search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அ.தி.மு.க. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக்கொண்டனர்.
    • சட்டசபை கூட்டம் தொடங்கியபோது எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர்செல்வம் அமரும் இருக்கை மாற்றப்படாமல் இருந்தது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9.40 மணியில் இருந்து சட்டசபைக்கு வரத் தொடங்கினார்கள்.

    9.57 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வந்தார். அவர் வரும்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் 9.58 மணிக்கு உள்ளே வந்தார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், உசிலம்பட்டி அய்யப்பன் ஆகிய எம்.எல்.ஏ.க்களும் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.

    இதேபோல் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ம.க., காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் அமர்ந்திருந்தனர்.

    ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வரவில்லை. அ.தி.மு.க. கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் சபைக்கு வரவில்லை.

    காலை சரியாக 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வந்தார். திருக்குறளை வாசித்து சபை நிகழ்ச்சிகளை தொடங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசித்தார்.

    இதைத்தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் 7 பேர் மறைவு குறித்தும் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் உறுப்பினர்கள் 2 மணித்துளிகள் எழுந்து நின்று மவுனம் கடைபிடித்தனர்.

    இதைத்தொடர்ந்து 10.11 மணிக்கு சட்டசபை கூட்டம் முடிந்தது. இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சபை தொடங்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சட்டசபையில் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்தது.

    சட்டசபையின் இன்றைய நிகழ்ச்சிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். சட்டசபைக்கு அவர்கள் யாரும் வரவில்லை.

    அ.தி.மு.க. ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக்கொண்டனர். இந்த சூழலில் இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் உள்ளது.

    இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமித்து உள்ளதாகவும் சபாநாயகருக்கு பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றிவிட்டு அந்த இடத்தில் ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும், சபாநாயகரிடம் ஒரு கடிதம் கொடுத்திருந்தார். அதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாகவும், கட்சி சார்ந்து எதுவும் முடிவு எடுப்பதாக இருந்தால் தன்னை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த 2 கடிதங்கள் மீது விருப்பு வெறுப்பின்றி நியாயமாக முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று சபாநாயகர் ஏற்கனவே கூறி இருந்தார்.

    இதற்கிடையே சட்டசபை தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு கூட இரு தரப்பினரும் நினைவூட்டல் கடிதங்களை சபாநாயகரிடம் மீண்டும் கொடுத்தனர்.

    அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த கடிதங்கள் மீது சபாநாயகர் அப்பாவு என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியபோது எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர்செல்வம் அமரும் இருக்கை மாற்றப்படாமல் இருந்தது.

    அதாவது முன்பு இருந்ததை போல் எடப்பாடி பழனிசாமியின் இருக்கையின் பக்கத்திலேயே ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை இருந்தது. அந்த இருக்கை 2 பேர் அமரும் வகையில் உள்ள இருக்கை ஆகும்.

    இந்த இருக்கையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் வழக்கம்போல் வந்து அமர்ந்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படாததால் தங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதால் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்டசபை கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்தனர்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் சட்டசபை கூட்டத்துக்கு வரவில்லை. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை.

    சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    தமிழக சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

    • 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமைக்கழகத்துக்கு நாளை காலை 9 மணிக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிறார்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதிராஜாராம், சத்யா உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுடன் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொன்விழா ஆண்டை நிறைவு செய்து 51-வது ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்கிறது.

    இதையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் மின்னொளியில் ஜொலிக்கிறது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

    51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமைக்கழகத்துக்கு நாளை காலை 9 மணிக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிறார்.

    அவருக்கு ஆதிராஜாராம், சத்யா உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுடன் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அனைத்து பிரிவு அணியினரும் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

    சென்னையில் அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை கோலாகலமாக கொண்டாடுவது போல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிளை, வார்டு, வட்ட மாவட்ட அளவிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்க உள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.

    கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ் மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். கோவைத்தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கப்படும்.

