search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94727"

    • கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
    • வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, பல்வேறு துறைகளிலும் நடக்கும் முறைகேடுகள், சட்டம்- ஒழுக்கு சீர்குலைவு ஆகியவற்றை சுட்டிக்காட்டி நாளை (5-ந் தேதி) அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.

    கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

    இதேபோல் வட சென்னை மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென்சென்னை, தென்சென்னை கிழக்கு, ஆகிய 7 மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    பாதுகாப்பு, போக்குவரத்து பிரச்சினைகளால் ஒரு இடத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றனர்.

    இதையடுத்து வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    எனவே நாளை (செவ்வாய்கிழமை) சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மட்டுமே உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அண்ணாமலை பங்கேற்கிறார். மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அந்த அந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணமாலை, திரைப்பட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
    திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் உன்னிப்பாக கவனித்து, தங்களது கட்சிக்கு, சமூகத்திற்கு எதிரான கருத்துகள் இருந்தால் அதுகுறித்து தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். தலைவர்கள் விமர்சனம் செய்யும்போது அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடிக்கிறது.

    சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் குறித்தும் விமர்சனம் எழும்பியது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வெளியானது. வன்முறையை தூண்டும் மாநாடு படத்தை தடைசெய்ய வேண்டும் என பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறுகையில் ‘‘திரைப்படத்துறை விமர்சனங்களை  கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் கூறும் கருத்து நம் கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எதற்காக பேச வேண்டுமோ அப்போது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்’’ என்றார்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
    சென்னை:

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு மாவட்டம் தோறும் புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான பணி பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. தற்போது வாணியம்பாடி, நெல்லை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 மாவட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

    இந்த அலுவலகங்களை இன்று திருப்பூரில் வைத்து காணொலி காட்சி மூலம் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.

    தமிழகத்தை பொருத்தவரை பா.ஜனதா கட்சி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. ஆனால் பா.ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற முடியாத அளவுக்கு திட்டம் போட்டு பொய்யான தகவல்கள் மூலம் ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளனர். அதற்கு பல்வேறு தளங்களையும் கையில் எடுத்துள்ளனர்.

    ஆனால் அவற்றை நாங்கள் உடைத்து வருகிறோம். அதற்கு சாட்சி தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். அடுத்து வரும் தேர்தலிலும் இந்த எண்ணிக்கை உயரும். எங்களை பொருத்தவரை கட்சி வளர்ச்சி என்பது மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக குரல் கொடுத்ததன் மூலம் கட்சி வளரும் என நம்புகிறோம்.

    உதாரணமாக முல்லை பெரியாறு, காவேரி பிரச்சினை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். அதேநேரம் தி.மு.க. அரசு செய்யும் தவறுகளை எல்லாம் நாங்கள் சுட்டிக்காட்ட தவறுவதில்லை. மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதி கொடுத்து எல்லாவற்றையும் நிறைவேற்றியது போல அவர்களுடைய வழக்கமான பாணியில் மாய தோற்றத்தை உருவாக்கி வருகின்றார்கள்.

    பெட்ரோல்-டீசல் விலையை குறைப்போம் என்று அவர்கள் தான் சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் சொல்லாத மத்திய அரசு குறைத்து இருக்கிறது. இதைத்தான் சுட்டிக்காட்டி தி.மு.க. அரசை எதிர்த்து போராடுகிறோம்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. அதிக இடங்களை கைப்பற்றுவோம். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது. பா.ஜனதாவுக்கு எம்.பி.க்கள் இல்லாவிட்டாலும் கூட 2 கவர்னர்கள், ஒரு மத்திய மந்திரி உள்பட பல பொறுப்புகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் காலம் பா.ஜனதா காலமாக மாறும். அதற்காகவே உழைத்து வருகிறோம். இன்றைய செயற்குழு கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக பல திட்டங்கள் தீட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களுக்கான இந்த போராட்டங்களுக்கு தமிழக மக்கள் நல்ஆதரவை தந்து தாங்களும் அறப்போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கவில்லை.

