search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94886"

    மாவீரர் நாளை முன்னிட்டு ம.தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ சுடர் ஏற்றி வைத்து, மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
    சென்னை:

    மாவீரர் நாளை முன்னிட்டு, இன்று காலை 7 மணி அளவில், ம.தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில்,கழகப் பொதுச் செயலாளர் வைகோ கொட்டும் மழைக்கு இடையே சுடர் ஏற்றி வைத்து, தமிழ் ஈழப்போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

    இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.ராசேந்திரன், கே.கழக குமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மற்றும் எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்று புகழ் வணக்கம் செலுத்தினர்.

    சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித் தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட செய்தி, அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கின்றது.

    நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர். இரவுக் காவல் பணியில் இருந்தபோது, ஆடு திருடிச் சென்றவர்களைப் பின் தொடர்ந்து, 15 கிலோமீட்டர் தொலைவு விரட்டிச் சென்றார் என்பது, அவரது துணிச்சலையும், கடமை உணர்வையும் காட்டுகின்றது.

    புதுக்கோட்டை எஸ்ஐ

    அவரது உடல், உரிய சிறப்புகளுடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித் தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கின்றது. குற்றத் தொடர்பு உடைய 4 பேர்களைக் காவல் துறையினர் பிடித்து இருக்கின்றார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என்ற நிதியமைச்சர் அறிவிப்பு வேதனை அளிக்கிறது: ஓ.பி.எஸ்.

    ம.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ம.தி.மு.க. சட்ட திட்ட விதி எண்: 23-ன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

    வைகோ


    ம.தி.மு.க. சட்ட திட்ட விதி எண்: 26-ன்படி, தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும், கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது.

    கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக் கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.

    கழகப் பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக் கழகச் செயலாளர் மேற்கொள்வார்.

    கழகத்தின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்; அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல் தலைமைக் கழகச் செயலாளரின் பணி ஆகும்.

    ம.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (ம.தி.மு.க. ஐ.டி. விங்) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார்.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.


    வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான். எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது.
    சென்னை

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன்’ என்று பேசி இருக்கின்றார். மேலும் ‘உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை’ என்று அவர் கூறி இருப்பது, அரசு அமைப்பு சட்டத்துக்கு எதிரான அடக்குமுறை போக்கு ஆகும்.

    உள்துறை அமைச்சகத்தில் இருந்து இந்தியில் கடிதங்கள் வந்தால், தமிழக அரசு திருப்பி அனுப்ப வேண்டும். வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான். எனவேதான், தந்தை பெரியார், ‘வெள்ளையன் வெளியேறுகின்றான்; ஆனால் தமிழன் இந்திக்காரனுக்கு அடிமை ஆகின்றான்’ என்று சொன்னார். அந்த நிலைமைதான் இன்றைக்கும் நீடிக்கின்றது. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ஏற்கனவே காத்திருப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சிக் கழகம், இனி, ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தித்தான் தேர்வு செய்ய வேண்டும் என, ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த அறிவிப்பில், விதி 5-ன்படி, ஏற்கனவே பணி நியமன நடவடிக்கைகளில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு பொருந்தாது என விதிவிலக்கு அளித்தது.

    பதிவு மூப்பு அடிப்படையில், சான்று ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்தபிறகு, 1258 பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் உட்பட சுமார் 5000 பேர் பணி நியமனம் கிடைக்கப் பெறாமல் உள்ளனர். அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

    அந்த வழக்கில், ‘2012-க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்கள், கிளாஸ் 5 விதியின்படி. இனி, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டிய தேவை இல்லை; காலிப்பணி இடங்கள் ஏற்படும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

    தற்போது, தமிழ்நாடு முழுமையும் அரசுப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து இருப்பதாக, அரசு அறிவித்து இருக்கின்றது. எனவே, பல்லாயிரக்கணக்கான புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. விரைவில், புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருக்கின்றார்.

    இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே காத்திருப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மேல்சபை எம்.பி.யாக்கி அழகு பார்த்த தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று நாஞ்சில் சம்பத் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள், நீட் தேர்வு போன்றவற்றிற்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தராத பாரதிய ஜனதா ஆட்சிக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி, கேரளாவில் முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது போன்ற செயல்களுக்கு தமிழக மக்கள் தேர்தல் மூலம் பதில் கூறி உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள சிலரை வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பாரதிய ஜனதா போட்ட கணக்கு தோல்வி அடைந்து விட்டது. தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு கிடைத்த தோல்வி, இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக வாக்காளர்களை போல இந்திய வாக்காளர்கள் விழித்திருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

    தமிழகத்தின் வடமாவட்டங்களில் வலிமையாக இருந்த பா.ம.க., பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் கணக்கை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் வலம் வந்த தே.மு.தி.க.வும் மக்களால் புறம் தள்ளப்பட்டுள்ளது.

