search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.
    • 7-ந்தேதி தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும்.

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் முக்கியமானதாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    6-ம் நாளில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்றுமாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதற்காக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    பகல் 12 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4.20 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் விண்ணை பிழக்க 4 ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஆட்டம்பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ரதவீதியில் சுற்றிவந்தனர்.

    ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்திருந்தனர். இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்ததால் நகரமே திக்குமுக்காடியது. மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன.

    இதனால் பழனி நகரம் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் என பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.

    படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று இரவு 8 மணிக்கு மேல் தங்ககுதிரை வாகனபுறப்பாடு நடக்கிறது. 9-ம் நாள் காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா, இரவு 9 மணிக்கு பெரியதங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடைபெறுகிறது.

    10-ம் நாளான 7-ந்தேதி காலை 8.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் உலாவரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் உற்சவமும் நடைபெறும். அன்றுஇரவு 11 மணிக்குமேல் கொடியிறக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.

    • கடவுள் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம்.
    • இன்று பவுர்ணமியும் சேர்ந்து வருகிறது.

    கடவுள் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம். அந்த வகையில் இன்று தைப்பூசமாகும். அதனுடன் இன்று பவுர்ணமியும் சேர்ந்து வருகிறது. தைப்பூசத்தையொட்டி இந்து மதக்கடவுள் முருகன் வழிபாட்டு தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்பட முருகக்கடவுள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருச்செந்தூரில் கடலில் புனித நீராடி, மாலை அணிந்து, அலகு குத்தியும், காவடி எடுத்தும், அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    பழனியில் இன்று அதிகாலை 3 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் தற்போது வரை 1.10 லட்சம் பக்தர்கள் முருகனை தரிசித்துள்ளனர். பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 6 மணிக்கு அபிஷேகமும் நடந்தது. நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவியத்தொடங்கினர். பக்தர்கள் கடலில் நீராடி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமே உள்ளது.

    அதேபோல் வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவித்த வண்ணம் உள்ளனர். அதிகாலையில் முருகப்பெருமானும் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்து வருகிறது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து இருந்து தைப்பூச திருவிழா இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் படைசூழ கோலாகலமாக நடந்து வருகிறது. முருகன் கோவில்களில் எங்கு திருப்பினாலும் பக்தர்களின் கூட்டமாகவே காணப்படுகிறது.

    • உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.
    • கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.

    தைப்பூச நாளான இன்று கட்டுப்பாடுகள் இல்லாத எளிய விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய மூன்றும் தடையில்லாமல் கிடைக்கும் என்று கந்தபுராணம் சொல்கிறது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றியில் திருநீறிட்டு ஓம் சரவணபவ என்ற முருகனின் மூல மந்திரத்தை குறைந்தது 12 முறை மனதார உச்சரிக்க வேண்டும். உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.

    கூடுமானவரையில் பால், பழங்கள், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் பணியிடத்தில் இருந்து திரும்பியதும் அன்னை பார்வதி, முருகனுக்கு வேல் அளித்த கதையை படித்து நேரமிருப்பவர்கள் கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.

    அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கிவிட்டு இயன்ற அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இரவு சிறிது பால்சோறு சாப்பிடலாம். மறுநாள் காலை நீராடி, திருநீறு இட்டு முருகனின் மூல மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்து மனதார வணங்கி விரதத்தை நிறைவு செய்துவிட்டு வழக்கம்போல் உண்ணலாம்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தேர்த்திருவிழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.
    • பக்தர்களின் வசதிகக்காக கிரிவல பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி 29-ந்தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர் ரத வீதியில் வலம் வந்தது.

    ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து திருத்தேரில் வீற்றிருந்த முருகனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் 'அரோகரா... அரோகரா..' முழக்கம் விண்ணை பிளந்தது.

    தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தேர்த்திருவிழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர். பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளிக்கிறது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிகக்காக கிரிவல பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    • மருதமரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது
    • ஆறுபடை வீடுகளை கொண்டு குன்றதோரும் குமரக்கடவுள் எழுந்தருளி இருக்கிறார்.

