என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்ஜிஆர்"
சென்னை:
எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானம் செய்தவரும், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகளுமான லீலாவதி (வயது 72) சென்னையில் இன்று மரணம் அடைந்தார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது திருமணமாகியிருந்த நிலையிலும் லீலாவதி கணவரின் ஒப்புதலுடன் தனது சித்தப்பா எம்.ஜி.ஆருக்குச் சிறுநீரக தானம் செய்ய முன் வந்தார்.
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனக்குச் சிறுநீரக தானம் கொடுத்தது லீலாவதிதான் என முதலில் எம்.ஜி.ஆருக்குத் தகவல்கள் சொல்லப்படவில்லை.
சில நாட்களுக்குப் பின்னர், உடல்நலம் பெற்றுத் திரும்பிய எம்ஜிஆருக்கு, நாளிதழ் ஒன்றின் மூலமே தகவல் தெரிய வந்தது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு லீலாவதி சென்னையில் பெருங்குடிப் பகுதியில் தனது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். வயோதிகத்தின் காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு ஜெம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போகும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.
அவருடைய ஹேமா முரளி என்ற மகள் மஸ்கட்டில் கணவருடன் வசித்து வருகிறார். மினி நந்தன் என்ற மகள் சென்னையில் வசித்து வருகிறார். லீலாவதியின் உடல் பெருங்குடியில் அவரது மகள் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 5 மணியளவில் ஏரிக்கரை மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
நம்மை எல்லாம் ஆளாக்கிய அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி அம்மையார் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆறறொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம். எம்.ஜி.ஆர். 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து நம் புரட்சித் தலைவரை வாழவைத்த போற்றுதலுக்குரிய பண்பாளர் லீலாவதி அம்மையார். 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து, இன்று இயற்கை எய்தியதை அறிந்து எம்.ஜி.ஆரின் கோடானு கோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.
அன்பு சகோதரி லீலாவதி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார்-உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மழை தொடர்ந்து பெய்வதால் கொளத்தூர் பகுதியில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
தேர்தல் களம் பரபரப்பும், சுவாரஸ்யமும் நிறைந்தது. அது வெளிப்படும்போது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படும்.
நாளை மறுநாள் (18-ந் தேதி) 17-வது பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களையும் பார்த்தவர்களும், ஓட்டளித்தவர்களும் இருப்பது அரிது.
தென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய கண்ணம்மாள் என்ற மூதாட்டி வாழ்கிறார். 102 வயதாகும் அவர் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன்களை பார்த்தவர். கந்தன்சாவடி அண்ணா நெடுஞ்சாலையில் வசித்து வருகிறார்.
அந்த பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவு திரட்டி வரும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் இன்று கண்ணம்மாள் வீட்டுக்கு சென்றார். தள்ளாத வயதிலும் தன்னை பார்க்க வருபவர்களை அடையாளம் பார்த்து அவர்களிடம் பேசுகிறார். அவரிடம் பாட்டி ஓட்டு கேட்க வந்திருக்கிறோம் என்றதும் உற்சாகத்தில் பேச தொடங்கினார்.
பேராண்டி, அந்த காலத்தில் இருந்தே ஓட்டு போடுகிறேன். அப்பெல்லாம் இப்படி கிடையாது. இப்ப திருவிழா மாதிரி நடக்குதே... என்று கூறி சந்தோஷப்பட்டார். அவரிடம் பிளாஸ்டிக்கால் ஆன இரட்டை இலை சின்னத்தை கொடுத்து பாட்டி மறக்காம இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்றதும் கண்ணம்மாளின் கண்களில் அப்படி ஒரு ஆனந்தம். “மவராசன் எம்.ஜி.ஆர். அவருக்கு நிறைய தடவை இரட்டை இலையில் ஓட்டு போட்டிருக்கேன். நீங்களும் அந்த மவராசன் சின்னத்துக்குத்தான் ஓட்டு கேட்டு வந்திருக்கீங்களா... கண்டிப்பா இரட்டை இலைக்கு போடுவேன்பா என்றார்.
102 வயதிலும் எம்.ஜி.ஆரையும் அவர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னத்தையும் கண்ணம்மாள் பாட்டி நினைவில் வைத்திருந்ததை பார்த்ததும் வாக்கு கேட்டு சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.
இதுபற்றி கே.பி.கந்தன் கூறும்போது, இதுதான் இரட்டை இலையின் வெற்றி. இது வெறும் சின்னம் மட்டுமல்ல, மக்களின் எண்ணம். எந்த காலத்திலும் அவர்கள் உணர்வில் இருந்து இரட்டை இலை மறைய போவதில்லை என்றார். பின்னர் கண்ணம்மாளிடம் ஆசி பெற்று அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். #Loksabhaelections2019
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாரிசு மட்டும் அல்ல சாதாரண வார்டு கவுன்சிலர் வாரிசுகள் கூட இன்று பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்.