    தமிழக மக்கள் இத்தேர்தலில் மண் சார்ந்து, மக்கள் நலம் சார்ந்த சிந்தனையுடன் செயல்பட்டுள்ளனர். இதனால்தான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

    தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நான், பிரசாரம் செய்தபோதே, தி.மு.க. கூட்டணிக்கு 38 தொகுதிகள் கிடைக்கும் என்று கருதினேன். தேர்தல் முடிந்ததும் இதனை தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அதுதான் இப்போது நடந்துள்ளது.

    தமிழகத்திற்கு இனி மு.க. ஸ்டாலினின் தலைமைதான் தேவை. அது காலத்தின் கட்டாயமும் ஆகும்.

    தேர்தல் களத்தில் நின்ற டி.டி.வி. தினகரன் கும்பல் தேர்தலில் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். குறிக்கோள் இல்லாமல் ஒரு சிலருக்காக மட்டும் கட்சி நடத்தியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டி உள்ளனர்.

    இந்த தேர்தலில் கமல்ஹாசனுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. இனி அவர், அடுத்த தேர்தலுக்கு தான் மக்கள் முன் வருவார். அப்போது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டு அரசியலில் இருந்து வெளியேறுவார்.

    ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியை பாராட்டி பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர், பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு முகமாகவே இருக்கிறது.

    மத்திய மந்திரிசபையில் தமிழகத்திற்கு இடமில்லை. எந்த பதவியும் யாருக்கும் வழங்கப்படவில்லை. இதை நான், ஏற்கனவே எதிர்பார்த்தேன். பிரதமர் மோடி, புதிய இந்தியா என்று கூறி புறப்பட்டு விடுவார். இனி தமிழகத்தை கண்டுகொள்ள மாட்டார்.



    தேர்தலில் களப்பணியாற்றிய வைகோவிற்கு மேல்சபை எம்.பி. பதவி வழங்கி ஏற்கனவே தி.மு.க. அழகுப்பார்த்துள்ளது. இப்போது மீண்டும் அவருக்கு மேல்சபை எம்.பி. வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தி.மு.க.வின் கொள்கைகளுக்கும், ம.தி.மு.க.வின் கொள்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே வைகோ மீண்டும் தி.மு.க.வில் இணைய வேண்டும். தென்தமிழகத்தின் குரலாக வைகோவின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    தமிழகத்தின் தேனி தொகுதியில் காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இது இளங்கோவன் மீது திணிக்கப்பட்ட தோல்வி ஆகும். தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 13 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இது அ.தி.மு.க.வினர் வசம் இருந்து தி.மு.க.விற்கு கிடைத்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்ற 9 தொகுதிகளிலும் பணம் பாதாளம் வரை பாய்ந்தது.

    நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் வரும். அங்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களே வெற்றி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 19.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன்? என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கடந்த 15-ந்தேதி நான் அறிக்கை விடுத்திருந்தேன். நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம், டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    தமிழகத்தின் சார்பாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர் அளித்த பேட்டியில், “காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் காவிரியில் 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் எதிர் பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்?.

    தென்மேற்கு பருவமழை தொடங்கும்பொழுது கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது.

    கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் தமிழகத்திற்கு 19.5 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தாதது ஏன்?

    குறுவைச் சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி ரஜினி மற்றும் கமலுக்கு விடுத்துள்ள அழைப்பு தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என வைகோ கூறியுள்ளார்.
    நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

    தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.  இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என வைகோ பேட்டியளித்து உள்ளார்.
    வைகோவின் தேர்தல் ராசியை மீம்ஸ் மூலம் விமர்சித்தவர்களுக்கு ம.தி.மு.க.வினர் சுவரொட்டி மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தியும் வெற்றி பெற்றார்.

    தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் வைகோ இருக்கும் கூட்டணி வெற்றி பெறாது என்றும், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகியவற்றில் வைகோ இடம் பெற்றிருந்த கூட்டணி தோல்வியடைந்ததால் அவரது அரசியல் ராசியை விமர்சித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களுடன் பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பும் வைகோவை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டன. இது ம.தி.மு.க.வினருக்கு மனவேதனை அளித்தது.

    இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த ம.தி.மு.க.வினர் ‘வைகோவின் ராசி எப்புடி?’ என்ற தலைப்பிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில் வைகோவின் படத்துடன் கருணாநிதி, ஸ்டாலின் படங்களும் இடம் பெற்றுள்ளன.

    தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை. கலைஞரின் தம்பிக்கு ராசி முக்கியமில்லை. கொள்கையும், வெற்றியும் தான் முக்கியம் என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

    இந்த சுவரொட்டி மூலம் வைகோவை தேர்தல் ராசியில்லாதவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ம.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இது ஒருபுறம் இருந்தாலும், வைகோவும், ராகுல் காந்தியும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த முறை வைகோவின் ராசி ராகுலை காவு வாங்கி விட்டது என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் மீண்டும் மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்”, என வைகோ கூறினார்.
    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளது. அதன்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்தநிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நேற்று சந்தித்தனர். அப்போது பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இருவருக்குமே, வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    எத்தனையோ தடைகளை உருவாக்கி பார்த்தும், கோடி கோடியாக பணத்தை கொட்டி பார்த்தும் தொல்.திருமாவளவனின் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு தாக்குதல்கள் அவர் மீது ஏவப்பட்டன. தடைகள் அனைத்தையும் தாண்டி மக்களின் நல் ஆதரவை பெற்று, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

    ஜனநாயக சுடர் தமிழகத்தில் அணையாமல், இந்தியாவுக்கே வழிகாட்டும் சுடராக பிரகாசிப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவானது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் பெற்ற வெற்றிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இது ஒரு புதிய திருப்பம். இருவருமே பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார்கள். எழுத்தால், பேச்சால், எண்ணத்தால், செயலால் அனைவரையும் வசீகரிக்கக்கூடிய தலைவர் திருமாவளவனும், அதேபோல நல்ல நட்புடன் பழகும் எழுத்தாளரும், சிந்தனையாளருமான ரவிக்குமாரும் எம்.பி.க்களாக பாராளுமன்றத்துக்கு தமிழகத்துக்காக குரல் எழுப்ப செல்ல இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அடுத்த மாதம் நடைபெறும் மேல்சபை தேர்தலில் வைகோ மற்றும் அன்புமணி எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேல் சபை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 18 மேல்சபை இடங்கள் உள்ளன. ஒரு மேல்சபை இடத்தை பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற வேண்டும். ஒரு மேல்சபை எம்.பி.யின் பதவி காலம் 6 ஆண்டுகள். இவை சுழற்சி முறையில் காலியாகும்.

    மேல்சபை உறுப்பினர்களில் 6 பேரது பதவி காலம் ஜூலை 24-ந்தேதி முடிகிறது. வி.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன் (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஆகியோரது பதவி காலம் முடிகிறது.

    இதனால் புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கட்சி மேல்சபையில் ஒரு இடத்தை இழக்கிறது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மேல்சபை எம்.பி. பதவியை பெறுகிறது.

    234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எண்ணிக்கை 110ஆக இருக்கிறது. டி.டி.வி. தினகரன் ஒரு தொகுதியில் உள்ளார்.

    இதன்மூலம் மேல்சபையில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.


    ஒரு உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதன்மூலம் அ.தி.மு.க.வில் 3 மேல்சபை உறுப்பினர்களுக்கு 102 பேர் தேவை. 21 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியில் உபரியாக இருப்பார்கள்.

    பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்சபை தொகுதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேல்சபை எம்.பி.யாகிறார். அவர் ஏற்கனவே 2004 முதல் 2010 வரை மேல்சபை எம்.பி.யாக இருந்தார்.

    தி.மு.க.வில் 3 மேல்சபை உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு 8 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருப்பார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க.வுக்கு ஒரு மேல்சபை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியது. அதன்படி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

    அ.தி.மு.க.வில் இருந்து மற்ற 2 மேல்சபை உறுப்பினராக யார்? தேர்வு செய்யப்படுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது மேல்சபை எம்.பி.யாக உள்ள மைத்ரேயன் மீண்டும் அந்த பதவியை கேட்பதாக தெரிகிறது. இதேபோல கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தம்பி துரையும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்பதாக தெரிகிறது. அ.தி.மு.க. இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

    தி.மு.க.வில் உள்ள எஞ்சிய 2 இடத்தில் ஒரு தொகுதியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காங்கிரசுக்கு கொடுத்த போது மீதமுள்ள ஒரு எம்.பி. பதவியை தி.மு.க. யாருக்கு கொடுக்க போகிறது என்று தெரிவில்லை. தி.மு.க. தலைமை இது குறித்து விரைவில் முடிவை அறிவிக்கும்.

    மத நல்லிணக்கத்தை உருவாக்கி அமைதி நிலவும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    பாராளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, 2–வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கிற நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



    இதற்கிடையே சமீபத்தில் மத்திய பிரதேசத்திலும், குஜராத்திலும், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடைபெற்று இருக்கின்ற வன்கொடுமைகள், நரேந்திர மோடியின் அடுத்த 5 ஆண்டு கால ஆட்சியின் மீது அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனைப் பாதுகாத்து, மத நல்லிணக்கத்தை உருவாக்கி, நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×