொண்டு வந்த விதியை நீங்களே மீறலாமா? மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' என்றார்.

    ஆனால் அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். செங்கோட்டையன் உள்பட இன்னும் சில எம்.எல்.ஏ.க்களும் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.

    அமைச்சர் துரைமுருகன்:- சபாநாயகர் எவ்வளவோ சொல்லியும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேட்கவில்லை. சட்ட சபையில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான அறிக்கை, இந்தி எதிர்ப்பு தீர்மானம் ஆகியவை தாக்கல் செய்யப்படுகிறது. எனவே இதை தவிர்ப்பதற்காக நீங்கள் சபையில் அமளி ஏற்படுத்துவதாக தெரிகிறது. இதை சபாநாயகர் அனுமதிக்க கூடாது' என்றார்.

    ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டபடி இருந்தனர். இதனால் சபாநாயகர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேறும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    உடனே அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் அனைவரையும் சபை காவலர்கள் கூண்டோடு வெளியேற்றினார்கள். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது சட்டசபை வாயிலிலும் நின்றபடி சில எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றினார்கள். அவர்கள் வெளியே வரும் போதும் சபாநயகருக்கு எதிராக கோஷமிட்டபடி வெளியேறினாகள்.

    இவ்வளவு அமளி நடந்த போதும் தொடர்ச்சியாக துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரும் சபையில் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளியேற்றப்பட்டதால் அவை நடவடிக்கைகளில் இன்று 1 நாட்கள் கலந்து கொள்ள இயலாது.

    • சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    சென்னை:

    சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தும் அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சட்டசபையில் இருந்து அவர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதால் இன்றும், நாளையும் அவர்கள் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு 2 நாள் தடை என்பது அதிகபட்சம் என்று கருதுகிறேன்.

    சபாநாயகர் முடிவில் நான் தலையிட முடியாது என்றாலும் அவர்களுக்கான 2 நாள் தடையை இன்று ஒருநாள் மட்டும் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை சபாநாயகர் அப்பாவு ஏற்றார்.

    இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு இன்று ஒருநாள் தடைவிதிப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனை துரைமுருகன் வாசித்தார்.

    • தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார்.
    • மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அவரது இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்சியை வலுப்படுத்தி, ஆட்சியை பிடிக்க முடியும். அ.தி.மு.க மத்திய அரசையும், மாநில அரசையும் கொள்கை ரீதியாக ஒரு சேர எதிர்த்து அரசியலில் பயணித்தால் தான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். இதைத்தான் 2014-லிருந்து 2016 வரை ஜெயலலிதா செய்தார்.

    மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது. அதனை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்ல அ.தி.மு.க தவறி விட்டது. அ.தி.மு.க.வில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற தலைமை வேண்டும். அப்படி ஒரு தலைமை தற்போது இல்லை.

    எடப்பாடி பழனிசாமி ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார். அதிலிருந்து அவர் வெளியே வர வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க.வுக்கு ஒரு பொதுவான தலைவராக அவர் இருக்க முடியும். ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்க்கு கருத்து முரண்பாடு இருக்கிறது என்று நான் சொன்னதால் தான் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள்.

    அ.தி.மு.கவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தற்போது உள்ள பொறுப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழல் வந்தால் கண்டிப்பாக ஓ.பி.எஸ்ஸை இணைத்துக் கொள்வார்.

    தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார். நீங்கள் ஒன்று சேருங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம் எனக் கூறுகிறார். இவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லுகின்ற ஆற்றல் சசிகலாவுக்கு மட்டும்தான் உண்டு.

    ஏனென்றால் ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகளாக உடனிருந்து பக்குவம் பெற்றவர். அவரால் தான் பொதுவான தலைவராக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபை தொடங்குவதற்கு முன்பு சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பை சேர்ந்த 62 அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
    • பன்னீர் செல்வத்திற்குப் பதில் உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரிக்கை.

