search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது
    • வியர்வையில் குளித்தவர்கள் மழையில் நனைந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த இரண்டு வாரங்களாக சுட்டெரித்து வருகிறது. தாங்க முடியாத வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இன்னும் சில நாட்கள் வெயிலின் தாக்கம் இதே போல் தான் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3. 45 மணிக்கு திடீரென்று இடி, மின்னலு டன் மழை கொட்டத் தொடங்கியது. காலை 6.45 மணி வரை 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் நகரில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சவேரியார் கோவில் சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, ஈத்தாமொழி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் போக முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நாகர்கோவிலில் பெய்த இந்த திடீர் மழை பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் கோடை வெயிலிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மழை கொட்டிய நிலையில் இன்றைய வெப்ப நிலையும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரிக்கு கீழ்தான் இருக்கும் என்றும் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வந்தடைந்தது. இந்த  ரெயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் மழை கொட்டியதை பார்த்து உற்சாகத்துடன் மழையில் நனைந்தபடியே சென்றனர். இது பற்றி அவர்கள் கூறும் போது சென்னையில் ரெயில் ஏறியதும் ரெயிலுக்குள்ளே இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் அனலாக தாக்கியது. நாகர்கோவில் வந்து இறங்கியதும் மழையைப் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது என்ற படியே மழை தண்ணீரில் உற்சாக குளியல் போட்டபடி ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள்.

    நாகர்கோவிலில் இன்று அதிகபட்சமாக 34.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கொட்டாரம், மாம்பழத்துறையாறு, குருந்தன்கோடு பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.87 அடியாக இருந்தது. அணைக்கு 146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.35 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் போது மான அளவு தண்ணீர் உள்ள காரணத்தினாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயி களுக்கு தேவையான விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை பாசனத்திற்காக வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    • நேற்று மாலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
    • மழை பெய்தாலும் இரவு கடும் புழுக்கமாகவே நீடித்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக ஆனை மடுவு, கரிய கோவில், காடையாம்பட்டி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு: ஆனைமடுவு-19, கரிய கோவில் -18, காடையாம்பட்டி -17, ஏற்காடு -8.4, பெத்தநாயக்கன் பாளையம்-5.5, தம்மம்பட்டி-5, ஓமலூர்-4.6, சேலம் 1.2 என மாவட்டம் முழுவதும் 78.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மழை பெய்தாலும் இரவு கடும் புழுக்கமாகவே நீடித்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். 

    • ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
    • இந்த காற்றில் விளம்பர பலகைகள், புழுதி பறந்தன.

    ராசிபுரம்:

    கோடை வெயில், கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல முடியாத அளவிற்கு வாட்டி வதைத்தது. இந்த நிலையில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

    இந்த காற்றில் விளம்பர பலகைகள், புழுதி பறந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். காற்று வீசிய சிறிது நேரத்தில் கனமழையும் பெய்தது.

    மழையுடன் காற்று வீசியதால் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்போது அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    மின்கம்பங்கள் சாய்ந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். மழை பெய்ததன் காரணமாக மாலையில் குளிர்ந்த சீதோஷணம் நிலவியது.

    அதேபோல் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, புதுப்பட்டி உள்பட பல்வேறு பகுதி களில் நேற்று மழை பெய்தது.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது
    • அனைத்து வாழைகளும் நன்கு விளைந்து குலை தள்ளிய நிலையில் இருந்தன.

    திருப்பூர்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்குமண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மழையின் போது பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

    மாவட்டத்தில் இன்று காலை 7 மணி நிலவரப்படி திருப்பூர் வடக்கு பகுதியில் 2 மி.மீ.,குமார்நகர் பகுதியில் 1 மி.மீ., திருப்பூர் தெற்கு பகுதியில் 13 மி.மீ., பல்லடம் ரோடு பகுதியில் 2 மி.மீ., ஊத்துக்குளியில் 12 மி.மீ., மடத்துக்குளத்தில் 5 மி.மீ., குண்டடத்தில் 6 மி.மீ., உப்பாறு அணைப்பகுதியில் 17 மி.மீ., உடுமலையில் 14.10 மி.மீ., அமராவதி அணைப்பகுதியில் 16 மி.மீ., பல்லடத்தில் 3 மி.மீ., என மொத்தம் 91.10 மி.மீட்டர் மழைப்பதிவானது. இதன் சராசரி 4.55 மி.மீ., ஆகும்.

    இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த கணேசன் (வயது 59) என்பவர் நல்லூர் மணியக்காரம்பாளையத்தில் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழை பயிரிட்டிருந்தார். அனைத்து வாழைகளும் நன்கு விளைந்து குலை தள்ளிய நிலையில் இருந்தன.

    நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளி காற்றின் காரணமாக 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் வாழை மரங்களும் முறிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.14 லட்சம் என தெரிவித்த கணேசன், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • சீவக்கம்பள்ளம் அருகே மின் கம்பி மீது மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்துள்ள ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3 முதல் 5 மணி வரை குளியாடா, திம்பம், ஒசட்டி, தேவர்நத்தம், மாவள்ளம் மற்றும் வனப்பகுதியில் பலத்த மழை கொட்டியது. பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்நிலையில் பலத்த மழையால் ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும் கொள்ளேகால் சாலை அரேப்பாளையம் பிரிவு அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கேர்மாளம், குளியாடா, மாவள்ளம், கானக்கரை, தேவர்நத்தம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மலை கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். பின்னர் வெள்ளம் வடிந்த பிறகு வாகனங்கள் சென்றன. இதேபோல் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் எரகனள்ளி, சிமிட்டள்ளி, ஜீர்கள்ளி, கல்மண்டிபுரம் ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மிதமான மழை பெய்தது.

    இதேபோல் சீவக்கம்பள்ளம் அருகே மின் கம்பி மீது மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் விடிய விடிய மின்சாரம் இல்லாமல் மலைகிராம மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். குழந்தைகளை வைத்து கொண்டு பெண்கள் கடும் அவதிப்பட்டனர்.

    • பாப்பான்குளம் பிரிவு பகுதியில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணை காற்றின் வேகத்தால் பலத்த சேதமடைந்தது.
    • சாமராயப்பட்டி பகுதியில் பழனி ரோட்டில் சாலையோர மரங்கள் பல சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடுமலை:

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. ஆனால் மாலையில் திடீரென பருவநிலையில் மாறுதல் ஏற்பட்டு வானம் மேகமூட்ட த்துடன் காணப்பட்டது.மேலும் திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த சூறாவளிக் காற்றால் சாமரா யப்பட்டி, பாப்பான்குளம், சாளர ப்பட்டி, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. பாப்பான்குளம் பிரிவு பகுதியில் செயல்பட்டு வந்த கோழிப்பண்ணை காற்றின் வேகத்தால் பலத்த சேதமடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கோழிக்கு ஞ்சுகள் உயிரிழந்தன. மேலும் சாமராயப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நந்தகோபால் என்பவரின் தோட்டத்தில் 18 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன.

    மேலும் சுரேஷ் என்ற விவசாயி தோட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் ஒரு தென்னை மரம் சேதமானது. சாளரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியின் தோட்டத்தில் 2 ஏக்கர் வாழைமரங்கள் சேதம டைந்துள்ளது. இதுபோல பல விவசாயி களின் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சேதமடைந்தது.மேலும் ஆலங்கட்டி மழையால் தக்காளி,மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிப் பயிர்க ளும் சேதமடைந்து ள்ளன.எனவே வேளாண்மைத்துறை யினர் மற்றும் வருவாய்த்து றையினர் முழுமையாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாமராயப்பட்டி பகுதியில் பழனி ரோட்டில் சாலையோர மரங்கள் பல சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவ ரத்து சீரமைக்க ப்பட்டது.அத்துடன்ரெட்டி பாளையம், பாப்பான்குளம், சாமராயப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் காற்றின் வேகத்தால் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது.இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது. சுமார் 20 நிமிடங்கள் காற்று ஆடிய ருத்ர தாண்டவத்தால் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    அக்னி வெயில் கொளுத்தும் காலத்தில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்த சம்பவம் மடத்துக்குளம் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.அதேநேரத்தில் மரங்கள் சாய்ந்து, மின் கம்பங்கள் விழுந்து பல வகைகளில் சேதம் ஏற்பட்ட போதும் உயிரிழப்பு ஏற்படாதது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.பல கிராமங்கள் இருளில் மூழ்கியு ள்ளதால் முழுமையான சேதம் குறித்த விபரங்கள் இன்று அதிகாரிகளின் ஆய்வின் மூலமாகவே தெரிய வரும்.

    • பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • மாவனத்தம் அருகே உள்ள சாலையோரத்தில் உள்ள மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இதனால் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தாளவாடி, தலமலை, கொடிபுரம், விஜயலெட்டி, காளிதிம்பம், ராமர் அணை, மாவனத்தம் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் மாவனத்தம் அருகே உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் சத்தியமங்கலம், தாளவாடிக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதேபோல் மாவனத்தம் அருகே உள்ள சாலையோரத்தில் உள்ள மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து இன்று காலை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    இதேபோல் தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம் நீர் வடிய தொடங்கியதால் இன்று காலை மீண்டும் அந்த பகுதியில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது. 

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் காற்றுடன் மழை பெய்தது.
    • இதில் முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் ரோட்டில் உள்ள பட்டு வளர்ச்சி துறை அலுவலக நுழைவு வாயிலில் யூகலிப்டஸ் மரம் காற்று, மழைக்கு விழுந்தது. இதில் அலுவலக போர்டு மற்றும் மின்கம்பிகள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடையூறாக இருந்த மரம் மற்றும் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகில் ரோட்டில் விழுந்த கருவேல மரத்தை உபகரணங்கள் மூலம் அறுத்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். அந்த நேரத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணியை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் செய்தனர்.

    • வேலாயுதம்பாளையம் பகுதியில் பரவலாக மழை பெய்தது
    • சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன

    கரூர்:

    கரூர் வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
    • நேற்று மாலையில் பெய்த மழை முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்–களுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    சேலத்தில் கடந்த சில நாட்களாக 96 முதல் 98 பாரன்ஹீட் வெயில் நிலவியது. இந்த கோடை வெயிலினால் பொதுமக்கள், வீடுகளில் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர்.

    இந்த நிலையில் வெப்ப மிகுதியின் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. பகலில் வெப்பமாக இருந்தாலும் இரவில் குளிர்ந்த காற்றும், சாரல் மழையாகவும் இருக்கிறது. நேற்று மாலையில் பெய்த மழை முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் சேலம், ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், அயோத்தியாப்–பட்டணம், வாழப்பாடி, காடையாம்பட்டி, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. சாலைகள், தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து இன்று காலையில் வானம் மேக மூட்டத்துடனே காணப்படுகிறது. இந்த மழையால் விவசாயி–கள் மகிழ்ச்சி அடைந்துள்ள–னர். விளை நிலங்களில் சாகு–படி செய்துள்ள பயிர்களுக்கு இந்த மழை சற்று உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விபரம் வருமாறு:-

    கரியகோவில் -55, ஆணைமடுவு-28, தலைவாசல்- 19, ஆத்தூர்-16, ஏற்காடு-15.6, பெத்தநாயக்கன்பாளையம் -13, சேலம்-12.6, வீரகனூர்-9, காடையாம்பட்டி -8, தம்மம்பட்டி-7, ஓமலூர்-7, கெங்கவல்லி-5, மேட்டூர்-3.2, எடப்பாடி-3, சங்ககிரி-2.2 மீல்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

    • கிருஷ்ணராயபுரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி் அடைந்துள்ளனர்
    • வெற்றிலை, வாழை ஆகியவைகளுக்கு மழை நீர் கிடைத்து பசுமையாக வளர்ந்து வருகிறது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், மணவாசி, மகாதானபுரம், லாலாப்பேட்டை, வல்லம், கொம்பாடிப்பட்டி, சரவணபுரம், வயலுார், பஞ்சப்பட்டி, சிவாயம், வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கரும்பு, சோளம், மரவள்ளிக்கிழங்கு, வெற்றிலை, வாழை ஆகியவைகளுக்கு மழை நீர் கிடைத்து பசுமையாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பூமி குளிர்ச்சி அடைந்து வெப்பம் தணிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தஞ்சையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
    • மஞ்சளாற்றில் அதிகபட்சமாக 66.80 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1 வாரமாகவே கோடை வெப்பம் தணிந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 4-ந் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மாலையில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இரவு 7 மணிக்கு இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறி கொட்டியது. பின்னர் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை தூறி கொண்டே இருந்தது.

    இதேப்போல் வல்லம், குருங்குளம், திருவையாறு, கும்பகோணம், அய்யம்பேட்டை, மஞ்சளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    இதில் மஞ்சளாற்றில் அதிகபட்சமாக 66.80 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 299.70 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ) :-

    மஞ்சளாறு -66.80, குருங்குளம்-34, தஞ்சாவூர்-25, ஒரத்தநாடு-22.40, நெய்வாசல் தென்பாதி-16.40, வல்லம்-16, திருவையாறு-14, அய்யம்பேட்டை-14.

    ×