search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • முருகனை பூஜிப்பதற்கு சிறப்பு பெற்ற தலங்கள் அறுபடை வீடுகள்.
    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடாகும்.

    1. முருகன் என்றால் அழகன் என்று பொருள். ஓம் என்ற பிரணவத்தின் வடிவமாக நின்றவன் முருகன். தர்மத்தை நிலைநாட்ட வடிவம் கொண்டவன் முருகன்.

    2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.

    3. முருகனை பூஜிப்பதற்கு சிறப்பு பெற்ற தலங்கள் அறுபடை வீடுகள். முருகனை பூஜிப்பதால் சிறப்பு பெற்ற தலங்கள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்கு பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

    4. ஆடி மாதம் திருக்கல்யாணம் நடைபெறும் விருத்தாசலம் பழமலை நாதர் திருக்கோவிலுக்கு வேலைப்பாடுகளுடன் கற்றளிகளை எடுத்தவர் கண்டராதித்த சோழரின் துணைவியான செம்பியன் மாதேவியார். ராஜராஜ சோழனின் பெருமை மிகு பாட்டியார். இந்த விருத்தாசலத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் பழமலைநாதருக்கு நான்கு திசைகளிலும் காவலாக முருகப்பெருமானே உள்ளார். கொளஞ்சியப்பர், வேடப்பர், வெண்மலையப்பர், கரும்பாயிரம் கொண்ட அப்பர் என ஆண்கள் அழைக்கப்படுகிறார்கள். இதில் கொளஞ்சியப்பர் கோவிலில் மூல விக்கிரகம் கிடையாது. வெறும் பீடத்தையே முருகனாக நினைத்து வணங்குவர்.

    5. சிவனுக்கு வில்வ இலை கிள்ளி வைத்து அர்ச்சித்தாலே சிவப்பேறு கிடைக்கும். சுப்பிரமணியர் திருச்செந்தூர், திருவிடைக்கழி ஆகிய இடங்களில் சிவ பூசை செய்து பேறு பெற்றார்.

    6. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடாகும். இங்கு கோவில் கொண்டுள்ள மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது. மேலும் ஒரு சிறப்பாக, ஒரு லட்சம் ருத்திராட்சக் கொட்டையால் ஆன ருத்திராட்ச மண்டபத்தில் உற்சவர் வாசம் செய்கிறார்.

    7. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மையுண்டாகும்.

    8. கந்த புராணத்தில் வரும் சுப்ரமண்ய தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்து பாவங்களும் நிவர்த்தியாகும். பாவங்கள் விலகி சகல விதமான நன்மையும், இறுதியில் மோட்சமும் கிடைக்கும். செவ்வாய் தோஷமுடையவர்கள் இதை படிக்க மிகவும் நன்மை பயக்கும்.

    9. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய் உகந்த நாட்கள் ஆகும்.

    10. திருவையாறில் உள்ள முருகப்பெருமான் தனுசு சுப்பிரமணியம், வில்வேள் நாயனார் என்னும் பெயருக்கு ஏற்றாற்போல் வில் மற்றும் படைக்கலங்கள் அனைத்தையும் ஏந்தியவராக காட்சி கொடுக்கிறார். மேலும் இங்குள்ள ஆட் கொண்டார் சன்னதியில் சதா சர்வ காலமும் குங்கிலியம் புகைந்து கொண்டே இருக்கிறது.

    11. செந்தமிழ் முருகனது கையைச் சார்ந்துள்ள உருவம் வள்ளி நாச்சி யாருடையது.இதனால் 'வானுதல் கணவன்' என்ற பெயரிட்டு அழைக்கப்படுகின்றார்.

    12. முருகக்கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்.

    13. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெரு மக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

    14. முருகப் பெருமானை முருகு, வனப்பு, எழில்,ஏர், கவின், அழகு முதலிய சொற்களால் அழைக்கிறார்கள்.

    15. முருகன் பற்றிய பல செய்தி கள் கோவிந்தையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம் ஆகிய இரண்டிலும் உள்ளன.

    16. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிலக்கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற் கொடி யோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

    17. சென்னைக்கு அருகிலுள்ள சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி ஆசியவியல் கல்வி நிறுவனம் தமிழக வரலாற்று ஏடுகளைக் கொண்டும்,பல்வேறு சான்றுகளைக் கொண்டும் முருகக்கடவுள் பற்றிய பலகோண ஆய்வுகளை நடத்தி உள்ளது.

    18. நம் தமிழர்கள் பசிபிக், சிஷில்ஸ்,பிஜி, மடகாஸ்கர் நாடு களுக்குள் குடி பெயர்ந்து முருகனை அங்கே கொண்டு சென்று வணங்கி வந்துள்ளனர்.