    அதன்பிறகு சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். இதன் பிறகு 11 மணி அளவில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். அனேகமாக 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை துவங்கும் சட்டசபை கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு சபாநாயகருடன் வாக்குவாதம் செய்து சட்டசபையை புறக்கணிக்க கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    காரணம், அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இப்போது சட்டசபையிலும் எதிரொலிக்க உள்ளது. அ.தி.மு.க.வில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக் கொண்டதோடு இதுகுறித்து சபாநாயகருக்கும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டதாகவும் அதற்கு பதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

    அந்த வகையில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்த இடத்தை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கடிதம் கொடுத்து உள்ளனர். ஆனால், இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்பில் முடிவெடுக்கும் போது தன்னை கலந்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளார். தான் இன்னும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றி அமைக்கப்படுமா? ஆர்.பி.உதயகுமாரை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக சபாநாயகர் அங்கீகரிப்பாரா? என்பது நாளை தெரியவரும்.

    ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால் அதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து சட்டசபையை புறக்கணித்து விடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    சட்டசபையை பொறுத்தவரை சபாநாயகர் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஜனநாயக முறைப்படி நியாயமான முடிவினை எடுப்பேன் என்று சபாநாயகர் ஏற்கனவே கூறி உள்ளார்.

    தற்போது வரை சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் தான் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை உள்ளது. இன்னும் அந்த இருக்கை மாற்றி அமைக்கப்படவில்லை. சபாநாயகர் இதுபற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை.

    அப்படிப்பட்ட சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் அருகே சென்று எடப்பாடி பழனிசாமி அமருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் சட்டசபையில் இது பற்றி சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அப்போது சபாநாயகர் தான் எடுத்துள்ள முடிவை விளக்கமாக சட்டசபையில் அறிவிப்பார்.

    இதை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது சட்டசபையை புறக்கணிப்பார்களா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இதற்காக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்க உள்ளார்.

    ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து சபாநாயகர் மாற்றாமல், இருக்கையையும் மாற்றி அமைக்காத பட்சத்தில் சபாநாயகர் முடிவை கண்டித்து சட்டசபையை புறக்கணிக்கவும் இன்றைய அ.தி.மு.க. கூட்டத்தில் முடிவெடுப்பார்கள் என தெரிகிறது.

    • எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விசயத்தில் வேறு ஏதேனும் முன் உதாரணங்கள் உள்ளதா அல்லது சட்ட சிக்கல்கள் வருமா என்றெல்லாம் சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார்.
    • எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விசயத்தில் கோர்ட்டில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நீடிக்கும் அதிகார சர்ச்சையில் சபாநாயகரின் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் மோதல் முற்றிய நிலையில் பெரும்பாலான மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்தும் அவரை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக சட்டசபை சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தகவல் தெரிவித்தனர்.

    அந்த கடிதத்தில் அவர்கள், "எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் உதயகுமாரை நியமிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வமும் கடிதம் அளித்தார். தன்னிடம் கேட்காமல் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அதில் அவர் வலியுறுத்தி இருந்தார்.

    இருதரப்பு கடிதங்களையும் ஆய்வு செய்து நியாயப்படி முடிவு எடுப்பேன் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார். இந்தநிலையில் மீண்டும் எடப்பாடி தரப்பில் இருந்து சபாநாயகருக்கு மேலும் ஒரு கடிதம் கடந்த 11-ந்தேதி அனுப்பப்பட்டது. அ.தி.மு.க. துணை கொறடா ரவி கொடுத்த அந்த கடிதத்தில், "சட்டசபை கூட இருப்பதால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பற்றி விரைந்து முடிவு எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார்.

    என்றாலும் சபாநாயகர் அப்பாவு உடனடியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. கடிதங்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தன்னிடம் கேட்காமல் முடிவு எடுக்க வேண்டாம் என்று 2-ம் முறையாக மேலும் ஒரு கடிதம் அனுப்பினார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் நேற்று 3-வது முறையாக ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், " எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளோம். சட்டசபை திங்கட்கிழமை கூடுவதால் அதற்கு முன்னதாக முடிவு எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சபாநாயகர் அப்பாவு இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. அவர் இரு தரப்பினரின் 5 கடிதங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தெரியவந்துள்ளது. சட்டத்திற்கு உட்பட்ட முடிவு எடுக்கப்படும் என்று மீண்டும் சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விசயத்தில் வேறு ஏதேனும் முன் உதாரணங்கள் உள்ளதா அல்லது சட்ட சிக்கல்கள் வருமா என்றெல்லாம் சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார். இதை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றும் விசயத்தில் கோர்ட்டில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றியும் சபாநாயகர் கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 62 பேர் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கும் கடிதத்தையும் ஆய்வு செய்து வருகிறார். எனவே சபாநாயகர் முடிவு என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சபாநாயகர் தனது முடிவை முன்னதாக தெரிவிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. சட்டசபை கூட்டம் 17-ந்தேதி தொடங்கும் போதுதான் அவர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பது தெரிய வரும். இதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகிற திங்கட்கிழமை தொடங்கும் சட்டசபை கூட்டத்தின் முதல் நாள் அமர்வில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