    மூலவர் - சுப்பிரமணிய சுவாமி/தண்டாயுதபாணி/மருதாசலமூர்த்தி (மருதப்பா)

    அம்மன்/தாயார் - வள்ளி, தெய்வயானை

    தல விருட்சம் - மருதமரம்

    தீர்த்தம் - மருத தீர்த்தம்

    பழமை சுமார் - 800 ஆண்டுகள்

    ஆறுபடை வீடுகளை கொண்டு குன்றதோரும் குமரக்கடவுள் எழுந்தருளி இருக்கிறார். இதில் கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

    இந்த கோவில் கோவை நகரில் இருந்து வடமேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில், தரை மட்டத்தில் இருந்து 500 அடி உயரத்தில் மலையில் அமைந்து உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்த மருதமலை கோவிலின் 3 புறங்களிலும் மயில் தோகை போல விரிந்து மலை காட்சி அளிக்கிறது. இதனால் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து அருள்பாலிப்பது போன்ற காட்சி மனக்கண் முன் தோன்றுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

    மருதமரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் மருத மால் வரை, மருத வரை, மருத வேற்பு, மருதக் குன்று, மருதலோங்கல், கமற் பிறங்கு, மருதாச்சலம், வேள் வரை, என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது.

    மருதமலை ஆண்டவன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் மருத மரங்கள் நிறைந்த மலைக்கு தலைவன் என்பதாகும். மருத மலையான், மருதப்பன், மருதாச்சல மூர்த்தி போன்ற பெயர்களாலும் இந்த மருதமலையில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

    புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.

    இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

    மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

    மருதமலையில் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் பிரதிஷ்டை செய்த லிங்கம்

    கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் பழனி அருகே உள்ள இடும்பன் மலையில் அமர்ந்து இடும்பன் சுவாமிகளை வழிபட்டு வருவார். இவர், கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் உள்ள இடும்பன் சுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இப்படி வழிபாடு செய்ய வரும் போது தான் மருதமலையில் உள்ள இடும்பன் கோவிலின் பின்புறம், இடும்பனை சுற்றி வரும் பிரகாரத்தில் மருதமரத்தார் மருந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்.

    இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நோய்களை தீர்த்து அனைத்து நலங்களையும், வளங்களையும் வழங்குவதற்காக இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக பக்தர்களிடம் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் தெரிவித்துள்ளார். தற்போது மருதமலையில் இவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த லிங்கத்தை பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.

    தினமும் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழிபாடு செய்யலாம். மருதமலைக்கு வரும் பக்தர்கள் முதலில் அங்குள்ள தான் தோன்றி விநாயகர், இடும்பன் சுவாமிகள், மருந்தீஸ்வரர் லிங்கத்தை தரிசித்து விட்டு தான் முருகப்பெருமான், பாம்பாட்டி சித்தரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதன் மூலம் மருந்தீஸ்வரர் லிங்கம் பக்தர்களின் மனங்களில் பக்தியை சித்தியாக்கி பரவசம் கொள்ள செய்வதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மருதமரத்தார் மருந்தீஸ்வரர் லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • மதியம் 12 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • தேரோட்டம் இன்று மாலை ரதவீதியில் நடைபெறுகிறது.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கடந்த ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்தவண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் பழனிக்கு சென்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால் கோவிலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளிரதத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது.

    இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனைதொடர்ந்து பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைகாண அலைகடலென பழனியை நோக்கி பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    பழனி கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. அதில் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தைப்பூச திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் வந்தவண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்களை அழைத்துவர 30 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டு மலைகோவில் வரை இயக்கப்படுகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாத சாரல்மழை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இருந்தபோதும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் கொட்டும் மழையிலும் பழனியை நோக்கி நடந்து சென்றனர். இன்று காலையிலும் பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வந்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    • திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அப்போது 16 வகை அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகை சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. பின்னர் வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா"...! என சரண கோஷம் எழுப்பினர்.

    மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன்களுக்கு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணிய குருக்கள் மற்றும் குருக்கள் செய்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

    • பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது.
    • காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வந்தனர்.

    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாதயாத்திரையாக பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    குறிப்பாக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் அணி, அணியாக நடந்து வந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடிய பின் திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பழனி அடிவாரம், சன்னதி ரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான பக்தர்கள் மேள, தாளத்துடன் ஆங்காங்கே கோலாட்டம், கலில், ஒயில் ஆகிய பாரம்பரிய ஆட்டம் ஆடியபடி சென்றனர். மேலும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வந்தனர்.

