search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல்"

    ‘பொங்கல்’, ’தமிழர் திருநாள்’ என்பவற்றை தவிர தை முதல் நாளான இன்றைய தினத்திற்கு தமிழர்களாகிய நாம் நினைத்து, நினைத்து பெருமையும் பூரிப்பும் அடையக்கூடிய மற்றொரு தனிப்பெரும் வரலாற்று சிறப்பும் உள்ளது. #happypongal2019
    மொகலாய மன்னர்களிடமும், வெள்ளயரிடமும் நமது தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்த வேளையில், டெல்லியை தலைமையிடமாக அமைத்துக் கொண்டுதான் ஆட்சியாளர்கள் நம் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்.

    இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய-அன்றைய காலகட்டத்தில் (தற்போதைய) ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்து வந்த வெள்ளையர்கள், இப்பகுதி முழுவதையும் ‘மெட்ராஸ் பிரெசிடென்சி’ (சென்னை மாகாணம்) என்றே அழைத்து வந்தனர்.

    தற்போது, காஷ்மீரில் உள்ளது போல் சென்னை மாகாணத்தின் கோடைக்கால தலைநகரமாக உதகமண்டலமும் (ஊட்டி), குளிர்கால தலைநகரமாக 'மெட்ராஸ்' என்றழைக்கப்பட்ட தற்போதைய சென்னை நகரமும் இருந்து வந்தது.

    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1944-ம் ஆண்டு பகுத்தறிவு தந்தை பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய ஈ.வே.ரா.பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து திராவிடர் கழகத்தைதை விலக்கிக் கொண்டார்.

    1946-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. சென்னை மாகாணத்தின் முதல்வராக த. பிரகாசம் 11 மாதங்கள் பதவியில் இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். 

    15-8-1947-ல்  இந்தியா விடுதலையடைந்த பிறகு சென்னை மாகாணம் ‘சென்னை மாநிலம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. 26-1-1950 அன்று இந்தியா குடியரசு நாடான பின்னர் இந்திய குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக சென்னை மாகாணம் மாறியது.  
     
    தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அறிஞர் அண்ணா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க.என்ற தனிக்கட்சியை தொடங்கினார். 1967-ல் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் மூன்றாவது சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 138 இடங்களை வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

    சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக 6-2-1967 அன்று அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, ‘தமிழர்களின் கலாச்சார-பண்பாட்டு பெருமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக சென்னை மாகாணம் என்ற பெயரை “தமிழ்நாடு” என மாற்றம் செய்ய வேண்டும்’ என்று தந்தை பெரியார் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வந்தார்.

    இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். ஆனால், அவரது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலமாத்தில் தைத்திங்கள் முதல்நாளன்று (14-1-1969) சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர், இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு ‘தமிழ்நாடு’ என்ற தேனினும் இனிய, அழகிய செந்தமிழ் பெயரால் இந்திய மக்களாலும், உலக மக்களாலும் நமது பெருமைக்குரிய மாநிலம் அழைக்கப்பட்டு வருகிறது.

    தமிழர்கள் போற்றிப் பெருமைப்படக் கூடிய அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ‘தைப் பொங்கல்’ இன்பத் திருநாளில் தான் நிறைவேற்றபட்டது என்ற பூரிப்பான செய்தியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு... குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வது இன்றைய பொங்கல் திருநாளின் சிறப்பினை மேலும் இரட்டிப்பாக்கும் என்று ‘மாலை மலர் டாட்.காம்’ உறுதியாக நம்புகிறது.

    எங்களது அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த-இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!  வாழ்க.. வளமுடன்!! #historicpride #Pongalday #prideforTamilians #Tamilians #happypongal2019
    பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், தமிழர்களுக்கும், தன் வீட்டின் முன் நின்ற ரசிகர்களுக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Rajini #Pongal
    தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் உற்சாக கொண்டாடப்படுகிறது.



    திரை நட்சத்திரங்களான பலரும் தங்களுடைய ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்றார்.
    பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்ந்து உள்ளது. ஒரு ஜோடி கரும்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #sugarcane #pongalfestival
    ஊட்டி:

    தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு சமவெளி பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறும். நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் உறியடித்தல், பொங்கல் வைத்தல், கும்மி ஆட்டம் போன்றவற்றில் பொதுமக்கள் கலந்துகொண்டு உற்சாகம் அடைவார்கள்.
     