    மேலும் மத்திய அரசு டீசலுக்கு ரூ.10-ம், பெட்ரோலுக்கு ரூ.5-ம் குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல்-டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது.

    தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும்.

    பெட்ரோல் விலை உயர்வு

    மக்களுக்கான இந்த போராட்டங்களுக்கு தமிழக மக்கள் நல்ஆதரவை தந்து தாங்களும் அறப்போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

    இன்று (திங்கட்கிழமை) இளைஞர் அணி, மகளிர் அணி சார்பில் மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்.

    26-ந்தேதி- விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாட்டு வண்டிப் பயண ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    27-ந்தேதி- சிறுபான்மையினர் அணி, வழக்கறிஞர் பிரிவு சார்பில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து நம் கோரிக்கையின் நியாயத்தை விளக்குதல்.

    28-ந்தேதி- எஸ்.சி. எஸ்.டி. அணி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம்.

    30-ந்தேதி- ஓ.பி.சி. அணி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

    அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி- மகளிர் அணி சார்பில் வீடுகளின் முன்பாக கோரிக்கை அட்டையை ஏந்தும் போராட்டம்.

    2-ந்தேதி- கல்வியாளர் பிரிவு சார்பில் மக்களுக்கு கோரிக்கையை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல்.

    3-ந்தேதி- பிரசாரப்பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடத்துதல்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் பா.ஜ.க.வில் தொடங்கியது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை மற்றும் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.

    மாநகராட்சி தேர்தல் பணிக்குழு தலைவரும், சென்னை பெருங்கோட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இதையடுத்து கே.அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிட 500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதா?, அதற்கு தகுதியான நபராக உள்ளாரா? என்பதை அறிவதற்காகத்தான் விருப்ப மனு பெறப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவித்த பின்னர், கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி, எந்த இடங்களில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையிலும் அதிக இடங்களில் போட்டியிட்டு, அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க. தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மற்ற அனைத்தும் முடிவு செய்யப்படும்.

    பாஜக - அதிமுக

    பிரதமர் மோடியின் பெருந்தன்மையின் காரணமாக வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற காலத்தில் விவசாயிகள் இந்த சட்டத்தை ஒட்டுமொத்தமாக ஏற்கக்கூடிய சூழல் வரலாம்.

    அவ்வாறு, விவசாயிகள் வேண்டும் என்று கேட்டால் இந்த சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை.

    பாலியல் குற்றங்கள் செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என மக்களுக்கு புரியவந்தால் குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும். காவல் துறை குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடும் திருடும் கும்பல் ஒன்றினை விரட்டிச் சென்ற போது அக்கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இச்சம்பவத்திற்கு கண்டம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ''நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள். பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது.

    புதுக்கோட்டை எஸ்ஐ
     
    மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'' என்று அவர் கூறியுள்ளார். 

    நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்பட்டபோது பாதிப்புகளை பார்வையிட வந்த பிரதமர் எந்த பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பார்க்காமல் கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகையில் படங்களை மட்டும் பார்வையிட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த அண்ணாமலை தமிழக வெள்ளச்சேதங்களை ஊர் ஊராகச் சென்று எல்லா பகுதிகளிலும் பார்வையிட்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி கூறுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.

    மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமாக உள்ள நிலையில் அதனை சீரமைக்க இதுவரையிலும் கண்டுகொள்ளாத மத்திய அரசு, தமிழக அரசை குற்றம் சொல்வது வேடிக்கையாக உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ளச்சேதங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதில் கன்னியாகுமரி மாவட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பேரிடர் இழப்பீடு என்பது மாநில அரசு மட்டுமல்லாது, மத்திய அரசும் இணைந்துதான் வழங்கவேண்டும். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசை மறைத்துவிட்டு பேசுகிறார்கள். இது ஏன்? என்று தெரியவில்லை.