பங்களா, சொகுசு கார் என ‘லக்சரி’ வாழ்க்கை அவர்களை தொற்றி கொள்கிறது.
ஆனால் சென்னையில் முன்னாள் எம்.பி. ஒருவரின் மகன் குடியிருக்க வீடு கூட இல்லாமல் தெருவில் வசிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
அந்த முன்னாள் எம்.பி.யின் பெயர் எஸ்.கே. சம்பந்தன். 1967-ல் திருத்தணி தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர். அதற்கு முன்பு காங்கிரசில் இருந்த அவர் எம்.எல்.சி. ஆகவும் இருந்துள்ளார்.
இவருடைய மகன் பாலு (வயது65) என்பவர் தான் இந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவர் ஆதம்பாக்கம் பஸ் நிலையத்தில் வசித்து வருகிறார். அவரது சொத்தாக அழுக்கு படிந்த 2 கால் சட்டைகளும் ஒரு மேல் சட்டை ஆகியவை மட்டுமே உள்ளன.
பசி எடுக்கும் போது அருகில் உள்ள அம்மா கேண்டீனில் சாப்பிட்டு கொள்கிறார்.
இந்த பரிதாப நிலைக்கு ஆளானது எப்படி என்பது குறித்து அவரே விளக்கமாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
நாங்கள் ஒரு காலத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். எங்களுக்கு குறிஞ்சிப்பாடியில் ரைஸ்மில் எல்லாம் இருந்தது.
எனது தந்தை எம்.எல்.சி., எம்.பி. என பதவிகளில் இருந்தார். ஆனால் அரசியலில் எதுவும் சம்பாதிக்கவில்லை. தனது சொந்த பணத்தையும் கட்சிக்காக செலவிட்டார்.
அவர் எம்.பி.யாக இருந்தபோது எத்தனையோ தொழில் அதிபர்கள் அவரை சந்திக்க வருவார்கள். அவர் நினைத்து இருந்தால் அதை வைத்து எவ்வளவோ சம்பாதித்து இருக்கலாம். ஆனால் லஞ்ச, ஊழல் அவருக்கு பிடிக்காது. எனவே சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்தோம்.
நான் எனது தந்தையுடன் பல தடவை டெல்லிக்கு சென்று இருக்கிறேன். எனது தந்தைக்கு கார் டிரைவராகவும் பணியாற்றினேன்.
1971-ல் தி.மு.க. தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டபோது அதை எனது தந்தை விரும்பவில்லை. அப்போது ஏற்பட்ட பிரச்சனையால் அவர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் கட்சியில் இருந்தே விலகினார்.
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியபோது எம்.ஜி.ஆரே எனது தந்தையை தனது கட்சிக்கு வரும்படி அழைத்தார். மந்திரி பதவி தருவதாகவும் கூறினார். ஆனால் எம்.ஜி.ஆருடன் செல்ல மறுத்து விட்டார்.
இதன்பிறகு நாங்கள் பணக்கஷ்டத்துக்கு ஆளானோம். எங்களது ரைஸ்மில்லும் மூடப்பட்டது.
பின்னர் நான் டிரைவர் தொழில் செய்து வாழ்ந்து வந்தேன். எனக்கும் குடும்பம் இருந்தது. என்னால் சிறப்பாக செயல்பட்டு பணம் சம்பாதிக்க முடியவில்லை.
இந்த நிலையில் என்னை பக்கவாத நோய் தாக்கியது. அதனால் என்னால் தொழில் செய்ய முடியவில்லை.
பணம் இல்லாததால் உறவினர்களும், குடும்பத்தினரும் என்னை கை விட்டு சென்று விட்டனர்.
3 ஆண்டுகளாக ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்தேன். அந்த இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றினார்கள். நான் பக்கவாத நோயால் அவதிப்பட்டதால் என்னை புதிய இடத்துக்கு அழைத்து செல்ல மறுத்து விட்டனர்.
அதில் இருந்து வேறு வழி இல்லாமல் தெருவில் வசித்து வருகிறேன்.
பழைய நண்பர்கள் சிலர் அவ்வப்போது எனக்கு பணம் கொடுத்து உதவுகின்றனர். அதை வைத்து அம்மா கேண்டீனில் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs)
— Kasturi Shankar (@KasthuriShankar) April 9, 2019
சினிமா, அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூர் ஆகும்.
சிறுவயதில் இங்கு எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு வசித்தார். அவர் வசித்த வீடு தற்போது அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்த இந்த வீட்டை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி 2 முறை பராமரித்தார். அதன் பின்னர் அந்த வீட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீடு சிதிலமடைந்து குடியிருக்க முடியாமல் இருந்தது.
இது குறித்து அறிந்த சென்னை முன்னாள் மேயரும், எம்.ஜி.ஆர். பேரவைத்தலைவருமான சைதை துரைசாமி அந்த வீட்டை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். வசித்த வீட்டை புனரமைக்க முடிவு செய்தார்.