    பொங்கல் பண்டிகையில் இனிப்பான, தித்திப்பான மனதில் நீங்கா இடம் பெறுவது கரும்பு ஆகும். அதற்கு அடுத்த படியாக பொங்கல் வைக்க மண்பானைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, வாழைக்கன்று, மாலை இலை விளைவிக்கப்படுவது கிடையாது. அதன் காரணமாக அவை சமவெளிப் பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் ஊட்டிக்கு லாரிகள், சரக்கு வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு நேற்று சமவெளி பகுதியில் இருந்து 2 லாரிகளில் கரும்புகள் கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரியில் இருந்து கரும்புகள் கீழே இறக்கப்பட்டு, ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதிகளுக்கு விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. ஊட்டி மார்க்கெட்டில் கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கரும்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இருந்து ஊட்டிக்கு கரும்புகள் விற்பனைக்கு வந்து உள்ளன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மற்றும் ஆயுத பூஜையின் போது, ஒரு கரும்பு ரூ.40-க்கு விற்பனை ஆனது. தற்போது விலை உயர்ந்து ஒரு ஜோடி கரும்பு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ.850-க்கு விற்பனை ஆகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கியும் இன்னும் கரும்பு விற்பனை சூடு பிடிக்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #sugarcane #pongalfestival
    மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி தலைவர் சதீஸ்பாபு தலைமையில் நடைபெற்றது. பகீரத நாச்சியப்பன் வரவேற்று பேசினார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலி, வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:– 

    காலச் சூழலில் நீங்கள் எந்த நிலையிலும் உயரலாம். யாருக்கும் எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் உண்டு. நமக்கு நல்ல பழக்கவழக்கம், தன்னம்பிக்கை, நாணயம், நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் உயரலாம். மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.

    நமது மாவட்டத்தில் உள்ள வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே மனையிடம் இருந்தால் அவர்களுக்கு வீடு கட்ட அரசு உதவி செய்யும். மாற்றுதிறனாளிகளுக்கு உதவிடும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. இந்த அரசு தொடர்ந்து உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாற்றுதிறனாளிகள் மாவட்ட அலுவலர் சரவணகுமார், பேராசிரியர் ஆனந்தசெல்வம், டாக்டர் தீபக், மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பிரபாகரன், பொருளாளர் லட்சுமணன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சசிகுமார், மோகன், பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பொங்கல் பண்டிகையையொட்டி காராமணிக்குப்பம் சந்தையில் கருவாடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பத்தில் திங்கட்கிழமை தோறும் வாரசந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி காய்கறிகள், பழங்கள், பூச்செடிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையை முன்னிட்டு இங்கு சிறப்பு சந்தை நடத்தப்படும்.

    போகி பண்டிகையையொட்டி காராமணிக்குப்பத்தில் சிறப்பு சந்தை இன்று அதிகாலை கூடியது. ஏராளமான கிராம மக்கள் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்து குவிந்தனர்.

    நாளை மறுநாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாடுகளுக்கு கட்டப்படும் மணிகள், வண்ணகயிறுகள் ஏராளமாக இன்று சந்தையில் விற்கப்பட்டது. வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் தங்களின் மாடுகளுக்கு தேவையான வண்ணக் கயிறுகள் மற்றும் மணிகளை வாங்கி சென்றனர்.

    மாட்டு பொங்கலையொட்டி அனைவரின் வீடுகளிலும் அசைவஉணவு படைப்பார்கள். இதில் பெரும்பாலானோர் கருவாடு சமைத்து படைப்பது வழக்கம்.

    இதையொட்டி இந்த சந்தைக்கு கடலூர் அருகில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து ஏராளமானோர் அதிக அளவில் கருவாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று ஏராளமான பொதுமக்கள் சந்தையில் விற்கப்பட்ட பலவகையான கருவாடுகளை வாங்கி சென்றனர். இன்று மட்டும் ரூ.5 லட்சத்துக்கு கருவாடுகள் விற்கப்பட்டது. மேலும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், பூச்செடிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் ரூ.45 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    பொங்கல் பண்டிகை நாளை என்பதால் இன்று வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வழக்கமான 2275 பஸ்களுடன் 1307 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Pongal2019 #TNBuses
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக அரசு சிறப்பு பஸ்களை மட்டுமின்றி இன்று (14-ந் தேதி) அரசு விடுமுறையாகவும் அறிவித்தது.

    இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்துள்ளது.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் தினமும் இயக்கப்பட்டன. இன்று 4-வது நாளாக சிறப்பு பஸ்கள் சென்னையில் 5 இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. நேற்று வரை 5 லட்சம் பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.