    பேரிடர் மீட்பு பணிகள் என்பது மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவு செய்யவேண்டிய ஒன்று. பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசு ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. மீண்டும் நாங்கள் அதை வலியுறுத்துவோம். நாங்கள் இரவு-பகலாக வேகமாக பணியாற்றி கொண்டிருக்கிறோம். அதை பாராட்டுவதற்கு அவர்களுக்கு மனமில்லை. களியக்காவிளை- நாகர்கோவில், நாகர்கோவில்- காவல்கிணறு வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக உள்ளது.

    இது குறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே பேசியிருக்கிறார். நாங்களும் பேசி இருக்கிறோம். ஆனால் அது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் இரண்டு வெள்ள சேதங்களை கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்துள்ளது. தற்போது வந்துள்ளது மூன்றாவது சேதம். கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் சாலைகள் மேம்பாட்டிற்காக தமிழக அரசு ரூ.91 கோடியும், நாகர்கோவில் மாநகராட்சி பணிகளுக்கு ரூ.28 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி 11 மாவட்டங்களில் பா.ஜனதா சார்பில் 19-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    சென்னை:

    பாரதிய ஜனதா மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையாக கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் ஏழை, எளிய மக்களும், நடுத்தரவர்க்க மக்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

    வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்து உடமைகள் பாழாகின. தினசரி வேலைவாய்ப்பை நம்பி இருப்பவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

    எனவே பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் தர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

    அண்ணாமலை

    ஆகவே பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களில் பா.ஜனதா கட்சியின் சார்பில் வருகிற வெள்ளிக்கிழமை (19-ந்தேதி) அன்று காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் கீழ்கண்ட பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கலந்துகொள்ளும் பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:-

    காஞ்சிபுரம்-டால்பின் ஸ்ரீதர், லோகநாதன்

    செங்கல்பட்டு- கரு.நாகராஜன், தங்ககணேசன்

    திருவள்ளூர் கிழக்கு- முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி, தொழில் பிரிவு- பாஸ்கர்

    திருவள்ளூர் மேற்கு- சக்ரவர்த்தி, அரசு தொடர்பு பிரிவு பாஸ்கரன்

    சென்னை கிழக்கு- முன்னாள் எம்.எல்.ஏ. ராதா ரவி, மீனாட்சி நித்யசுந்தர்

    தென்சென்னை- முன்னாள் எம்.பி. வி.பி.துரைசாமி, முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன்

    மத்திய சென்னை கிழக்கு- நடிகை குஷ்புசுந்தர், வினோஜ் பி.செல்வம்

    மத்திய சென்னை மேற்கு- பால்கனகராஜ், குமரிகிருஷ்ணன்

    வடசென்னை கிழக்கு- நகைச்சுவை நடிகர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம்

    வடசென்னை மேற்கு- சுமதி வெங்கடேஷ், காயத்ரி ரகுராம்

    சென்னை மேற்கு- எம்.என்.ராஜா, ஆசிம்பாஷா

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் குறைக்கவில்லை என்று அண்ணாமலை கூறினார்.
    தூத்துக்குடி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளசேத பாதிப்புகளை பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று பார்வையிட்டார்.

    முன்னதாக அவர் விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக கூறி உள்ளது.

    ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.

    அந்த வகையில் இந்த தொகை மிகவும் குறைவு.

    எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விவசாயிகளை நண்பர்களாக பார்த்த தி.மு.க. தற்போது இவ்வளவு குறைவான தொகையை அறிவித்து உள்ளது விவசாயிகளிடம் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது.

    எனவே இந்த நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது எப்படி பார்க்கின்றார் என்று தெரியவில்லை.

    தமிழக முதல்-அமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிகழ்ச்சியினை ஒரு ‘டூரிஸ்ட் பேக்கேஜ்’ மாதிரி செய்கின்றனர்.

    மழை வெள்ள பாதிப்பு பார்வையிட செல்லும் முதல்-அமைச்சர் விவசாய நிலங்களில் இறங்கி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வாய்ப்பாக அமையும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் கருத்தியல் மண்டபத்தில் அமர்ந்து இன்னொருவர் சொற்பொழிவை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல. தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள் (19-ந்தேதி) 11 மாவட்டங்களில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.