அதன்படி ரூ.50 லட்சம் செலவில் சிதிலமடைந்த வீட்டை புதுப்பொலிவுடன் மாற்றி எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக அமைக்கப்பட்டது. இந்த இல்லத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தொடர்ந்து செயல்படும்.
இதுகுறித்து எம்.ஜி.ஆரின் சகோதரரின் பேரன் கூறும்போது, எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த இல்லத்தை கேரள கவர்னர் சதாசிவம் திறந்து வைக்கிறார்.
கேரள மாநில கலாசார துறை அமைச்சர் பாலன், நீர்பாசன துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.
எம்.ஜி.ஆரின் நினைவுகளை அங்கிருந்தவர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். #MGRHouse
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
கிராம மக்கள் வாழ்க்கையில் பொருளாதாரம் அடையவேண்டும் என்பதற்காக கறவை பசுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கறவை பசுக்கள் மட்டுமின்றி இலவச ஆடுகளும் வழங்கப்படுகின்றன.
தமிழக பட்ஜெட்டில் கல்விக்கென ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ஆட்சி செய்தார்.
இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் சீனிவாசன் பேசும் கூட்டங்களில் எல்லாம் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்து வரும் நிலையில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த கூட்டத்திலும் சீனிவாசன் பேசிய பேச்சால் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய பட்ஜெட்டை பற்றி விமர்சனம் செய்திருப்பது அவரது சொந்த கருத்து. அதைப்பற்றி அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். தினகரனுக்கு பட்ஜெட் என்றாலே என்ன என்று தெரியாது. அவர் தமிழக பட்ஜெட்டை குறைசொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பேசி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 80 ஆயிரம் கிராமத்தில் இதுவரை யாரும் பஸ் மறியலில் ஈடுபடவில்லை. தமிழக பட்ஜெட்டை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார். தமிழக அரசியல் கட்சியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை கூறி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதன்பின்னர் தமிழக அரசின் சார்பில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, எம்ஜிஆர் சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர், அங்கு நடந்த விழாவில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர். #MGR #MGRCommemorativeCoin
அதன்படி அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு மகுடஞ்சாவடியில் இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.138 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நல உதவிகளையும் வழங்குகிறார்.
இந்த விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். #EdappadiPalaniswami #MGR #Jayalalithaa
திருவண்ணாமலை பஸ்நிலையம் அருகே உள்ள நினைவுத்தூண் அருகே கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டன. கிரிவலப்பாதையில் இந்த சிலைகள் அனுமதியின்றி வைக்கபட்டதாக கூறி வருவாய்துறையினர் மற்றும் போலீசார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளை இரவோடு இரவாக அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏறுபடுத்தியது.
புதிய மாவட்ட செயலாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை ஒன்றிய அ.தி.மு.க. கூட்டம் நடந்தது.
இதில் திருவண்ணாமலை நகர பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மீண்டும் நிறுவப்படும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கான பணிகளில் அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறுகையில்:-
திருவண்ணாமலையில் சிலைகள் வைக்க இடம் தேர்வு செய்யபட்டுள்ளது. ஒரு சில நாட்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் நிறுவப்படும் என்றார். #ADMK #MGR #Jayalalithaa
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில் உள்ள சில அம்சங்களை பார்ப்போம்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிசைப் பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்.
ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்.
புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
பாதுகாப்பு தளவாட உற்பத்திக்காக புதிய தொழிற்கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
அடுத்த தலைமுறைக்கான மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு சலுகைகள் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.
பழங்குடியினரின் எழுத்தறிவு நிலை குறைவாக உள்ளது; எனவே கூடுதல் பள்ளிகள் அமைப்பதற்காக புதிய திட்டம்.
அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவினை வெளிப்படையாக மீறுவதாக மத்திய அரசின் செயல் அமைந்துள்ளது. நீர் பகிர்வு உரிமையை பாரபட்சமின்றி பகிர்ந்துகொள்ளும் வகையில் செயல்பட்டால் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.
நீர்ப்பகிர்வு உரிமையை நிலைநிறுத்த மீண்டும் மீண்டும் சட்டநடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அரசு தள்ளப்படுகிறது. நதிநீர்ப் பிரச்சனையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNAssembly #AssemblySession #WaterDispute
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவியால் செழுமைப் பெற்ற சத்துணவு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தாமல், 25 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை மூட இந்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இந்த உத்தரவை எதிர்த்து நாளை (27-ந்தேதி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
25 மாணவர்களுக்கும் குறைவானவை என 8000 மையங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அதனை மூட இந்த அரசு முடிவு செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இது இத்திட்டத்தால் பயனடைந்துவரும் மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும், சமூக முன்னேறத்துக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறி உள்ளார். #TTVDhinakaran #NutritionCenters #TNGovt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்