    பொங்கல் நாளை என்பதால் இன்று வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று வழக்கமான 2275 பஸ்களுடன் 1307 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தை பொறுத்து கூடுதலாகவும் பஸ்களை இயக்க தயாராக வைத்துள்ளனர்.

    முன்பதிவு செய்த பயணிகளை விட முன்பதிவு செய்யாமல் வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை உயர்வாக உள்ளது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்வதால் பயணிகள் கூட்டத்தால் பஸ் நிலையம் நிரம்பி வழிந்தது. இது தவிர சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், வந்தவாசி போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன.

    போக்குவரத்து கழக அதிகாரிகள் பொதுமக்களின் தேவை அறிந்து கூட்டத்தை பொறுத்து பஸ்களை இயக்கி வருகிறார்கள்.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திண்டிவனம் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பொதுமக்கள் பஸ் நிலையங்களுக்கு செல்ல மாநகர இணைப்பு பேருந்துகள் அதிகளவு விடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பஸ்கள் பஸ் நிலையங்களுக்கு சென்று வருகின்றன.

    பஸ் நிலையங்களை போல சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் கூட்டம் இன்று அலைமோதியது. எழும்பூரில் இருந்து பகல் நேரத்தில் சென்ற ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    குருவாயூர் எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி எக்ஸ்பிரஸ், வைகை, பல்லவன் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மக்கள் இடம் பிடிக்க நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

    சென்ட்ரலில் இருந்து சேலம், திருப்பூர், கோவை மற்றும் திருவனந்தபுரம் செல்லும் ரெயில்களிலும் இடங்கள் இல்லாமல் மக்கள் நின்றவாறு பயணம் செய்தனர். #Pongal2019 #TNBuses
    நாளை பொங்கல் பண்டிகைக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று கரும்புச்சாறு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    பேரீச்சை - 10
    கரும்புச்சாறு - 1 கப்
    நெய் - சிறிதளவு
    முந்திரி பருப்பு - 10
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு



    செய்முறை :

    பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனை பச்சரிசியோடு சேர்த்து நீரில் கழுவி குக்கரில் கொட்டவும்.

    அதனுடன் கரும்புச் சாறு மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    நான்கு விசில் வந்ததும் இறக்கி ஆறவைக்கவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி, ஏலக்காய்த்தூள், பேரீச்சை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

    பின்னர் அதனை பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கி ருசிக்கவும்.

    சூப்பரான கரும்புச்சாறு பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும். அதற்கான விவசாயம், இந்நாளில் தொடங்கட்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Pongal #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து வருமாறு:-

    எத்தனையோ விழாக்கள் உண்டு. அவை மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம், ஊருக்கு ஊர் மாறுபடும். வேறுபடும். ஆனால், ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் இருக்கும் ஒரே விழா இதுதான். உயர்வு தாழ்வற்ற சமத்துவ விழா.

    இலக்கியத்துக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் மண்ணுக்கும் இலக்கணம் வகுத்தவன் தமிழன். மண்ணும், மக்களுமானது தான் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை. உழவே நமது உயிர். மாடுகள் நமது செல்வங்கள். அதனால் தான் மண்ணைக் காப்பதற்கு நாம் போராடுகிறோம். ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறோம்.



    கீழடியைக் காப்பாற்றப் போராடுகிறோம். மேகதாதுவை தடுக்கப் போராடுகிறோம். இந்தப் போராட்டங்களில் அரசியல் இல்லை; நம் வாழ்க்கை இருக்கிறது. தமிழர்களின் எதிர்காலம் இருக்கிறது. அதனால் தான் வாழ்க்கையையும், அதனோடு தொடர்புடைய விழாவையும் ஒருசேர வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

    அத்தகைய உழவர் வாழ்க்கை இன்று உற்சாகமாக இல்லை. அனைத்துத் தரப்பு மக்களின் துன்ப துயரங்கள் கவலைகள் சொல்லி மாளாது. இதற்கு காரணமான அரசுகள் அதுபற்றிய கவலைகள் இல்லாமல் இருப்பதும் உண்மைதான்.

    இவர்களை வாழ்த்தும் ஜனநாயகப் போர்க்களம் நம்மை விரைந்து அழைக்கிறது. அதற்கு முன்னதாக உற்சாகத்தை வழங்கும் விழாவாக பொங்கல் திருநாள் வருகிறது.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டிப் போற்றப்பட்ட தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொங்கல் திருவிழாவுடன் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடிட, 1921-ம் ஆண்டு தமிழ் புலவர்கள் கூடி முடிவெடுத்ததை 2006, 2011 ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தியவர் கலைஞர். அதன்படி, தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும். அதற்கான விவசாயம், இந்நாளில் தொடங்கட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Pongal  #MKStalin

    பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். #Pongal2019 #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமுதாயத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் பொங்கல் திருநாள் மேலும் கொண்டுவர மனமார பிரார்த்திக்கிறேன்.