    அன்றைய தினம் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. காலை 8.30 மணிக்குள் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்ல தீர்மானித்து உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியும் அன்று சட்டசபைக்கு வர உள்ளார். சட்டசபை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் முதலில் அவர் அமர்ந்திருப்பார்.

    சட்டசபைக்குள் ஓ.பன்னீர்செல்வம் இடம் மாற்றப்பட்டு இருந்தால் அவர் சபைக்குள் வர முடிவு செய்துள்ளார். அப்படி மாற்றப்படாமல் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி இடத்தில் அமர அனுமதிக்கப்பட்டு இருந்தால் சபைக்கு வராமல் அலுவலகத்தில் இருந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சட்டசபை முதல் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதற்கு பிறகு சபாநாயகரிடம் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தை எழுப்ப அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்து உள்ளனர். எனவே இந்த விவகாரம் சட்டசபையில் புயலை கிளப்ப வாய்ப்பு உள்ளது.

    • தங்க கவசத்தை பெற திண்டுக்கல் சீனிவாசன் தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
    • இன்னும் ஓரிரு நாளில் காந்திமீனாள் நடராஜன் ஒப்புதல் கடிதத்தை யாருக்கு அளிக்கிறாரோ அவரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும்.

    மதுரை:

    கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவரின் சிலைக்கு ரூ.3.5 கோடி மதிப்பிலான 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் தேவரின் நினைவிடத்தில் பொருத்தப்படும்.

    அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் இந்த கவசம் வைக்கப்பட்டுள்ளது. அதனை அங்கிருந்து பசும்பொன்னுக்கு எடுத்து செல்வது வழக்கம்.

    இதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் வங்கிக்கு வந்து லாக்கரில் உள்ள தேவரின் தங்க கவசத்தை எடுத்து விழா கமிட்டியுடன் ஒப்படைப்பார். விழா முடிவடைந்ததும் அதேபோன்று தங்க கவசத்தை முறைப்படி வங்கிக்கு வந்து ஓ.பன்னீர்செல்வம் பெற்று ஒப்படைப்பார்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வத்திற்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தங்க கவசம் அ.தி.மு.க.வினர் வசம் ஒப்படைக்கப்படாமல் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் வங்கியில் உள்ள தங்க கவசத்தை பெற அ.தி.மு.க. தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பலப்பரீட்சை நடந்து வருகிறது.

    இரு தரப்பிலும் தனித்தனியாக வங்கியில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவரின் தங்க கவசம் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில் தேவரின் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 2 முறை மதுரை வந்த திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் கடிதம் அளித்தும் வங்கி நிர்வாகத்தினர் தேவர் நினைவிட பொறுப்பாளரான காந்தி மீனாள் நடராஜனிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வர கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் காந்தி மீனாள் நடராஜனை சந்தித்து பேசுவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய உள்ளான் உள்ளிட்ட தென் மாவட்ட அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் இன்று பசும்பொன் சென்றனர். பசும்பொனில் உள்ள தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அருகில் உள்ள தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தனர்.

    அப்போது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவுக்காக தங்க கவசத்தை வங்கியில் முறைப்படி எடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது காந்தி மீனா நடராஜனிடம் ஒப்புதல் கடிதம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் ஒப்புதல் கடிதம் வழங்குவதில் காந்தி மீனாள் நடராஜன் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    தங்க கவசத்தை பெற திண்டுக்கல் சீனிவாசன் தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் காந்திமீனாள் நடராஜன் ஒப்புதல் கடிதத்தை யாருக்கு அளிக்கிறாரோ அவரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படும். அவர் ஒப்புதல் கடிதம் அளிக்காத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இன்று பசும்பொன்னில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டது தென் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மத்திய விவசாயதுறை அமைச்சரை சந்தித்து, உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும்.
    • இப்போது இருக்கின்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர் என விமர்சனம்

    கோவை:

    கோவை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுகவின் 51 வது ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 300க்கும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது எனவும், திமுக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக கொடுத்தது, இப்போது கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றது, மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் மோசமாக இருக்கின்றது. இந்த ஆட்சிமாற வேண்டும். இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் மக்கள் முடிவு செய்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்.

    எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர். இங்கே எப்போதும் இரு மொழி கொள்கைதான், தமிழகத்தில் இந்தி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பா.ஜ.க தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். பா.ஜ.க தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை எடுக்க சொல்ல வேண்டும்.

    நாளைக்கு கோவை வரும் மத்திய விவசாயதுறை அமைச்சரை சந்தித்து, உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும். தமிழகத்தின் 39 எம்.பிகள் எதுவுமே செய்வது இல்லை. காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்ற அதிமுக எம்.பிகள் முடக்கினர். இப்போது இருக்கின்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர்.

    யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார், முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அந்த கட்சியினரும் இருக்கின்றனர். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

    • சாதிச் சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
    • அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    11-ந்தேதி அன்று வேல்முருகன் என்பவர் தனது மகனுக்கு சாதிச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து, அச்சான்றிதழ் அரசு அதிகாரிகளால் வழங்கப்படாததால், மனமுடைந்து உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டார்.

    முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும் என்பதுபோல், அப்பாவி மக்களைப் பற்றி இன்றைய விடியா அரசின் ஆட்சியாளர்களைப் போலவே, அதிகார வர்க்கமும் அலட்சியமாக இருப்பது வேதனைக்குரியது.

    "பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், முருங்கை மரத்தில் தான் குடித்தனம் நடத்த வேண்டும்'' என்ற நிலையில் தி.மு.க-விற்கு வாக்களித்த தமிழக மக்கள் இந்த விடியா திமுக ஆட்சியில் திணறிக் கொண்டிருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து தான் எந்த ஒரு சான்றிதழும் பெற முடியும் என்ற நிலைக்கு மக்களை இந்த விடியா அரசு தள்ளி இருக்கிறது.

    மகனின் சாதிச் சான்றிதழுக்காக தன் இன்னுயிரை தீந்தணலுக்கு பலியிட்ட அப்பாவி மலைக்குறவரின் செயலுக்கு இந்த விடியா அரசும், அதிகாரிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு நன்மை செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் விடியா அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிச் சான்றிதழ் பெற முடியாமல், விலைமதிக்க முடியாத உயிரை நீத்த மலைக்குறவர் குடும்பத்திற்கு என்ன சொல்லப்போகிறார்?

    சாதிச் சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்; உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்த விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2 வாரங்களாக இ.பி.எஸ். வீட்டுப் பக்கம் கே.பி.முனுசாமி எட்டிப்பார்க்க கூட இல்லை. சொந்த ஊரில் இருக்கிறார்.
    • சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார்.

    அதே அணியில் இருக்கும் சி.வி.சண்முகத்துடன் கருத்து வேறுபாடு இருக்கிறது. அவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினை பொதுக்குழு மேடையிலேயே வெடித்தது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தபோது அவருடன் அமர கே.பி.முனுசாமிக்கு இருக்கை போடவில்லை.

    இதனால் கோபத்தில் வெளியேறிய கே.பி.முனுசாமியை சமாதானப்படுத்தி செய்தியாளர் சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி தன் அருகில் அவரை வைத்துக் கொண்டார்.

    இந்த நிலையில் சமீபத்தில் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றபோதும் கே.பி.முனுசாமியை அழைத்து செல்லவில்லை. இது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியது. சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தன்னை புறக்கணிப்பதாகவும் ஆதங்கப்பட்டார்.

    கடந்த 2 வாரங்களாக இ.பி.எஸ். வீட்டுப் பக்கம் கே.பி.முனுசாமி எட்டிப்பார்க்க கூட இல்லை. சொந்த ஊரில் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் அவர் அதிருப்தியில் இருப்பது கட்சியினர் மத்தியில் வெளிப்படையாக தெரிந்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கே.பி.முனுசாமியை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது.