    தி.மு.க. பெட்ரோல் விலையை ரூ.5 குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு ரூ.3 மட்டுமே குறைத்து உள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் குறைக்கவில்லை. எனவே அதனை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இந்த மழைக்காலங்களில் தமிழக அரசும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் தீவிரமாக மக்கள் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
    சென்னை :

    சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக தியாகராயநகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் “மோடி கிச்சன்” நேற்று திறக்கப்பட்டது. இதை பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை திறந்துவைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. மக்களுக்காக சேவை செய்வதில் முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. மக்களுக்கு நம்முடைய இலவச தொலைபேசி எண் கொடுத்திருக்கிறோம். மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.

    அதேபோல, உணவு பொட்டலம் வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்காக இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.

    மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்தும் தமிழக அரசு ஏன் குறைக்கவில்லை?. இந்த மழைக்காலங்களில் தமிழக அரசும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் தீவிரமாக மக்கள் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

    குறைசொல்வதற்கு எதுவும் இல்லை. அதே நேரத்தில் நிவாரணம் கொடுக்க வேண்டியது மாநில அரசினுடைய கடமையாக இருக்கிறது. உடனடியாக யாரெல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்களோ அவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சென்னை கொளத்தூர் ஜவகர் நகருக்கு மழை வெள்ள பாதிப்பை படகு மூலம் சென்று பார்வையிட்ட அண்ணாமலை அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறியபோதும் தொடர்ந்து சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.
    சென்னை:

    முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    தமிழக அரசுதான் முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருவதாக  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார். இருந்தாலும் அணை திறக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 8ஆம் தேதி பாஜக சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

    இதேபோல் அதிமுக சார்பில் 9ம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    மத்திய அரசு வரியை குறைத்த பிறகும் பெட்ரோல்-டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு, மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் தீபாவளி பரிசு என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார். மத்திய அரசின் இம்முடிவினால் விலைவாசியும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு தாம் வரியைக் குறைத்ததோடு நில்லாது, மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட்வரியை குறைத்து, நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு எல்லா மாநிலத்தையும் கேட்டுக்கொண்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை தொடர்ந்து, பா.ஜ.க. ஆளும் பல அரசுகளும் இதைப் பின்பற்றி, மாநில அரசின் பெரும்பங்கான வாட்வரியை உடன் குறைத்து உத்தரவிட்டனர்.

    இதன்படி புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை ரூ.7-8 ரூபாயும் - டீசல் விலையை ரூ.9-10 ரூபாயும், குறைத்து உத்தரவிட்டது. புதுச்சேரி அரசு இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும், டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் குறைந்துள்ளது.

    இதர பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநில அரசுகளில் 7 ரூபாயும், உத்தரபிரதேச மாநில அரசில் 12 ரூபாயும், உத்தரகாண்ட் மாநில அரசில் 2 ரூபாயும் மாநில அரசின் வாட் வரியில் குறைத்துக் கொள்ளப்பட்டது.

    ஆனால் நம் தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. அரசு, மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது, பிறகு தேர்தல் சமயத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தது.

    இப்போது மத்திய அரசு தங்களுடைய பங்கிலே பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு பத்து ரூபாயும் குறைத்திருக்கும்போது, மற்ற மாநில அரசுகள் மக்களின் வரிச்சுமையை குறைத்திருக்கும்போது, தமிழக அரசு தன் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

    மாநில அரசு தங்கள் பங்கை குறைக்க முன் வந்தால்தான் குறைப்பதாக கட்டியம் கூறிய தமிழக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்?

    தமிழக அரசு தீபாவளி பரிசாக மக்கள் வரிச்சுமையை குறைக்க முன் வருமா? அப்படி குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ள மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றுமா? அல்லது வழக்கம் போல் நாடகங்களில் ஈடுபடுவார்களா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×