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    சட்டசபை தொடங்குவதற்கு முன்பு சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பை சேர்ந்த 62 அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர் செல்வத்திற்குப் பதில் உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது தொடர்பாக பரிசீலிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடி ஏற்றினார்.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். வெள்ளை சமாதான புறா பறக்க விட்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம் ஜி.ஆர். நினைவு இல்லத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமு.க கொடியேற்றி வைத்து தலைவர்கள் படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

    அ.தி.மு.க 51-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் மலர்கள், வாழை, தென்னை தோரணங்கள், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வீதியெங்கும் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. காலை 8 மணி முதல் தொண்டர்கள் வரத்தொடங்கினார்கள்.

    அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 9 மணிக்கு வந்தார். அவருக்கு மேள தாளம் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மகளிர் அணி சார்பில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடி ஏற்றினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆரவார கோஷமிட்டு கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். வெள்ளை சமாதான புறா பறக்க விட்டார். அதன் பின்பு தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எம்.எம்.பாபு, வெங்கட்ராமன், அம்மன் பி.வைரமுத்து, பி.எஸ்.சிவா, டி.கிருஷ்ணமூர்த்தி, த.மகிழன்பன், ரெட்சன் சி.அம்பிகாபதி, ஏ.கே.ரமேஷ், கே.கிருஷ்ணன், எம்.வி.சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 51-வது ஆண்டு தொடங்குகிறது.
    • கட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆளுயர மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 51-வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி தொடக்க விழா நிகழ்ச்சிகள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    காலை 10.30 மணி அளவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகம் வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் அவரை வரவேற்று நிரந்தர பொதுச்செயலாளர் வாழ்க, புரட்சி தலைவி ஜெயலலிதா வாழ்க, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.

    அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆளுயர மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். அதைத்தொடர்ந்து கட்சி கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கினார்.

    பின்னர் தலைமை கழகத்துக்குள் சென்று தனது அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பி.ஜே.குமார், கே.பி.முனுசாமி, தம்பிதுரை, பா.வளர்மதி., செங்கோட்டையன், எம்.ஆர். விஜயபாஸ்கர். எஸ்.பி. வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வைகை செல்வன், கோகுல இந்திரா, டாக்டர் எஸ்.விஜயபாஸ்கர், கே.பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, கே.பி.கந்தன், விருகை ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, ராஜேஷ், அசோக், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், மாநில துணைச் செயலாளர், இ.சி.சேகர், மலர்மன்னன், எ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சைதை சுகுமார், ஷேக் அலி, வெற்றிவேல், வேளச்சேரி மூர்த்தி, எம்.ஜி.ஆர்.நகர் குட்டி, வக்கீல் சதாசிவம், கதிர் முருகன் மற்றும் சின்னையன், வளசை டில்லி.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். நல்லாசியோடு ஜெயலலிதா நல்லாசியோடு அ.தி.மு.க. 50-வது பொன்விழா ஆண்டை நிறைவு செய்து இன்று 51-வது ஆண்டு நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக எழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைமை கழகத்திலும் மிகச் சிறப்பாக எழுச்சியாக அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்புடன் மிகச் சிறப்பாக தொடக்க விழா ஆண்டை கொண்டாடினோம். நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. இரு பெரும் தலைவர்கள் எளிய தொண்டனும் தலைவராக வேண்டும் என்ற விதியை வைத்திருந்தனர்.
    • அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.

    சென்னை:

    சட்ட சபை கூட்டத்தில் இன்று பங்கேற்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்ட சபை கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. சட்ட விதிகளை திருத்தியதை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. ஜனநாயக கடமையாற்ற நான் சட்டமன்றத்திற்கு வந்தேன் சட்டமன்ற இருக்கைகள் மாற்றப் படாமல் உள்ளது குறித்து கடிதம் எழுதியவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அலுவல் ஆய்வுக்குழுவில் சபாநாயகர் எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்.

    சட்ட சபையில் எதிர்க் கட்சி துணைத் தலைவராக என்னை அங்கீகாரம் செய்துள்ளதை பாசிட்டிவ் ஆக பார்க்கிறேன். அ.தி.மு.க. இரு பெரும் தலைவர்கள் எளிய தொண்டனும் தலைவராக வேண்டும் என்ற விதியை வைத்திருந்தனர்.