    அவர் விரைவில் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    இதுபற்றி கே.பி.முனுசாமியை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-

    வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். என்னைப்பற்றி தவறாக வதந்தி பரப்பப்படுகிறது. எப்போதும் அணி மாறி கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை. நான் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலூர், திருச்சி, ஈரோடு, மதுரை, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
    • வேலூர் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் சி.கே.எம். நித்தியானந்தம்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதால் கீழ்க்கண்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

    வேலூர் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் சி.கே.எம். நித்தியானந்தம்.

    திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அந்த நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரா.அழகேசன், ஈரோடு மாநகர் மாவட்டத்தை சேர்ந்த கோவை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணை செயலாளர் எம்.ரமணிகாந்த், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் ஆர்.கே.ஜி (எ) கார்த்திக்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் ஆர்.ராமமூர்த்தி, மேலூர் நகர செயலாளர் எஸ்.ஏ.ஏ. பாஸ்கரன்.

    மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணை செயலாளர் ஜி.கருப்பணன், திருப்பரங்குன்றம் மேற்கு பகுதி அவைத் தலைவர் கவிஞர் பா.சேகர், திருப்பரங்குன்றம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.லெட்சுமிபதி ராஜன், திருப்பரங்குன்றம் பகுதி முன்னாள் துணைச்செயலாளர் பாலமுருகன்.

    நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.செல்வராஜ், வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இ.அழகானந்தம், ஆகியோர் இன்று முதல் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் வேலை பார்ப்பதில்லை.
    • தி.மு.க.வை வீழ்த்த கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் தேர்தல் நேரத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை தி.மு.க. நிறைவேற்றாததை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தற்போது மதம், ஜாதியை வைத்து அரசியல் செய்கிறது.

    இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மக்கள் வாக்களிப்பதில்லை.

    சமூக நீதி பேசி வரும் தி.மு.க.வினர் மற்றும் அமைச்சர்கள் மக்களை பார்த்து ஓ.சி. பஸ் என்றும் பட்டியலினத்தவரை பார்த்து ஜாதி குறித்தும் பேசுகிறார்கள். மக்கள்தான் எஜமானார்கள். அவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    தி.மு.க.வினர் திருந்தி இருப்பார்கள் என்று மக்கள் மீண்டு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் திருந்தவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபை கூட்டத் தொடரில் நிதி நிலை அறிக்கையின் போது தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்து விட்டு அமைச்சர்கள் மீது கவர்னரிடம் முறைகேடு புகார் அளித்தனர்.

    நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த உடன் தற்போது நிதி நிலையை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் சுயம்பாக தோன்றிய தலைவர்கள். ஆனால் தி.மு.க.வில் தலைவர்கள் திணிக்கப்படுகிறார்கள்.

    தற்போது உள்ள அமைச்சர்களின் நடவடிக்கையால் தூக்கம் இல்லாமல் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் தூங்க மாட்டார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. நான் ஏற்கனவே கூறியது போல் 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, அமைப்பு செயாளர் தட்சிணாமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் குட்வில் குமார், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. அம்பத்தூர் எஸ்.வேதாசலம், பொறியாளர் அணி செயலாளர்கள் மா.கரிகாலன், அமைப்புச் செயலாளர் நேதாஜி கணேசன், மாவட்ட செயலாளர்கள் சி.பி.ராமஜெயம், ஏ.ஆர்.பழனி, பி.ஆனந்தன், எல்.ராஜேந்தி ரன், ஹஜ் கே.முகமது சித்திக், வி.சுகுமார் பாபு, கே.விதுபாலன், எஸ்.வேதாச்சலம், இ.லக்கிமுருகன், பரணி குருக்கள், அய்யப்பா வெங்கடேசன், முகவை ஜெயராமன், சூளைமேடு கங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் வேலை பார்ப்பதில்லை. அவர்களது கணவர்கள் பணி செய்கிறார்கள். அவர்கள் பொதுமக்களை மிரட்டுகிறார்கள். முதல்-அமைச்சர் மீது யாருக்கும் பயம் இல்லை.

    முதல்-அமைச்சரால் அமைச்சர்களை மட்டுமல்ல கவுன்சிலர்களை கூட கட்டுப்படுத்த முடியாது. ஜெயலலிதாவால் அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் இருந்தனர். தற்போது முதல்-அமைச்சருக்கோ அமைச்சர்களால் தூக்கம் இல்லை.