    19. அகநானூற்றில் முருகன் என்ற பெயர் பல பாடல்களில் வருவதை பார்க்கலாம்.

    20. பஞ்சகலா மந்திரம்,2.பஞ்சப்பிரம்ம மந்திரம்,3.ஷடங்க மந்திரம்,4.சம்மிதா மந்திரம்,5.மயில் மந்திரம் ஆகியவை முருகனுக்குரிய மந்திரங்களாகும்.

    21. அக்னி தேவனையும்,சூரன் உடன் பிறப்பில் ஒன்றான கோழியையும் கொடியாகக் கொண்டவன் செந்தமிழ் முருகன்.

    22. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோர் பெயர் உள்ளது.

    23. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன் எம் பெருமாள். விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

    24. முருகனது வலது கரத்தில் உள்ளது தாமரை, அபயம், தண் டம்,சக்தி,(வச்சிரம்)சக்தி. திருமுருகனது இடது கரத்தில் உள்ளது வச்சிரம், சக்கரம், வச்சிரம்,வச்சிரம்,சூலம்.

    25. முருகனின் கோழிக் கொடிக்குக் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்த கோழியே வைகறைப் பொழுதில் ஓங்கார மந்திரத்தை ஒலி வடி வில் உணர்த்துவது ஆகும்.

    26. கவுமாரன் எனப்படும் முருகனுடைய பெண் அங்கமாகக் கவுமாரி என்ற தேவி சப்த மாதருள் குறிப்பிடப்படுகிறாள்.

    27. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங் கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப்பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவணபவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை மகளிரால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாய் ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

    28. குமரக் கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

    29. அழகன் முருகனின் வேறு பெயர்கள். வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரவுஞ்ச் போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாபதி, காக வாகனன், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் என்பனவாகும்.

    30. இயற்கை அழகினில் கோவில் அமைத்து இறைவழிபாட்டுக்கு நாயகனாக முருகனையே தோற்றுவித்தான் பழந்தமிழன் என்பது சங்க காலச் செய்தி.

    31. நெல்லைச் சீமையில் பிறந்த சைவக்குடிப் பெருமக்களுக்கு செந்தமிழ் முருகன் வழிபடு கடவுளாக உள்ளார்.

    32. குறிஞ்சி நிலத்தின் கடவுளாகச் சொல்லப்படுகின்றவர் முருகன் சேயோன்மேய மைவரை உலகமும் என்று அகத்திணையில் செய்யுள் வலியுறுத்துகின்றது.

    33. அக்கினி, இந்தியன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே கந்த குமாரன் ஆவார்.

    34. ஆரிய வழிபாட்டு முறையில் குமாரன் கந்தன், கார்த்திகேயன், சுப்பிரமணியன் என்று அழைக்கப்படுகின்றான்.

    35. ரிக் வேதத்தில் பிரம்மத்தின் வெளிப்பாடாய்ச் சுப்பிரமணியோம் என்று மும்முறை சொல்லப்படுகின்றது.

    36. முருகனை வழிபட சரவணபவ, குமாரய நம இரண்டும் உகந்த திருமந்திரங்களாகும்.

    37. பிரம்மனை விடுவிக்க வந்த சிவபெருமானிடம் ஓம் எனும் பிரணவப் பொருள் உணர்த்திய திருத்தலம் சுவாமி மலையாகும்.

    38. பராசக்தி, ஆதிசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சா சக்தி, குடிலா சக்தி என்கிற ஆறு சக்திகளையும் உடையது ஆறுமுகம்.

    39. மந்திரம், பதம், வண்ணம், புவனம், கலை, தத்துவம் என ஆறு அத்துவாக்களே ஆறுமுகம். பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

    40. பல்லவ மன்னர்கள் முருகனைப்பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள்.

    41. முருகன் எழுந்தருளியுள்ள குன்றுகள் :

    1. திருமலை, 2. இலஞ்சி, 3. சிவகிரி, 4. மயிலம், 5. திருத்தணிகை, 6. வள்ளிமலை, 7. திருவேங்கடம், 8. விராலிமலை, 9. கஞ்சமலை, 10. தேனிமலை, 11. கொல்லிமலை, 12. மருதமலை, 13. அழகுமலை, 14. சுருளிமலை.

    42. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தள் முதலியவாகும்.

    43. முருகப்பெருமான் வில்லும், அம்பும் ஏந்திக் காட்சியளிக்கின்ற இடம் திருவையாறு.