    பழனி தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். இந்நிலையில் பக்தர்களுக்கான வசதிகள் கோவில் மற்றும் அனைத்து துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் பஸ்கள், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே அனைத்து வாகனங்களும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பைபாஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.

    அதேபோல் பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க ஆங்காங்கே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலை நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல், அன்னதான கூடங்களில் உணவு, குடிநீர், ஐஸ்கிரீம், இளநீர் என வெயிலுக்கு ஏற்ற பானங்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் அதில் ஆனந்தமுடன் நனைந்தபடி பக்தர்கள் வந்தனர்.

    பழனிக்கு வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கூட்டம் காரணமாக நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பழனி சின்னாரக்கவுண்டன்வலசு பகுதியில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கோவை, திருச்சி, மதுரை, தேனி என புறநகர் செல்லும் பஸ்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழிப்பறை, குடிநீர் என அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில் நேற்று திருச்சி, மதுரை, அறந்தாங்கி, திண்டுக்கல் என புறநகர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தற்காலிக பஸ்நிலையத்துக்குள் செல்லாமல், பழனி பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பஸ்நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு வந்து சீரமைத்தனர்.

    • நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
    • ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடிகொண்ட பழனி, அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வது தனிச்சிறப்பு ஆகும்.

    ஏனெனில், தமிழகத்தில் மற்ற கோவில்களை காட்டிலும் பழனியில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.

    இதில் பல பக்தர்கள் அலகு குத்தியும், மயில் காவடி, பால்காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடியை தூக்கி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதன்படி விழா தொடங்கியது முதலே, பழனிக்கு வருதை தரும் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடு நடைபெறுகிறது.

    நாளை (சனிக்கிழமை) தைப்பூச நாளன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முருகனை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    குறிப்பாக திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, உடுமலை சாலைகளில் வழிநெடுகிலும் பக்தர்கள் சாரை சாரையாக வருகிறார்கள். இவ்வாறு வருகிற பக்தர்கள் முருகனை நினைத்து பாட்டு பாடியும், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியும் வருகின்றனர்.

    பழனிக்கு வந்ததும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதி ஆகியவற்றில் புனித நீராடுகின்றனர். தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி, மலைக்கோவில் சென்று வழிபடுகின்றனர்.

    • நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • நாளை மறுநாள் தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கடந்த 29-ந் தேதி தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து தினந்தோறும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக நாளை இரவு 7 மணிக்கு வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (4-ந் தேதி) நடக்கிறது. அன்று காலை தோளுக்கினியாலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 4.30 மணிக்கு தைப்பூசத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே பழனி கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரை, சிவகங்கை, தேனி, கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தபடி வருவதால் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.

    அடுத்து வரும் 4 நாட்களும் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு பணிக்காக டி.ஐ.ஜி. தலைமையில் 3 எஸ்.பி.க்கள், 15 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 30 மாவட்டங்களில் இருக்கும் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகள் பட்டியலுடன் வரவழைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காணாமல் போனால் அறிவிப்பது, பக்தர்களின் சந்தேகத்தை தீர்க்க 26 இடங்களில் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் 2 போலீசார் பணியில் இருப்பார்கள். பாத யாத்திரை வழித்தடங்களில் 3 கி.மீக்கு ஒரு பைக் என்ற விகிதத்தில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டத்தில் 4 சக்கர வாகனங்கள் ரோந்து செல்ல முடியாது என்பதால் பைக் மூலம் ரோந்து பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    12க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரி வீதி மற்றும் மலைக்கோவில் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இடும்பன் குளம், சண்முக நதியில் தீயணைப்பு துறையினருடன் காவல் துறையில் உள்ள நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடமைகள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் அதனை கண்டுபிடித்து தருவதற்காகவும், பக்தர்களுக்கு உதவவும் 26 இடங்களில் காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். 50-க்கும் மேற்பட்ட வீடியோ கேமராக்கள் மூலம் நகரில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாத யாத்திரையாக வரும் பக்தர்களிடம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில் 19 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் நகரின் முக்கிய இடங்களில் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை தகவல் பலகையில் வைக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • 5-ந்தேதி தைப்பூசம் நடைபெறுகிறது.
    • காவடி சுமந்து ‘அரோகரா’ கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத்திருவிழா தொடங்கியது. வருகிற 5-ந்தேதி தைப்பூசம் நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் வழியாக, பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, காரைக்குடி, கண்டமனூர், நெற்குப்பை உள்ளிட்ட இடங்களை சேர்ந்த நகரத்தார் குழுவினர் மயில்காவடி எடுத்து பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 26-ந்தேதி பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    தேவகோட்டை நகரத்தார் பள்ளிக்கூடத்தில் இருந்து காவடிகளுக்கு பூஜை செய்து பாதயாத்திரையை தொடங்கிய 300-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்தடைந்தனர். நத்தம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வாணியர் பஜனை மடத்தை வந்தடைந்த இந்த குழுவினர் அங்கு பூஜை நடத்தினர். அதன்பிறகு பெரியகடை வீதி, மூன்றுலாந்தர், பஸ் நிலையம் வழியாக மயில்காவடியுடன் மேளதாளம் முழங்க பழனி நோக்கி புறப்பட்டு சென்றனர்.