    எங்களை வெளியேற்றியதால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் தனி இயக்கம் கண்டுள்ளோம். இனிமேல் நாங்கள் ஒன்றாக இணைவது எங்களுக்கும் நல்லது அல்ல. அவர்களுக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன். தி.மு.க.வை வீழ்த்த கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபாநாயகரும், சட்டசபை செயலாளரும் நேற்று வெளியூரில் இருந்ததால் கடிதம் வந்த தகவல் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
    • சபாநாயகர் அப்பாவு தற்போது அவரது தொகுதியில் உள்ளார். நாளைதான் சென்னை வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீ்ரசெல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கி கொண்டனர்.

    இதில் பல பிரச்சினைகளுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தார்.

    அது மட்டுமின்றி அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் சபாநாயகருக்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தார். அதில் எடப்பாடி பழனிசாமியை நான் கட்சியை விட்டு நீக்கி விட்டேன். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த இரு கடிதங்கள் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டதால் இது பற்றி சபாநாயகரிடம் கடந்த மாதம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

    அதற்கு அவர் பதில் அளித்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது சொன்ன கருத்தை சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

    அதாவது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் எந்த ஒரு பதிலும் இப்போது சொல்ல முடியாது என்று எடப்பாடி பழனிசாமி சொன்ன பதிலை திரும்ப கூறினார்.

    அவரே சொல்லாத போது நான் மட்டும் என்ன சொல்ல முடியும். அதே சமயம் பழைய நடைமுறை தொடரும் என்று ஒரு போதும் கூறியது இல்லை.

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் என்பது அவர்களின் கட்சி சார்ந்த பிரச்சினை.

    எனவே யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன். சட்டமன்றம் வேறு. நீதிமன்றம் வேறு. எனவே சட்டமன்றத்துக்கு என்ன அதிகாரங்கள் இருக்கிறதோ அதை பயன்படுத்தி ஜனநாயக முறைப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

    இந்த சூழலில் வருகிற 17-ந்தேதி தமிழக சட்டசபை கூடுவதால் அன்றைய தினம் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படுமா? அவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நீடிப்பாரா? என்பது தெரிய வரும்.

    ஏனென்றால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு பக்கத்து இருக்கையில்தான் இதுவரை ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார்.

    தற்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எதிரும், புதிருமாக ஆகி விட்டதால் இருவரும் அருகருகே அமர்ந்து சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை புறக்கணித்து விடலாம் என்று தலைமைக் கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

    அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, தான் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாகவும் எனவே சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதுபற்றி தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம் பற்றி தகவல் அறிந்த எடப்பாடி பழனிசாமி உடனே இதற்கு பதிலடியாக இன்னொரு கடிதத்தை அ.தி.மு.க. சட்டமன்ற துணை கொறடா அரக்கோணம் ரவி மூலம் நேற்று மதியம் சபாநாயகர் அலுவலகத்தில் கொடுக்க வைத்தார்.

    அந்த கடிதத்தில் சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழு கூடும் போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    சபாநாயகரும், சட்டசபை செயலாளரும் நேற்று வெளியூரில் இருந்ததால் இந்த கடிதம் வந்த தகவல் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

    சபாநாயகர் அப்பாவு தற்போது அவரது தொகுதியில் உள்ளார். நாளைதான் சென்னை வருகிறார். அவர் நாளை வந்ததும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரு தரப்பு கடிதங்களையும் படித்து பார்த்து பரிசீலித்து விறுப்பு வெறுப்பின்றி முடிவு எடுப்பார் என்று சட்டசபை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    சட்டசபையில் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படவில்லை என்றே தெரிகிறது. அப்படிபட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அ.தி.மு.க. பிளவுபட்டு விட்டதால் இரு தலைவர்களையும் சட்டசபையில் அருகருகே அமர வைப்பது நாகரீகமாக இருக்காது என்ற காரணத்தால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் என்ற முறையில் முன்வரிசையில் வேறு இடத்தில் இடம் ஒதுக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்துள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நினைக்கின்றனர். அதற்கேற்ப கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்பது 17-ந்தேதிதான் தெரிய வரும்.

    அதை பொறுத்துதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் சட்டசபையில் அமையும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×