    44. முருக என்கிற சொல்லில் 'மு' என்பது முகுந்தனையும், 'ரு' என்ற சொல் ருத்திரனையும் 'க' என்கிற சொல் கமலாசனன் என்கிற பிரம்மாவினையும் குறிக்கும்.

    45. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

    46. திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர்க்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை.

    47. காஞ்சியில் உள்ள குமரக் கோட்டத்தில் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

    48. முருக உபாசனைக்கு உதவும் மந்திரம் சுப்ரமணிய பஞ்ச தசாட்சரீ ஆகும்.

    49. முருகனுக்கு உருவ மில்லாத கோயில் விருத்தாசலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர் - அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.

    50. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

    • முருகனை வழிபட சரவணபவ, குமாரய நம இரண்டும் உகந்த திருமந்திரங்களாகும்.
    • குமரக் கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும்.

    * திருப்பரங்குன்றம்-சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.

    * திருச்செந்தூர்-அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தல மிது.

    * பழனி-மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.

    * சுவாமிமலை-தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தல மிது.

    * திருத்தணி-சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

    * பழமுதிர்சோலை-அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

    • சேலம் - திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது.
    • கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது. முன்னொரு காலத்தில், இங்கு முருக பக்தர் ஒருவர் வசித்தார். ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளையொட்டி, கடும் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் சென்று வழிபடுவது இவரது வழக்கம்.

    ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், "இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம். உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். இங்கேயே கோவில் எழுப்பு!"என்று அருளி மறைந்தாராம், அதன்படி கட்டப்பட்டதே, காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்.இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர்.

    பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம். இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலனவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் "மை" பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.

    வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது காளிப்பட்டி கந்த சாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.

    • கர்ம வினையை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்
    • முருகன் குழந்தை வடிவத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம்.

    குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர் தான். அங்குள்ள முருகன் குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு.

    அடுத்து, மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான். அதே மாதிரி, கர்ம வினையை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.

    இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முருகன் தலம் முதன்மையான இடமாக கருதப்படுகிறது.

    • கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன்.
    • கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும்.

    விரதம் என்பதற்கு 'ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல்' என்று பொருள். விரத காலங்களில் சாப்பிடாமல் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. மிதமாக உண்பதும், தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முதற்படியாகும்.

    வார விரதம் : செவ்வாய்க்கிழமை விரதம்

    நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம்

    திதி விரதம்: சஷ்டி விரதம்

    செவ்வாய்க்கிழமை விரதம் :

    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வாழ்வில் அமைதி பெறுவோமாக!

    கார்த்திகை விரதம் :

    கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார். கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்' என்று அருள் புரிந்தார்.கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது. விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.

    சஷ்டி விரதம் :

    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனம் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும். பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும். இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.

    • தெய்வானை அம்மனை சமாதானப்படுத்த நாரதமுனிவர் தூது சென்றார்.
    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலையில் தந்த பல்லக்கு, மாலையில் தங்கமயில், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்தது. நேற்று வைகாசி விசாக திருவிழா கொடிஇறக்குதலுடன் நிறைவு பெற்றது.

    முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தெய்வானை அம்மனின் திருஊடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்து தெய்வானை அம்மன் சப்பரத்தில் இருந்து இறங்கி தனிப்பல்லக்கில் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமாதானப்படுத்த நாரதமுனிவர் தூது சென்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடையவே வீரபாகு தேவர் தெய்வானை அம்மனிடம் தூது சென்று சமாதானப்படுத்தினார். வீரபாகு தேவராக ஓதுவார் நாகராஜ் 3 முறை தூது சென்று திருஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளியும், தெய்வானையும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார்.

    அதன்பின் கோவில் நடை திறந்து முத்துக்குமாரசுவாமியுடன், தெய்வானை அம்மன் சேர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
    • விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.

    வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை தர்மராஜன் கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி பல்லக்கில் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு வல்லபகணபதி கோவிலில் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து பல்லக்கில் சுவாமி புறப்பட்டு வாடிப்பட்டி நகர் முழுவதும் முக்கியவீதிகளில் பல திருக்கண்களை அடைந்து தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டைபுதுார், போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ரெயில்நிலையம், சொக்கையாசுவாமிகள் மடம் வழியாக மறுநாள் மதியம் 12 மணிக்கு கோவிலை வந்து அடைந்தது. விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.

    • செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.
    • முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை.

    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வாழ்வில் அமைதி பெறுவோமாக!

    செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன். கோவிலும், பழநியும் கருதப்படுகின்றன. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழநி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

    இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.

    இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை)விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    • வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபத்மனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
    • முருகன் கோவில்களில், தெய்வத்தன்மை கொண்டதாக வேலுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது

    கந்த புராணத்தில் முருகனுக்கும், சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரில், வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபத்மனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான். ஆனால் அவனது சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட முருகன் தனது வேலை எறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளக்க, அதில் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் மாறிவிடுகிறது.

    முருகன் மயிலைத் தனது வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறார் என்பது இப்புராணங்கள் கூறும் நிகழ்ச்சிகள். இதனால் வீரத்தின் சின்னமான வேல், கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் சக்தியுடையது என்ற நம்பிக்கையை இந்துக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. யௌதேயர் காலத்து நாணயத்தில் (கி.மு.200) வேல், சேவலுடன் காணப்படும் கார்த்திகேயன் படம் உள்ளது.

    மாமல்லபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்லால் ஆன வேல். இது சங்க காலத்தைச் சேர்ந்தது.

    சில முருகன் கோவில்களில், தெய்வத்தன்மை கொண்டதாக வேலுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. முருகன் தன் தாய் பார்வதியிடம் இருந்து வேலைப் பெற்ற நிகழ்வாக, ஆண்டுதோறும் முருகன் திருத்தலங்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

    இத்திருவிழாவின் போது பக்தர்கள் சிலர் தங்களது நாக்கு அல்லது கன்னங்களில் வேறுபட்ட அளவிலான வேல்களைக் குத்திக் கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்கள். இச்செயல் அலகு குத்துதல் எனப்படுகிறது. முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

    • முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும்.
    • சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் ஆகும்.

    விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்- சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.

    விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றில் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.

    சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால் தான் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தின் பிரதான தேவதை முருகப்பெருமான் ஆவார். விசாக நட்சத்திரத்தின் அதிதேவதைகள் இருவராவர் ஒருவர் இந்திரன். மற்றொருவர் அக்னி.

    இவர்கள் சகல மங்களங்களையும் அளிப்பவர்களாக தமது இருதிருக்கரங்களில் வரதம் மற்றும் அபய முத்திரை ஏந்தி அருள்புரிகிறார்கள். அக்னி சிவப்பு நிற மேனி கொண்டவர். இந்திரனோ தகதகக்கும் தங்கத் திருமேனி உடையவர்.

    விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் மற்றும் விசுவை என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

    இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காஞ்சி மகா பெரியவர் அவதரித்தது வைகாசி மாதமே!
    • வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாக கொண்டாடப்படுகிறது.

    1. வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

    2. வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.

    3. வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.

    4. வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    5. காஞ்சி மகா பெரியவர் அவதரித்ததும் வைகாசி மாதமே!

    6. சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலா மணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும், லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    7. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.

    8. இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.

    9. இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம-ராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    10. மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத "அமுத சுரபி" என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்குவதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன் என்று கூறி மறைந்தது. இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.

    11. ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.

    12. தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில், வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

    13. முருகப் பெருமானுக்குரியதாக வைகாசி விசாகம் மிளிர்கின்றது. சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும், முருகப் பெருமான் விசாகமாக (கீழ் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கி கூறுகிறது.

    14. பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    15. விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    16. தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    17. திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.

    18. பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    19. ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

    20. கன்னியாகுமரி அம்மனுக்கு 'ஆராட்டு விழா' இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

    21. திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடை பெற்று வருகிறது.

    22. ராம-ராவண யுத்தத்தின்போது விசாகம் அமைந்துள்ள கோள் நிலையையும், அது காட்டிய நன்மை, தீமைளையும் மனதில் கொண்டே ராமன் போரிட்டு ராவணனை வதம் செய்து வெற்றி கொண்டார் என்பர்.

    23. ராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் வழங்கிய ஆணை, தஞ்சை பெரிய கோவில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது.

    24. திருச்சி அருகில் 'ஐயர் மலை' என்று வழங்கப்படும் வாட்போக்கி ரத்னாசலேஸ்வரர் (ரத்னகிரி) கோவில் கல்வெட்டில் வைகாசித் திருவிழா சிறப்பாக நடத்திட கோனேரின்மை கொண்டான் என்ற அரசன் நிலம் வழங்கியதை குறிப்பிடுகிறது.

    25. இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • நாளை விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது.
    • 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. 10-ம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    இதையொட்டி இன்று காலையில் வள்ளி, தேவசேனா, சண்முகர் வீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மயில் வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    நாளை (3-ந்தேதி) இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது. வருகிற 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    ×