    தேசத்துக்கு உணவளிக்க கடுமையாக உழைத்திடும் விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Pongal2019 #PMModi
    பொங்கல் பண்டிகையையொட்டி மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். #Pongal2019 #MarinaBeach
    சென்னை:

    தை முதல் நாளான நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் மாட்டுப் பொங்கலும், 17-ந் தேதி காணும் பொங்கலும் களை கட்டும். அன்றைய தினம் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி பொழுதை கழிப்பார்கள். அன்று காலையிலேயே இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் உணவு வகைகளை சமைத்து எடுத்துச்சென்று அங்கேயே சாப்பிடுவார்கள். மாலையில்தான் வீடு திரும்புவார்கள்.

    மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்படும்.

    மெரினாவில் கடலில் இறங்கி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையையொட்டியுள்ள பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி முழுவதையும் கண்காணிப்பதற்காக 6 இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.


    அங்கிருந்தபடி பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிப்பது எளிதாகிறது. கடலில் இறங்கி குளிப்பவர்களை கட்டுப்படுத்த குதிரை படை வீரர்களும் இப்போதே ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு வசதியாக குழந்தைகளின் கைகளில் பெற்றோர் மற்றும் போலீஸ் அதிகாரியின் செல்போன் எண்கள் இடம்பெறும் வளையமும் கட்டப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முறை இந்த ஆண்டும் காணும் பொங்கல் தினத்தில் கடைபிடிக்கப்பட உள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாமல்லபுரத்திலும் பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் திரளுவார்கள் என்பதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Pongal2019 #MarinaBeach
    காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்கள் 3,186 பேருக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கத்தை எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் (நிலை1 மற்றும் நிலை2), தலைமைக் காவலர் (ஆண்கள்/பெண்கள்), சிறப்பு சார்பு ஆய்வாளர் (ஆண்கள்/பெண்கள்) மற்றும் ஆயுதப்படையில் ஹவில்தார் நிலைகளில் (ஆண்கள்/பெண்கள்) பணிபுரியும் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர், கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்கள்) 60 பணியாளர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு மாதாந்திர பதக்கப்படியாக தலா ரூ.400/- 2019 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் காவல் துறை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இயக்குநர், மற்றும் சிறைத்துறை தலைவர் அவர்களால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் 1500 பதக்கமாக வழங்கப்பட்டு வந்த காவல் பதக்கம் 3000மாக உயர்த்தப்பட்டது.

    மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற் சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது.

    இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்கத் தொகையாக காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூபாய் 4 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூபாய் 6 ஆயிரமும், காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்படும். இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, முதலமைச்சரால் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNCM #Edappadipalaniswami
    பொங்கல் பண்டிகை சூரியனுக்கு நன்றி கூறும் விழா. பொங்கல் பண்டிகையன்று விரதம் இருந்து பொங்கலிடுவதிலும் சில விதிமுறைகள் உள்ள‌ன.
    பொங்கல் பண்டிகை சூரியனுக்கு நன்றி கூறும் விழா. பொங்கல் பண்டிகையன்று விரதம் இருந்து பொங்கலிடுவதிலும் சில விதிமுறைகள் உள்ள‌ன. பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகைக்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு, வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டின் முற்றத்தில் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது.

    துன்பங்கள் விலகி மங்கள வாழ்வும், இன்பமும் நிலைக்க காவி பூசப்படுகிறது. அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் படைக்க வேண்டும். விநாயகரை முதலில் மனதில் நினைத்து, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ஒரு புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிடவேண்டும். பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால் அடுப்பில் நெருப்பை உண்டாக்கி பற்ற வைக்க வேண்டும். பின்னர் கணவரும், மனைவியும் சூரியனை வணங்கி, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்து பானையை பக்குவமாக, தம் கைகளால் பற்றி பிடித்து தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும்.

    பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று உரத்தக் குரல் எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி சூரியபகவானை வணங்கியபடி பானையின் வாய்விளம்பினை 3 முறை சுற்றி பானையில் இடவேண்டும்.

    பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு படைத்து பழங்கள், கரும்பு முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும், மூதாதையர்களையும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பிறகு காக்கைக்கு உணவு வைத்துவிட்டு குடும்பத்தினருடன் அமர்ந்து பொங்கல் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
    ×