    அப்போது, முருகனுக்கு செலுத்தி பூஜை செய்யும் வைரவேல் கொண்டு செல்லப்பட்டது. அந்த வேலை பக்தர்கள் வணங்கி அதற்கு பன்னீர், எலுமிச்சை பழம், வண்ணமலர்களை படைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து முருகப்பெருமானின் புகழை போற்றும் பாடல்களை பாடி பக்தர்கள் மயில்காவடியை சுமந்து சென்றனர்.

    இதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, கொட்டாம்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வழியாக பழனி முருகன் கோவிலுக்கு நேற்று சென்றனர்.

    குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், ஜெயங்கொண்டான் நாட்டார்கள் மயில் காவடி சுமந்து 'அரோகரா' கோஷம் எழுப்பியவாறு சென்றனர். மேலும், சிறுவர்-சிறுமியரும் ஆர்வமுடன் நடந்து சென்றனர்.

    நடந்து செல்ல முடியாத சிறுவர்-சிறுமிகளை பெற்றோர்கள் சுமந்தபடியும், கோவிலில் நேர்த்திகடனாக செலுத்துவற்காக வேல் மற்றும் சேவல்களை கையில் ஏந்தியபடியும் நடந்து சென்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் டீ, பால், இளநீர், பழங்கள் மற்றும் இரவு உணவும் வழங்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு கழிவறை வசதி செய்யப்படாதால், பெண் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே வழிநெடுகிலும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • இந்தாண்டு 291 காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வந்தடைந்தது.
    • திண்டுக்கல் சாலை வழியாக தங்கள் பாதயாத்திரையை தொடங்கினார்கள்.

    பாரம்பரியமிக்க நகரத்தார்கள் ஒன்றிணைந்து வருடம் தோறும் தைப்பூச திருவிழாவிற்கு பழனிக்கு காவடி தூக்கி சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வழக்கம். பாரம்பரியமிக்க நகரத்தார்கள் காவடி கண்டனூர், அரண்மனை பொங்கல், நெற்குப்பை ஆகிய ஊர்களில் இருந்து புறப்பட்ட காவடிகள் குன்றக்குடி மையப் பகுதியாக வைத்து அங்கிருந்து புறப்பட்டு அரோகரா கோஷத்துடன் பழனி நோக்கி சென்றனா்.

    அதனை தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் தரிசனம் செய்த நகரத்தார்கள் காவடியுடன் பாதை யாத்திரையாக திருப்பத்தூர் சாலை வழியாக சிங்கம்புணரி நோக்கி வந்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை சிங்கம்புணரி நகருக்கு வருகை தந்த காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு வந்தடைந்தன.

    நகரத்தார்கள் காவடிகள் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 130 காவடிகளை சேர்த்து இந்தாண்டு 291 காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வந்தடைந்தது. திண்டுக்கல் சாலை வழியாக தங்கள் பாதயாத்திரையை தொடங்கினார்கள். சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பில் பக்தர்கள் சூழ்ந்து நின்று காவடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து பக்தி பரவசத்துடன் அன்னதானம் வழங்கினா்.

    நகரத்தார்கள் குன்றக்குடி, சிங்கம்புணரி, மனப்பச்சேரி, நத்தம், திண்டுக்கல் பகுதி வழியாக வருகிற தைப்பூச தினத்தன்று பழனி சென்று அடைவார்கள். தைப்பூசத் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.

    ×