    இந்த விதியை யாரும் மாற்ற முடியாது. ஆனால் தற்போது விதிகள் மாற்றப் பட்டுள்ளன. தலைமை பதவிக்கு வர 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும். 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இது 1.5 கோடி தொண்டர்கள் மனதிலும் நீங்காத வடுவாக உள்ளது. இந்த மாற்றங்களை செய்தவர்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

    பேரவை தலைவர் அறிவிப்பின் அடிப்படையில் இன்றைய பேரவை கூட்டத்தில், பங்கேற்று உள்ளேன். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு16 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை ஜெயலலிதா நடத்தினார். இரு தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கு செய்த தியாகம், அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்தது இந்த இயக்கம்.

    எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதா காப்பாற்றிய அ.தி.மு.க. சட்ட விதியை மாசு படாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம். அதற்கு அச்சுறுத்தல் வந்தாலும் கட்டி காப்பாற்றும் நிலையில் தான் நாங்கள் உள்ளோம். அ.தி.மு.க. சட்ட விதி அபாயகரமான சூழலாகும். இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறுபட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி குறித்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதே? எந்த அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நீடிக்கிறார்?
    • சட்டமன்றம் நடக்கும்போது இதற்குரிய பதிலை நான் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    சென்னை:

    சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவரின் இருக்கை விவகாரம் தொடர்பாக ஒரு கடிதம் கொடுத்து இருந்தாரே?

    பதில்:- ஒரு கடிதம் அல்ல, 4 கடிதம் தந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 2 கடிதம் கொடுத்துள்ளனர்.

    கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் இன்றைய அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்த அடிப்படையில் பங்கேற்றுள்ளார்?

    பதில்:- அவர் அலுவல் ஆய்வு குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அந்த அடிப்படையில் பங்கேற்றுள்ளார்.

    கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இன்றைய கூட்டத்துக்கு வரவில்லையே?

    பதில்:- மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு விழாவை இன்று அவர்கள் சிறப்பாக கொண்டாடிக்கொண்டு இருப்பதாக யாரோ தகவல் சொன்னார்கள். அதன் அடிப்படையில் இங்கு வராமல் இருக்கலாம் என நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.

    கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளைக்கு வருவார்களா?

    பதில்:- ஏன் வரக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள்?

    கேள்வி:- எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி குறித்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதே? எந்த அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நீடிக்கிறார்?

    பதில்:- இந்த விவகாரம் தொடர்பாகத்தான் 6 கடிதங்கள் வந்துள்ளதாக தெரிவித்தேன். இந்த கடிதங்களுக்கு எல்லாம் சட்டமன்றம் நடப்பதால் சட்டமன்றத்தில் தான் அதற்குரிய பதிலை சபாநாயகர் கூற முடியுமே தவிர பொது வெளியில் பேட்டியில் சொல்ல எனக்கு விருப்பமில்லை. அது பொருத்தமாக இருக்காது. இதுதொடர்பாக நாளை சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டால் அங்கு நான் பதில் சொல்வேன்.

    எனவே இப்போது சட்டமன்றம் நடக்கும்போது இதற்குரிய பதிலை நான் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் (நிருபர்கள்) நாளை வருவீர்களா? அல்லது அவசர வேலையாக வெளிநாடு போகிறீர்களா? அப்படி ஒன்றும் இல்லையே?

    நாளை சட்டசபைக்கு வாருங்கள். அங்கு எம்.எல். ஏ.க்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்வேன். எனவே யாரும் கேள்வி எழுப்பாமல் நானாக எப்படி பதில் சொல்ல முடியும்?

    கேள்வி:- நாளைக்கு அ.தி.மு.க.வினர் வந்து கேள்வி கேட்பார்களா?

    பதில்:- அவர்கள் உரிமையை கேட்பார்கள். மக்கள் பிரச்சினையை பேசத்தான் சட்டமன்றம். இதற்கிடையே சில எம்.எல். ஏ.க்களுக்கு தனிப்பட்ட முறையில் சில பிரச்சினைகள் இருக்கும் என்று சொன்னால் சட்டமன்றத்தில் எனது கவனத்துக்கு வந்தால் பதில் சொல்வேன்.

    இந்த மாதிரி தபால் தந்துள்ளோம். அதற்கு என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்குரிய பதில் சட்டமன்றத்தில் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×